தங்கமாக மாறிய குடும்ப ஆதரவு

சிங்கப்பூரின் தங்க மகள் சாந்தி பெரேரா, சீனாவின் ஹாங்ஜோ நகரில் சென்ற வார இறுதியில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் குறைந்தபட்சம் மூன்று சுற்றுகளை ஓடி முடிக்க வேண்டி இருக்கும் என்றுதான் நினைத்திருந்தார்.

ஆனால், கடைசிநேர மாற்றம் காரணமாக சாந்தி தகுதிச் சுற்றிலும் இறுதிப் போட்டியிலும் மட்டும் ஓடவேண்டி இருந்தது.

“இது எனக்குச் சாதகமாக அமைந்துவிட்டது. இதனால் மன உளைச்சல் எனக்குக் குறைந்தது,” என்று சாந்தி, 27, தப்லா! இதழிடம் புதன்கிழமை தெரிவித்தார்.

சாந்தி, ஆசிய விளையாட்டுப் போட்டியில் 49 ஆண்டுகளுக்குப் பிறகு சிங்கப்பூருக்குத் தங்கப் பதக்கத்தைப் பெற்றுக்கொடுத்து இமாலயச் சாதனையை நிகழ்த்தினார்.

ஹாங்ஜோ ஒலிம்பிக் விளையாட்டு மையத்தில் நடந்த அந்த ஓட்டப்பந்தயத்தில் சாந்தி 23.03 நொடிகளில் 200 மீட்டர் தொலைவைக் கடந்தார்.

சீனாவின் லி யுட்டிங் (23.28 நொடி), பஹ்ரேன் நாட்டின் எடிடியோங் ஓஃபோனைன் ஓடியோங் (23.48 நொடி) என்ற இதர இரண்டு வீராங்கனைகளை வீழ்த்தி முதலிடத்தைச் சாந்தி பிடித்தார்.

சாந்தி வெற்றி வீராங்கனையாக அறிவிக்கப்பட்டபோது மனத்தில் தோன்றிய உணர்ச்சிகளை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

“எனக்கே நம்ப முடியாத ஒன்றாக அது அமைந்தது,” என்றார் அவர்.

வெற்றி எனக்கே என்பது தெரியவந்ததும் கடவுளுக்கு நன்றி கூறினேன். என்னுடைய பெற்றோரும் நண்பர்களும் அமர்ந்திருந்த இடத்தை நோக்கி ஓடி, அவர்கள் அளித்த ஆதரவுக்காக தலைவணங்கி அவர்களுக்கு நன்றி கூறினேன்.

“தொடக்கப்பள்ளியில் திடலில் ஓடத் தொடங்கியது முதலே என்னுடைய பெற்றோர் எனக்கு முழு ஆதரவு அளித்து வந்தனர். விளையாட்டு எனக்கு மிகவும் பிடிக்கும்.

“அதைத் தெரிந்துகொண்ட என் பெற்றோர் எனக்கு முழு ஆதரவு அளித்தனர். அந்த ஆதரவுடன் நான் திடல்தட விளையாட்டுகளை, வெறும் விளையாட்டாகக் கருதாமல் மிக முக்கியமான ஒன்றாகக் கருதி ஈடுபடத் தொடங்கினேன்.

“எனக்குக் கடந்த 2017, 2018ஆம் ஆண்டுகளில் பிரச்சினை ஏற்பட்டபோது என்னுடைய தந்தை திரு கிளாரன்ஸ் மற்றும் தாயார் திருவாட்டி ஜீத்தும் முழு ஆதரவு அளித்து என்னைத் தேற்றினர்.

“எனக்காக எப்போதுமே அவர்கள் தோள்கொடுத்தனர். என்மீது முழு நம்பிக்கை கொண்டவர்களாக அவர்கள் இருந்தனர்.

“என்மீது எனக்கே நம்பிக்கை குறைந்தபோதெல்லாம் எனக்கு முழு நம்பிக்கையை மீட்டுத் தந்து உறுதுணையாக இருந்து ஆதரவு அளித்தது அவர்கள்தான். இது நான் பெற்ற பெரும்பேறு.

“என் பெற்றோர் அளித்த ஆதரவை முழுமூச்சாகப் பயன்படுத்திக்கொள்ள நான் விரும்புகிறேன் என்பது அவர்களுக்குத் தெரியும்.

“என்னுடைய குடும்ப உறுப்பினர்களும் எனது உடன்பிறப்புகளும் எனக்குப் பேராதரவு அளித்தனர்.

“நாங்கள் இப்போது தனித்தனியாக வசிக்கிறோம். இருந்தாலும், முடிந்தபோதெல்லாம் எங்கள் பெற்றோர் வீட்டில் ஒன்றுகூடி மகிழ்வோம். வெளியே சென்றும் மகிழ்வோம்,” என்று சாந்தி கூறினார்.

சாந்தியின் குடும்பத்தினர் கத்தோலிக்க திருவிழாக்களிலும் சேர்ந்து கலந்துகொள்வதுண்டு.

“உலகம் முழுவதும் எனக்கு உறவினர்கள் இருக்கிறார்கள்,” என்று சாந்தி கூறினார்.

“என்னுடைய பாட்டி கேரளாவில் இருந்து இங்கு வந்தவர். என் பாட்டியைச் சந்திக்கப் போகும்போதெல்லாம் அவர் எனக்கு அப்பம் தருவார். அப்பம் சுடுவதில் என் பாட்டி கைதேர்ந்தவர்.

“நாங்கள் எல்லாரும் ஒன்றுகூடும்போது அதுவே பெரிய கொண்டாட்டமாக இருக்கும்.

“ஆசிய விளையாட்டுப் போட்டிகளை அடுத்து கொஞ்ச நேரம் எனக்கு ஓய்வு இருக்கும். அப்போது விடுமுறையைக் கழிக்க விரும்புகிறேன்,” என்று சாந்தி தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!