பச்ச பங்களா, ரெட்ட கொலடா! - நாடகத்திற்குள் ஒரு நாடகம்

அரங்கம் நிறைந்த பார்வையாளர்கள்! இரண்டு மணி நேரம் முழுவதும் வயிறு குலுங்கச் சிரிக்க வைத்த கதாபாத்திரங்களின் நகைச்சுவை! பார்வையாளர்களுக்குச் சலிப்பு தட்டாமல் அரங்கேறியது ‘பச்ச பங்களா, ரெட்ட கொலடா!’ நாடகம்.

நாடக அரங்கேற்றத்தில் போதிய அனுபவம் இல்லாத ‘சட்னி டிராமா சொசைட்டி’ என்னும் கற்பனை நாடகக் குழு, எவ்வாறு தவறான முறைகளில் படைப்பைச் சொதப்புகிறார்கள் என்பதைத் துல்லியமாக தனது படைப்புமூலம் எடுத்துக்காட்டியது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ‘அகம் தியேட்டர் லேப்’ நாடகக் குழு.

ஆதிக்கம் செலுத்தும் முதன்மைக் கதாபாத்திரம், இறந்ததுபோல் நடிக்கத் தெரியாதவர், முரட்டுத்தனமான துப்பறிவாளர், தனது வசனத்தை மறந்துவிடும் இல்லப் பணியாள் உட்பட மொத்தம் எட்டுக் கதாபாத்திரங்கள் கொண்ட படைப்பில், சரியும் நாடகமேடை, கீழே விழும் மேடைப் பொருள்கள் ஆகியவை கலந்து உருவானது படைப்பு.

‘தி பலே தட் கோஸ் ரோங்’ எனும் ஆங்கில நாடகத்தைத் தழுவிய முதல் தமிழ்மொழி படைப்பான ‘பச்ச பங்களா, ரெட்ட கொலடா!’ சாதாரண மேடை நாடகங்கள் போலன்றி, புதுமையான பாணியில், ‘நாடகத்திற்குள் நாடகம்’ என்னும் கதைக்கருவுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

அழகான மேடை வடிவமைப்பு, அதற்கு ஏற்ற தளவாடங்கள், கதாபாத்திரங்களின் உயிரோட்டமான நடிப்பு ஆகியவை படைப்புக்கு மேலும் மெருகூட்டின.

ஒரு பங்களாவில் நடக்கும் மர்மக் கொலைச் சம்பவத்தை ஒட்டி தயாரிக்கப்பட்ட அந்த நாடகத்தில், சார்லி சிங்கம் என்பவர் தனது நிச்சயதார்த்த நாளன்று கொலை செய்யப்படுகிறார்.

அவரது கொலைக்குக் காரணமானவர்களைத் தேடும் விறுவிறுப்புடன் கதை சூடுபிடிக்கத் தொடங்குகிறது. படைப்பில் இன்ஸ்பெக்டர் செளத்ரி என்னும் கதாபாத்திரத்தில் நடித்த தொலைக்காட்சிக் கலைஞர் கார்த்திகேயன் சோமசுந்தரம், நாடகத்திற்கு வசனம் எழுதி, இணை இயக்குநராகவும் நாடகத்தை தனது நகைச்சுவையால் மேம்படுத்தினார்.

ஆண் கதாபாத்திரத்தில் ஒரு பெண் நடிப்பது எளிதானதன்று என்றாலும் தொலைக்காட்சிக் கலைஞர் உதய சௌந்தரிக்கு அது கைவந்த கலை. பஞ்சபூதம் சந்திரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த அவர், தனது கம்பீரமான குரலில் கதாபாத்திரத்திற்கு மேலும் வலுச்சேர்த்தார்.

படைப்பின் தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் அகம் நாடகக் குழுவின் நிறுவனருமான சுப்ரமணியன் கணேஷ், “இந்த நாடகத்தை உருவாக்க எங்களுக்கு ஓராண்டுக்குமேல் ஆனது. நாடகத்தில் வசனத்தை மறக்காமல் நடிப்பது எளிது. ஆனால், தனித்துவமான முறையில், ஒரு நாடகத்தை நல்ல முறையில் சொதப்புவதுபோல நடிப்பது மிகக் கடினம்.

“ஒரு நாடகம் வெற்றிகரமாக அரங்கேற கதாபாத்திரங்கள் முக்கியப் பங்களித்தாலும், மேடைக்குப்பின் இருப்பவர்களின் பொறுப்பு இன்னும் அதிகம்.

“அவர்கள் ஒருங்கிணைந்து நாடகத்தில் மேடைப்பொருள்களை விழச் செய்தது பாராட்டுக்குரியது. மர்மக் கொலையைக் கதைக்கருவாகக் கொண்ட படைப்பில் நகைச்சுவையைச் சேர்ப்பது சவால்மிக்கதாக இருந்தது,” என்று கூறினார்.

அடுத்ததாக, தங்களுக்குப் பரிச்சயமான கதைகளை புதுமையான பாணியில் நாங்கள் கொண்டுவருவதைப் பார்வையாளர்கள் எதிர்பார்க்கலாம் என்றும் அவர் சொன்னார்.

எஸ்பிளனேட் கலா உத்சவம் நிகழ்வை ஒட்டி இம்மாதம் 24ஆம் தேதியிலிருந்து 26ஆம் தேதிவரை அரங்கேறிய இப்படைப்பு பல வயதுப் பிரிவினரையும் ஈர்த்தது. நாடகத்தைக் காண வந்தவர்களில் ஒருவரான இல்லத்தரசி ரத்தினம், 54, “நான் இதுவரை மேடை நாடகங்களைக் காண அதிகமாகச் சென்றதில்லை. என் மகள் விரும்பியதால் நானும் பார்க்கச் சென்றேன். நாடகம் வித்தியாசமாக இருந்தது. சில நேரங்களில் மேடைப்பொருள்கள் விழுந்தபோது அவை நடிகர்களின்மேல் விழுந்துவிடுமோ என்று பயந்தாலும், அவர்கள் நன்றாக ஒத்திகை பார்த்து நாடகத்தைப் படைத்தனர்,” என்றார்.

சார்லியின் வருங்கால மனைவி ரூபா சந்திரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த இந்து இளங்கோவன், 27, இரவு விடுதியில் நடனமாடும் பெண் மற்றும் 80களில் இருக்கும் நடிகையைப்போல தோற்றமளித்தார்.

“நான் இதுபோன்ற ஒரு கதையில் இதுவரை நடித்ததில்லை. இதற்கு முன்னர் அகம் நாடகக் குழு தயாரித்த விலங்குப்பண்ணை நாடகத்தில் நடித்த எனக்கு நாடக அனுபவம் இருந்தாலும், இந்தப் படைப்பு எனது திறன்களை மேலும் வளர்த்துக்கொள்ள உதவியது,” என்றார் இந்து.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!