நவீன தொழில்நுட்பத்தின் மடியில் உலகம் தவழும்போது, புத்தகம் வாசிப்பதற்கான அவசியம் என்ன? 

வாசித்தல் வழங்கும் வரங்கள்

சமூக ஊடகத்தில் வலம்வரும் குறுகிய உள்ளடக்கங்கள் நீர் தளும்பும் குறைகுடம்போல. அதனால் ஏற்படும் கவனச்சிதறல், தொடர்ந்து நிலவும் சமூக ஒப்பீடுகள், மன அழுத்தம் போன்ற பின்விளைவுகள் பல. அதில் அதிக நேரம் செலவிடுவதால் பலர் இன்று அறிவாற்றல் சுமைக்கு ஆளாகின்றனர்.

சமூக ஊடகப் பயன்பாட்டால் கிடைக்கும் தற்காலிக மகிழ்ச்சி நம் மனநலத்தில் ஒரு நிரந்தர அழுத்தத்தை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன. நம் மூளையில் உணர்ச்சிகளுக்குப் பொறுப்புவகிக்கும் பகுதி, தொடர்ந்து இன்பம் தேடும் சூழலில் சிக்கியிருப்பதால் பலரும் தங்கள் கைத்தொலைபேசிகளை ஒதுக்கிவைக்க முடியாமல் தவிக்கின்றனர். 

புத்தகங்கள் வாசிப்பது வயது வேறுபாடு இல்லாத ஒரு பழக்கம். எந்த வயதிலும், வாசிப்பது சமூக ஊடகப் பயன்பாட்டைவிட அதிக நன்மை பயக்கும். 

ஒரு வகை சிகிச்சை

புத்தகம் படிப்பதால் பலவிதமான உளவியல் நன்மைகள் ஏற்படுகின்றன என்று ஆய்வுகள் காட்டுகின்றன. ‘பிப்பிலியோ தெரபி’ எனும் நூலியல் சிகிச்சை மனச்சோர்வுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. வாசிப்பு, யோகாவைப்போலவே மன அழுத்தத்தைக் குறைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், புத்தகங்கள் வாசிப்பதில் ஆர்வமும் அறிவாற்றலும் அதிகரிக்கும் என்கின்றனர் வல்லுநர்கள்.   

மொழித்திறன் வளர்ச்சி

மொழித்திறன்களை மேம்படுத்த புத்தகங்கள் பெரிதும் உதவுகின்றன. வாசித்தல் மூலம் நிறைய புதுச் சொற்களை அறிய நேரிடுவதால் அவற்றை உள்வாங்கும் வாய்ப்புகள் அதிகம். இதனால் நம் சொல் வளம், மொழி வளம் மற்றும் எழுத்து வளம் அதீத வளர்ச்சி காணும். 

கற்பனைச் சக்தியின் களம்

ஒரு புத்தகத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் நம் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. கற்பனைக் கதைகளும் புனைகதைகளும் சித்திரிக்கும் கதாபாத்திரங்களின் வாழ்க்கை அனுபவங்களை ஆராய்வதால், வாசகர்கள் ஓர் ஆழமான புரிந்துணர்வினை வளர்த்துக்கொள்கிறார்கள்.  

குறிப்பாக, புனைகதைகள் பெரும்பாலும் கற்பனையைத் தூண்டும் கதைகளாக அமைகின்றன. புத்தகங்களில் விவரிக்கப்பட்டுள்ள கதைகளின் மூலம் ஒரு கற்பனை உலகத்தை உருவாக்கும் ஆற்றல் வாசகர்களுக்குப் பிறக்கிறது. 

அதோடு, வாசிப்புப் பழக்கத்தால் நமது கவனிக்கும் திறன் மேம்படுகிறது. தொழில், கல்வி போன்றவற்றுக்கு மேம்பட்ட கவனிக்கும் திறன் மிக முக்கியம்.

வாசித்தல் வளர்ச்சியின் விதையாகும்

வாழ்நாள் முழுவதும் கற்பவர்கள் அதிக ஆர்வம் உள்ளவர்களாகத் திகழ்கிறார்கள். மேலும், புதிய அனுபவங்களை ஒரு திறந்த மனதோடு ஏற்றுக் கொள்பவர்களாகவும் இருக்கிறார்கள். புத்தகங்கள் வாசிப்பது தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் மனநிறைவுக்கும் வழிவகுக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

வலுவாகும் சமூக ஒருங்கிணைப்பு

புத்தகங்கள் வாசித்தலை ஒரு சமூக நடவடிக்கையாகவும் மேற்கொள்ளலாம். புத்தகப் பரிந்துரைகளைப் பகிர்வது, புத்தகக் கழகங்களில் சேர்வது அல்லது மற்றவர்களுடன் இலக்கியத்தைப் பற்றி விவாதிப்பது போன்ற நடவடிக்கைகள் வலுவான இணைப்புகளையும் சமூக உணர்வையும் தூண்டக்கூடியவை.   

காலச் சக்கரத்துக்கு ஏற்ப நம் வாழ்க்கைச் சூழலும் அதிவேகத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு புத்தகத்தை நிதானமாகப் படிக்க சிரமமாக இருக்கும் பட்சத்தில், வாசகர்கள் எப்படி மீண்டும் வாசிப்புப் பழக்கத்தை மேற்கொள்ளலாம் என்ற கேள்வி பலருக்கும் தோன்றும். 

- கையில் எப்போதும் ஒரு புத்தகத்தை வைத்துக்கொள்ளலாம்

- வீட்டில் கண்பார்வையில் படும்படி புத்தகங்களை அடுக்கி வைக்கலாம்.  

- அன்றாடம் இரவு உறங்கச் செல்லுமுன் குறைந்தது இருபது நிமிடங்கள் வாசித்தலுக்கு ஒதுக்கலாம். 

- மிகவும் பிடித்த புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து வாசிக்கலாம்.

புத்தகங்கள் வாசிப்பது சாதாரண பொழுதுபோக்கு அன்று; இது தனிப்பட்ட வளர்ச்சிக்கான ஒரு ஆற்றல்மிக்க கருவியாகும்.

புதிய உலகங்களை ஆராய, கற்பனை எல்லைகளை விரிவுபடுத்த வாசித்தல் பெரிதும் கை கொடுக்கிறது என்றால் அது மிகையாகாது! 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!