பிரதமர் லீ: மீள்திறன்மிக்க, ஒன்றுபட்ட தேசத்தை உருவாக்குவோம்

2023ஆம் ஆண்டில் சிங்கப்பூர் சந்தித்த சவால்கள் பற்றியும் அவை எவ்வாறு முறியடிக்கப்பட்டன என்பது குறித்தும் புதிய ஆண்டில் சிங்கப்பூர் வெற்றிப் பாதையில் செல்ல எவ்வாறு செயல்பட வேண்டும் என்றும் பிரதமர் லீ சியன் லூங் தமது புத்தாண்டுச் செய்தியில் மிகத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.

கடந்த ஆண்டு சவால்மிக்கதாக அமைந்ததை அவர் சுட்டினார். அனைத்துலகச் சூழலில் தொடர்ந்து தலைதூக்கிய பிரச்சினைகளை அவர் பட்டியலிட்டார். சீனா-அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையிலான அடிப்படைப் பிரச்சினைகள் ஓய்ந்தபாடு இல்லை என்றும் ரஷ்யா உக்ரேன் போர் இன்னும் தொடர்கிறது என்றும் அவர் உதாரணங்களாகக் காட்டினார்.

இஸ்‌ரேல்-ஹமாஸ் இடையிலான போர், அதன் விளைவாக ஏற்பட்டுள்ள உயிர்ச் சேதம் குறித்து பிரதமர் லீ கவலை தெரிவித்தார்.

தொடரும் மனித அவலங்களால் உலக மக்களிடையே வெறுப்பு, சினம் எழுந்துள்ளதாக பிரதமர் லீ கூறினார். சிங்கப்பூரில், அனைத்து இனத்தைச் சேர்ந்த மக்களும் தங்கள் ஆதங்கத்தையும் அக்கறையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும் குறிப்பாக, சிங்கப்பூர் முஸ்லிம்கள் தங்கள் எண்ணங்களை மிகவும் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

மற்ற நாடுகளில் ஏற்படும் பிரச்சினைகளிலிருந்து விலகியிருக்க முயன்றாலும், அவ்வப்போது சிங்கப்பூரர்கள் பிறர் துயர் கண்டு வருந்துவது தவிர்க்க இயலாத ஒன்று எனப் பிரதமர் லீ தெரிவித்தார்.

சிங்கப்பூரர்கள் இரக்க சிந்தனையுடன், நடைமுறைக்கு ஒத்த வகையில் தங்கள் எண்ணங்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தியிருப்பது மகிழ்ச்சி தருவதாக அவர் கூறினார்.

கருத்துகளை வெளிப்படுத்தும் அதேவேளையில் தேசிய நலனையும் சமுதாய ஒற்றுமையையும் சிங்கப்பூரர்கள் நிலைநிறுத்தியிருப்பதாக அவர் பாராட்டினார். உதவி தேவைப்படுவோருக்கு – குறிப்பாக, காஸாவில் வாழும் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை சிங்கப்பூரர்கள் பெருந்தன்மையுடன் பங்களித்திருப்பதைப் பிரதமர் லீ நினைவுகூர்ந்தார்.

இந்த இக்கட்டான தருணத்தில்அரசாங்கத்துக்குப் பக்கபலமாகத் துணைநின்று, சமுதாய ஒற்றுமைக்குத் தேவையான ஆதரவையும் அறிவார்ந்த ஆலோசனைகளையும் வழங்கிய  சமய, சமூகத் தலைவர்களுக்குப் பிரதமர் லீ நன்றி தெரிவித்துக்கொண்டார்.

இன, சமய நல்லிணக்கத்தைச், சிங்கப்பூர்ச் சமுதாயத்தின் அடிநாதமாக உருபெறச் செய்ய சிங்கப்பூரர்கள் பல்லாண்டுகாலம் அயராது பாடுபட்டுள்ளதாகவும். பல்வேறு சமூகங்களைப் பிளவுப்படுத்தக்கூடிய பிரச்சினைகளை தொடர்ந்து சகிப்புத்தன்மையுடனும் பரஸ்பர மரியாதையுடனும் கையாளவேண்டும் என்றார் பிரதமர் லீ.

சிங்கப்பூரின் முதல் பிரதமர் திரு லீ குவான் யூவும் அவருடைய சகாக்களும் கொண்டிருந்த விழுமியங்களையும் தொலைநோக்கு சிந்தையையும் பறைசாற்றுவதற்கு இதுவே சாலச் சிறந்த வழி என்று அவர் தெரிவித்தார்.

ஒவ்வொரு சிங்கப்பூரரும் வெற்றி பெறுவதற்கான முழு வாய்ப்பையும் பெறவல்ல நியாயமான, நேர்மையான சமுதாயம், தகுதிக்கு முன்னுரிமை, கடின உழைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இயக்கப்பெறும் துடிப்புமிக்க பொருளியல் ஒவ்வொரு சிங்கப்பூரரும் ‘தமது’ எனப் போற்றத்தக்க அன்பானதோர் இல்லம் ஆகிய விழுமியங்கள் கட்டிக்காக்கப்பட வேண்டும் என்பதை திரு லீ வலியுறுத்தினார்.

கடந்த ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் திரு தர்மன் சண்முகரத்னம் மாபெரும் வெற்றி பெற்று அதிபராகப் பதவி ஏற்றது, சிங்கப்பூர் இனம், மொழி, மதம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்ட ஒரு தேசமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது என்பதற்குச் சாலச் சிறந்த சான்று என்று பிரதமர் லீ பெருமையுடன் கூறினார்.

2023ல் சிங்கப்பூரர்கள் கொவிட்-19 கிருமியைக் கண்டு அஞ்சி முடங்காமல் வாழக் கற்றுக்கொண்டதை அவர் சுட்டினார்.

கடந்த ஆண்டு பிப்ரவரியில், நோய்ப்பரவல் செயல்பாட்டுக் கட்டமைப்பு நிலவரக் குறியீடு அதிகாரபூர்வமாகப் பச்சை நிலைக்கு மாற்றப்பட்டு, கிருமிப்பரவலிலிருந்து சிங்கப்பூர் மீண்டு வந்தது.

சுகாதாரப் பராமரிப்பு, முன்னிலை ஊழியர்கள் ஆகியோரின் அயரா முயற்சிகளுக்கும், சிங்கப்பூரைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளப் பாடுபட்ட அனைவருடைய ஒருமித்த பங்களிப்புகளுக்கும் சிங்கப்பூரர்கள் நன்றி கூற வேண்டும் என்றார் பிரதமர் லீ.

உள்ளூர் சாலைகளும் அக்கம்பக்கப் பேட்டைகளும் மீண்டும் உயிரோட்டம் பெற்றுள்ளதாகவும் சுற்றுப்பயணிகளும் திரும்ப வருவதாகவும் புதிதாகத் திறக்கப்பட்ட பறவைப் பூங்காவும் வருகையாளர்களைப் பெருமளவு ஈர்த்து வருவதாகவும் திரு லீ தெரிவித்தார்.

சிங்கப்பூர் 2023ல் 1.2% வளர்ச்சி கண்டு பொருளியல் மந்தநிலையைத் தவிர்த்ததாக அவர் கூறினார்.

இருப்பினும், பணவீக்கம் படிப்படியாகக் குறைந்து வந்தாலும்கூட, அதிகரித்த வாழ்க்கைச் செலவினத்தின் நெருக்கடியைக் குடும்பங்கள் இன்னும் எதிர்கொள்வதாக அவர் கூறினார். அரசாங்கத்தின் உதவித் திட்டங்கள் பலவும் குடும்பங்களின் மீதான சுமையைத் தணிக்க உதவியுள்ளன என்று தாம் நம்புவதாக அவர் தெரிவித்தார்.

2024ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1 முதல் 3 விழுக்காடு வளர்ச்சி காணும் என்று வர்த்தகத் தொழில்துறை அமைச்சு முன்னுரைத்துள்ளதை அவர் மேற்கோள்காட்டினார். பணவீக்கம் மேலும் குறையும் என்று நம்பலாம் என்று தெரிவித்த பிரதமர் லீ, ஆனால், இவை அனைத்தும் நம் அயலகச் சூழலையே பெருமளவு சார்ந்திருக்கும் எனத் தெரிவித்தார்.

இன்று முதல் பொருள், சேவை வரி 9 விழுக்காடாக உயர்த்தப்படுகிறது. அதிலிருந்து பெறப்படும் கூடுதல் வருவாய்த் தொகை, சிங்கப்பூர் மக்கள்தொகை மூப்படைவதால் அதிகரிக்கவல்ல சுகாதாரப் பராமரிப்புச் செலவுகளை ஈடுசெய்ய உதவும் என்று பிரதமர் லீ தெரிவித்தார்.

இந்தத் தாக்கத்தின் பாதிப்பைக் குறைக்க, குடும்பங்கள் அடுத்த ஆண்டும் தொடர்ந்து உத்தரவாதத் தொகுப்புத்திட்டத்தைத் பெறும் என்றார் அவர். இவ்வகையில், உதவி தேவைப்படும் குடும்பங்களுக்கு உதவி கிடைக்கும் என்றும் அதேவேளையில், நமது பொது நிதிகள் நீண்டகாலத்துக்குச் சீராகவும் நீடித்திருக்கவல்ல வகையிலும் பேணிக் காக்கப்படலாம் என்றும் திரு லீ கூறினார்.

2024ஆம் ஆண்டை எதிர்நோக்குதல்

எதிர்வரும் சில ஆண்டுகளுக்கு, அயலகச் சூழல் சிங்கப்பூரின் பாதுகாப்புக்கும் செழிப்புக்கும் மிகவும் உகந்த நிலையில் இருக்காது என்பதை எதிர்பார்த்திருக்கவேண்டும் என்று பிரதமர் லீ சிங்கப்பூரர்களைக் கேட்டுக்கொண்டார். அரசியல் சார்ந்த பிரச்சினைகளில் உள்ள நிச்சயமற்ற போக்குகள் தொடர்ந்து உலகப் பொருளியலைப் பாதிக்கும் என்றும் தென்சீனக் கடல் குறித்த முரணான உரிமைக் கோரல்கள், சீனா – தைவான் உறவு ஆகியவற்றால் பதற்றங்களும் பூசல்களும் நிறைந்துள்ளதை அவர் உதாரணங்களாகக் காட்டினார். இத்தகைய பிரச்சினைகள், இவ்வட்டாரம் மீதான நம்பிக்கையையும் சிங்கப்பூரின் வளர்ச்சியையும் பாதிக்கக்கூடும்

அதேவேளையில், பருவநிலை மாற்றம் ஒவ்வொரு நாட்டுக்கும் பெரும் சவால்களை ஏற்படுத்தும் என்றும் பிரதமர் லீ எச்சரித்தார். அதிகரித்துவரும் வெப்பநிலை, உயரும் கடல் மட்டம் ஆகியவற்றுக்குச் சிங்கப்பூர் தம்மை ஆயத்தப்படுத்திக்கொள்ளவேண்டும் என்றார் அவர். சிங்கப்பூரின் பொருளியலைக் கரிம உமிழ்வில்லாத ஒன்றாக மாற்றியமைக்கவேண்டும் என்றும் இது செலவும் சிரமமும் மிகுந்த ஒரு மாற்றமாகும் என்று அவர் தெரிவித்தார்.

எனினும், சிங்கப்பூரர்களுக்கு நம்பிக்கை தரும் அம்சங்களும் இருப்பதாகப் பிரதமர் லீ கூறினார். அதிவேக தொழில்நுட்ப வளர்ச்சி – குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு, இயந்திரவியல் துறைகளில் உள்ளூர் தொழில்களுக்கும் மக்களுக்கும் பெரும் வாய்ப்புகளை அள்ளித் தரும் என்றார் அவர். தொழில்கள் தங்கள் செயல்பாடுகளை மேம்படுத்தவும் உருமாற்றவும் அரசாங்கம் அவற்றுடன் அணுக்கமாகப் பணியாற்றும் என்று பிரதமர் லீ உறுதி அளித்தார்.

அதேபோல், ஒவ்வொரு சிங்கப்பூரரும் தங்கள் திறன்களை மேம்படுத்திக்கொள்ளவும் புதிய திறன்களை வளர்த்துக்கொள்ளவும் ஆதரவளிக்க, முத்தரப்புப் பங்காளிகளுடன் அரசாங்கம் அணுக்கமாகச் செயல்படும் என்றார் அவர். இவ்வாறு அனைவரும் தங்கள் வாழ்க்கைத்தொழிலில் துடிப்பாக ஈடுபட்டு, வேலை வாய்ப்புகளைப் பெறக்கூடியவர்களாகவும் போட்டித்தன்மை மிக்கவர்களாகவும் திகழமுடியும் என்று திரு லீ தெரிவித்தார்.

அதேநேரத்தில், சமூகத்தில் உள்ள பிறர்மீது எப்போதும் அக்கறை காட்டவேண்டும் என சிங்கப்பூரர்களுக்குப் பிரதமர் லீ நினைவூட்டினார்.

“நம்மைவிட அதிக தேவையுடையோருக்கு உதவி புரியவேண்டும். குறைந்த வருமானக் குடும்பங்கள், எளிதில் பாதிப்படையக்கூடிய தரப்பினர் ஆகியோர் நோக்கமும் கண்ணியமும் கொண்டு வாழத் துணைபுரியும் வகையில், அரசாங்கம் அவர்களைத் தொடர்ந்து கைதூக்கிவிடும்,” என்று பிரதமர் லீ தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாமல் செலவு கட்டுப்படியான, எளிதில் கிடைக்கப்பெறும் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகள் சிங்கப்பூரர்களுக்குத் தொடர்ந்து கட்டித் தரப்படும் என்றார் அவர். அதுவே, சிங்கப்பூரின் சமுதாய இணக்கத்தின் முக்கிய அரண் என்று அவர் கூறினார்.

மூப்படையும் மக்கள்தொகையைப் பேணிக் காக்க, உள்கட்டமைப்பு வசதிகளும் சமுதாயப் பாதுகாப்புக் கட்டமைப்புகளும் மேம்படுத்தப்படும் என்றும் மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி, ‘நலமாக மூப்படைதல்’ எஸ்ஜி ஆகிய செயல்திட்டங்கள்வழி சுகாதாரப் பராமரிப்புக் கட்டமைப்பு உருமாற்றப்படும் என்றும் திரு லீ தெரிவித்தார். இவை மட்டுமின்றி, வேறு பல திட்டங்களும் புதுப்பிக்கப்பட்ட சமுதாய இணக்கத்திற்கான வரைவுத்திட்டத்தில் அங்கம் வகிக்கும் என்றார் அவர்.

“ ‘முன்னேறும் சிங்கப்பூர்’ திட்டம் சிங்கப்பூருக்கான லட்சியகரமான ஒரு திட்டம். அதிவிரைவாக மாறும் உள்நாட்டு, வெளிநாட்டுச் சூழல்களுக்கிடையே நாம் விரைவாகச் செயல்படுத்தவேண்டிய ஒரு திட்டம். சிரமமான பிரச்சினைகள் நேரடியாகவும் திறம்படவும் கையாளப்படாததால், எதிரெதிர் தன்னார்வக் குழுக்கள் ஒன்றோடொன்று முரணாகச் செயல்பட்டதால், தலைவர்கள் நாட்டின் நலனன்றித் தம் நலத்திற்கு முன்னுரிமை அளித்ததால், பல பெரிய சமுதாயங்கள் பிளவுபட்டுப் பலவீனமடைந்துள்ளன.

“சின்னஞ்சிறு சிவப்புப் புள்ளியாகத் திகழும் சிங்கப்பூரால் அதே தவறுகளைச் செய்து, அதே விளைவுகளை எதிர்கொள்ள அனுமதிக்க இயலாது. நமது ஒருமித்த அடையாளத்தையும் தேசிய உணர்வையும் வலுப்படுத்தவும், நமது சமுதாயத்தை ஒற்றுமையாக வைத்திருக்கவும் நாம் இன்னும் கடுமையாகப் பாடுபடவேண்டும்,” என்று பிரதமர் லீ தெரிவித்தார்.

இவ்வாண்டு துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் பிரதமராகப் பொறுப்பேற்பார் என்று திரு லீ தெரிவித்தார்.

“தலைமைத்துவ மாற்றம் ஏற்படுவது இது முதல் முறையல்ல. ஆனால், மாற்றங்கள் எப்போதும் நுண்மை மிக்கவை. உலக அரங்கில், சிங்கப்பூர் அணுக்கமாகக் கண்காணிக்கப்படும். புதிய தலைவர்கள் சிங்கப்பூரர்களுடன் எவ்வாறு பிணைப்புமிக்க உறவைப் பேணுகிறார்கள் என்பதையும், நம் சிறிய நாடு தொடர்ந்து வெற்றிகரமாகவும் தனித்துவத்துடன் இருக்க இயலுமா என்பதையும் அண்டை நாடுகள் மட்டுமின்றி, தொலைதூர தேசங்களும் உற்று நோக்கும். சிங்கப்பூரர்கள் ஒன்றிணைந்து, லாரன்ஸுக்கும் அவருடைய நான்காம் தலைமுறைக் குழுவினருக்கும் உங்கள் முழு ஆதரவை வழங்குமாறு நான் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்,” என்று திரு லீ கூறினார்.

“மேலும் விறுவிறுப்பான, அனைவரையும் உள்ளடக்கிய, நியாயமான, போட்டித்தன்மைமிக்க, மீள்திறன் கொண்ட, ஒன்றுபட்ட தேசத்தை உருவாக்க அவர்களுடன் இணைந்து பணியாற்றுங்கள். இவ்வாறுதான் நாம் தொடர் நெருக்கடிகளைச் சிறப்பாகக் கடந்து வந்துள்ளோம். இவ்வாறே நாம் வரவிருக்கும் எதிர்காலச் சவால்களையும் எதிர்கொள்ளவேண்டும்.

“ஒன்றுபட்ட மக்களாக, புத்துணர்ச்சியும் நம்பிக்கையும் கொண்டு 2024ஆம் ஆண்டை வரவேற்போம். வருங்காலம் நிச்சயமற்றதாக இருக்கலாம். ஆனால், நமது பாதை தெளிவாக உள்ளது. நமது இலக்குகளை ஈடேற்றவும் சிங்கப்பூரின் ஒளிமயமான எதிர்காலத்தைப் பத்திரப்படுத்தவும், ஒன்றிணைந்து செயல்பட, நான் ஒவ்வொரு சிங்கப்பூரருக்கும் அழைப்பு விடுக்கிறேன்,” என்று பிரதமர் லீ தெரிவித்தார்.

சிங்கப்பூரர்கள் அனைவருக்கும் தமது இனிய புத்தாண்டு வாழ்த்துகளை அவர் தெரிவித்துக்கொண்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!