வேலை வரும்வரை வேண்டாம் கவலை

முன்னைய வேலையில் இருந்தபோது நெடுநேரமாக உழைத்த பி.ரவி இடைவெளியின்போது உடற்பயிற்சி செய்வது, திரைப்படம் பார்ப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு அமைதி நாடினார். படம்: பி.ரவி

வங்கியில் ஏழு ஆண்டுகளாகக் கடன் ஆய்வாளராகப் பணிபுரிந்த வத்ஸலா முத்து, 31, சொத்து முகவராக மாற எண்ணினார். வேலை செய்துகொண்டே புதிய துறைக்குத் தகுதிபெறுவதற்கான படிப்புகளை மேற்கொள்ள எண்ணினார். இரு இளம் பிள்ளைகளுக்குத் தாயாராகவும் இவர் இருக்கிறார்.

சேமிப்பு முக்கியம்

சில காலம் குடும்பத்தைப் பார்த்துக்கொள்வதுடன் திறன் மேம்பாட்டிலும் ஈடுபடவேண்டும் என எண்ணி இருந்த திருவாட்டி வத்ஸலா, இதற்காக வேலையை விட்டு வீட்டில் இருக்க முடிவு செய்தார்.

சேமிப்பை நம்பி பின்னர் வேலையைவிட்டு விலகினார். ஊடகத்துறையில் பணியாற்றும் கணவரின் வருமானம் மட்டும் உள்ள நிலையில் நிதிச்சுமை, மன உளைச்சல் ஏற்படலாம் என்ற ஆயத்த மனநிலையுடன் இவ்வாண்டு மே மாதம் முதல் வீட்டில் இருக்கத் தொடங்கினார்.

தேவையற்ற பதற்றத்தையும் கவலையையும் தவிர்க்க ஏற்கெனவே நன்கு கடைப்பிடித்து வந்த சேமிப்புப் பழக்கம் இவருக்குத் துணையாக இருந்தது.

இளையர்களிடையே இவ்வாறு வேலைகளுக்கிடையே ஓர் இடைவெளி எடுக்கும் போக்கு அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்ட வாழ்க்கைத்தொழில் நிபுணர்கள், அவர்கள் இந்த இடைவெளியின்போது இளைப்பாறி மகிழ்வதாகக் குறிப்பிடுகின்றனர். ஒருசிலர் #ஃபன்எம்பிளாய்மண்ட் (#funemployment) என்ற வாசகத்துடன் அதைப் பற்றி சமூக ஊடகங்களில் பதிவும் செய்கின்றனர்.

இருந்தபோதும், எல்லோரும் வேலையின்மையை விரும்பித் தேர்ந்தெடுப்பதில்லை.

கொவிட்-19 கிருமிப்பரவல், தொழில்நுட்பத்துறையில் ஆட்குறைப்பு உள்ளிட்ட காரணங்களால் இளையர்கள் பலர் மற்றொரு வேலை கையில் இல்லாமல் வெளியேறினர், வெளியேற்றப்பட்டனர்.

நம்பிக்கை முக்கியம்

ஆட்குறைப்பு நடவடிக்கையால் வேலையைவிட்டு வெளியேறிய தகவல் தொழில்நுட்பர் செல்வம் ராமநாதன், 34, கடந்த ஒரு மாதம் ஓய்வெடுத்து வருகிறார். வேலையைத் திடீரென இழந்ததால் முதலில் அதிர்ச்சி அடைந்த ராமநாதன், இதுவும் கடந்துபோகும் என்ற மனநிலையுடன் செயல்பட்டதாகக் கூறினார்.

“இந்நிலை நிரந்தரமல்ல. வேலை ஒன்றில் சேர்வேன் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது,” என்று கூறினார்.

வத்ஸலாவைப் போல ராமநாதன், கணினி, திட்ட நிர்வாகம், திறன் மேம்பாடு ஆகியவற்றுக்கான வகுப்புகளுக்குச் சென்று சான்றிதழ்களைப் பெற்று வருகிறார். வேலை தேடுவதற்கான தம் ‘லிங்ட்இன்’ தளத்தை அண்மைய தகவல்களுடன் வைத்திருப்பதுடன் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த நண்பர்களுடன் தொடர்புகொண்டு தொடர்பு வட்டத்தை அவர் பெருக்கவும் முற்படுகிறார்.

பல்வேறு வேலைகளுக்கு விண்ணப்பம் செய்து வரும் ராமநாதன், தற்போதைய வேலைச் சந்தை நிலவரப்படி தன் எதிர்பார்ப்புகளைத் தகவமைத்துக்கொள்கிறார். வாழ்க்கையின் வசந்தத்தை அனுபவிக்க எண்ணி, இலங்கையில் சில வாரம் கால்நடையாகப் பயணம் செய்தார். பின், இந்தியாவிலுள்ள லடாக் பகுதியிலுள்ள ‘காங் யாட்சே 2’ என்ற 6,250 மீட்டர் உயர மலையை ஏறியும் சாதித்தார்.

“இதற்கு முன் பல மலைகளை ஏறியிருக்கிறேன். மலையேறுவதன் மூலம் என் உடல்நிலை மற்றும் மனநிலையின் வரம்புகள் விரிவடைகின்றன. என் சிந்தையொத்த சில நபர்களைப் பயணத்தின்போது சந்தித்தேன். அவர்கள் என்னுடன் உரையாடியதன் மூலம் ஏற்பட்ட நட்புணர்வில் மகிழ்ச்சி அடைந்தேன்,” என்றார்.

நலன் காப்பது முக்கியம்

திரு ராமநாதனைப் போல ஆட்குறைப்பு நடவடிக்கையால் ஜூலை 2021ல் திடீரென வேலையைவிட்டு வெளியேறினார் முன்பு நிதித்துறையில் நிர்வாக ஆலோசகராகப் பணியாற்றிய பி. ரவி, 33.

இரண்டரை ஆண்டுகளாக அந்தப் பணியில் அளவுக்கு அதிகமாகப் பல மணி நேரம் வேலை செய்து அவதியுற்றார் இவர். அந்த வேலையிலிருந்து விலகிக்கொள்ள பலமுறை அவர் நினைத்தபோதும் வேறு வேலைவாய்ப்பு இல்லாததால் பல்லைக் கடித்துக்கொண்டு தொடர்ந்து வேலை செய்தார்.

போதுமான உறக்கம், உடற்பயிற்சி இன்றி கடினமாக உழைத்த அந்த இளையரை அழைத்து, இன்னும் இரண்டு நாள்களுக்குள் வெளியேறும்படி அவரது நிறுவனம் உத்தரவிட்டபோது அவர் மனம் குமுறியது.

“என் அலுவலக மேசையிலிருந்து என்னால் பொருள்களை எடுத்துச் செல்ல முடியவில்லை. நான் வெளியே இருந்தபடி என் பொருள்களை அலுவலகத்திலிருந்து பெற்றுக்கொண்டேன்,” என்று அவர் கூறினார்.

குடும்பத்தினர் சென்னையிலும் இவர் சிங்கப்பூரிலும் இருக்க, இக்காலகட்டத்தில் நாளைய பொழுது பற்றிய கவலை ரவியை வதைத்தது. வாடகை உள்ளிட்ட பல்வேறு கட்டணங்களுக்காகச் சேமிப்புகளைப் பயன்படுத்த வேண்டி இருந்தது.

நண்பர்களுடன் இயன்றவரை தொடர்பில் இருந்துகொண்டு ரவி வேலை தேடினார். நல்ல வேலையில் இருப்பவர்கள், பதவி உயர்வு பெற்றவர்கள் போன்றோர் மகிழ்ச்சியில் பகிர்ந்த சமூக ஊடகப் பதிவுகளைப் படிக்கும் மன நிலையில் இல்லை என்பதை உணர்ந்து தனது சொந்த சூழ்நிலையில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார்.

அதே நேரத்தில் வேலை தேடுதலில் மட்டும் நேரத்தைச் செலவழிக்காமல் உடற்பயிற்சிக்கும் கேளிக்கைக்கும் நேரம் ஒதுக்கிக்கொண்டார்.

இணையம் வழி நிதி முதலீடு செய்யக் கற்றுக்கொண்டு அதன் மூலம் திரு ரவி சிறிதளவு சம்பாதித்து வந்தார். இப்போது அவர், சமூக ஊடக நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார்.

இளையர் எதிர்பார்ப்பு

திரு ரவியைப் போன்ற இளையர்கள் பலர் தங்கள் திறன்களைக் கொண்டு பணம் சம்பாதிப்பதற்கு இணையம் வகை செய்வதால் வேலையின்மை குறித்த பயம் குறைவதாக இளையர் ஆள்சேர்ப்பு நிறுவனமான ‘மில்லெனியல் மைண்ட்ஸ்’ அமைப்பின் நிறுவனர் விவேக் ஐயானி தமிழ் முரசிடம் தெரிவித்தார்.

“முன்னைய தலைமுறையினரைக் காட்டிலும் அதிக வாழ்க்கைத் தரத்தை அனுபவித்துள்ள இக்கால இளையர்கள், தங்களது வேலை அர்த்தமுள்ளதாக இருக்கவேண்டும் என எதிர்பார்க்கின்றனர்,” என்று திரு விவேக் கூறினார்.

“விருப்பமான வேலையாக இருக்கவேண்டும், மனநலம் பாதிக்காதபடி அது இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இன்றைய இளையர்களிடையே உள்ளது,” என்றார் அவர்.

பலன் தரும் இடைவெளி

பல்வேறு துறைகளில் அதிரடி தொழில்நுட்ப மாற்றங்கள் ஏற்படுவதால் இடையிடையே வேலையின்றி இடைவெளி எடுத்துக்கொள்ளும் வழக்கம் இயல்பான ஒன்றுதான் என்றார் ரவி.

எனவே, அந்தச் சூழலில் இருப்பவர்கள் தங்கள் திறன்கள் மீது நம்பிக்கை இழந்து துவண்டு போகக்கூடாது என்று ரவி கருதுகிறார்.

“அலுவலகத்தில் ஒரே தொழிலில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மாறிவிட்டது. இப்போது பலர் இணையத்தில் காணொளிகளைத் தயாரித்து அதன் மூலம் சம்பாதிக்கின்றனர். உலகில் பிழைக்கவும் வளரவும் திறந்த மனம் வேண்டும் என்பதை உணர்ந்துகொண்டேன்,” என்றார் ரவி.

இதை ஆமோதிக்கும் வத்ஸலா, வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான முடிவுகளை இந்த இடைவெளியின்போது துரிதமாகச் செயல்படுத்த முடிந்ததாகக் கூறினார். விடுமுறை உணர்வு ஏற்படவில்லை என்றாலும் பிள்ளைகளையும் குடும்ப விவகாரங்களையும் படிப்பையும் முழுமையாகக் கவனிக்க முடிந்ததாக திருவாட்டி வத்ஸலா கூறினார்.

“வேலை செய்துகொண்டே துறை மாறவேண்டும் என நினைத்திருந்தால் இன்னும் மெதுவாகத்தான் மாறியிருக்க முடியும். எனவே, நான் எடுத்த முடிவு எனக்குச் சாதகமாக அமைந்துள்ளது,” என்று அவர் கூறினார்.

இடைவெளியால் தம் பிள்ளைகளுடன் அதிக நேரம் செலவிட்டு இன்புற முடிந்ததாகக் கூறிய வத்ஸலா, மனநலனைப் பாதுகாக்க ஒரு வேலையைவிட்டு சில காலம் ஓய்வுபெற்று, பின் மற்றொரு வேலையில் சேர்வதில் எந்தத் தவறும் இல்லை என்றார்.

“இத்தகைய துணிச்சலான முடிவுகளுக்கு நம் இளமைக் காலமும் ஏதுவாக இருக்கிறது,” என்றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!