பொது வாடகை வீடுகளில் இளம்பிள்ளைகளுடன் தங்கியுள்ள குடும்பங்களுக்குக் கைகொடுக்கும் ‘காம்லிங்க்’ திட்டத்தின் மேம்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சொந்த வீடு வாங்கி நிலைத்தன்மையை ஊக்குவிப்பதே இத்திட்டத்தின் நோக்கம்!

சொந்த வீட்டில் வாழ விரும்பும் சிங்கப்பூர்க் குடும்பங்கள்

சிங்கப்பூரில் குறைந்த வருமானக் குடும்பங்கள், பல்வேறு சவால்களுக்கு இடையே வாடகை வீடுகளில் தங்கி, அன்றாடச் செலவுகளை எதிர்கொண்டு போராடி வருகின்றனர்.

நிதி விவகாரங்களில் தவறான முடிவு, மணவாழ்க்கைக் கசப்புகளால் ஏற்படும் மணவிலக்கு போன்ற காரணங்களால் சிலர் சொந்த வீட்டை இழந்து தவிக்கின்றனர். இதனால், பண நெருக்கடிக்கு உள்ளாகி, கடனில் சிக்கும் அபாயம் அதிகரிக்கிறது. குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு நாட்பட்ட நோய் ஏற்பட்டால் அது மொத்த குடும்பத்தின் நிதிநிலைமையை ஆட்டம் காண வைக்கிறது. இது தீய சுழலாகத் தொடர, சிலரால் மீள முடிவதில்லை.

கடன் பிரச்சினைகள் இல்லாதபோதும் ஒரு சிலர் குறைந்த வருமானத்தை ஈட்டுவதால் சொந்த வீடு வாங்க ஆசைப்பட்டாலும் அந்தக் கனவு தொடர்ந்து எட்டாக்கனியாகவே உள்ளது.

‘காம்லிங்க் பிளஸ்’ எனும் சமூகத் தொடர்புச் செயல்திட்டத்தில் இடம்பெற்றுள்ள ‘அதிக மானியத்துடன் கூடிய பொது வாடகை வீடு’ ஏற்பாட்டில் குடும்பங்களுக்கு அரசாங்கம் கூடுதல் ஆதரவை வழங்கும் என்று துணைப்பிரதமர் லாரன்ஸ் வோங் வியாழக்கிழமையன்று (அக்டோபர் 19ஆம் தேதி) தெரிவித்தார்.

சொந்த வீட்டில் குடிபெயர முற்படும் குடும்பங்கள்

தற்போது ஏறத்தாழ 52,000 குடும்பங்கள் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வாடகை வீடுகளில் வசித்து வருவதாகவும் அவற்றில் 50,000 குடும்பங்கள் பொது வாடகைத் திட்டத்தின்கீழ் இருப்பதாகவும் தேசிய வளர்ச்சி அமைச்சின் புள்ளி விவரங்கள் குறிப்பிடுகின்றன.

குறைந்தது மூவர் கொண்ட குடும்பங்களில் 85 விழுக்காடு, ஈரறை அல்லது அதைவிடப் பெரிய வீடுகளில் தங்கியுள்ளன.

கடந்த 10 ஆண்டுகளில் வாடகை வீடுகளில் தங்கிய 7,800க்கும் அதிகமான குடும்பங்கள் சொந்த வீடுகளை வாங்கியுள்ளன. அத்துடன், 2,300 குடும்பங்கள் புதிய வீடுகளுக்காகக் காத்திருக்கின்றன. கடந்த ஐந்து ஆண்டு காலகட்டத்தில் பொது வாடகை வீடுகளில் தங்கியுள்ள ஏறத்தாழ 4,500 குடும்பங்கள் சொந்த வீடு வாங்கியுள்ளன. இந்த எண்ணிக்கை, வாடகை வீடுகளில் தங்குவோரில் கிட்டத்தட்ட 9 விழுக்காடாகும்.

வாடகை வீடுகளில் தங்குவோரில் ஆண்டுக்குச் சராசரியாக 2 விழுக்காட்டினர் வீவக வீட்டு உரிமையாளர்கள் ஆவதாக வீவக தெரிவித்தது. 2019 முதல் 2021 வரை வாடகை வீடுகளில் தங்கிய ஏறக்குறைய 1,030 குடும்பங்கள் சொந்த வீட்டிற்கு மாறுவதற்கு வீவக கைகொடுத்தது.

கடந்த ஆண்டு புதிய வீடு வாங்கிய 700 குடும்பங்களில் பத்தில் ஏழு குடும்பங்கள் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்திலிருந்து வீடு வாங்கின. எஞ்சியவை மறுவிற்பனை வீடுகளை வாங்கின.

‘காம்லிங்க் பிளஸ்’ மூலம்
மேம்பட்ட உதவி

இளம்பிள்ளைப் பருவக் கல்வி - மூன்று வயதில் தங்களது பிள்ளைகளை மழலையர் பள்ளியில் சேர்ப்போர் அனுகூலம் பெறுவர். அவர்களது பிள்ளை மேம்பாட்டுக் கணக்கில் (சிடிஏ) 500 வெள்ளி சேர்க்கப்படும்.அப்பிள்ளைகளின் வருகைப்பதிவு நன்றாக இருந்தால் ஒவ்வொரு காலாண்டிலும் அவர்களது ‘சிடிஏ’ கணக்கில் 200 வெள்ளி சேர்க்கப்படும்.

வேலைவாய்ப்பு - 1,400 வெள்ளிக்கும் அதிகமான சம்பளமுள்ள வேலையில் நீடித்திருப்போர்க்கு, அவர்கள் வேலையில் நீடித்திருக்கும் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் $450 முதல் $500 வரை ரொக்கமும் மத்திய சேம நிதி பண வழங்கீடும் கொடுக்கப்படும்.

வீட்டுரிமைச் சேமிப்பு - மத்திய சேமநிதிக் கணக்குகளில் குடும்பங்கள் சுயமாக நிரப்பும் ஒவ்வொரு வெள்ளிக்கும் 2 வெள்ளியை அமைச்சு நிரப்பும்.

நிதி நிலைத்தன்மை - உரிமமுள்ள கடன் நிறுவனங்களிடம் குடும்பங்கள் திருப்பிச் செலுத்தும் ஒவ்வொரு வெள்ளிக்கும் கொடையாளிகள் ஒரு வெள்ளி அளிப்பர்.

பொதுவாடகை வீட்டில் தங்குவோர் தொடர்ந்து வேலையில் இருந்தால் அல்லது சொந்த வீடு வாங்கும் அளவுக்கு அவர்கள் நிதிநிலைமை சீராக இருந்தால் அவர்களுக்கு உதவ வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் கடப்பாடு கொண்டுள்ளது.

நீண்டகால நோக்கில், குடும்பங்களுக்கு சொந்த வீடு, வாடகை வீட்டைக் காட்டிலும் நிலைத்தன்மை தரக்கூடியதால் அனைவரையும் சொந்த வீட்டுக்கு மாறும்படி ஊக்குவிப்பதாக வீவக கூறுகிறது.

மேற்காணும் திட்டங்கள் குறித்த கருத்துகளை, வாடகை வீட்டில் தங்கி வரும் சிங்கப்பூர்க் குடும்பங்களிடம் தமிழ் முரசு கேட்டறிந்தது.

பிள்ளைகளுக்காக வீடு வாங்க ஆசைப்படும் ஒற்றைத் தந்தை

மகன் பிரவினுடனும் (15 வயது) மகள் அஞ்சனாவுடனும் (வயது 12) சசிகுமார் ஆரியராஜா. படம்: தினேஷ் குமார்

இரண்டு பிள்ளைகளை ஒற்றையாளாக வளர்த்துவரும் பாதுகாவல் அதிகாரி சசிகுமார் ஆரியராஜா, படிப்படியாக தம் வாழ்க்கையில் வசந்தத்தைக் காண்கிறார்.

புக்கிட் பாத்தோக்கிலுள்ள ஈரறை வீட்டில் 12 ஆண்டுகளாகப் பிள்ளைகளுடன் வசித்து வருகிறார் திரு சசிகுமார். பிள்ளைகள், குறிப்பாக மகளின் வயது அதிகரித்து வருகையில் சொந்தமாக ஒரு மூவறை ‘பிடிஓ’ வீடு வாங்க இவர் ஆசைப்படுகிறார்.

தற்போது வாடகைக்காக கிட்டத்தட்ட 300 வெள்ளி கட்டணம் செலுத்தும் இவர், “அந்தப் பணத்தை வாடகை கட்டுவதற்குப் பதிலாக சொந்த வீட்டுக்குக் கட்டவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்,” என்று கூறினார்.

ஆனால், குறைந்த சம்பளம் வாங்கும் திரு சசிகுமார், தம் மத்திய சேமநிதிக் கணக்கில் போதிய அளவு பணம் இருக்காதோ எனக் கவலைப்படுகிறார்.

“என்னால் விருப்பத்தின்பேரில் மத்திய சேமநிதிக் கணக்கில் கூடுதலாகச் சேமிக்க முடியும் என்பதை உறுதியாகக் கூற முடியாது. நான் வாங்கும் சம்பளம் என் குடும்பச் செலவுக்கும் மருத்துவச் செலவுக்கும் சரியாக உள்ளது,” என்று திரு சசிகுமார் கூறினார்.

கடந்த ஆண்டுவரை கிடைத்துவந்த $50 உதவிப் பற்றுச்சீட்டுகள் இவ்வாண்டு தம் சம்பள உயர்வால் நிறுத்தப்பட்டதாகக் கூறினார் திரு சசிகுமார். “ஒற்றைப் பெற்றோரான எனக்கு அந்தத் தொகை தேவைப்படுகிறது. அத்துடன், விலைவாசியும் வெகுவாக உயர்ந்துள்ளதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும்,” என்றார்.

திருமண உறவு திடீரென முறிந்தபோது திரு சசிகுமாரின் மகன் பிரவீனுக்கு ஏழு வயதாகவும் மகள் அஞ்சனாவுக்கு ஆறு வயதாகவும் இருந்தது. உறவினர்கள் பெரும்பாலும் கண்டுகொள்ளாத நிலையில் தனியே பிள்ளைகளை வளர்த்தார் திரு சசிகுமார்.

வேலையையும் பிள்ளை வளர்ப்பையும் அப்போது சமாளிக்கத் திணறிய திரு சசிகுமார், ஒருகட்டத்தில் தம் வேலையை இழக்கும் அபாயத்தை எதிர்நோக்கினார். இதனால் ஏற்பட்ட கடும் மன உளைச்சல், அவருக்கு ரத்தக் கொழுப்புப் பிரச்சினையையும் இரண்டு முறை பக்கவாதத்தையும் ஏற்படுத்தியது

இப்போது திரு சசிகுமார், தம் பதின்ம வயதுப் பிள்ளைகள் நன்னடத்தையுடன் செயல்படுவதைக் கண்டு மகிழ்கிறார்.

முதுமையிலும் போராடும் இல்லத் தலைவி

திருவாட்டி செல்வராஜ் சாவித்திரி. படம்: தினேஷ் குமார்

நொடித்துப்போன நிலையில், சிறுநீரகச் செயலிழப்பால் பாதிக்கப்பட்டுள்ள தம் கணவருடன் சைனாடவுன் வட்டாரத்திலுள்ள வாடகை வீவக வீட்டில் வாழ்கிறார் திருவாட்டி செல்வராஜ் சாவித்திரி, 60.

எல்லாப் பக்கங்களிலிருந்தும் அழுத்தத்தை எதிர்நோக்கும் திருவாட்டி சாவித்திரி, தம் குடும்பத்திற்காகத் தொடர்ந்து உதவி கேட்டு வருகிறார்.

முன்னதாக மின்சாரத் தொழில்நுட்பராகவும் பின்னர் பாதுகாவல் அதிகாரியாகவும் பணியாற்றிய இவருடைய கணவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் வேலையிலிருந்து ஓய்வுபெற வேண்டியதாயிற்று.

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள கணவரைக் கவனித்து வரும் திருவாட்டி சாவித்திரி, அவ்வப்போது உணவுப் பொட்டலமிடுபவராகப் பகுதி நேர வேலையைச் செய்து வந்தார். இத்தம்பதியர்க்கு ஒரே மகன். அவரது உணவு வணிகம் நொடித்துப்போனதால் அவரால் தங்களை முழுமையாகப் பார்க்க முடியாத சூழலில் இருப்பதாகத் திருவாட்டி சாவித்திரி குறிப்பிட்டார்.

தற்போது இவர்களது வீட்டு வாடகை 185 வெள்ளி. முன்னதாக தனியார் சந்தையிலிருந்து எடுக்கப்பட்ட வீட்டின் வாடகை 600 வெள்ளி வரை இருந்ததாகக் குறிப்பிட்ட திருவாட்டி சாவித்திரி, அதனைக் கட்டத் திணறியதாகக் கூறினார்.

கணவர் வேலையிலிருந்து விலகி எட்டு ஆண்டுகளாகிவிட்ட நிலையில், உதவி மிகத் தாமதமாக வந்திருப்பதை நினைந்து அவர் வருந்துகிறார். நான்கு மாதங்களுக்கு முன்புதான் அறநிறுவனம் ஒன்றின்மூலம் மாதாமாதம் 400 வெள்ளி பெறுவதாகக் கூறினார். அன்றாடச் செலவைச் சமாளிக்க கணவரின் மத்திய சேமநிதித் தொகை உதவினாலும் அது போதவில்லை என்கிறார்.

கடும் நிதி நெருக்கடியையும் உடல்நலக் குறைபாட்டையும் ஒரே நேரத்தில் எதிர்கொண்டுவரும் திருவாட்டி சாவித்திரி, தமது வேதனைகளுக்கு அரசாங்க அமைப்புகள் செவிசாய்த்து உதவும்படி கேட்டுக்கொள்கிறார். காம்லிங்க் பிளஸ் திட்டம் இளம்பிள்ளைகள் உள்ள குடும்பங்களுக்கு உரியது என்றாலும், திருவாட்டி சாவித்திரி போன்றோரின் குடும்பங்களும் உதவிக்காகக் காத்திருக்கின்றன.

‘கனவுகள் விரைவில் மெய்ப்படும்’

(இடமிருந்து) வி.எம். குமரன், 54, குகன் குமார், 5, நுர்ஹயத்தி, 30, வர்ஷன் குமார், 3. படம்: தினேஷ் குமார்

சொந்த வீட்டுக்கு இடம்பெயரும் கனவு நனவாவதற்குக் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகலாம் என்ற நிலையில், தாம் நம்பிக்கையடன் இருப்பதாகக் கூறுகிறார் பாதுகாவல் துறையில் மேலாளராகப் பணிபுரியும் வி.எம். குமரன், 54,

ஏறக்குறைய ஏழு ஆண்டுகளுக்கு முன்னதாக மணவிலக்கு பெற்ற திரு குமரன், தம் வீட்டை விற்றதை அடுத்து, சொந்த வீடு இல்லாத நிலையில் ஒரு மகனைப் பார்த்துக்கொள்ளும் நிலையில் இருந்தார்.

இந்தோனீசியாவைச் சேர்ந்த தம் இரண்டாவது மனைவியை 2017ல் இவர் திருமணம் செய்தார். ஆனால், அவர் இன்னும் நிரந்தவாசத் தகுதி பெறாத நிலையில், வீடு வாங்கினால் ஒற்றையராகத்தான் வாங்க முடியும் என்று திரு குமரன் குறிப்பிட்டார். ஓய்வுக்காலத்திற்கான சேமிப்பை வீடு வாங்குவதற்குப் பயன்படுத்தாமல் தம்பதியாக வீடு வாங்கி சேமிப்பை மிச்சப்படுத்த வேண்டும் என்றே இவர் விரும்புகிறார்.

செலவுகளை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடிந்ததாகக் கூறுகிறார் திரு குமரன். பிள்ளைகளுக்காக இலவச பாடநூல்கள், மேம்பாட்டு நிதியின் அதிகரிப்பு உள்ளிட்ட திட்டங்களும் கைகொடுப்பதாக அவர் கூறினார். தமது மத்திய சேம நிதிப் பங்களிப்பை விரும்பியே நிரப்பத் திட்டமிடும் திரு குமரன், அரசாங்கம் தமக்கு இரண்டு மடங்கு தொகையை நிரப்புவதை வரவேற்கிறார்.

பிள்ளைகளுக்கான கல்வியை உறுதிப்படுத்த கடினமாக உழைப்பதாகக் கூறும் திரு குமரன், காம்லிங்க் திட்டம் தமக்குக் கைகொடுக்கும் என நம்புகிறார்.

“நான் அனுபவித்த துன்பங்களை என் மகன்கள் அனுபவிக்கக் கூடாது என்பதால் சரியான திட்டமிடுதலில் கவனம் செலுத்துகிறேன். என் மகன்களின் வெற்றி உறுதி என்பதை ஆணித்தரமாக நம்புகிறேன்,” என்றார் இவர்.

நிதிச் சிக்கல்களைக் கடந்துவந்த குடும்பம்

பிள்ளைகளுடன் விளையாடும் திரு அப்துல்லா ரஃபிக், திருவாட்டி திவ்யலட்சுமி. படம்: கி.ஜனார்த்தனன்

குழந்தைப் பராமரிப்பு பற்றி விரிவான வழிகாட்டுதலை கிட்ஸ்டார்ட் அமைப்பிலிருந்து பெற்றதாகக் கூறினார் திருவாட்டி திவ்யலட்சுமி, 29.

தமது இரண்டாவது கருத்தரிப்பின்போது கொவிட்-19 பரவலால் மூத்த மகன் புவனைப் பள்ளிக்கு அனுப்ப தொடக்கத்தில் தயங்கியதாகவும் கூறினார்.

“ஆனால், கிட்ஸ்டார்ஸ்ட் அமைப்பு எங்களுக்கு அருகிலுள்ள பாலர் பள்ளி நிலையத்தைக் கண்டுபிடித்து, அதில் குழந்தையைச் சேர்க்க ஊக்குவித்தது,” என்றார் திருவாட்டி திவ்யலட்சுமி. பிள்ளைகளுக்கான அணையாடை (டயாப்பர்), பால்மாவுச் செலவானது, அன்றாட மளிகைச் செலவுகளைக் காட்டிலும் அதிகம் என்று கூறிய இத்தம்பதியருக்கு, அந்த அமைப்பு உதவியது.

இரண்டாவது மகன் ரயான் பிறந்த பிறகு, திருவாட்டி திவ்யலட்சுமியின் கணவரான திரு அப்துல்லா ரஃபிக்கும், 31, ஆறு ஏழு மாதங்களாக வேலை இல்லாமல் இருந்தபின் புதிய வேலையில் சேர்ந்தார். முன்னதாக கட்டுமான, வேதித்துறை நிறுவனங்களில் ஊழியராகப் பணிபுரிந்த திரு அப்துல்லா, வேலையிழந்த பின்னர் லாரி பாதுகாவலர் உள்ளிட்ட தற்காலிக வேலைகளைச் செய்து குடும்பச் செலவுகளைச் சமாளிக்க முயன்றார். செலவுகளைச் சமாளிக்க கடன் அட்டைகளைப் பயன்படுத்தியதால், கடன், வட்டிச் சுமையும் அதிகரித்தது.

வீட்டுச்சூழல் காரணமாக இளம் வயது முதல் வாடகை வீட்டில் தங்கி வந்த திருவாட்டி திவ்யலட்சுமிக்கு சொந்த வீடு வாங்கப் போதிய சேமிப்பு இல்லை. பொதுச் சந்தையில் வீட்டு வாடகை கட்டுப்படியாக இல்லாததால் இறுதியில் தம் குடும்பத்திற்காக அரசாங்க வாடகை வீட்டுக்கு விண்ணப்பித்தார்.

நிதி நெருக்கடியால் கடன்கள் அதிகரித்தபோதும் தற்போது அவற்றை மெல்ல அடைத்து வருகின்றனர் இத்தம்பதியர். இந்நிலையில், காம்லிங்க் பிளஸ் திட்டம் தங்களுக்குக் கைகொடுக்கும் என்று இவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!