‘பாரிஸ் ஒலிம்பிக் 100 மீட்டருக்கும் தகுதிபெறுவேன்’: நம்பிக்கையுடன் சாந்தி பெரேரா

2023ஆம் ஆண்டில் அமோக வெற்றிகளைக் குவித்த சாந்தி பெரேரா, தொடர்ந்து இவ்வாண்டும் வெற்றிப்பாதையில் நடைபோட விரும்புகிறார்.

2023ஆம் ஆண்டில் 47 தனிநபர் ஓட்டப்பந்தயங்களில் தேசிய அளவில் 100 மீட்டர் சாதனையை ஆறு முறையும் 200 மீட்டர் சாதனையை நான்கு முறையும் படைத்த சாந்தி, 2024ஆம் ஆண்டிலும் வெற்றிகளைக் குவிக்க ஆயத்தமாகிவிட்டார்.

2023 ஆகஸ்ட் புடாபெஸ்டில் 200 மீட்டர் போட்டியை 22.57 வினாடிகளில் ஓடி தேசிய சாதனை படைத்து 2024 பாரிஸ் ஒலிம்பிக் 200 மீட்டர் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ள சாந்தி, ஒலிம்பிக் 100 மீட்டர் போட்டிக்கும் தகுதி பெறுவதில் நம்பிக்கை கொண்டுள்ளார்.

பாரிஸ் 2024க்குத் தகுதி பெறுவதற்கான இறுதி நாள் ஜூன் 30ஆம் தேதி.

பாதி இடங்கள் நேரத்தின் அடிப்படையிலும் மீதி இடங்கள் உலக வரிசைப் பட்டியலின் அடிப்படையிலும் ஒதுக்கப்படும்.

தமது 100 மீட்டர் தேசிய சாதனை நேரம் 11.20 வினாடிகளாக இருப்பினும், உலகத் தர வரிசையின்படி தகுதிபெற நல்ல வாய்ப்பிருப்பதாகக் கூறினார் சாந்தி.

ஆகஸ்ட் 1 முதல் 11ஆம் தேதிகளில் ‘ஸ்டாட் த ஃபிரான்ஸ்’சில் 80,000 பேர் முன்னிலையில் சிங்கப்பூரின் ஒலிம்பிக் கனவுகளை மெய்ப்பிக்க ஓடுவதற்கு முன்பு, 2023ஐ போலவே 2024 ஏப்ரலிலும் சாந்தி ஐரோப்பிய போட்டிகளுக்குச் செல்லவுள்ளார்.

அதற்கு ஆயத்தமாக, கூடிய விரைவில் ஃபுளோரிடாவில் இருமாத பயிற்சி முகாமை மேற்கொள்ளவுள்ளார்.

ஐரோப்பிய போட்டிகளில் உலகின் தலைசிறந்த ஓட்டப்பந்தய வீரர்களுடன் ஓடும் அனுபவம் ஒருபுறம் கிடைக்க, உலகத் தர வரிசைப் புள்ளிகளைக் குவித்து, பாரிஸ் ஒலிம்பிக் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்துக்குத் தகுதிபெறும் வாய்ப்பையும் அவர் பெறுவார்.

“அவ்வாய்ப்பைச் சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்டு தகுதி பெறுவேன் என நம்புகிறேன்,” என்றார் சாந்தி.

இந்த நம்பிக்கையை சாந்தி, சனிக்கிழமை ஜனவரி 27ஆம் தேதியன்று பிற்பகல் 2 மணி முதல் 3.15 மணி வரை தெம்பனிஸ் வெஸ்ட் சமூக நிலையத்தில் பொதுமக்களுடன் நடந்த சந்திப்பில் அளித்தார்.

இச்சந்திப்புக்கு தெம்பனிஸ் வெஸ்ட் சமூக நிலையமும் தெம்பனிஸ் வெஸ்ட் சமூக விளையாட்டுக் கட்டமைப்பும் ஏற்பாடு செய்தன.

சாந்தியை முன்னுதாரணமாகக் கொண்ட சிறுவர்களும் பெற்றோரும் ரசிகர்களும் அவரைக் காண ஒன்றுதிரண்டனர்.

உற்சாகமாகக் கரவொலி எழுப்பி சாந்தி பெரேராவின் வருகையை மக்கள் வரவேற்றனர்.

ஃபுளோரிடாவிற்குச் செல்வதற்கு முன்பு தன்னை உற்சாகப்படுத்தும் சிங்கப்பூர் ரசிகர்களுக்குப் பிரியாவிடை கொடுக்கும் வாய்ப்பாகவும் சாந்திக்கு இச்சந்திப்பு அமைந்தது.

10 வயது சமாயாவின் (நடுவில்) புத்தகத்தில் ஊக்கமளிக்கும் சில வார்த்தைகளை எழுதிக் கையெழுத்திட்ட சாந்தி (வலம்). படம்: ரவி சிங்காரம்
சாந்தியின் நிஜ வாழ்வின் அடிப்படையிலான ‘கோ சாந்தி கோ!’ புத்தகத்தை எடுத்துவந்திருந்த சிறுமியைக் கண்டு மகிழ்ந்தார் சாந்தி (வலம்). படம்: ரவி சிங்காரம்

ஒரு சுவாரசியமான கேள்வி-பதில் அங்கத்தில் தன் 2024 குறிக்கோள்களைப் பற்றிப் பகிர்ந்தார் சாந்தி.

“என் பயிற்சி மிகச் சிறப்பாக நடந்துகொண்டிருக்கிறது. மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் நல்ல நிலையில் இருக்கிறேன்.

“சென்ற நவம்பரிலேயே (ஆசிய விளையாட்டுகளில் தங்க பதக்கம் வென்றபின் ஒரே மாதத்தில்) 2024 ஓட்டப்பந்தயங்களுக்காக பயிற்சியைத் தொடங்கிவிட்டேன். என் பயிற்றுவிப்பாளரும் நானும் என் வேகத்தை அதிகரிக்க பல நுணுக்கங்களையும் ஆராய்ந்து வருகிறோம்,” என்றார் சாந்தி.

ஓட்டப்பந்தயத்தில் சிங்கப்பூரின் ஒலிம்பிக் கனவுகளைச் சுமக்கும் அவர், அந்த எதிர்பார்ப்புகளோடு வரும் மன உளைச்சலைச் சமாளிக்கும் மனவுறுதியையும் வளர்த்துக் கொண்டுள்ளதாகக் கூறினார்.

“வாழ்க்கை கடினமானதுதான் என்று நான் ஏற்றுக்கொண்டது எனக்கு உதவியது,” என்றார் சாந்தி.

“கடுமையாக பயிற்சிசெய்ய வேண்டும். உங்கள் இலக்கை அடைய பல தியாகங்களைச் செய்யவேண்டும். உண்ணும் உணவிலிருந்து தூங்கும் நேரம்வரை சிறுவயதிலிருந்தே கட்டுப்பாடு இருக்கவேண்டும். தோல்விகளால் மனந்தளரக்கூடாது.”
சாந்தி பெரேரா
சாந்தியின் பெற்றோர் களரன்ஸ் (நடுவரிசை இடமிருந்து மூன்றாவது), ஜீட் (நடுவரிசை இடமிருந்து இரண்டாவது). படம்: ரவி சிங்காரம்

இச்சந்திப்புக்கு சாந்தியின் பெற்றோரும் வந்திருந்தனர்.

“சாந்தி ஒலிம்பிக்சின் அரையிறுதிச் சுற்றுக்காவது தகுதிபெற வேண்டும் என்பதே எங்கள் ஆசை. அதையும் தாண்டினால் உண்மையிலேயே ஒரு கனவுப்பயணமாக இருக்கும். கடுமையாகப் பயிற்சி செய்தால் அவரால் முடியும்,” என்றார் சாந்தியின் தந்தை களரன்ஸ்.

சாந்தியின் ஒலிம்பிக் பயணத்தை நேரில் காண அவர்கள் பாரிஸ் செல்லவிருப்பதாகவும் அவர் கூறினார். தங்கள் பிள்ளையை அவ்வளவாகக் காண முடியாவிட்டாலும் வெற்றிக்குத் தேவையான தியாகமாக அதை அவர்கள் கருதுகின்றனர்.

பிள்ளைகளுக்குத் தம் கனவுகளைப் பின்தொடரும் சுதந்திரத்தைக் கொடுங்கள். அவர்களுக்குத் தேவைப்படும்போது அவர்களுடன் இருங்கள். மனக் கட்டுப்பாட்டைச் சொல்லிக் கொடுங்கள். அவர்கள் வெற்றியடைவார்கள்.
சாந்தியின் தந்தை களரன்ஸ்
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!