பழக்கம்

அந்த ஜனவரி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் அடித்த ‘அலார’ சத்தம் உறங்கிக் கொண்டிருந்த சங்கரின் காதில் நுழைந்து மூளைக்குள் அதிர்ந்தது. எரிச்சலோடு விழித்த அதே வேகத்தில் ஆமைபோல் தலையைப் போர்வையிலிருந்து நீட்டினான். ‘ஐந்து நிமிடம் கழித்து அழைக்கவும்’ என்று ஆங்கிலத்தில் கூகலிடம் சொல்லிவிட்டு, மீண்டும் பூனைபோல் சுருண்டு போர்வைக்குள் நுழைந்தான். மறுபேச்சின்றி கூகல் அலாரத்தை உறக்கநிலைக்கு உயர்த்தியது. சில நிமிடங்களில் “என்னங்க, ‘வாக்கிங்’ போக வேண்டாமா? எழுந்திருங்க!” அவன் மனைவி கமலாவின் குரல் கேட்டது. இதுவரை மனைவியின் பேச்சை நிறுத்த எந்தக் கருவியும் கண்டுபிடிக்கப்படாததால், வேறு வழியின்றி எழுந்தான் சங்கர்.

சோம்பல் முறித்துக்கொண்டே சமையலறைக்குள் நுழைந்தான். அந்த மார்கழி மாதத்தில், மகாநதி சோபனாவின் குரலில் ஆண்டாளின் திருப்பாவை இதமாக அங்கு ‘யூடியூபி’ல் ஒலித்துக்கொண்டிருந்தது. அந்தப் பாடலில் கண்ணனைக் காண தோழிகளை எழுப்பிக்கொண்டிருந்தாள்.

“கிளம்புங்க, சீக்கிரம்!” தயாராகிக்கொண்டே கமலா சொன்னாள். சரியாக 6.30 மணிக்கு நடைப்பயிற்சி செல்ல அவர்கள் அடுக்குமாடிவீட்டின் அருகில் இருக்கும் நீள்வட்ட வடிவ நடை பயிலும் பூங்காவிற்குக் கிளம்பினார்கள்.

அந்தக் கங்குல் புகுந்த புலர்பொழுதில், குயில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒருபுறம் கூவிக் கொண்டிருந்தது.

“என்னங்க ஆண்டாள் பாசுரத்தில் வரும் ‘ஆனைச்சாத்தன்’ நம்ம சிங்கப்பூரில் இருக்குமா?” கமலா கேட்டாள்.

“நல்ல கேள்வி. இருக்கலாம், நம்ம கூகலில் தேடுவோம்” என்று சொல்லிய சங்கரின் உதடுகள் அவனை அறியாமல் ‘கீசு கீசு என்று எங்கும்’ பாசுரத்தைச் சொல்ல ஆரம்பித்தன.

“என்னங்க பூங்காவுல இவ்வளவு கூட்டம்?” கமலா சற்று ஆச்சரியத்துடன் அடுத்த கேள்வி கேட்டாள்.

“இதில் பாதிப் பேர் புத்தாண்டில் வழக்கம்போல தீர்மானம் எடுத்துட்டு வந்தவங்க. முதல் இரண்டு வாரம் மட்டும் வருவாங்க, அப்புறம் பாரு, நம்ம எப்பொழுதும் பார்க்கிற மனிதர்கள்தான் வருவாங்க!” என்று சங்கர் பதிலுரைத்தான்.

“ஆமாம், நீங்க சொல்லுவது சரிதான்!” ஆமோதித்தாள் கமலா.

அந்தப் பூங்காவின் அமரும் இருக்கைகளில் சோம்பலை மீண்டும் அழைக்கும் விதமாக சில பூனைகள் உறங்கிக்கொண்டிருந்தன. வழக்கம்போல சிலர் தமது செல்ல நாய்களுடன் நடந்து கொண்டிருந்தனர். வேறு சிலர் மெதுவோட்டம் சென்றுகொண்டிருந்தனர். ஒருபுறம் வயதானவர்கள் கூட்டமாக இசைக்கேற்ப உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தனர். சிலர் பின்புறமாக நடந்து கொண்டிருந்தனர்.

“என்னங்க, எனக்கு இப்படிப் பின்புறமாக நடந்து பழக வேண்டுமென்று ஆசையா இருக்கு. தவறி மத்தவங்க மேல முட்டிருவோமோன்னு கொஞ்சம் பயம் இருக்கு. நீங்க பாத்துச் சொல்லுவீங்கன்னா முயற்சி செய்வேன்,” ஆர்வமாய்க் கமலா சொன்னாள்.

ஏனோ உடனே சங்கருக்கு ‘ஆண்பாவம்’ படத்தில் பாண்டியராஜன் அவர்களின் ‘கார் முட்டிருச்சு’ நகைச்சுவை நினைவில் வர சிரித்து விட்டான்.

“என்ன சிரிக்கிறீங்க?” கோபத்துடன் கமலா கேட்க, “ஒன்னும் இல்ல, கூட்டம் அதிகமாக இருக்கு. இன்னொரு நாள் முயற்சி செய்யலாம்,” என்று சமாளித்துச் சொன்னான் சங்கர். இருவரும் எட்டுவைத்து நடந்தார்கள்.

பூங்காவில் நடைபோகும் மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி நடப்பார்கள். சிலர் கை வீசிக்கொண்டு, சிலர் சுழற்றிக் கொண்டு, சிலர் மடக்கி வைத்துகொண்டு, சிலர் வேகமாக, சிலர் மெதுவாக நடப்பார்கள். சிலர் தனது அலைபேசியை பார்த்துக்கொண்டே நடப்பதை மறந்து பாதியில் நின்றுகொண்டிருப்பர். வேறு சிலர் நடக்க வேண்டுமே என்று நடப்பதுபோல் மெதுவாக நடந்து கொண்டிருப்பர். காதில் ஒலிப்பானை மாட்டிக்கொண்டு சிலர் தன்னை மறந்து நடந்துகொண்டிருப்பர். மனித இயல்பின்படி ஒரு சிலர் அவர்களை முந்தி நடந்து சென்றுவிட்டால், உடனே வேகமாக நடந்து அல்லது ஓடியாவது மீண்டும் முந்திச் செல்வர். இவற்றை எல்லாம் இரசித்துக்கொண்டே சங்கரும் கமலாவும் நடந்துகொண்டிருந்தனர்.

அவர்கள் வழக்கமாக எப்பொழுதும் பார்க்கிற மனிதர்களைக் கண்டால் மனத்தில் ஒருவித மகிழ்ச்சி பிறக்கும். அதே பூரிப்பை அவர்களின் முகங்களிலும் பார்க்கலாம். எல்லோரிடமும் பேசிப் பழகியதில்லை, ஆனாலும் ஏதோ ஒருவித பந்த உணர்வு அவர்களிடம் இருக்கும்.

அன்றும் காலை வணக்கம் பரிமாறிக்கொண்டு, சிலரிடம் சிரிப்பை உதிர்த்து இருவரும் நடந்துகொண்டிருந்தனர்.

அந்த நீள்வட்டப் பாதையை மூன்று முறை சுற்றி வந்தால் ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்ததிற்குச் சமம். வழக்கமாக ஒன்பது முறை இருவரும் சுற்றுவார்கள்.

அன்று முதல் சுற்று முடிந்தது. ஆனால், அன்று அவர்கள் எப்பொழுதும் பார்க்கிற மனிதர்களில் அந்தப் பாட்டி மட்டும் இன்றும் வரவில்லை. வயதானாலும், கையில் ஓர் ஊன்றுகோலுடன் தள்ளாடி தள்ளாடி நடக்கும் அந்த சீனப் பாட்டியைக் கடந்த ஐந்து நாள்களாகப் பார்க்கவில்லை. பாட்டியின் ஊன்றுகோல் வித்தியாசமாக நெளிந்து நெளிந்து இருக்கும். கட்டாயம் அவர் வீடு அருகில் தான் இருக்க வேண்டும்.

“ஹௌ ஆர் யு?” என்று கேட்கும்போது சிரிக்க மட்டும் செய்வார்கள். அதுவே ஆயிரம் அர்த்தங்கள் சொல்லும். அவர்கள் இருவருக்கும் புத்துணர்ச்சி கொடுக்கும்.

“நாமும் எவ்வளவு வயசானாலும் பாட்டி மாதிரி வாக்கிங் போகணும்” என்று கமலா சொல்வாள்.

இப்படி சங்கர் நினைக்கும்போதே கமலா, “பாட்டியை இன்றும் காணலையே?” என்று கேட்டாள்.

“ஆமாம், அதுதான் ஏன்னு தெரியலை,” என்றபடியே குழப்பமாய் எட்டுவைத்தான் சங்கர்.

ஒரு கிலோமீட்டர் நடந்தாகிவிட்டது. உறவு இல்லாவிட்டாலும் சிலரிடம் நம்மை அறியாமல் நேசம் பிறக்கும். அந்தப் பழக்கம் ஒரு பாசத்தை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.

அந்த பந்த நிலையில் அவர்கள் அந்தப் பாட்டியை வைத்திருக்கின்றனர்.

“மத்தவங்களிடம் அந்தப் பாட்டி பத்தி கேட்கலாமா?” கமலா கேட்க.

“இல்லைம்மா, அது சரியா இருக்காது,” சங்கர் சொன்னான்.

“கொவிட்-19 காலத்துல, அந்தப் பாட்டியை கொஞ்சநாளா நாம பார்க்கவில்லை, ஞாபகம் இருக்கா?” கமலா கேட்டாள்.

“ஆமாம், அப்போ மனசுல என்னவெல்லாமோ எண்ணத் தோணியது,” சங்கர் சொல்ல, “ஆனா, பாட்டி அதுக்கப்புறம் வந்தபோது எவ்வளவு சந்தோசம் வந்தது?” கமலா எடுத்துச் சொல்ல, “சரிதான். அதுபோல அவங்களுக்குக் கொஞ்சம் முடியாமகூட இருக்கலாம்,” சங்கரும் ஆறுதலாய்ச் சொன்னான்.

“நானும் அப்படித்தான் நினைக்கிறேன். பாருங்க, நாளைக்கு வந்துருவாங்க,” நம்பிக்கையுடன் சொன்னாள் கமலா.

அப்பொழுது அருகில் இருந்த ஒரு புளோக்கின் கீழே ஒருவர் தலையணை மற்றும் வேறு சில பொருள்களை வைத்துச் செல்வதைப் பார்த்தான். அவசரமாக நடந்துகொண்டிருந்ததால் வைத்த பொருள்களைச் சங்கர் சரியாகக் கவனிக்கவில்லை.

அடுத்த சுற்றில் பார்ப்பதற்காக வேகமாக எட்டுவைத்து நடந்தான்.

“என்னங்க திடீர்னு வேகமாக நடக்குறீங்க?” கமலா கேட்டாள்.

“ஒன்னும் இல்லை!” சமாளித்து மனத்தில் எழுந்த ஆர்வத்தில் சற்று குழப்பத்துடன் நடந்தான் சங்கர்.

அடுத்த சுற்றில் அந்த புளோக்கின் அருகில் வந்தபோது தொலைவிலிருந்தே கூர்ந்து கவனித்தான். நெளிந்து நெளிந்து இருக்கும் ஊன்றுகோல், ஒரு மெத்தை, பழைய நாற்காலி, தலையணை வைக்கப்பட்டிருந்தது. அந்த நன்கு அறிமுகமான ஊன்றுகோல் அவனை உறுத்தியது.

சட்டென சங்கருக்கு பாட்டிக்கு என்ன நடந்திருக்கும் என்று ஊகிக்க முடிந்தது. மனைவி கமலா அவற்றைப் பார்க்காமல் இருக்க வேண்டுமே என்ற எண்ணம் சங்கருக்கு மேலோங்கியது.

அவளைத் திசைதிருப்ப, “இன்னிக்கு என்ன சமையல்?” என்று கேள்வி கேட்டுக்கொண்டே நடந்தான்.

ஆனால், ஏனோ கமலா பதில் சொல்லவில்லை.

அந்த ஐந்தாவது சுற்றுடன், “வாம்மா, இன்னிக்கு நடந்தது போதும்! வீட்டுக்குப் போகலாம்,” அவளைப் பார்க்காமல் குனிந்துகொண்டே சொன்னான் சங்கர்.

“நீங்களும் பாத்துட்டீங்களா?” என்று கமலா கண்களில் கண்ணீர் ததும்ப, நா தழுதழுக்க கேட்டாள்.

“உம்...” என்று மட்டும் சொல்லி அவள் முகம் பார்த்தால் எங்கே அழுதுவிடுவோமோ என்று குனிந்தபடியே நடந்த சங்கர் அடக்க முடியாமல் பெருமூச்சுவிட்டான்.

அடுத்த அந்த சில நிமிடங்கள் சத்தமின்றிக் கரைந்தன மௌன அஞ்சலியாய்!

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!