நோன்பு நோற்கும் முஸ்லிம் அன்பருக்கு மட்டுமின்றி பசியுடன் வரும் யாவரையும் சிங்கப்பூரின் பள்ளிவாசல்கள் வரவேற்கின்றன. அவற்றில் ஒன்று, இந்திய முஸ்லிம்கள் பல தலைமுறைகளாகச் சென்றுவரும் ஜாமிஆ சூலியா பள்ளிவாசல்.

உணவோடு உவப்பூட்டும் நோன்பு துறப்பு

பள்ளிவாசல்கள் நோன்பு துறப்புக்காக உணவு விநியோகிப்பாளர்களை நாடிவரும் காலத்தில் சவுத் பிரிட்ஜ் சாலையில் அமைந்துள்ள ஜாமிஆ சூலியா பள்ளிவாசல், அங்கேயே உணவுப் பண்டங்களைத் தயாரித்து வழங்குகிறது.

நோன்புக் கஞ்சியில் தொடங்குகிறது சமையல் பணி. எளிதில் கிடைக்கப் பெறாத சுவை வேண்டும் என்பதற்காக எட்டுச் சமையற்காரர்கள் பள்ளிவாசலுக்கு வரவழைக்கப்பட்டனர்.

தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்திலுள்ள அடியக்கமங்கலம் என்ற ஊரைச் சேர்ந்த சமையற்கலை வல்லுநர்கள், ‘அல் ஹம்துலில்லாஹ்’ சமையல் குழுவினர். சமையற்கலை வல்லுநர் காதர் அலி தலைமையில் கடந்த 10 ஆண்டுகளாக இவர்கள் ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் சமைத்து வருகின்றனர்.

இந்தக் குழுவினரை வழிநடத்தும் ஷேக் தாவுது முகம்மது மெய்தின், 37, பல தலைமுறைகளாகச் சமைக்கும் குடும்பத்தைச் சேர்ந்தவர். சமையல் இவர்களுக்குக் கைவந்த கலை.

“திருமணங்கள், பள்ளிவாசல் நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கு நாங்கள் சமைத்து வருகிறோம். நான் 10 வயதிலிருந்தே சமைக்கத் தொடங்கிவிட்டேன்,” என்று திரு ஷேக் கூறினார்.

ஆவி பறக்க, அடுப்புச்சூட்டைப் பொறுத்துக்கொண்டு பல மணி நேரம் வேலை செய்யும் ஷேக் தாவுது முகம்மது மெய்தின், 37. படம்: சுந்தர நடராஜ்

நோன்பு கஞ்சி

நோன்பு துறப்பதற்கு மட்டுமின்றி முதியோர், சிறார்கள், நோயாளிகள் எனப் பலதரப்பினருக்கும் ஏற்ற உணவாக நோன்பு கஞ்சி விளங்குகிறது.

பெரிய அண்டாக்களில் இந்த நோன்பு கஞ்சியைச் செய்வதற்குக் கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் ஆகிறது. அடுப்பை மூட்டி நீரைக் கொதிக்க வைத்த பிறகு, நவதானியங்கள், அரிசி, பருப்பு, கொண்டைக்கடலை போன்றவை சேர்க்கப்படுகின்றன.

அதன்பின் தேங்காய்ப்பால், எலும்பு அகற்றப்பட்ட ஆட்டிறைச்சி, இஞ்சி, பூண்டு ஆகியவை சேர்க்கப்படுகின்றன. பின், தாளிப்புக்காக நெய்யில் வெங்காயம், ஏலக்காய், பட்டை, கிராம்பு ஆகியவை வறுக்கப்பட்டு சேர்க்கப்படுகிறது.

நன்கு கிளறப்பட்ட பிறகு கஞ்சிப்பானை மூடப்படும். கஞ்சி பெருகுவதற்காக அடுப்பு மேலும் சுமார் ஒரு மணி நேரத்திற்குத் தொடர்ந்து எரியும்.

கொவிட்-19 கிருமிப்பரவலுக்குப் பிறகு மூன்று பானைக் கஞ்சி சமைத்து 750 அன்பர்களுக்குப் பரிமாறி வருவதாகத் திரு ஷேக் கூறினார்.

“அதற்கு முன்னதாக ஐந்து, ஆறு சட்டிகளில் 40 கிலோ அரிசியை 1,500 பேருக்காகச் சமைத்து வந்தோம்,” என்று அவர் கூறினார்.

காலை முழுவதும் நோன்புக் கஞ்சி தயாரித்த பிறகு மதிய வேளையில் புலாவ் சோற்றையும் இறைச்சி தால்சா குழம்பையும் சமைத்தனர்.

குடும்பத்தினரையும் நண்பர்களையும் விட்டு வந்திருந்தாலும் இறைவனுக்காக இங்கு இப்படித் தொண்டாற்ற முடிவதை நினைக்கும்போது பெருமிதம் கொள்வதாக இவரும் இவருடன் சமைப்போரும் கருதுகின்றனர்.

சுடச்சுட சமைக்கப்படும் நோன்புக் கஞ்சி. படம்: சுந்தர நடராஜ்

வரவேற்க பள்ளிவாசல் ஆவல்

நோன்புத் துறப்பு ஏற்பாடுகள் கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு முன்னதாகத் திட்டமிடப்பட்டதாக பள்ளிவாசலின் தலைவர் ரஷீத் ஜமான் தெரிவித்தார்.

பிறரிடமிருந்து தருவித்துச் சாப்பிடும் உணவுடன் ஒப்பிடுகையில் பள்ளிவாசலிலேயே சமைக்கப்பட்ட உணவை உண்ணும் அனுபவம் தனி என்றார் திரு ரஷீத்.

தனிச்சிறப்புமிக்க இந்திய சுவையை மக்களுக்கு அளிக்கும் நோக்கில் திறன்மிகு சமையற்காரர்கள் வரவழைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

இருந்தபோதும், தற்போது ஒரே நேரத்தில் 750 பேர் வரை மட்டுமே வரவேற்க முடிவதாகக் குறிப்பிட்ட திரு ரஷீத், அதில் அடங்கியுள்ள சவால்களை விளக்கினார்.

“தேசிய மரபுடைமைச் சின்னமாக விளங்கும் இந்தப் பள்ளிவாசலுக்கு, எவ்விதச் சேதமும் நேராத வகையில் கூடாரம் அமைக்க கவனமாக இருக்க வேண்டியிருந்தது. அத்துடன், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை சமையல் தொடர்பாக அறிமுகம் செய்திருந்த விதிமுறைகளும் எங்களைக் கட்டுப்படுத்தின,” என்றார் அவர்.

உவகையைக் கூட்டும் ஈகை

பள்ளிவாசலில் வழங்கப்பட்ட பிரியாணி. படம்: சுந்தர நடராஜ்

சிங்கப்பூரின் ஆகப் பழைமையான பள்ளிவாசல்களில் ஒன்றான ஜாமிஆ சூலியா பள்ளிவாசல் 1826ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. 1974ல் தேசிய நினைவுச் சின்னமாக அது அங்கீகரிக்கப்பட்டது. 10 ஆண்டுகளுக்குமுன் பள்ளிவாசலில் புதுப்பிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

‘முகைதீன் பள்ளி’, ‘பெரிய பள்ளி’ என்ற பெயர்களாலும் பள்ளிவாசல் அழைக்கப்படுவது தம் நினைவில் இருப்பதாக 78 வயது அபுபக்கர் மரைக்கார் ரஜாக் மரைக்கார் தெரிவித்தார்.

“பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள கிராஸ் ஸ்திரீட்டில் பால் வியாபாரிகள் இருந்ததால் இதனை ‘கம்போங் சுசு’ (பால் கம்பம்) மஸ்ஜித் என்று மலாய்க்காரர்கள் அழைக்கும் வழக்கம் இருந்தது,” என்று திரு அபுபக்கர் கூறினார்.

“12 வயதிலிருந்து என் தந்தையுடன் நான் பள்ளிவாசலுக்கு வருவேன். அப்போதுள்ள எளிய சூழலில் ரமலான் மாதத்தின்போது ஏறத்தாழ 100 பேர் வருவார்கள். இப்போது 1,000 பேர் வரை வருகின்றனர்,” என்று கடந்த 24 ஆண்டுகளாகப் பள்ளிவாசலில் தொண்டாற்றும் திரு ஒஸ்மான் கூறினார்.

சுமார் 40 பேர் கொண்ட தொண்டூழியக் குழுவில் இணைந்திருப்பதாக மற்றொரு தொண்டூழியர் அப்துல் சலாம் முஹம்மது நாசர், 60, தெரிவித்தார்.

ரமலான் நோன்பு மாதத்திற்கான ஏற்பாடுகள் காலப்போக்கில் மேம்பட்டு வருவதாகவும் அதனால் முஸ்லிம் அன்பர்கள் தொண்டு செய்வதில் உற்சாகம் காட்டுவதாகவும் பள்ளிவாசலின் ஆக மூத்தத் தொண்டூழியரான ஹனிஃபா ஒஸ்மான், 73, தெரிவித்தார்.

பிற பள்ளிவாசல்களில் ஏற்பாடு

இந்திய முஸ்லிம்கள் அதிகம் செல்லும் பென்கூலன் பள்ளிவாசல், நோன்பு துறப்புக்காக ‘ஹர் யாசின் பிரியாணி’ நிறுவனத்திடமிருந்து உணவைத் தருவிக்கிறது. உணவு இங்கு ‘புஃபே’ முறையில் வழங்கப்படுகிறது.

இறைச்சி பிரியாணி, கோழி பிரியாணி, தோசை, பரோட்டா, கோழி அல்லது இறைச்சியுடன் நெய் சோறு ஆகியவை நோன்பு துறப்புக்காகப் பரிமாறப்படுகின்றன.

ரமலான் மாதத்தில் சராசரியாக 500 பேருக்கு உணவு அளிக்கப்படும் என்று பென்கூலன் பள்ளிவாசலின் தலைவர் மு.யூ. முஹம்மது ரஃபீக் தமிழ் முரசிடம் தெரிவித்தார்.

பழம், சோறு, இறைச்சி ஆகியவற்றைக் கொண்ட சாபாஸ் கிச்சன் நிறுவனத்தின் ‘பென்டோ’ பொட்டலங்களை, சிராங்கூன் ரோட்டிலுள்ள அங்கூலியா பள்ளிவாசல் விநியோகம் செய்கிறது. 300 மில்லிலிட்டர் கலன்களில் நோன்புக் கஞ்சியையும் வழங்குகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!