மனசாந்தியும் மகிழ்ச்சியும் தந்த சாந்தி

சாந்தி என்றால் நாட்டுக்கு மட்டுமன்று, வீட்டுக்கும் அவர் சாந்திதான்!

“நான்கு பிள்ளைகளை ஈன்றெடுத்தேன். கடைக்குட்டிதான் சாந்தி. இதர மூன்று பிள்ளைகளைவிட சாந்தியை வயிற்றில் சுமந்தபோதுதான் என் மனம் மிகவும் அமைதியாக இருந்தது,” என்றார் திருவாட்டி ஜீத் பெரேரா.

“எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. சாந்தியை ஈன்றெடுக்கும்வரை வேலை செய்தேன். கனமான பொருள்களைத் தூக்கினேன்.

“வீட்டுப் பொருள்களை அங்கும் இங்கும் இடம் மாற்றி வைப்பது போன்ற வேலைகளை எல்லாம் செய்துவந்தேன்.

“சாந்தி எனக்கு மனஅமைதியைக் கொடுத்தார். அதனால்தான் என் கடைக்குட்டி மகளுக்கு அந்தப் பெயரைச் சூட்டினேன். சாந்தி அன்புக் குழந்தை, ஆசைக் குழந்தை. சாந்தியால் பிரச்சினையே இருந்ததில்லை,” என்று அந்த 66 வயது தாயார் மேலும் கூறினார்.

கணவர் கிளாரென்ஸ், மனைவி ஜீத் பெரேரா தம்பதி தங்கள் நான்கு பிள்ளைகளுக்கும் சோபனா, 38, ஆனந்த், 36, சீமா, 33, சாந்தி, 27, என்று இந்தியப் பெயர்களைச் சூட்டி மகிழ்ந்தனர்.

“சிங்கப்பூரைப் பொறுத்தவரை கலாசார அடையாளம் தேவை. ஆகையால், இது முக்கியமான ஒன்று,” என்று திரு கிளாரென்ஸ் தெரிவித்தார்.

“என் குடும்பப் பெயர் பெரேரா. இந்தியாவின் கேரளா மாநிலத்தில் திருவனந்தபுரத்தில் பிறந்தேன். பிறந்து ஒரு சில மாதங்களிலேயே சிங்கப்பூருக்கு வந்துவிட்டேன். பள்ளிக்கூடத்தில் என்னை யூரேஷியர் என்று அழைத்தனர்.

“நான் ஒரு மலையாளி என்றுதான் அவர்களிடம் எப்போதுமே கூறுவேன்.

“இருந்தாலும் அவர்கள் என்னை போர்ச்சுக்கீசியர் என்றுதான் சொல்லிக்கொண்டே இருந்தார்கள். நான் இந்தியர் என்பதை மெய்ப்பிக்க எனது அடையாள அட்டையைக் காட்டவேண்டி இருந்தது,” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

எப்போதும் ஓட்டந்தான்!

திருவாட்டி ஜீத்தின் பெற்றோர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில் இருந்து 1950களில் இங்கு வந்தவர்கள். தன் பிள்ளைகளைப் போலவே திருவாட்டி ஜீத்தும் சிங்கப்பூரில் பிறந்தவர்.

“சாந்தி அமைதியான பெண்தான். அதே நேரத்தில், பேராற்றல்மிக்கவள்.

“சாந்தியின் சகோதரி சீமா பள்ளிக்கூடத்தில் வகுப்பறையை நாடி ஓடும்போது, சாந்தி எப்போதுமே விளையாட்டுத்திடலுக்குச் சென்று ஓட்டப்பந்தயங்களைப் பார்ப்பாள்.

“சும்மா இருக்கவே மாட்டாள். துறுதுறுவென எப்போதுமே ஓடிக்கொண்டே இருப்பாள். மலைமீது அல்லது பக்கத்தில் இருக்கும் பகுதிகளில் ஓடிக்கொண்டே இருப்பாள்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

சாந்தி பள்ளிக்கூடத்தில் 200 மீட்டர் ஓட்ட வீராங்கனையாக இருந்தார். ஆனாலும், பயிற்றுவிப்பாளர் இல்லாததால் சாந்தி முன்னேற முடியவில்லை.

சாந்தி, சிங்கப்பூர் விளையாட்டுப் பள்ளியில் சேர முடிவு செய்ததை அடுத்து பெற்றோர் இருவரும் தங்களால் ஆன அளவுக்கு அவருக்கு முழு ஆதரவை அளித்தனர்.

ஒன்பது வயதிலேயே வெளிப்பட்ட ஆற்றல்

ஓடுவதில் சாந்தி கொண்டிருந்த ஆற்றலை, சிஎச்ஐஜே (காத்தோங்) தொடக்கப் பள்ளியைச் சேர்ந்த விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் கண்டுபிடித்தார். அப்போது சாந்திக்கு வயது ஒன்பது.

“நான் அதிக பயணங்களை மேற்கொள்ள வேண்டி இருந்தது. ஆகையால், சாந்தியின் தாயார்தான் அவளுக்கு வழிகாட்டி உதவினார்,” என்று தந்தை திரு கிளாரென்ஸ் தெரிவித்தார்.

சாந்தியின் தந்தை எண்ணெய்த் தொழில்துறை ஆலோசகர்.

“ஒவ்வொரு முறை சாந்தி சாதிக்கும்போதும் மேலும் மேலும் சாதிக்க வேண்டும் என்று நாங்கள் ஊக்கமூட்டுவோம். திடல்தட விளையாட்டில் சாந்திக்கு விருப்பம் ஏற்பட்டது. அதுவே அவரின் விருப்பமாக நிலைத்துவிட்டது.

“சிங்கப்பூர் விளையாட்டுப் பள்ளியில் பெரிய பெரிய வீரர்கள் எல்லாம் இருப்பார்கள். அவர்களை எல்லாம் விஞ்சி ஒரு நட்சத்திரமாக மிளிர்வது சிரமமாகிவிடும். ஆகையால், அந்தப் பள்ளிக்குச் செல்ல வேண்டாம் என்று சாந்தியிடம் நான் சொன்னதுண்டு.

“ஆனால், அந்தப் பள்ளிக்குப் போய்த்தான் தீருவேன் என்பதில் சாந்தி உறுதியாக இருந்தாள்,” என்றாரவர்.

அதையடுத்து, சாந்திக்கு அவரின் பெற்றோர் முழு ஆதரவையும் அளித்தனர்.

மாறுபட்ட சிந்தனை

“பொதுவாக, இந்தியாவில் பெற்றோர் இப்படிச் செய்வது இல்லை. இருந்தாலும், சிங்கப்பூரர்கள் என்ற முறையில் எங்கள் சிந்தனை வேறுபட்டு இருந்தது.

“பிள்ளைகளுக்கு எதில் நம்பிக்கை இருக்கிறது என்பதை, அவர்கள் எதை விரும்புகிறார்கள் என்பதைப் பெற்றோர் புரிந்துகொள்ளவேண்டும்,” என்று திரு கிளாரென்ஸ் கூறினார்.

“சாந்தி விளையாட்டுப் பள்ளியைத் தேர்ந்தெடுத்தாள். அவளை நாங்கள் வாழ்த்தினோம். அவளுக்குப் பயிற்சி அளித்தோம். சத்தான உணவை வழங்கினோம்.

“திடலில் சாந்தி ஓடுவதைக் கவனித்தபடியே இருந்து வந்தோம். 2017-2018களில் சாந்தி பல பிரச்சினைகளைச் சந்தித்தபோது ஓடுவதற்கான உடலுறுதி கொஞ்சம் குறைந்தது.

“ஏராளமான நெருக்குதலுக்கு உள்ளாகி இருந்தாள். அப்போது நாங்கள் மனத்தளவில் சாந்திக்கு ஆதரவு அளித்தோம். அந்தச் சூழல் மிகவும் சிரமமானது.

“இருந்தாலும், அவற்றைச் சமாளித்து இன்னும் திட்டவட்டமான மனஉறுதியுடன் சாந்தி மீண்டும் நிமிர்ந்தாள்.

“போனால் போகட்டும், போனதைப் பற்றிக் கவலைப்படக்கூடாது என்ற மனப்போக்கை வளர்த்துக்கொண்டாள்.

“சாந்தி கட்டொழுங்குமிக்கவள். திட்டமிட்டு எதையும் செய்யக்கூடியவள். நல்ல இதயம் படைத்தவள். கலகலப்பானவள்.

“சில சம்பவங்கள் வேடிக்கையாக இல்லை என்றாலும்கூட அவள் விழுந்து விழுந்து சிரிப்பாள். மனப்பூர்வமாக புன்னகைப்பாள்,” என்று திருவாட்டி ஜீத் கூறினார்.

“சாந்தி உதவிசெய்யும் மனம் கொண்டவள்.பிறருக்குத் தொந்தரவே தரமாட்டாள். முணுமுணுப்பே அவளிடம் கிடையாது. மன அழுத்தத்தை எப்படித் தாங்கிக் கொள்வது என்பதைக் கற்றுக்கொண்டவள். தனக்குள்ளாகவே தீர்வு காணக்கூடியவள்.

“வீட்டில் பெட்டிகளில் பொருள்களை அடுக்கி வைப்பதும் அவற்றில் இருந்து பொருள்களை வெளியே எடுப்பதும்தான் சாந்திக்கு எப்போதுமே வேலையாக இருக்கும்.

“பந்தயங்களில் கலந்துகொள்வதற்காக சாந்தி அடிக்கடி பயணம் மேற்கொள்வாள் என்பதே காரணம்.

“சாப்பாட்டைப் பொறுத்தவரை, மிகவும் கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்வாள்.

“இரவு உறங்கச் செல்லுமுன் எதைச் சாப்பிட வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருப்பாள்.

“அதேபோல, எந்த நேரத்தில் உறங்க வேண்டும் என்பதிலும் கவனமாக இருப்பாள்,” என்று குழந்தைப் பராமரிப்புக் கல்வி ஆசிரியரான திருவாட்டி ஜீத் கூறினார்.

“அதிகாலையில் எழுந்து பயிற்சிக்கு சென்று விடுவாள். திரும்பி வந்து சற்று நேரம் ஓய்வு எடுப்பாள். கைப்பேசியில் அல்லது தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளைப் பார்க்க விரும்புவதுண்டு.

“தேவாலயத்திற்குச் செல்லவும் பாட்டியைப் பார்க்கவும் நேரம் ஒதுக்கிக் கொள்வாள். குடும்பத்தில் சேர்ந்து இருக்க வேண்டிய நேரம் வரும்போது தவறாமல் எல்லோருடனும் சேர்ந்து இருப்பாள்.

“சாந்தி இப்போது அனைத்துலக அளவில் புகழ்பெற்ற ஒரு வீராங்கனை என்றாலும் எங்களைப் பொறுத்தவரை அவள் இன்னமும் சாந்திதான்.

“அடக்கமாக இருக்க வேண்டும். யாரையும் அலட்சியப்படுத்தக்கூடாது என்று எப்போதுமே நாங்கள் சாந்தியிடம் எடுத்துச் சொல்லி வருவோம்,” என்று திரு கிளாரன்ஸ் கூறினார்.

“நாங்கள் மிகவும் எளிமையானவர்கள். சிரித்துக்கொண்டும் பொழுதைப் போக்கிக்கொண்டும் இருப்பவர்கள். ஆனால், இப்போதெல்லாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டி இருக்கிறது.

“சுற்றிலும் புகைப்படக்காரர்கள், செய்தியாளர்கள் எனப் பலரும் எங்களைக் கண்காணித்தபடியே இருக்கிறார்கள் என்பதே காரணம்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அடுத்த இலக்கு

“வீட்டுக்கு மட்டுமன்றி, நாட்டுக்கும் தங்க மகளாக ஒளிரும் சாந்தி அடுத்த ஆண்டு பாரிசில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்வதற்காக இவ்வாண்டு இறுதியில் இருந்து ஆயத்தமாவாள்.

“200 மீட்டர் பந்தயத்தில் கலந்துகொள்ள சாந்தி தகுதிபெற்று இருக்கிறாள்.

“பாரிசில் சாந்தியின் சாதனை எந்த அளவுக்கு இருக்கும் என்பதை அவளே சொல்ல முடியும்.

“சாந்தியின் காதலர் (முன்னாள் தேசிய ஓட்டப் பந்தய வீரர் டான் ஸோங் யாங்), பயிற்றுவிப்பாளர் (லூயிஸ் குன்ஹா), சிங்கப்பூர் திடல்தட விளையாட்டு அதிகாரிகள் ஆகியோருடன் சேர்ந்து நாங்களும் சாந்திக்கு வழிகாட்டி உதவத்தான் முடியும்.

“சாந்திக்குத் தேவையான அனைத்து ஆதரவும் கிடைத்து இருக்கிறது.

“சாந்தி அரையிறுதிக்கு முன்னேறினால் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைவோம்.

“சாந்தி எங்களுக்கு மனஅமைதியைத் தருவதால் அப்பெயரை எங்கள் மகளுக்கு நாங்கள் வைத்தோம்.

“சாந்தி அன்பான மகள். அவள் ஒருபோதும் எந்தத் தொந்தரவும் தந்ததில்லை,” என்று திரு கிளாரன்ஸ் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!