வரலாற்று மணங்கமழும் மசாலா ஆலைகளின் எதிர்காலம்

சிங்கப்பூரின் தமிழர் பண்பாட்டையும் மரபுடைமையையும் நினைவுகூரும்போது மசாலாத் தூள், பொடி வகைகள், மாவு ஆகியவற்றை அரைப்பதற்கான ஆலைகள், ஒருகாலத்தில் சிங்கப்பூரில் மிகுந்திருந்ததை நம்மில் சிலர் மறந்திருக்கமாட்டோம்.

ஆனால் காலப்போக்கில் மக்களின் தேவை மாறியது. ஏற்கெனவே தயார் செய்யப்பட்ட மசாலாத் தூளைச் சமையலுக்கு நாடத் தொடங்கிவிட்டதால் கடந்த ஆண்டுகளாக விரல் விட்டு எண்ணும் அளவுக்கு ஆலைகள் குறைந்துவிட்டன. சிங்கப்பூரில் இயங்கிவரும் மீதமுள்ள ஆலைகளின் உரிமையாளர்கள், இந்தத் தொழிலைத் தங்கள் முன்னோடித் தலைமுறையிடமிருந்து கற்றுக்கொண்டு தொடர்ந்து தங்களை நாடி வரும் வாடிக்கையாளர்களுக்காக தொழிலைத் தக்கவைத்துக்கொள்கின்றனர். ஆலைகளின் வரலாற்றுச் சிறப்பையும் தற்கால பயன்பாட்டையும் அறிந்துவந்தது தமிழ் முரசு.

மணக்கும் மசாலா வாசனை

அம்மியில் அரைத்துச் சமைக்கத் தொடங்கிய காலந்தொட்டே இந்தியர்களின் பாரம்பரிய சமையல் முறையில் மசாலாத் தூளுக்குத் தனி இடம் உண்டு. சமையலுக்கு அரைக்கப்பட்ட மசாலாத் தூள் தரும் சுவையே வேறு என்பர் சிலர்.

தமிழகத்தின் கோயம்பத்தூரில் உலோகவியலில் பட்டம் பெற்றவர் 56 வயது ஆறுமுகம் வீரமணி. ஆனால் சிங்கப்பூரில் தாம் ஓர் ஆலை உரிமையாளர் ஆவார் என்று அவர் நினைத்துக்கூட பார்க்கவில்லை என்று பகிர்ந்துகொண்டார். மாமாவின் ஆலையைப் புது பாணியில் இன்றைய நவீனச் சூழலுக்கேற்ப ‘செல்வி மில்ஸ்’ என்ற பெயரில் நடத்தி வருகிறார்.

மாமாவின் மகளை மணம் முடித்த கையோடு சிங்கப்பூர் வந்த வீரமணி, ஆலையை நடத்தும் நுணுக்கங்களை ஒன்றுவிடாமல் மாமாவிடமிருந்து கற்றுக்கொண்டு அவரின் மறைவுக்குப் பின்னர் ஆலை நடத்தும் முழுப் பொறுப்பையும் 1998ல் ஏற்றுக்கொண்டார்.

உயர்தரமான மசாலாத் தூளிலிருந்து அரைக்கப்பட்ட மாவு வகைகள் வரை வாடிக்கையாளர்களுக்குக் கொண்டு சேர்க்கும் தனிச் சிறப்பைக் கொண்டுள்ளது இந்த ஆலை. 47 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட இந்த ஆலை, ‘செல்வி ஸ்டோர்ஸ்’ மளிகைக் கடைக்குச் சொந்தமானது. ஆலையில் தயாரிக்கப்படும் பொருள்கள் பல கடைகளுக்கும் உணவகங்களுக்கும் தற்போது விநியோகிக்கப்படுகின்றன.

தமக்குப் பின் தம்முடைய இரண்டு மகன்கள் இந்த ஆலையை எடுத்து நடத்துவார்களா என்பது ஒரு கேள்விக்குறியே என்றாலும் மூத்த மகனைப் பள்ளி விடுமுறையின்போது ஆலைக்கு அழைத்துச் சென்று அது எவ்வாறு இயங்குகிறது என்பதை அறிமுகப்படுத்தி வருகிறார் வீரமணி.

தொடக்கத்தில் மார்சிலிங் வட்டாரத்தில் இயங்கிவந்த ஆலை, தற்போது ஜூரோங்கில் இரண்டு இடங்களில் இயங்கி வருகிறது. மிளகாய், மிளகு, மஞ்சள் எனப் பலதரப்பட்ட மசாலா வகைகளும் அரிசி மாவு, கடலை மாவு போன்ற பலவித மாவு வகைகளும் அரைக்கப்படும் இந்த ஆலையில் வாடிக்கையாளர்கள் தங்களின் விருப்பத்திற்கேற்ற அளவிலும் செய்முறையிலும் சமையலுக்குத் தேவையான தூள்களை அரைத்துச் செல்கிறார்கள்.

தொடக்கத்தில் சிங்கப்பூரில் குறைந்தபட்சம் 15 ஆலைகளாவது இருந்தது தற்போது பத்துக்கும் குறைவாக இருப்பது வருத்தமளிப்பதாக வீரமணி கூறினார். ஆலை செயல்படும் முறையையும் அரைக்கும் நுணுக்கங்களையும் அறிந்துள்ள 65 ஊழியர்களுடன் செயல்பட்டுவரும் செல்வி மில்ஸ், சில நேரங்களில் ஊழியர் பற்றாக்குறை பிரச்சினையை எதிர்நோக்குவதும் உண்டு.

பக்குவமாக அரைக்கும் கலையை நன்கறிந்த ஊழியர்களை இந்தியாவிலிருந்து வரவழைப்பது ஒரு சவாலாக இருக்கிறது. ஆலையில் பணிபுரியும் சூழலும் சில ஊழியர்களுக்கு வசதியாக அமைவதில்லை. வெப்பமான சூழல், மூக்கைத் துளைப்பதுடன் கண்களில் நீர் வழிய வைக்கும் மசாலா போன்றவற்றை ஊழியர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

ஒரு மணி நேரத்திற்குக் கிட்டத்தட்ட 500 முதல் 800 கிலோகிராம் வரை தூள் வகைகள் அரைக்கப்படுகின்றன. ஒரு நாளுக்கு ஏறத்தாழ 3000 கிலோகிராம் மசாலாவும் மாவும் அரைக்கப்படுகின்றன. தானியங்கி இயந்திரங்கள் அரைத்தாலும் அவற்றை ஊழியர்கள் கண்ணும் கருத்துமாக கவனிப்பது முக்கியம்.

தூள்களை அரைத்து விற்பதை நம்பி மட்டுமே ஆலை உரிமையாளர்கள் வருமானம் ஈட்ட முடியாது என்று கூறிய வீரமணி, வர்த்தகத்தை விரிவுபடுத்தினால் மட்டுமே வருமானத்தைப் பெருக்க முடியும் என்றார்.

ஆலைக்கு நேரடியாக வரும் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் வயதானவர்கள் என்று குறிப்பிட்ட வீரமணி, இளம் தலைமுறையினர் புதிதாக அரைக்கப்படும் தூளில் அடங்கியுள்ள ஆரோக்கிய பயன்கள் ஏற்கெனவே தயார் செய்யப்பட்ட தூள்களில் இல்லை என்பதை உணர வேண்டும் என்றார்.

மசாலாத் தூள்களை அரைப்பதற்கு ஒரு குறிப்பிட்ட வகை இயந்திரமும் மாவு வகைகளை அரைப்பதற்கு வேறு வகை இயந்திரமும் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

இயந்திரங்கள் திடீரெனச் செயலிழந்துவிட்டால் அது வணிகத்தைப் பெரிதாகப் பாதிக்கக்கூடும். ஒரு சமயம் ஒரு மாதத்திற்கு இயந்திரம் இயங்காமல் இருந்ததால் வியாபாரம் பெரிதாகச் சரிந்ததாக நினைவுகூர்ந்தார் வீரமணி.

தீபாவளி போன்ற பண்டிகைக் காலத்தின்போது மலைபோல் குவியும் வாடிக்கையாளர் எண்ணிக்கை, கோடைக்காலத்தில் குறைந்துவிடுவதாக பகிர்ந்துகொண்டார் வீரமணி.

பாரம்பரிய உணவுவகைகளைச் சுவைக்கும்போது ஒருவரின் நாவில் எச்சில் ஊறும் அளவுக்கு நிறைந்துள்ள அந்தச் சுவை, ஆலையில் அரைக்கப்பட்ட தூளுக்கு மட்டுமே உரியது என்றார் வீரமணி. வேகமாக அமைந்த வாழ்க்கைச் சூழலிலும் மக்கள் ஆலைகளில் அரைக்கப்படும் தூளில் பொதிந்துள்ள சுகாதார நன்மைகளை அறிந்து நாடிவர வேண்டும் என்றும் ஆலைகள் புத்துயிர் பெறவேண்டும் என்றும் விரும்புகிறார் வீரமணி.

அடுத்த தலைமுறையிலும் கைப்பக்குவம்

டெப்போ லேன் பகுதியில் ஓர் ஒதுக்குப்புறத்தில் சாதாரணமாகத் தோற்றமளிக்கும் ‘அலெக்ஸாண்ட்ரா மில்ஸ்’ அனுதினமும் மசாலாத் தூள்களையும் மாவு வகைகளையும் அரைக்கும் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்குத் தள்ளாடும் வயதிலும் வழிகாட்டியாக இருக்கிறார் மதனகோபால், 76.

மசாலா, மாவு அரைக்கும் நுணுக்கங்களை ஊழியர்களுக்குக் கற்றுத்தரும் இவர், சிறு வயதிலேயே இந்த வேலைகளைச் செய்யப் பழக்கப்பட்டவர். 40 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றுச் சிறப்பு கொண்டுள்ள இந்த ஆலை, இரண்டாம் தலைமுறைத் தொடரும் தொழிலாகவும் குடும்பத் தொழிலாகவும் உருவெடுத்துள்ளது.

மதனகோபாலுடன் அவருடைய 37 வயது மகன் செந்தில்குமாரும் இணைந்து இந்த ஆலையை நிர்வாகம் செய்து வருகிறார். தமது பதின்ம வயதில் தந்தையுடன் ஆலைக்குச் சென்று நேரத்தைச் செலவிட்ட செந்தில்குமார், அன்றிலிருந்து இன்றுவரை மசாலா வாசனைக்குத் தம்மைப் பழக்கப்படுத்திக்கொண்டார்.

தமிழகத்தின் தஞ்சாவூரிலிருந்து சிங்கப்பூருக்கு 18 வயதிலேயே வந்த மதனகோபால், தமது வேலை அனுபவத்தை மளிகைக் கடைகளில் தொடங்கினார். பின்னர், சிங்கப்பூரில் இயங்கிவந்த ஆலைகளில் பணிபுரிந்த இவர், சுயமாகவே மசாலாத் தூள்களையும் மாவு வகைகளையும் அரைக்கும் விதங்களைக் கற்றறிந்தார்.

ஆலைகளில் பணிபுரிந்த அனுபவம் இவரை 1979ல் சொந்தத் தொழில் ஆரம்பிக்க உந்துதலாக இருந்தது. தொழில் தொடங்கிய புதிதில் வியாபாரம் தலைதூக்கியபோதும் 1990களில் வேறு சில மசாலா அரைக்கும் வர்த்தகங்களும் உதயமானதில் சில காலம் வியாபாரத்தில் மந்தத்தை எதிர்நோக்கினர்.

உணவகங்கள், மொத்த விற்பனையாளர்கள், ஏதேச்சையாக வரும் வாடிக்கையாளர்கள் எனப் பலதரப்பட்ட வாடிக்கையாளர்களைச் சந்திக்கும் இவர்கள், கொள்ளைநோயின்போது வர்த்தகத்தில் பெரிய மாற்றத்தைக் கண்டனர்.

அரைத்த மசாலாவையும் மாவையும் விரும்பிப் பயன்படுத்துபவர்கள் பெரும்பாலும் விலையை ஒரு காரணமாகக் கருதி இந்தியாவுக்குச் சென்று அரைத்து வருவதால் கொவிட்-19 சூழலில் வாடிக்கையாளர்கள் உள்ளூர் ஆலைகளை நாடி வந்தனர்.

ஆலைகளில் அரைக்கப்படும் மசாலாவில் நிறைந்துள்ள ஆரோக்கியத்தையும் நோயெதிர்ப்பு ஆற்றலையும் உணர்ந்த ஒரு சில வாடிக்கையாளர்களும் அண்மைய காலமாக ஆலைகளுக்கு அதிகம் வருவதாக மதனகோபால் கூறினார்.

மிளகாய்ச் செதில்கள் (chili flakes) வாடிக்கையாளர்களிடம் அதிகம் விற்பனையாவதை பகிர்ந்துகொண்ட செந்தில்குமார், ஆலையின் பக்கத்தில் இருக்கும் ஒரு கோவிலுக்கும் அரைத்த மசாலா, மாவு வகைகளை விநியோகிப்பதாகக் கூறினார்.

தற்போது பணியிலுள்ள 10 ஊழியர்களும் இந்தியாவிலிருந்து வந்தவர்கள். ஏற்கெனவே ஆலையில் பணிபுரிந்த அனுபவம் பெற்ற இவர்கள், மசாலா வாசனையைப் பொருட்படுத்தாமல் தரமான பொருள்களை வாடிக்கையாளர்களுக்குக் கொண்டுசேர்ப்பதில் உறுதிகொள்கின்றனர்.

தந்தை ஆரம்பித்த தொழிலை அவருக்குப் பிறகு முன்னெடுத்துச் செல்வதில் முனைப்புடன் இருக்கும் செந்தில்குமாருக்கு இரு சகோதரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் வேறு பணிகளில் ஈடுபட்டாலும் அவ்வப்போது ஆலைக்கு வந்து உதவுவதுண்டு.

“சில ஆண்டுகளில் துவாஸ் தொழிற்சாலைக்கு இடம் மாறிச் செல்லும் நிலைமை வரலாம் என்பதால் வழக்கமான வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறையக்கூடும்,” என்று வருந்திய இருவருக்கும் ஆலை நடத்தும் தொழிலில் வேறு சில சவால்களும் உள்ளன.

ஊழியர் பற்றாக்குறை, கடை வாடகை, வெளிநாட்டு ஊழியர் தீர்வை போன்றவை அவற்றில் அடங்கும். இருப்பினும் தந்தை மகன் இருவரும், “சமூகத்துக்கு எப்போதுமே நாங்கள் தேவைப்படுவோம். தயார் செய்யப்பட்ட தெரிவுகள் கடைகளில் எளிதில் கிடைத்தாலும் கலப்படம் இல்லாத இயற்கையான முறையில் அரைக்கப்படும் மசாலாவுக்கும் மாவுக்கும் இருக்கும் மதிப்பு வேறு எங்கும் கிடைக்காது. இந்தக் குடும்பத் தொழில் முடங்கிப் போகும் ஒரு நிலையை எங்களால் நினைத்துப் பார்க்க முடியாது, அது நடக்கவும் நடக்காது,” என்று உறுதியாகக் கூறினர்.

குடும்பத் தொழிலாக மாறிய ஆர்வம்

இதற்கு முன்னர் கடல் சார்ந்த துறையிலும் வாகனத் துறையிலும் பணியாற்றி வந்த முருகாசு எஸ். குப்புசாமிக்கு உணவுத் துறையில் பணிபுரிய வேண்டுமென்ற ஆசை இருந்துகொண்டே இருந்தது. நண்பர் ஏற்கெனவே நடத்திவந்த ஆலைத் தொழிலை முன்னெடுத்துச் செல்லத் தமக்கு வாய்ப்பு கிட்டியபோது அவர் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டார்.

உணவுத்துறையில் புதிதாகக் கால் எடுத்துவைத்த முருகாசுவுக்கு ஏற்கெனவே ஆலையில் பணிபுரிந்த அனுபவமுடைய அக்காவின் கணவர் சிதம்பரம் தருமலிங்கம், கைகொடுத்தார். முருகாசுவின் மனைவி அ ராமசாமி அவர்களுடன் கைகோத்து 1989ல் ‘சிட்டி ஸ்பைஸ் மில்ஸ் அண்ட் டிரேடிங்’ எனும் ஆலையைத் தொடங்கினர்.

ஆரம்பகட்டத்தில் முருகாசுவுக்கும் அவரின் மனைவிக்கும் தொழில் எளிதாக புலப்படாததால் அவர்கள் இருவரும் சிதம்பரத்தின் ஆதரவை நம்பித் தொழில் நடத்தி வந்தனர். நண்பரின் ஆலையாக முன்பு இருந்ததால் முருகாசு ஆலையைச் மறுசீரமைத்தார். இரண்டு இயந்திரங்களையும் இரண்டு ஊழியர்களையும் கொண்டு ஆலையில் அடிப்படைத் தாளிப்புப் பொருள்கள் மட்டுமே அரைக்கப்பட்டன.

தொழில் நுணுக்கங்களைப் படிப்படியாக சிதம்பரத்திடமிருந்து முருகாசு கற்றுத்தேர்ந்தார். ஆலையில் அரைக்கப்படும் பொருள்களைத் தங்கள் வீட்டில் சமைத்துப் பார்த்து உணவகங்களுக்கும் தெரிந்தவர்களுக்கும் தந்து அதில் கிடைத்த கருத்துகளைக் கொண்டு தாளிப்புப் பொருள்களின் தயாரிப்புமுறையைப் பின்னர் மாற்றியமைத்தனர்.

2003ல் ‘தனலட்சுமி மில்ஸ் அண்ட் டிரேடிங்’ என்று தனியார் நிறுவனமான ஆலையில் தற்போது சிங்கப்பூர், வெளிநாடுகளைச் சேர்ந்த 13 ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

தாளிப்புப் பொருள்கள், மசாலாப் பொருள்கள், மாவு வகைகள், பருப்பு வகைகள், சமையலுக்குத் தேவையான மற்றப் பொருள்கள் என ஐந்து பிரிவுகளில் விற்கப்படும் பொருள்களை வாடிக்கையாளர்கள் வாங்கிச் செல்வர்.

நேரடியாக, ஆலைக்கு வந்து அரைத்துப் போகும் வாடிக்கையாளர்களைத் தவிர்த்து, மற்ற வணிகங்களுடன் வியாபாரம் செய்துகொள்வதன் மூலம் இவர்கள் லாபத்தைக் காண்கிறார்கள். நேரத்தை மிச்சப்படுத்த இவர்கள் மின்வர்த்தக முயற்சியிலும் இறங்கியுள்ளார்கள். வாடிக்கையாளர்கள் தங்களின் விருப்பத்திற்கேற்ப பொருள்களை அரைத்துக்கொள்ளும் வசதி அடுத்த மாதத்திற்குள் மின்னிலக்க முறையில் அமைத்துத் தரப்படும்.

2016ல் முருகாசுவின் இளைய மகனான விக்னேஷ் முருகாசு, குடும்பத் தொழிலில் சேர்ந்து கொண்டார். சிறு வயதிலிருந்தே விக்னேஷுக்கும் அவரின் அண்ணன் கார்திகேஷுக்கும் பெற்றோர்களும் மாமாவும் நடத்திவந்த ஆலை, விளையாட்டு மைதானமாக இருந்துவந்தது.

“நவீனமயமாகிவரும் வாழ்க்கைச் சூழலில் நேரடியாக ஆலைக்கு வந்து அரைத்துச் செல்லும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்தாலும் மக்கள் ஆரோக்கியமான தெரிவுகளை நாடுவதால் அவர்கள் ஏற்கெனவே அரைக்கப்பட்ட தயாரிப்புகளை வாங்கிச் செல்கின்றனர்,” என்று விக்னேஷ் கூறினார்.

தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் இவர்களுக்கு அலுவலகம் இருப்பதால் மூலப்பொருள்களில் 80 விழுக்காடு இந்தியாவிலிருந்து வரவழைக்கப்படுகிறது. பட்டை போன்றவை சீனா, இந்தோனீசியா, வியட்னாம் ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.

ஒரு நாளில் கிட்டத்தட்ட 1.7 டன்கள் எடை கொண்ட பொருள்கள் இந்த ஆலையில் அரைக்கப்படுகின்றன. இயந்திரங்கள் பெரும்பாலும் தானியங்கி முறையில் இருந்தாலும் அரைக்கப்படும் பொருளின் நறுமணம் குறையாமல் இருக்க பயன்படுத்தப்படும் சில இயந்திரங்களுக்குக் கையேடு உதவி தேவைப்படுகிறது.

சிங்கப்பூர் உணவு அமைப்பின் வழிகாட்டிகளின்படி ஆலைகள் வரையறைக்கப்பட்ட இடங்களில் தான் இயங்க வேண்டும். இதன் காரணமாக சிங்கப்பூரில் இயங்கிவரும் ஆலைகளின் எண்ணிக்கை குறைந்திருக்கலாம் என்று விக்னேஷ் நம்புகிறார்.

கொள்ளைநோயின்போது வர்த்தகம் மந்தமாக இருந்தாலும் பண்டிகைக் காலத்தில் வியாபாரம் அதிகரிக்கும். வாடிக்கையாளர்கள் இவர்களின் இறைச்சி மசாலாவையும் மீன் மசாலாவையும் பெரிதும் விரும்புவதாகக் குறிப்பிட்டார். சிங்கப்பூரை ஒப்பிடுகையில் இந்தியா, மலேசியா போன்ற நாடுகளுக்குச் சென்று அரைத்து வருவது விலை மலிவாக இருப்பதால் வாடிக்கையாளர்கள் பலர் அந்தத் தெரிவை நாடுகின்றனர்.

“சிங்கப்பூரில் இயங்கும் ஆலைகளுக்கு என்றும் தனி சிறப்புண்டு. வெளிநாடுகளிலிருந்து நம்மால் இறக்குமதி செய்ய முடிந்தாலும் சிக்கல் நேரிட்டால் வாடிக்கையாளர்கள் உள்ளூர் வளங்களை நாடித்தான் ஆக வேண்டும்,” என்று நம்பிக்கையுடன் கூறினார் விக்னேஷ்.

பலன் காணும் மசாலா பிரியர்கள்

சிறு வயதில் சமைக்கத் தொடங்கியதிலிருந்தே ஆலைகளில் அரைக்கப்பட்ட மசாலாவையும் மாவையும் மட்டும் நாடிவரும் காளியம்மாள், 77 வயதிலும் தொடர்ந்து சமைப்பதற்கு ஆலைகளுக்குச் செல்கிறார்.

“முன்பு என் வீட்டுப் பக்கத்தில் இரண்டு ஆலைகள் இருந்தன. இப்பொழுது ஆலைகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது. லிட்டில் இந்தியாவில் ஆலை எதுவும் இல்லை. அவசரத் தேவைக்கு நான் வெகுதூரம் சென்று அரைத்து வரவேண்டிய சூழல் இருந்தாலும் அரைக்கப்பட்ட மசாலாவைப் பயன்படுத்திச் சமைக்கும் உணவின் ருசியே தனி,” என்றார் காளியம்மாள்.

தகவல்தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் திருநாவுக்கரசு சுரேஷ், 34, “என் அம்மாவின் சமையலை ருசித்து சாப்பிட்டு வளர்ந்த எனக்கு, அதில் அடங்கியுள்ள சுவையும் ஆரோக்கியமும் நன்றாகவே தெரியும். திடீரெனக் கடைக்குச் சென்று தயாரிக்கப்பட்ட மசாலாவை வாங்கச் சொன்னால் அதற்குப் பதிலாக நான் பக்கத்தில் இருக்கும் ஏதேனும் ஓர் ஆலைக்குச் சென்றாவது தூள்களை அரைத்து வருவேன்,” என்று கூறினார்.

தன்னுரிமை ஊழியரான 38 வயது சீதா, “பொட்டலமிடப்பட்ட தெரிவுகளைத்தான் நான் கடைகளில் வாங்கி என் சமையலில் பயன்படுத்தி வந்தேன். ஆனால் என் தாயார் என்னிடம் பலமுறை அரைக்கப்பட்ட மசாலாத் தூளைப் பயன்படுத்தப் பரிந்துரைத்துள்ளார். அது ஆரோக்கியம் நிறைந்தது என்பதையும் நான் கேள்விப்பட்டேன். இனி ஆலைகளுக்கு நேரடியாகச் சென்று அரைத்து வருவதாக இருக்கிறேன்,” எனக் கூறினார்.

சொந்தத் தொழில் செய்துவரும் 58 வயது ராமசாமி, “என் மனைவி எப்பொழுதும் சுயமாக நாங்கள் ஆலைக்குச் சென்று அரைத்து வரும் மசாலாப் பொடிகளை மட்டும்தான் சமையலில் சேர்த்துக் கொள்வார். எவ்வித கலப்படமும் இல்லாமல் ஆலையில் அரைக்கப்படும் மசாலாத் தூள் மிகவும் ஆரோக்கியமானது,” என்று தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!