நோன்புப் பெருநாள் கொண்டாடும் பேரி சமூகத்தைச் சேர்ந்த குடும்பம்

இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வரும் பாரம்பரிய செறிவுமிக்க முஸ்லிம் சமூகங்களில் ‘பேரி’ சமூகமும் ஒன்று.

தெற்கு கர்நாடகாவிலுள்ள துளு நாட்டைச் சேர்ந்த பேரி சமூகத்தினர், கேரளாவில் மலபார், மாப்பிளமார், தமிழகத்தின் லப்பை போன்ற இஸ்லாமிய சமூகங்களைப்போல தனித்தன்மை வாய்ந்த மரபுடன் திகழ்கின்றனர்.

இந்தச் சமூகத்தினர் தங்களுக்குரிய மொழியான பேரியைப் பயன்படுத்துகின்றனர். மலையாள மொழியுடன் அதிக ஒற்றுமையைக் கொண்டுள்ள இந்த மொழியில் துளு, கன்னடம், அரபு, பாரசீகம் ஆகிய மொழிகளின் சொற்களும் பயன்படுத்தப்படுகின்றன.

அரபு மற்றும் கன்னட எழுத்துருக்கள் இம்மொழியை எழுதப் பயன்படுத்தப்படுகின்றன. கரையோர துறைமுகத்தை இந்தச் சமூகத்தினர் சார்ந்திருப்பதால் பல்வேறு சமூகத்தினருடன் பேசும் தேவை இவர்களுக்கு ஏற்பட்டிருந்தது.

இந்தியாவின் மங்களூரில் பிறந்த பேரி சமூகத்தைச் சேர்ந்த அமார் இப்ராஹிம் முஹம்மது,19, தற்போது சிங்கப்பூரில் இணையப் பாதுகாப்புத் துறையில் பயில்கிறார்.

2016ல் தம் குடும்பத்தினருடன் இங்கு வந்த அமார், நான்கு பிள்ளைகளில் மூத்தவர். இவர் தந்தை தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்தவர், தாயார் இல்லத்தரசி. இவர்கள் தற்போது யூனோஸ் வட்டாரத்தில் வசிக்கின்றனர்.

ஆங்கிலம், உருது, இந்தி ஆகிய மொழிகளில் நன்கு எழுதப் படிக்கத் தெரிந்த அமார், வீட்டில் பேரி மொழியில் பேசுவார். மலையாளமும் கன்னடமும் இவருக்குப் புரியும்.

சிங்கப்பூருக்கு வந்த பிறகு பள்ளியிலும் பள்ளிவாசலிலும் இவர் தமிழுக்கு அறிமுகமானார். பள்ளியில் இந்தியை இரண்டாவது மொழியாகப் பயின்றாலும் தமிழர்களுடன் பழகுவதன் மூலம் தமிழை மெல்ல புரிந்துகொண்டார்.

“பேரி கலாசாரத்தைக் காட்டிலும் இப்போது தமிழ் கலாசாரம்தான் எனக்கு நன்கு தெரியும்,” என்று அமார் கூறினார்.

அமார் அடிக்கடி செல்லும் பென்கூலன் பள்ளிவாசல், தம் குடும்பத்திற்கும் சிங்கப்பூருக்கும் பாலமாக இருப்பதாக உணர்கிறார்.

அப்துல் கஃபூர் பள்ளிவாசலில் ரமலான் மாதத்தின்போது இரவுநேர தொழுகையை வழிநடத்தியோரில் ஒருவராக இருந்த அமார், திருக்குர்ஆனை நன்கு தெரிந்துகொள்வதற்கான பயிற்சியை மேற்கொண்டார். அத்துடன் இவர் பள்ளிவாசல்களில் தொண்டூழியமும் புரிகிறார்.

2016 முதல் 2020 வரை திருக்குர்ஆனை வெற்றிகரமாக மனனம் செய்த அமார், இந்த வெற்றிக்கு பள்ளிவாசல் கைகொடுத்திருப்பதாகக் கூறினார். இது குறித்து இந்தியாவில் தம் சொந்த ஊரைச் சேர்ந்தவர்களும் மகிழ்ந்ததாகக் கூறினார்.

சிங்கப்பூரின் மற்ற அம்சங்களைப்போல, சமயக் கல்வியும் சீரான கட்டமைப்பில் இயங்குவது குறித்து மகிழ்வதாக அமார் கூறினார்.

கேரள மீன் குழம்புடன் சப்பாத்தி, நீர் தோசை போன்ற உணவு வகைகளை அமார் வீட்டில் சாப்பிடுவார். சிங்கப்பூரில் இதுவரை பேரி சமூகத்தைச் சேர்ந்த ஒரேயொருவரை இம்மாதம் தாம் சந்தித்ததாக அமார் சொன்னார்.

“பேரி சமூகத்தினரை சிங்கப்பூரில் காண்பது அரிது என்பதால், என் சமூகத்தைப் பற்றி இங்கு உள்ளவர்களுக்குத் தெரியாது. எனவே என் பின்புலத்தைப் பற்றி நான் பகிரும்போது அவர்கள் வியந்து போகின்றனர்,” என்று அமார் கூறினார்.

கர்நாடகா வடஇந்தியாவில் இல்லை, தென்னிந்தியாவில் உள்ளது என்று சிலரிடம் அமார் தெளிவுபடுத்த வேண்டியிருந்தது.

வருங்காலத்தில் தமிழிலும் கன்னடத்திலும் எழுதப் படிக்க இவர் விரும்புகிறார்.

“பல சமூகங்களுடன் நான் இணைகிறேன். எல்லாவித மக்களுடனும் நான் பிணைப்பை உணர்கிறேன். மலாய்க்காரர்களும் சீனர்களும் எனக்கு நெருக்கமானவர்கள்,” என்று அமார் சொன்னார்.

நோன்புப் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அமார், வருங்காலத்தில் இணையப் பாதுகாப்புத் துறை மற்றும் இஸ்லாத்தையும் மேலும் ஆழமாகக் கற்க விரும்புகிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!