அமைச்சர் பதவியிலிருந்து விலகிய நிலையில் சிங்கப்பூர் இந்தியச் சமூகத்தினரின் அக்கறை

இந்தியச் சமூகத்துக்குச் சேவையாற்றியவர் ஈஸ்வரன்

இந்தியச் சமூகத்தின்மீது அதிக ஈடுபாடு காட்டியவர் என்றும் தமிழ்மொழி வளர்ச்சியில் அதிகக் கவனம் எடுத்தவர் என்றும் திரு ஈஸ்வரன் குறித்து இந்தியச் சமூகத்தினர் கருத்துரைத்துள்ளனர்.

அமைச்சர் பதவியிலிருந்து அவர் விலகியதைத் தொடர்ந்து, இனி அந்தப் பணிகள் எவ்வாறு கையாளப்படும் என்று சிலர் வினவினர்.

லிட்டில் இந்தியா வர்த்தகங்கள் மற்றும் இந்திய நாட்டு ஊழியர்களின் நலத் திட்டங்களுக்குத் திரு ஈஸ்வரன் ஆதரவாக இருந்ததைக் குறிப்பிட்டார் லிஷா எனப்படும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கத்தின் முன்னாள் தலைவர் ராஜ்குமார் சந்திரா.

அத்துடன், 2019ல் திரு ஈஸ்வரன் தொடர்பு, தகவல் அமைச்சராக இருந்தபோது லிஷா, சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபை ஆகிய அமைப்புகள் வழிநடத்திய லிட்டில் இந்தியா வர்த்தகர்களின் மின்னலக்க உருமாற்றத்திற்குக் குறிப்பிடத்தக்க விதத்தில் பங்களித்ததாக அவர் கூறினார். இதன்மூலம், கொவிட்-19 பரவல் காலகட்டத்தில் கடைகள் பல மூடாமல் இயங்கி வந்ததற்கு திரு ஈஸ்வரனின் பங்களிப்பு இருந்ததை அவர் நினைவுகூர்ந்தார்.

“இந்திய வர்த்தகங்களின் தேவைகளை உடனுக்குடன் நிறைவு செய்வதில் இந்தியத் தலைவர்கள் மும்முரமாகச் செயல்பட்டுள்ளனர். இது நம் சமூகத்திற்குப் பெரும்பலம்,” என்றார் திரு ராஜ்குமார்.

தமிழில் சரளமாகப் பேசும் திரு ஈஸ்வரன், தமிழ்ச் சமூக நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்றதைச் சுட்டிக்காட்டினார் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத் தலைவர் திரு ஹரிகிருஷ்ணன் முத்துசாமி. தமிழ்மொழி, தமிழ்ச் சமூகத்தின் மீதான அரசாங்கத்தின் ஈடுபாடு இனியும் குன்றாமல் தொடரவேண்டும் என தமது விருப்பத்தைத் தெரிவித்தார் அனைத்துலக இந்திய வம்சாவளி அமைப்பின் தலைவருமான திரு ஹரிகிருஷ்ணன்.

இந்தியச் சமூகத்திற்கு தைப்பூசம் போன்ற நிகழ்வுகளின் முக்கியத்துவத்தை அரசாங்கம் தொடர்ந்து புரிந்துகொள்வதற்கு இத்தகைய இந்திய அமைச்சர்களின் பங்களிப்பு முக்கியம் என்றார் சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்கின் ஆலோசகர் திரு நசீர் கனி.

“இருந்தபோதும், இது ஒரு தலைவரைச் சார்ந்த பணியன்று. பல்வேறு காரணங்களால் ஓர் அமைச்சர் பதவியை விட்டுச் சென்றாலும் மற்ற தலைவர்கள் இணைந்து இதனைச் செய்வர்,” என்று திரு கனி நம்பிக்கை தெரிவித்தார்.

ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் திரு ஈஸ்வரன், தமது அமைச்சர் பொறுப்பு, நாடாளுமன்ற உறுப்பினர் பதவி, மக்கள் செயல் கட்சி உறுப்பினர் பொறுப்பு ஆகியவற்றிலிருந்து விலகியுள்ளார்.

சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம், இந்து அறக்கட்டளை வாரியம், வளர்தமிழ் இயக்கம் உட்பட பல இந்திய அமைப்புகள், தமிழ்மொழி சார்ந்த முனைப்புகளில் நீண்ட காலம் அங்கம் வகித்தவர் திரு ஈஸ்வரன். 2006 முதல் 2016 வரை அவர் வளர்தமிழ் இயக்கத்தின் ஆலோசகராகவும் செயல்பட்டார்.

வளர்தமிழ் இயக்கம் தொடங்கப்பட்ட காலத்தில் தலைமை ஆலோசகராகச் செயல்பட்ட திரு ஈஸ்வரன், அடிக்கடி வருபவர், ஆதரவு தருபவர் என்று வளர்தமிழ் இயக்கத்தின் முன்னாள் தலைவர் ஆர். ராஜாராம் தெரிவித்தார். 

“வளர்தமிழ் இயக்கம் தொடங்கிய காலகட்டத்திலிருந்து திரு ஈஸ்வரன் அதற்கு வழிகாட்டி வந்தவர். தற்போதைய நிலைக்கு இயக்கம் வளர்ந்ததில் அவருக்குப் பெரும்பங்கு உண்டு,” என்றும் திரு ராஜாராம் கூறினார்.

அரசியலுக்கு வருமுன் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் 1991ஆம் ஆண்டு தொடங்கப்பட்டபோது திரு ஈஸ்வரன் அதன் முதல் தலைமை நிர்வாக அதிகாரியாகச் செயல்பட்டார்.

திரு ஈஸ்வரனின் சமூகப் பங்களிப்பு குறித்து பேசிய இந்திய சமூகத் தலைவர்கள், சமூகத்துடன் இந்திய அமைச்சர்கள் கொண்டுள்ள அணுக்கம் தொடரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்தியர்களுக்குரிய தேவைகளையும் விவகாரங்களையும் அரசாங்கத்திடம் எடுத்துரைப்பதற்கும் சரியான கண்ணோட்டத்தில் தீர்வு காண்பதற்கும் தலைமைப் பொறுப்புகளில் இந்தியர்கள் இருப்பது முக்கியம் என்று முன்னாள் நாடாளுமன்ற நியமன உறுப்பினர் இரா. தினகரன் கூறினார்.

“இந்திய அமைச்சர்களின் தொடர் பிரதிநிதித்துவம், இந்தியச் சமுதாயத்திற்கு பலன் தரக்கூடியது,” என்று அவர் சொன்னார்.

இதற்கிடையே, இந்தியச் சமூகத்தின் தேவைகளையும் அக்கறைகளையும் தாமும் தம் சகாக்களும் தொடர்ந்து பார்த்துக்கொள்ளப்போவதாக உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் உறுதியளித்தார்.

“பொதுவான இந்தியச் சமூக விவகாரங்களை நான் உட்பட திரு ஈஸ்வரனுடன் சிலர் இணைந்து கையாண்டோம். அமைச்சரவையிலிருந்து திரு ஈஸ்வரன் விலகியுள்ள நிலையில் நானும் என் சகாக்களும் இந்தியச் சமூகத்தின் தேவைகளையும் அக்கறைகளையும் தொடர்ந்து நிறைவேற்றுவோம்,” என்று அமைச்சர் சண்முகம் தமிழ் முரசிடம் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!