ஜெர்மனியின் பேரகராதித் திட்டம்: பங்காற்றுகிறார் இளையர் மானசா

ஜெர்மனியில் தமிழ் இலக்கியங்களின் பொருள் தொகுப்புகளுக்கான மின்னிலக்கப் பேரகராதி தயாரிக்கும் மாபெரும் திட்டத்தில் முக்கியப் பங்காற்றி வருகிறார் சிங்கப்பூரைச் சேர்ந்த மானசா விஸ்வேஸ்வரன்.

சமஸ்கிருத மொழி ஆய்வு மேற்கொள்ள எண்ணிய இவரை, ஐங்குறுநூறிலுள்ள குறிஞ்சித் திணைப் பாடல்கள் மூலம் தன்வயப்படுத்தியது தமிழ்மொழி.

ராஃபிள்ஸ் பெண்கள் பள்ளியில் படித்த இவர், சிறுவயதிலிருந்தே கலைகளில் ஆர்வம் கொண்டிருந்ததால் சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்தில் (சிஃபாஸ்) பரதநாட்டியம் பயின்றார். நாட்டிய சாத்திரங்களை மேலும் ஆழமாகத் தெரிந்துகொள்ள, சமஸ்கிருதம் பயில முடிவு செய்தார்.

லண்டனில் உள்ள ‘ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் அண்ட் ஆப்ரிக்கன் ஸ்டடிஸ்’ கல்லூரியில் மூவாண்டு சமஸ்கிருதம் பயின்றார். பின்னர், இந்தியாவின் புனே பகுதியில் ஓராண்டு தங்கியிருந்து சமஸ்கிருத இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார்.

சமஸ்கிருதத்தில் இளங்கலைப் படிப்பை முடித்தபின் முதுகலை, முனைவர் பட்டம், ஆய்வு என அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி விரிவான திட்டத்தோடு பயணிக்கத் தொடங்கிய இவருக்கு, ஜெர்மனியில் உள்ள ஹாம்பர்க் பல்கலைக்கழகம் புதிய பாதையைக் காட்டியது.

அங்குள்ள ஆசிரியர்கள் தமிழ் பாடமெடுத்த விதம் இவரைத் தமிழ் படிக்க ஊக்குவித்தது. அந்தப் பல்கலைக்கழகத்திலேயே தமிழ் மொழியில் முதுகலைப் படிப்பை படித்து, முனைவர் பட்டத்துக்கான ஆய்வை மேற்கொள்ள முற்பட்டபோது, பெரும் பொருட்செலவில் உருவாகும் விரிவான மின்னிலக்கப் பேரகராதித் திட்டத்தில் பணியாற்ற மானசாவுக்கு வாய்ப்புக் கிடைத்தது.

ஹாம்பர்க் பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர் ஈவா வில்டன் தலைமையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழ் ஆராய்ச்சி மாணவர்களுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கியுள்ளார் மானசா.

இப்பேரகராதிக்காக, சங்க இலக்கியத்தின் பத்துப்பாட்டு நூல்களை ஆய்வு செய்துவரும் இவர், தற்போது சிறுபாணாற்றுப்படை எனும் நூலின் உரைகளைப் படித்து ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளார்.

இத்திட்டத்துக்காக தமிழ்நாடு, கொல்கத்தா உள்ளிட்ட பிற இந்திய நகரங்கள், பல்வேறு நாடுகள் எனத் தொடர்ந்து பயணம் மேற்கொண்டு வரும் இவர், இத்திட்டத்தில் பணியாற்றுவது தனக்குக் கிடைத்த பெரும்பேறு என்றார்.

மின்னிலக்கப் பேரகராதி

ஒரு வழக்கமான பேரகராதியாக இல்லாமல், பல்வேறு சிறப்புகளைக் கொண்டதாக அமையவுள்ளது இந்தப் பேரகராதி என்றார் மானசா.

ஒவ்வொரு சங்க இலக்கிய பாடலுக்கும் கிபி ஒன்றாம் நூற்றாண்டு முதல் 10ஆம் நூற்றாண்டு வரை பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்ட உரைகளை ஆய்வு செய்து, அவற்றுக்கிடையிலான வேறுபாடுகளை அறிந்து அகராதியில் குறிப்பிடுவதும் இந்தத் திட்டத்தின் ஒரு பகுதி என்கிறார் இவர்.

தவிர சங்க இலக்கியச் சொற்களின் தொகுப்பு, அவற்றுக்கான பொருள், ஒரு வேர்ச்சொல்லின் வளர்ச்சி, பல பொருள் ஒரு சொல் தொகுப்பு இவையும் இப்பேரகராதியில் இருக்கும்.

தமிழ், ஆங்கிலம் என இரு மொழியிலும் உருவாகும் இப்பேரகராதி, தமிழ் ஆய்வாளர்கள் மட்டுமின்றி தமிழ் ஆர்வலர்கள் யாவரும் பயன்படுத்தும் வண்ணம் அமைக்கப்பட உள்ளதாகக் கூறினார் மானசா. பல தமிழ்மொழி மேதைகளின் ஒலிக் குறிப்புகளும் அதில் இடம்பெற உள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தப் பேரகராதிக்காக ஏற்படுத்தப்படும் தரவுத்தளம் மூலம் சங்க இலக்கிய பாடல்கள், பல்வேறு காலகட்டங்களில் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்ட அதன் உரைகள் போன்ற தமிழ்மொழியின் விலைமதிப்பற்ற புதையல்கள் பலவும் பாதுகாக்கப்படும் என்றார் மானசா.

வரும் 2046ஆம் ஆண்டுக்குள் இது செயல்பாட்டுக்கு வந்துவிடும் என நம்புவதாகச் சொல்லும் மானசா, தமிழ் இலக்கியங்களை அடுத்தடுத்த தலைமுறை கற்றறிந்து கொள்ள ஒன்றிணைந்த தளமாக இது அமையும் எனவும் கருதுகிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!