தோல்விதான் வெற்றிக்கு முதல்படி

சீனாவில் நடந்துவரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 47 ஆண்டுகள் கழித்து குத்துச்சண்டை போட்டியில் முதல் சிங்கப்பூரர் எனும் பெருமையுடன் நாட்டை பிரதிநிதிக்கிறார் தனிஷா மதியழகன், 26.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 50 கிலோ எடை பிரிவில் தனக்கு எதிராக போட்டியிட்ட உஸ்பெகிஸ்தான் வீராங்கனையிடம் எதிர்பாராவிதமாக தோற்றுப்போனாலும், அடுத்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கத் தகுதிபெற்று, தன் கனவை நனவாக்கும் பயணத்தைத் தொடர்கிறார் தனிஷா.

ஆசிய விளையாட்டுகளில் போட்டியிடும் வாய்ப்பு தனக்குக் கிட்டியதைச் சற்றும் எதிர்பார்த்திராத தனிஷா, தொடக்கத்தில் குத்துச்சண்டையை ஒரு பொழுதுபோக்காகத்தான் கருதி வந்தார்.

சிறு வயதிலிருந்தே விளையாட்டுகளில் மிகுந்த ஆர்வமும் துடிப்பும் காட்டிய தனிஷா, முதலில் வலைப்பந்தாட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.

உடல் பலத்தைப் பயன்படுத்தும் விளையாட்டில் ஈடுபட்டால் மேலும் சிறப்பாக இருக்கும் என்று முடிவுசெய்த அவர், பின்னர் குத்துச்சண்டை வகுப்புகளுக்குச் செல்லத் தொடங்கினார். ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இந்த விளையாட்டுக்கு அறிமுகமான தனிஷா, இன்று குத்துச்சண்டையில் பலரையும் வீழ்த்தி, வெற்றிக் கிண்ணங்களையும் பதக்கங்களையும் குவித்து வருகிறார்.

இதற்குமுன் தென்கிழக்காசிய விளையாட்டுகளில் போட்டியிட்ட இவருக்குத் தங்கப் பதக்கம் கைசேராவிட்டாலும், அங்கும் சிங்கப்பூர் கொடியைப் பறக்கவிட்டார்.

ஆசிய விளையாட்டுகளுக்காக சீனாவின் ஹாங்ஜோ நகரில் ஒரு வாரம் இருந்த இவர், சிங்கப்பூர் தேசிய பெண்கள் குத்துச்சண்டை அணியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தன் பயிற்றுவிப்பாளருடன் சீனா சென்றிருந்த தனிஷா, அங்கு சற்று தனிமையை எதிர்நோக்கியதாகக் குறிப்பிட்டார்.

இருந்தாலும், போட்டியாளர்களுக்காக சீனா ஏற்பாடு செய்திருந்த தடபுடலான வரவேற்பு சிறப்பாக இருந்தது என்று இவர் பாராட்டினார்.

சிங்கப்பூரில் குத்துச்சண்டை வீராங்கனைகள் அதிகம் இல்லாத நிலையில் பெரும்பாலும் இது போன்ற போட்டிகளுக்குச் செல்லும்போதெல்லாம், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து வருவோர் தம்மைப் போன்றவர்களைத் தாழ்வான கோணத்தில் பார்ப்பதும் சிங்கப்பூரிலிருந்து வருவோரை எளிதில் வீழ்த்தி விடலாம் என்ற அவர்களது மனப்பான்மையும் தனிஷாவை வருந்தச் செய்கிறது.

இதனால், சில நேரங்களில் தனிஷா குத்துச்சண்டை வளையத்துக்குள் செல்லும்போது எதையும் நினைக்காமல், தன்னை எதிர்த்துப் போட்டியிடுபவரின் உயரம், எந்த உத்தியைக் கையாண்டால் எளிதில் வெற்றி பெற முடியும் என்பனவற்றை மட்டும் கருத்தில்கொண்டு செயல்படுவதாகக் கூறினார்.

ஆசிய விளையாட்டுகளில் வெற்றியை எதிர்பார்க்காமல் சென்றிருந்த தனிஷா, அதன்மூலம் கிடைத்த அனுபவத்தை வைத்து தன்னை மேலும் குத்துச்சண்டையில் மேம்படுத்திக் கொள்ள விரும்புகிறார். ஒழுக்கத்தையும் நேர மேலாண்மையையும் குத்துச்சண்டை தனக்கு கற்பித்துள்ளதாக கூறிய அவர், அவ்விளையாட்டில் ஈடுபடத் தொடங்கிய போது குடும்பத்திலிருந்து போதிய ஆதரவு கிடைக்காமல் தவித்தார்.

ஆனால், இன்று தன் பயிற்றுவிப்பாளருக்கு அப்பாற்பட்டு, தனிஷாவின் தாயார் அவருக்குப் பேராதரவாக உள்ளார்.

விளையாட்டில் கவனம் செலுத்துவதால், குத்துச்சண்டை மூலம் என்ன கிடைக்கிறது, தான் ஏன் இதில் ஈடுபட வேண்டும் என்பன போன்ற எதிர்மறைக் கருத்துகளே பிறரிடமிருந்து தனக்கு கிடைத்துள்ளதாக பகிர்ந்துகொண்டார் தனிஷா.

ஆனால், குத்துச்சண்டை மூலம் தனிஷாவுக்குப் பலரை நண்பர்களாக்கிக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

குத்துச்சண்டை என்றாலே பெரும்பாலும் ஒருவரின் உடல் வலிமை, குறிப்பாக கைகளில் இருக்கும் தசை வலிமையை பயன்படுத்த வேண்டுமென்றாலும் மனவலிமை மிக முக்கியம் எனக் கூறும் தனிஷா, தியானத்தில் ஈடுபட்டு தன்னை தளர்த்திக்கொள்கிறார்.

மேலும், நாள்தோறும் குத்துச்சண்டைப் பயிற்சியில் ஈடுபட்டு, உடலுறுதிக்கு முக்கியத்துவம் அளிப்பதோடு, நல்ல உணவுப் பழக்கத்தையும் இவர் கடைப்பிடிக்கிறார்.

அடுத்து ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நவம்பர் மாதம் நடைபெறும் போட்டியில் பங்குகொள்ளும் தனிஷா, அதற்காகவும் அடுத்த ஆண்டு இத்தாலியில் நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கான தகுதிப் போட்டிகளில் தன் ஆற்றலை வெளிப்படுத்தவும் கடுமையாகப் பயிற்சி செய்து வருகிறார்.

குத்துச்சண்டை என்றால் தனக்கு முதலில் தோன்றும் சொல் ‘பெண்கள்’ எனக் குறிப்பிடும் தனிஷா, சிங்கப்பூரில் இந்த விளையாட்டில் பெண்களை அதிகம் ஈர்க்கும் முயற்சிகளிலும் பங்காற்றி வருகிறார்.

நேரம் கிடைக்கும்போது சடலங்களைப் பதப்படுத்தும் தொழிலில் ஈடுபடும் தனிஷா, தற்போது சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகத்தில் இறுதியாண்டு ‘டைக்னோஸ்டிக் ரேடியோகிராஃபி’ துறையில் பயின்று வருகிறார்.

குத்துச்சண்டைப் பயிற்சிக்கு மிகுந்த நேரம் செலவிட்டாலும், இவர் தமது படிப்பையும் விளையாட்டையும் ஒருசேரச் சமாளித்து வருகிறார்.

காலை ஆறு மணிக்கு எழுந்து பாடம் தொடங்கும் முன் குத்துச்சண்டை பயிற்சி மேற்கொண்டு, பள்ளி முடிந்து இரவு எட்டு மணிக்கு மீண்டும் பயிற்சி மேற்கொள்கிறார் தனிஷா.

சுகாதாரத் துறையில் நாட்டம் இருந்தாலும், வருங்காலத்தில் குத்துச்சண்டையிலிருந்து ஓய்வுபெற்றபின், அவ்விளையாட்டில் பயிற்சியளிக்க இவர் திட்டமிட்டுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!