ஊழல் மீதான மசெகவின் நிலைப்பாடு என் பொறுப்பின்கீழ் மாறவில்லை, எனக்குப் பிறகும் மாறாது: பிரதமர் லீ

மக்கள் செயல் கட்சி (மசெக) அரசாங்கம் ஊழலையும் முறைகேடான நடத்தைகள் பற்றிய குற்றச்சாட்டுகளையும் எப்போதுமே தீர ஆராய்ந்து, வெளிப்படையான முறையில், முற்றிலும் சட்டப்படி கையாளுவதாகப் பிரதமர் லீ சியன் லூங் கூறியிருக்கிறார்.

தனக்குப் பிறகு துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங்கும் இந்த நிலைப்பாட்டைத் தொடர்வார் என்றும் அவர் உறுதி அளித்தார்.

மசெக அரசாங்கம் அண்மையில் எதிர்நோக்கிய சில சம்பவங்களின் தொடர்பில் திரு லீ நாடாளுமன்றத்தில் புதன்கிழமை பேசினார்.

அமைச்சர் எஸ் ஈஸ்வரன் லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவால் கைதானது, நாடாளுமன்ற நாயகர் டான் சுவான் ஜின்னும் உறுப்பினர் செங் லீ ஹுயும் தகாத உறவினால் பதவி விலகியது, சட்ட, உள்துறை அமைச்சர் கா சண்முகம், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிரு‌‌ஷ்ணன் இருவரும் ரிடவுட் ரோடு பங்களாக்களை வாடகைக்கு எடுத்ததன் தொடர்பிலான குற்றச்சாட்டுகள் ஆகியவற்றின் தொடர்பில் அவர் கருத்துரைத்தார்.

“இந்தச் சம்பவங்களை நாங்கள் கையாண்ட விதத்திலிருந்து, சிங்கப்பூரை ஆளும் பொறுப்புக்கும் நாடாளுமன்றத்திடமும் சிங்கப்பூரர்களிடமும் பொறுப்புடன் நடந்துகொள்வதற்கும் மசெக அளிக்கும் முக்கியத்துவம் வெளிப்படுகிறது,” என்றார் திரு லீ.

ரிடவுட் ரோடு விவகாரம் எழுந்தபோது, இரு அமைச்சர்களும் தீர விசாரிக்கப்பட்டு, குற்றமற்றவர்கள் என்று உறுதிசெய்யப்பட்டதாக அவர் கூறினார்.

பிறகு, திரு ஈஸ்வரனைக் கைதுசெய்து விசாரிப்பதற்குக் காரணம் இருப்பதாகக் கண்டறிந்த புலனாய்வுப் பிரிவு, சென்ற மாதம் முறைப்படி விசாரணையைத் தொடங்கியது.

“யாரும் தகவல் தரவில்லை, பொது அரங்கிலும் சர்ச்சை ஏதும் எழவில்லை,” என்று திரு லீ கூறினார்.

“லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு தாமாக ஒன்றைக் கண்டறிந்தவுடன் தனது வேலையைச் செய்தது.”

பின்னர், “திரு டானும் குமாரி செங்கும் அவர்களிடம் எதிர்பார்க்கப்பட்ட நடத்தைக்குப் புறம்பாக நடந்துகொண்டதால், பதவியிலிருந்து விலகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்,” என்றார் திரு லீ.

“இதற்குச் சற்று காலமெடுத்தது, நாங்கள் எடுத்திருக்கவேண்டிய காலத்தைவிடச் சற்று அதிகமாகக்கூட இருக்கலாம், ஆனால், நாங்கள் செய்ய வேண்டியதைச் செய்து, சூழ்நிலையைச் சரிப்படுத்தினோம்,” என்றார் அவர்.

லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவின் இரு விசாரணைகளும் திரு டானுக்கும் குமாரி செங்குக்கும் இடையிலான தகாத உறவின் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கையும் மசெக அரசாங்கம் செயல்படும் முறையின் இரு முக்கிய கூறுகளை வெளிப்படுத்துவதாகத் திரு லீ குறிப்பிட்டார்.

“அதிகாரபூர்வக் கடமைகளைச் செய்வதில் தவறு இருப்பதாக, குறிப்பாக ஊழல் இருப்பதாக, சந்தேகிக்கப்பட்டால் அல்லது குற்றம் சாட்டப்பட்டால், அது முற்றிலும் சகித்துக்கொள்ளப்படாது என்பது முதலாவது.

“இரண்டாவதாக, தனிப்பட்ட வாழ்க்கையில் சிலர் சறுக்கும்போது, ஒவ்வொரு விவகாரத்தின் உண்மைகளையும் மசெக கவனமாகப் பரிசீலித்து, கட்சி நிலைநாட்டியுள்ள கொள்கைகளின்படி, கூடுமானவரை உணர்வுகளைப் புரிந்துகொண்டு மனிதாபிமான முறையில் கையாளும்.”

செயல்முறைகள் மனிதர்களை உள்ளடக்கியவை. அந்தச் செயல்முறைகளில் எவ்வளவு விரிவான பாதுகாப்புகள் இருந்தாலும், சில சமயங்களில் “ஏதாவது தவறு நடப்பதுண்டு.”

“இந்தச் சாத்தியத்தை முடிந்தவரை குறைப்பதற்கு மசெக அரசாங்கம் இயன்ற அனைத்தையும் செய்கிறது. சரியானவர்களை அடையாளம் கண்டு அரசியலுக்குக் கொண்டுவரவும், பொறுப்புள்ள பதவிகளில் நியமிக்கவும் நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். அவர்களிடம் பெரும் பொறுப்புகளை ஒப்படைப்பதற்குமுன், அவர்களைக் கவனமாகப் பரிசீலித்து, சோதித்துப் பார்க்கிறோம்,” என்றார் திரு லீ.

அவர்கள் பெரும்பாலும் தகுதியானவர்களாக இருந்தாலும், சில சமயங்களில் வழக்கத்திற்கு மாறாக நடந்துகொள்கின்றனர் அல்லது தவறிழைக்கின்றனர்.

அந்தக் காலத்திலும் இதுபோன்ற ஊழல் சம்பவங்கள் இருந்ததைத் திரு லீ சுட்டிக்காட்டினார். எடுத்துக்காட்டாக, 1966ல் அப்போதைய தேசிய வளர்ச்சி அமைச்சர் டான் கியா கான், 1975ல் அப்போதைய சுற்றுப்புறத் துணை அமைச்சர் வீ டூன் பூன், 1986ல் அப்போதைய தேசிய வளர்ச்சி அமைச்சர் தே சியாங் வான், 1979ல் அப்போதைய என்டியுசி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பே இயூ கொக்.

அப்போதைய பிரதமர் லீ குவான் இயூ, அந்தச் சம்பவங்கள் அனைத்தையும் ‘தீர ஆராய்ந்து, வெளிப்படையான முறையில், முற்றிலும் சட்டப்படி’ கையாண்டதாகத் திரு லீ குறிப்பிட்டார்.

“இதுபோன்ற சம்பவங்களை மசெக அரசாங்கம் இன்றுவரை இப்படித்தான் கையாளுகிறது. என் பொறுப்பின்கீழ் இது மாறவில்லை; எனக்குப் பிறகும் மாறப்போவதில்லை,” என்று அவர் கூறினார்.

சிங்கப்பூர் அரசாங்கச் செயல்முறையின் வழுவாமையை மசெக பாதுகாக்குமென்று சிங்கப்பூரர்களுக்குத் திரு லீ உறுதியளித்தார்.

“நம் நாட்டின் நலனுக்காக, சட்டப்படி செய்யப்பட வேண்டியவற்றை நாங்கள் செய்வோம், அதனால் கட்சிக்கு அரசியல் ரீதியான அவமானமும் வலியும் ஏற்பட்டாலும்கூட,” என்றார் அவர்.

“என் கடமையைச் செய்யவும், நமது செயல்முறையை ஊழலற்றதாக வைத்திருக்கவும் தடுமாறவோ அல்லது தயங்கவோ மாட்டேன். இப்படித்தான் சிங்கப்பூரர்கள் எங்கள்மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு மசெக அரசாங்கம் தகுதியானதாக நீடிக்கிறது,” என்று பிரதமர் லீ குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!