தமிழ்மொழி மூலம் ஒளிமயமான உலகிற்கான திறனை வளர்த்தல்

பிள்ளைகளுக்குத் தமிழைக் கொண்டு சேர்க்க, முதலில் பெற்றோருக்கு அதன் முக்கியத்துவம் தெரியப்படுத்தப்பட வேண்டும் எனும் நோக்கில் மசெக சமூக அறநிறுவனம் போட்டிகள் நடத்தியுள்ளது.

கலந்துரையாடல்கள், பயிலரங்கு, உரைகள் உள்ளிட்ட அங்கங்களுடன் பரிசளிப்பு நிகழ்ச்சியும் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கில் நடைபெற்றது.

“தமிழ்மொழியின் மூலம் ஒளிமயமான உலகிற்கான திறனை வளர்த்தல்” எனும் கருப்பொருளில் அமைந்த இந்நிகழ்ச்சி, வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவுடன் தமிழ்மொழி விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்றது.

“தமிழ்மொழியின் சிறப்பைச் சொற்களில் அடக்க முடியாது. அதனைச் சரிவரக் கற்றுத் தேர்ந்து பயன்படுத்துவதன் மூலம் நாம் வலுவடைவதோடு, உலகையும் நம்பிக்கையுடன் நாம் வழிநடத்தலாம்,” எனப் பேசினார் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர்.

வளர்தமிழ் இயக்கத்துக்கும் இருமொழிக் கல்விக்கான லீ குவான் யூ நிதிக்கும் நன்றி தெரிவித்துப் பேசிய மசெக சமூக அறநிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி விக்டர் பே, இவ்வகை போட்டிகளும் விழாக்களும் மாணவர்களை மொழிக்கு மிக நெருக்கமாகக் கொண்டு சேர்ப்பதாகச் சொன்னார்.

கதை சொல்லல், கலந்துரையாடல் என மழலையர் பள்ளி, பாலர் பள்ளி மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் இணைந்து பங்குபெறும் விதமாகப் பல போட்டிகள் நடத்தப்பட்டு, வென்றோருக்கான பரிசுகள் வழங்கப்பட்டன.

ஒயிலாட்டம், காவடியாட்டம் உள்ளிட்ட மழலைகளின் பாரம்பரிய நடனங்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சி, தமிழரின் பாரம்பரிய உணவுமுறை குறித்த பாடலுக்கான நடனம், நீதிக் கதைகள் எனப் பல்வேறு அம்சங்களுடன் களைகட்டியது.

‘சிமெய் ஸ்பார்க்கல் டாட்ஸ்’ மழலையர் பள்ளி மாணவி சிவானந்தன் சிவமதி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய ‘சின்னப் பயலே சின்னப் பயலே’ பாடலை மழலைக் குரலில் பாடி அரங்கை ரசிக்க வைத்தார்.

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பதால், மாணவர்களுக்குப் பாலர் பள்ளி முதலே தமிழ்மொழியின் சிறப்பைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். அதைச் செவ்வனே செய்யப் பெற்றோரின் பங்கு மிகவும் அவசியம். அதற்கு ஒரு வழியாகவே இந்தப் பெற்றோர் குழந்தைகள் இணைந்து பங்கேற்கும் போட்டி அமையும் என்றார் இந்நிகழ்வின் ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த மொழி வல்லுநர் திருவாட்டி பத்மா.

தெம்பனிஸ் பாலர் பள்ளியில் பயிலும் தனது மகன் சக்தி அமுதனுடன் நீடித்த நிலைத்தன்மை குறித்த விழிப்புணர்வுக் காணொளி படைத்து வெற்றி பெற்ற திரு ராஜா, மகனுடனான பிணைப்பு அதிகரித்ததாகச் சொல்கிறார்.

பாரம்பரிய விளையாட்டுகள் குறித்த கலந்துரையாடல் காணொளி படைத்து வென்ற தாய் மகள் அணி கயல்விழி-கவிநிலா, இதற்காக பல பலகை விளையாட்டுகளைக் கற்றுக்கொண்டதாகவும், இக்காணொளி மூலம் அவற்றைப் பலருக்குத் தெரியப்படுத்தும் நோக்கில் இதனைச் செய்ததாகவும் கூறினர்.

இதனைத் தொடர்ந்து, குழந்தைகளிடம் பேச்சுத்தமிழ்ப் புழக்கத்தை ஏற்படுத்தும் வழிமுறைகள் குறித்த பெற்றோர்களுக்கான பயிலரங்கும் நடைபெற்றது. இதனை வழிநடத்திய தமிழாசிரியர் சங்கத்தின் தலைவர் திரு தனபால் குமார், உணவுப் பண்டங்கள், வீட்டுப் பொருள்கள், உறவு முறைகள் எனப் பலவற்றை அறிமுகம் செய்து, பயன்படுத்த ஊக்குவிக்கலாம் என்றார். அதுகுறித்த இப்பயிலரங்கு ஒவ்வொரு வீட்டிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் எனத் தாம் நம்புவதாகச் சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!