ஆடவர் மனநலம் அக்கறைக்குரியது

ஆடவர்களின் மனநலம், ஆயுட்காலத்தை பாதிக்கக்கூடிய அளவிற்கு உலக அளவில் அக்கறைக்குரிய விவகாரமாக உருவெடுத்துள்ளது.

ஆண்களின் மனநலத்தையும் உடல்நலத்தையும் ஆதரிக்கும் வேலையிடச் சூழலை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை ‘இன்டர்நேஷனல் எஸ்ஓஎஸ்’ என்ற சுகாதார, பாதுகாப்புச் சேவை நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

சமுதாயத்தின் அனைத்து வருமானப் பிரிவுகளையும் சேர்ந்த ஆடவர்கள் பொதுவாகப் பெண்களைவிட ஆரோக்கியமற்ற உணவுமுறையைக் கடைப்பிடிப்பதாக உலகச் சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன.

பெண்களைவிட ஆண்கள் அதிக அளவில் மது அருந்துவதாகவும் விபத்துகளாலும் மோதல்களாலும் அதிகம் காயமடைவதாகவும் அந்தப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

2020ல், உலக மக்களில் தொகையில் ஆண்களில் 36.7 விழுக்காட்டினர் புகையிலையைப் பயன்படுத்துவதாகக் கூறப்பட்டது.

ஒப்புநோக்க, பெண்களில் அந்த விகிதம் 7.8 விழுக்காடு மட்டுமே. நோய்த்தடுப்புச் சேவைகளைப் பெண்களைக் காட்டிலும் ஆண்கள் குறைவாக நாடுகின்றனர் என்றும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

மனநல உதவியை நாடுவதால் அவப்பெயர் உண்டாகும் என அஞ்சி ஆண்கள் பலர் அவ்வாறு செய்வதைத் தவிர்க்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

வேலையிடத்தில் மனநலம் கவனிக்கப்படவேண்டிய விவகாரம் என்று ‘இன்டர்நேஷனல் எஸ்ஓஎஸ்’ அமைப்பின் வட்டார மருத்துவ இயக்குநர் டாக்டர் ஆண்டனி ரென்ஷா தெரிவித்தார்.

முதலாளிகள் செய்யவேண்டியவை

ஆண்கள் தங்கள் கருத்துகளையும் உணர்வுகளையும் வெளிப்படுத்துவதற்கான தளத்தை முதலாளிகள் உருவாக்கலாம். அடிக்கடி மனநலப் பரிசோதனை செய்யவும் முதலாளிகள் ஆண் ஊழியர்களை அன்புடன் ஊக்குவிக்கலாம்.

மேலாளர்களுக்கு, தங்களுக்குக்கீழ் பணிபுரிவோரிடையே மனநல பாதிப்புக்கான அறிகுறிகளை அடையாளம் காணும் பயிற்சிகளை வழங்குவதும் நல்லது.

மனநிலை பாதிப்புக்கான அறிகுறிகள்

அளவுக்கு அதிகமான எரிச்சல், நடத்தையில் மாற்றம், தொடர்ந்து களைப்பாக உணர்தல், கலகலப்பின்மை ஆகியவை மனநிலை பாதிப்புக்கான சில அறிகுறிகள் என்று மனநல ஆலோசகர் கோபால் மகே தெரிவித்தார்.

“வேலைத்தரம் குறைகிறதா என்பதையும் கவனிக்க வேண்டும். எப்போதும் மனஉளைச்சலோடு இருப்பதும் அக்கறைக்குரியதே,” என்றும் அவர் கூறினார்.

மனநிலை பாதிப்படைந்த ஜான் என்பவர் தன்னிடம் ஆலோசனை நாடியபோது, தொடர்ச்சியாக களைப்பு, வேலை குறித்த மனச் சலனம் ஏற்படுவதாகக் கூறியதாகக் குறிப்பிட்டார் திரு கோபால். பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவும் புரிந்துணர்வும் தேவை என்றார் அவர்.

அறிகுறிகளை ஆடவர்கள் உணராத காரணம்

ஆண்கள் வலிமையாக இருக்கவேண்டும் என்பது சமுதாயத்தின் எதிர்பார்ப்பு. தங்களைப் பிறர் பலவீனமானவர்களாகக் கருதக்கூடாது என்பதற்காக உரிய நேரத்தில் அவர்கள் உதவி நாடத் தவறுவதாக திரு கோபால் கூறினார்.

குறிப்பாக, கடின வேலைகளைச் செய்வோரும் தலைமைப் பதவி வகிக்கும் பலரும் உதவி நாடத் தவறுகின்றனர்.

“எனக்குத் தெரிந்த அப்படிப்பட்ட ஒருவர், மனநல உரை ஒன்றைக் கேட்ட பின்னர் மனநலப் பரிசோதனைக்குச் செல்ல ஒப்புக்கொண்டார்,” என்று அவர் கூறினார்.

வேலையிடத்தில் துன்புறுத்தல்

ஆண் ஊழியர்கள் சிலர் முதலாளிகளாலோ சக ஊழியர்களாலோ மதிக்கப்படாமல் ஏளனச் சொற்களுக்கு ஆளாகின்றனர் அல்லது ஒதுக்கப்படுகின்றனர்.

இவ்வாறு வதைக்கப்படுவதால் ஏற்படும் கோபமும் கவலையும் மனநலத்தைக் கெடுக்கின்றன.

ஆயினும், தன்னம்பிக்கையுடன் நிதானத்தைக் கடைப்பிடித்து இத்தகைய துன்புறுத்தல் சம்பவங்களைக் குறித்து வைக்கும்படி திரு கோபால் அறிவுறுத்துகிறார்.

“சம்பவங்களை நீங்கள் உங்கள் மேலாளரிடம் பேசலாம். அல்லது உங்கள் நிறுவனத்தின் மனிதவளப் பிரிவினரின் கவனத்திற்குக் கொண்டுசெல்லலாம்,” என்று அவர் கூறினார்.

முன்னேற்றம் இல்லாச் சூழல்

சில ஊழியர்கள், எவ்வளவு கடினமாக உழைத்தாலும் அவர்களுக்குரிய பதவி உயர்வு கிடைக்காத நிலையில் கோபத்திற்கும் விரக்திக்கும் ஆளாகலாம். இதனாலும் மனநலம் பாதிக்கப்படலாம்.

“பெரும் இலக்குகளை உடனே அடைய முடியாத பட்சத்தில், அடையக்கூடிய சிறிய இலக்குகளை உறுதிசெய்து அவற்றை வெற்றிகரமாக அடையுங்கள்.

நீங்கள் வேலை செய்யும் துறையில் சிறந்து விளங்குபவரின் ஆலோசனையையும் வழிகாட்டுதலையும் பெறுங்கள். இது உங்கள் தன்னம்பிக்கையை மேம்படுத்தும்,” என்று திரு கோபால் கூறினார்.

இத்தகைய முறையின் மூலம் பாதிக்கப்பட்ட ஒருவர், தமக்குள் உண்மை நிலையை ஏற்கும் தன்மையையும் நன்றி உணர்வையும் வளர்த்துக்கொள்ளலாம் என்று அவர் கூறினார்.

தனிப்பட்ட, குடும்ப விவகாரங்கள்

ஆடவர்களில் சிலருக்கு மணமுறிவு, காதல் தோல்வி, குடும்பத்தில் பிரச்சினை போன்றவை ஏற்படும்போது அதனால் கலக்கம் அடைகின்றனர்.

இத்தகைய பிரச்சினைகளால் சிலரின் மனநல பாதிப்பு மேலும் கடுமையாகும் அபாயம் உள்ளது.

இத்தகையோர் வேலை இடத்திற்கு வெளியே சுயமாக மனநல ஆலோசகரை நாடுவது நல்லது என்று திரு கோபால் கூறுகிறார்.

“மனத்தைத் திடப்படுத்தும் உத்திகளை ஆலோசகரிடம் கற்று, தனிப்பட்ட விவகாரங்களுக்கும் வேலை விவகாரங்களுக்கும் இடையிலான வரம்புகளை அமைக்க அந்த உத்திகளைப் பயன்படுத்துங்கள்,” என்று அவர் கூறினார்.

“உங்கள் வேலைப்பளுவைக் கவனித்து அது மனநலத்திற்கு ஆதரவாக இருக்கிறதா அல்லது எதிராக உள்ளதா என்பதை நீங்களே மதிப்பீடு செய்யவும்.

ஆதரவு கேட்பதில் எந்த அவமானமும் இல்லை,” என்று எடுத்துரைத்தார் திரு கோபால்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!