புனித வெள்ளி

“பார்த்து போங்க!” மனைவியின் அன்பான வேண்டுகோளை நினைத்தபடியே சாலையைக் கடந்தேன். இப்படித்தான் சில நாள்களுக்குமுன் சிராங்கூன் சாலையில் இருக்கும் கடையில் வீட்டுக்குத் தேவையானதை வாங்கிக்கொண்டு பேருந்து நிறுத்தம் நோக்கி நடையைப் போட்டேன்.

வானம் தெளிவாக இருந்தது. “ம்ம்..இனிமே இப்படித்தான்!” என்று முணுமுணுத்தபடி நடந்தேன்.

அவசரமாக ஓடி வந்த ஒருவன் என்மீது மோதியதும் தட்டுத்தடுமாறி கீழே விழுந்தேன். “சாரி…சாரி...” என்று பதறியவன் என்னைத் தூக்கிவிட்டான். சிதறி ஓடிய உருளைக்கிழங்கு, தக்காளியோடு பழங்களையும் பொறுக்கியெடுத்துத் துணிப்பைக்குள் திணித்தான்.

புனித வெள்ளிக்குச் சைவம்தான் சாப்பிட வேண்டுமென்று பேரனிடம் கூறியதும், “மொறு மொறுன்னு சிப்ஸ் வேணும் தாத்தா!” என்ற பேரனின் கெஞ்சல் மனத்தை வருடியது. என்மீது மோதியதைவிட பேரன் சாப்பிட வேண்டிய உருளைக்கிழங்கைத் தரையில் பார்த்ததும் கோபத்துடன் நிமிர்ந்து பார்த்தேன்.

அவனோ மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்டுக்கொண்டிருந்தான். “நானும் பார்த்து வந்திருக்கணும்,” என்று கூறிவிட்டு பேருந்தில் ஏறினேன்.

குடையைப் பிடித்தாலும் கண்களைத் திறக்கவிடாமல் இந்த வெயில் படுத்தும்பாடு பெரிய பாடாக இருந்தது. “ப்பூ…” முகத்திலும் நெற்றியிலும் வழியும் வியர்வையைத் துடைக்க, சட்டைப்பைக்குள்ளிருந்து கைக்குட்டையை வெளியே எடுப்பதும் மீண்டும் பைக்குள் திணிப்பதுமாக இருந்தேன்.

நாளைக்குப் பெரிய வெள்ளிக்கிழமை. சிறு வயதில் முதல் நாளே அம்மா அப்பா கையைப் பிடித்துக்கொண்டு ஏழு தேவாலயங்களுக்கும் சென்று வந்துவிடுவேன். தொலைவில் இருக்கும் ’மெத்தடிஸ்ட்’ ஆலயங்களுக்கு மட்டும் பேருந்தில் செல்வோம். ஃபேரர் பார்க் திடலுக்குப் பின்னால்தான் எங்களது குடியிருப்பு இருந்தது.

பேசிக்கொண்டு நடந்தால் பத்து நிமிடங்களில் ஒஃபியர் சாலையில் இருக்கும் ‘லூர்து மாதா’ தேவலாயத்தை அடைந்துவிடலாம். “எங்களால் நடக்க முடியாது,” என்று சொல்லிவிட்டு ரேஸ் கோசிலிருந்து பேருந்தில் செல்ல அண்ணனும் அக்காவும் போய்விடுவார்கள். பக்கம்தான் என்றாலும் அவர்களால் மட்டும் நடக்கமுடியாது. அம்மா புலம்புவார். “அப்படியாவது வராங்கன்னு சந்தோசப்படு,” என்று புலம்பலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிடுவார் அப்பா.

இரவு நேரத்தில் அப்பா கையைப் பிடித்தபடி ‘ஃபேரர் பார்க்’ விளையாட்டுத் திடலைக் கடக்கும்போது மனம் மகிழ்ச்சியில் துள்ளும். வெளிச்சம் குறைவாக இருக்கும் திடலில் நண்பர்களுடன் பந்து விளையாடியது நிழலாடும்.

பள்ளியில் இருந்து திரும்பியதும் அம்மா சமைத்து வைத்ததை அள்ளி வாய்க்குள் போட்டுவிடுவேன். “வீட்டுப் பாடத்தை முடிக்காம விளையாடப் போக முடியாதுன்னு” அம்மா சத்தம் போடுமுன் நின்றபடியே விறுவிறுவென்று எல்லாவற்றையும் எழுதி முடித்து பைக்குள் போட்டுவிட்டு, “விளையாடப் போறேன்,” என்று சொல்லிவிட்டுக் கதவைச் சாத்திவிடுவேன்

‘ஏ’ புளோக்கில் இருக்கும் லீ மிங்கும் வந்துவிடுவான். கையில் அவன் அப்பா வாங்கித் தந்த பந்துடன் வரும்போது மகிழ்ச்சியில் துள்ளிக் குதிப்பேன். பெரிய திறந்தவெளியில் அந்நேரத்தில் நிறைய பேர் இருக்கமாட்டார்கள். லீ மிங் பந்தை என்னிடம் உதைப்பதும் நான் அவனிடம் உதைப்பதுமாக விளையாடுவோம். வியர்வையால் எங்களது டி-சட்டை முழுமையாக நனைத்துவிடும்.

சில நேரங்களில் அப்போதுதான் பள்ளி முடிந்து குடியிருப்பிற்குப் போகும் நண்பர்களும் பார்த்துவிட்டு வந்து சீருடையுடன் பந்தடிப்பார்கள். கொஞ்சம் தள்ளி பூப்பந்து விளையாடுவதைப் பார்க்க முடியும். எங்கள் பந்து அவர்களிடம் சென்றுவிடாமல் பார்த்து விளையாடுவோம். லீ மிங் கொண்டு வரும் பந்தை உதைத்து உதைத்து நேரம் போவதே தெரியாமல் விளையாடிக் கொண்டிருப்போம். மாலை நேரங்களில் காற்பந்து விளையாடும் எங்களைவிட மூத்தவர்கள் வந்துவிடுவார்கள்.

சிவப்புச் சட்டையினர் ஒரு குழுவாகவும் பச்சைச் சட்டையினர் ஒரு குழுவாகவும் விளையாடுவர். சில நேரங்களில் அவர்கள் வந்ததும் சிறிய கூட்டம் சேர்ந்துவிடும். சிங்கப்பூரைப் பிரதிநிதித்து விளையாடுபவர்கள் இல்லை. நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவர்களைத் திடலில் பார்க்க முடியும்.

அவர்களில் சிலர் படிக்கிறார்கள், சிலர் வேலை பார்க்கிறார்கள் என்று என் அண்ணன் சொல்லித்தான் தெரியும். அவனை மட்டும் காற்பந்து விளையாட அழைத்தால், “சிலுவையில்கூட என்னை அறைஞ்சுடு. இந்த விளையாட்டு மட்டும் வேணாம். அது என்னடா விளையாட்டு? ஒரு பந்தை பதினொரு பேர் காலால் உதைச்சு உதைச்சு….”

வியப்பாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது. “நீ இயேசு காலத்துல பிறந்திருக்கணும்,” என்று அவனைப் பார்த்துப் பழிப்பு காட்டிவிட்டுத் திடலுக்கு ஓடிவிடுவேன்.

சிவப்புச் சட்டை அணிந்திருக்கும் செபாஸ்டியன் அண்ணன் வலைக்குள் பந்து விழாமல் பாய்ந்து பிடித்ததும் சுற்றி நின்றவர்கள் ஆரவாரத்துடன் கைதட்டுவார்கள். சிவப்புச் சட்டை அணிந்திருக்கும் அண்ணனைப் பெயர் சொல்லி அழைப்பதைக் கேட்டு, அவரது பெயரைத் தெரிந்துகொண்டேன்.

லீ மிங் சிறிது நேரம்வரை விளையாட்டைப் பார்த்துவிட்டுக் கிளம்பினான். காலுக்குக் கால் மாறும் பந்தை கண்களை இமைக்கவிடாமல் நிலைமறந்து அங்கேயே அமர்ந்திருப்பேன். சில நேரங்களில் அண்ணன் வந்து காதைத் திருகும்போதுதான் அவன் வந்ததே தெரியும். சில நாள்கள் அவனைத் தூரத்தில் பார்த்தவுடன் அங்கிருந்து மறைந்துவிடுவேன். தேர்வு முடியும்வரை திடலுக்கே விடமாட்டான்.

ஒரு நாள் குடியிருப்பைக் காலி செய்யச் சொல்லி தகவல் வந்ததும் இடிந்துபோய் அமர்ந்துவிட்டோம். “அரசாங்கம் புதிய வீடு தந்தாலும் பிறந்து வளர்ந்த வீட்டையும் நேசித்த இடத்தையும் விட்டுட்டுப் போகும்போது இதயமே வெடிச்சுவிடும்போல இருக்கு!” என்கிற வருத்தமும் வேதனையும் எங்களைப்போல அங்கிருந்த மற்றவர்களிடமும் எதிரொலித்தது. “அந்த வட்டாரத்தைச் சுத்தியே வீடு கிடைக்கணும்!” என்று அப்பா வேண்டிக்கொண்டார். சிராங்கூன் பக்கம் மாறிப்போகும்போது அப்பாவின் முகத்தில் மகிழ்ச்சியும் சிரிப்பும் வழிந்தது.

லீ மிங் கிளமெண்டிக்குச் சென்றான். “நேரம் கிடைக்கும்போதெல்லாம் வீட்டுக்கு அழைச்சுப் பேசுன்னு” தொலைபேசி எண்ணை ஒரு தாளில் எழுதிக் கொடுத்தான்.

நாங்கள் சிராங்கூன் பக்கமாகக் குடிபோய் இருந்தாலும் அப்பா எப்படியும் ஒவ்வொரு புனித வெள்ளிக்கும் முதல் நாள் ஃபேரர் பார்க் வழியாகத்தான் நடக்க வைத்து தேவலாயத்திற்கு அழைத்துச் செல்வார். அம்மா கூறும் இயேசுதேவன் கதைகளைக் கேட்டபடி காலில் செருப்பில்லாமல் நடக்கும்போது அலுப்பே தெரியாது.

ஒஃபியர் சாலையில் இருக்கும் ‘லூர்து மாதா’ தேவலாயத்தில் தமிழில் நடக்கும் வழிபாடுகளில் அம்மா கலந்துகொள்ள விரும்புவார். மனமுருகி நிற்பதைப் பார்க்க முடியும். அதைப்போல தேவலாய வளாகத்தினுள்ளே ஒரு நீண்ட மேசையில் சில வகையான ரொட்டிகளுடன் ‘ஹாட் கிராஸ் பன்’களும் இருப்பதைப் பார்த்ததும் மகிழ்ச்சியாக இருக்கும்.

“இந்த ரொட்டியைத்தான் புனித வெள்ளிக்காக 40 நாள் விரதம் இருக்கிறவங்க சாப்பிடுவாங்கன்னு” சொல்லி அம்மா வாங்கிக் கொடுப்பார். ‘ஹாட் கிராஸ் பன்’னில் திராட்சையோடு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய ஆரஞ்சும் சேர்த்துச் செய்திருப்பார்கள். “நல்லாயிருக்கும்மா…” என்று விரும்பிச் சாப்பிடுவேன். புனித வெள்ளிகளில் மட்டும்தான் கிடைக்கும். ம்ம்…அடுத்த புனித வெள்ளிக்காகக் காத்திருக்க வேண்டும். வழிபாடுகள் முடிந்து வீடு திரும்பியதும் சோர்வு தீர நன்றாக உறங்குவேன். அம்மா ஒன்றும் சொல்லமாட்டார்.

காலையிலேயே பாட்டி வந்துவிடுவார். கறுப்பு இல்லையெனில் பழுப்பு நிறப் புடவைதான் உடுத்தியிருப்பார். “இன்னைக்கு நம்ம இயேசுவை சிலுவையில் அறைந்து பாவிங்க கொன்னுட்டானுங்க. சைவம்தான் சாப்பிடணும்,” என்று அவர் கூறிவிடுவார்.

அம்மாவுடன் பாட்டியும் சேர்ந்து சமைப்பார். ஆனால், பாட்டி மட்டும் எதுவும் சாப்பிடாமல் இயேசுவின்முன் மண்டியிட்டபடி பிரார்த்தனை செய்துகொண்டே இருப்பார். வீடே அமைதியாக இருக்கும். சாப்பிட்டதும் மீண்டும் உறங்கச் சென்றுவிடுவேன்.

உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றபின் ஃபேரர் பார்க் திடலுக்குப் போய் விளையாட நேரமே கிடைப்பதில்லை. பள்ளியில் கொடுக்கும் வீட்டுப் பாடங்களைச் செய்து முடிக்கவே நேரம் போதாது. எப்போதாவது அந்தப் பக்கமாகச் சென்றபோது முன்பு காற்பந்து விளையாடும் செபாஸ்டியன் அண்ணன் குழுவைப் பார்க்க முடிந்ததில்லை. புதிதாக விளையாடுபவர்களைச் சிறிது நேரம் நின்று பார்த்துவிட்டு வந்துவிடுவேன்.

காலம் ஓடியதே தெரியவில்லை. இப்போது எனக்கும் வயதாகிவிட்டது. பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டேன். நாளைக்குப் புனித வெள்ளி. பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் வீட்டிற்கு வருவர். லீ மிங்கையும் அழைத்துள்ளேன். கிறிஸ்துமஸ் திருநாளன்றும் வந்தான். பழைய கதைகளைப் பேச ஆரம்பித்ததும் நேரம் போனதே தெரியாமல் பேசிக்கொண்டு இருந்தோம்.

இன்று நான் மட்டும் தனியாக ‘லூர்து மாதா’ தேவலாயத்திற்கு நடந்துகொண்டு இருக்கிறேன்.

“ப்பா….வேலை முடிஞ்சு வர்றதுக்கு நேரமாகிடும்,” என்று பெரியவனும் மகளும் கூறிவிட்டார்கள். “வீட்டுப்பாடங்களை முடிக்கணும். அப்பத்தான் நாளைக்கு உங்ககூட நேரம் செலவழிக்க முடியும் தாத்தா!” என்ற பேரப்பிள்ளைகளின் பாசமான வார்த்தை இன்பத்தைக் கொடுத்தது.

“முட்டிவலியில எப்படி அவ்வளவு தூரம் நடக்கிறது?” மனைவி கை நிறைய விழுங்கும் மாத்திரைகளைக் காட்டினாள். நடக்க முடிந்தவரை நடக்கவேண்டும் என்று கிளம்பினேன்.

மனத்தில் நிறைந்திருக்கும் பழைய நினைவுகளுடன் ஓஃபியர் சாலைக்கும் வந்துவிட்டேன். சுற்றுச்சுவரைத் தாண்டி பக்தர்கள் நெருக்கமாக அதிகம் சத்தம் போடாமல் வரிசையில் நின்றுகொண்டிருந்தனர். இயேசுதேவன் மரணித்த நேரத்திற்குப் பிறகு அமைதியைக் கடைப்பிடிப்பது அவர்களின் நம்பிக்கை.

சிறிதுநேரத்தில் கையில் குழந்தைகளுடன் நிற்கும் பெண்களையும், தள்ளுவண்டியில் இருப்பவர்களையும், நிற்பதற்குச் சிரமப்படும் மூத்தோர்களையும் முதலில் ஆலயத்திற்குள் சென்று அமரச் சொன்னார்கள். வரிசை விறுவிறுவென்று நகர்ந்து கொண்டிருந்தது. உள்ளே செல்வதற்குள் ’ஹாட் கிராஸ் பன்’ இருக்கும் மேசையைத் தேடினேன்.

“அந்த பன் இப்ப கடைத்தொகுதிகளில் ரொட்டி விற்கும் கடைகளிலும்கூட கிடைக்குது. அங்கே கிடைப்பதுதான் வேணும்னு வரிசையைவிட்டுட்டுப் போய்டாதீங்க!” மனைவியின் எச்சரிக்கை நினைவிற்கு வந்தது.

“இருடா கண்ணு, அம்மா வாங்கிட்டு வரேன்னு” கடைசி தடவையாக அம்மா என்னுடன் வந்திருந்தபோதும்கூட அவரது உடல் வருத்தும் நோயை மறந்து குடுகுடுவென்று ஓடிப்போய் வாங்கிக் கொடுத்தார். அதை நினைத்ததும் எதேச்சையாக வழிந்த கண்ணீரைத் துடைத்தேன்.

அப்போதுதான் எனக்குமுன் நிற்கும் பெண்ணிடம் “பன் வாங்கிட்டு மீண்டும் இதே வரிசையில் நிற்க முடியுமா?” என்று அனுமதி கேட்டேன். சிரித்த முகத்துடன், “முடியும் அங்கிள்,” என்றாள்.

தேவலாயங்களில் புனித வெள்ளியை ஒட்டி சிறப்பாகச் செய்யப்படும் ‘ஹாட் கிராஸ் பன்’னைச் சாப்பிடாமல் எப்படி? எனக்கு வாங்கியதைப்போல அந்தப் பெண்ணுக்கும் இரண்டு வாங்கிக்கொண்டு வந்தபின் மீண்டும் வரிசையில் இணைந்துகொண்டேன். வரிசையும் நகர்ந்ததால் உள்ளே சென்றதும் அவளிடம் கொடுக்கலாம் என்று இருந்துவிட்டேன்.

பூமாலைகளாலும் மலர்க்கொத்துகளாலும் அலங்கரிக்கப்பட்ட தேவதூதனும் மேரி அன்னையும் புன்னகை மாறாமல் காட்சியளித்தனர். வெளியே நிற்கும்போது இல்லாத அமைதியும் சாந்தியும் உள்ளே வந்து அமர்ந்தவர்களிடையே ஒளியாக வீசியது.

“இந்நேரத்தில்தான் இயேசுவைச் சிலுவையில் கொடியவர்கள் அறைந்து கொன்றார்கள்,” என்று பாட்டி மௌன விரதத்தைக் கடைப்பிடித்தது நினைவிற்கு வந்தது. கைகளை இறுக்கமாக இணைத்தபடி அமைதியாக அமர்ந்திருந்தேன்.

ஆனால், அதே பாட்டி, “இயேசு உயிர்த்தெழுந்த மூன்றாம் நாள்,” என்று நிலைகொள்ளாத மகிழ்ச்சியுடன் ’ஈஸ்டர்’ தினத்தை பெரிய விருந்து கொடுத்துக் கொண்டாடுவார். அம்மாவுக்கும் எனக்கும் அவர் கையால் இறைச்சி பிரியாணி ஊட்டிய பாட்டியின் பாசம் நெகிழச் செய்தது.

நான்காவது வரிசையில் இருக்கும் இருக்கையில் அமர்ந்திருந்தேன். அந்தப் பெண்ணும் எனக்குப் பக்கத்தில் அமர்ந்திருப்பதைக் கவனித்தேன். கையில் இருந்த ’ஹாட் கிராஸ் பன்’ இருக்கும் பையை அவளிடம் நீட்டினேன்.

“வேணாம் அங்கிள்,” என்றாள்.

“பரவாயில்லம்மா எடுத்துக்க,” நன்றியைப் பார்வையால் தெரிவித்தவள் அவளுக்கு வலப்பக்கத்தில் அமர்ந்திருப்பவரிடம் ஒரு பன்னை எடுத்து பரிவோடு நீட்டினாள்.

“வேணாம் போ..” கோபத்துடன் தட்டிவிட்டது தரையில் விழுந்தது. வெளியில் நிற்கும்போதுகூட அந்தப் பெண் கொடுத்த தண்ணீர் போத்தலை வீசினார். பாவம், அவள்தான் ஓடிப்போய் எடுத்து வந்தாள். துணைக்கு யாரும் இல்லாமல் தனியாகத்தான் வந்திருக்கிறாள். ம்ம்…வயதானால் மட்டும் போதுமா? முகத்தைத் திருப்பினேன்.

தரையில் விழுந்ததை அமர்ந்தபடி குனிந்து எடுக்க அந்தப் பெண்ணின் தலை குனிந்ததும் கோபம் தலைக்கேறியது.

“என்ன இது, பிரியத்துடன்தானே தருகிறாள். அதைப்போய்…” அதிர்ச்சியுடன் அவரையே பார்த்தேன். அதுவரை கடுமையில் இறுக்கமாக இருந்தவரின் முகம் என்னைப் பார்த்த அடுத்த கணமே சிரிப்பால் சிவந்தது. அந்த அண்ணனா? அதிர்ச்சியுற்றேன். தெளிவாகப் பார்த்து உறுதிசெய்ய மூக்குக் கண்ணாடியைப் போட்டுக்கொண்டேன். ஆமாம்! கூர்ந்து பார்த்தபோது நிமிர்ந்த பெண்ணின் மடியில் என் கையை இழுத்து வைத்துப் பிடித்துக்கொண்டார். மடியில் இருக்கும் கையை அவரது கைக்குள் இருந்து இழுக்கும்போது விடாமல் மேலும் இறுக்கினார். எனக்குத்தான் கூச்சமாக இருந்தது.

“பரவாயில்லை அங்கிள், அப்பாவை உங்களுக்குத் தெரியுமா?”

“செபாஸ்டியன்தானே? தெரியும்மா. நெருங்கிய பழக்கம் இல்ல. ஒருமுறையோ இருமுறையோ பேசியிருக்கிறேன். அவ்வளவுதான். ஆனா, அந்தக் காலத்துல ஃபேரர் பார்க் திடலில் இவர் காற்பந்து விளையாடும்போது ஆசையோடு நின்று பார்த்திருக்கிறேன். கோல் போடும்போது கைதட்டி ஆரவாரம் செய்திருக்கிறேன்.”

“அப்படியா..?” ஆமாம் என்பதைப்போல சிரித்த முகத்துடன் தலையை மட்டும் ஆட்டினார் ‘கோல் கீப்பர்’ செபாஸ்டியன்.

“சின்ன நாட்டுல இருக்கும் நாம் ஒருவரையொருவர் பார்ப்பது எவ்வளவு அரிதாக இருக்கிறது. எல்லா புனித வெள்ளிக்கும் இதே ஆலயத்திற்கு எப்படியும் வந்துடுவேன். எத்தனையோ வருசங்களுக்குப் பிறகு இப்பத்தான் உங்களைப் பார்க்கிறேன். ரொம்பவும் மகிழ்ச்சியா இருக்கு அண்ணா!” செபாஸ்டியன் ஆமோதித்தார்.

“சிராங்கூன் வட்டாரத்தில்தான் இருக்கிறேன்,” என்று கூறும்போது மகிழ்ச்சியில் திளைத்திருந்தவர் பிடித்திருக்கும் என் கைகளுக்கு முத்தமிட்டார். எதையோ ஆராதிக்கிறார் என்பதை உணர்ந்தேன்.

“எங்க அண்ணா இருக்கீங்க?”

இறுக்கமாக இணைத்திருக்கும் கைகளையே நெகிழ்வோடு பார்த்துக்கொண்டிருந்தாள்.

“ரொம்ப நாளைக்கு அப்புறம் இன்னைக்குத்தான் அப்பா உங்க கையை விடாமல் பிடித்திருக்கிறார்,” என்றவள் சிந்திய கண்ணீர்த் துளி என் கைமீது விழுந்ததும் சுட்டது. எனக்கு ஒன்றும் புரியவில்லை.

“என்…னம்மா?” தயக்கத்துடன் கேட்டேன்.

அரவணைக்கும் கைகளை விரித்தபடி புன்னகைக்கும் இயேசுவைப் பார்த்து பெருமூச்சுவிட்டாள். தேவனை ஆராதிக்கும் வழிபாடுகள் தொடங்க சில நொடிகளே இருந்தன.

“என்ன ஆச்சும்மா?”

“அப்பாவுக்கு எல்லாம் மறந்து போச்சு அங்கிள்!”

முற்றும்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!