மிகப்பெரிய ஆசை என்று எதுவும் இல்லை: ரியோ ராஜ்

திரை உலகில் தமது வளர்ச்சி மெதுவாக உள்ளது என்று ஒரு சிலர் கூறுவது நன்கு தெரியும் என்றும் தான் அவ்வாறு நினைக்கவில்லை என்றும் நடிகர் ரியோ ராஜ் தெரிவித்துள்ளார்.

இவரது நடிப்பில் உருவாகும் அடுத்த படம் ‘ஜோ’.

இதற்காக தனது உடல் எடையை வெகுவாகக் குறைத்ததுடன் கடும் உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு எனப் பல வகைகளில் மெனக்கெட்டுள்ளாராம்.

“இந்தப் படம் எனது திரைப் பயணத்தில் நிச்சயம் நல்ல திருப்புமுனையாக அமையும். ஜோ என்ற கதாபாத்திரமும் நானும் ஒரே ஒரு விஷயத்தில் தான் மாறுபட்டுள்ளோம். ஜோ எதையும் நிதானமாக செய்யக் கூடியவன். நான் சுறுசுறுப்பாக வேகமாக செயல்படுபவன்.

“அதேசமயம் ‘தான் எனும் அகந்தையுடன்’ செயல்படக் கூடாது என்பதையும் இக்கட்டான தருணங்களில் முதிர்ச்சியுடன் செயல்பட வேண்டும் என்பதையும் ஜோ கதாபாத்திரம் எனக்கு கற்றுத் தந்துள்ளது.

“உயர்நிலைப் பள்ளி மாணவன், கல்லூரி மாணவன், காதலன் எனப் பல்வேறு முகங்களை இப்படத்தில் வெளிப்படுத்தி உள்ளேன். ஒவ்வொரு கட்டத்திலும் எனது பாத்திரத்தின் தன்மைக்கு ஏற்ப எனது உடற்கட்டையும் மாற்ற வேண்டி இருந்தது.

“இன்றைய தொழில்நுட்பத்தின் மூலம் சிகை அலங்காரம், ஒப்பனையின் மூலம் இதை சாதித்துவிட முடியும். ஆனால் எனது உருமாற்றம் முடிந்த வரை இயல்பாக, உண்மையானதாக இருக்க வேண்டும் என விரும்பினோம். அதற்காக எதையும் அதிதீவிரமாக முயற்சி செய்யவில்லை.

“இப்படத்தின் தொடக்கத்தில் எனது உடல் எடை 80 கிலோவாக இருந்தது. பின்னர் 72 கிலோவாகக் குறைத்தேன். படம் முடிவடையும்போது உடல் எடை 68 கிலோவாகக் குறைந்தது,” என்கிறார் ரியோராஜ்.

‘ஜோ’ படமும் மலையாளத்தில் வெளியீடு கண்டுள்ள ‘ஹிருதயம்’ படமும் ஒரே சாயலில் இருப்பதாக இப்போதே விமர்சனம் எழுந்துள்ளது. அதை தாம் அறிந்து இருப்பதாகவும் சில படங்கள் ஒரே சாயலில் இருப்பதை தவிர்க்க இயலாது என்றும் ரியோ சொல்கிறார்.

“இரு படங்களும் வெளிப்படுத்தும் உணர்வுகளும் கதைக் களமும் நிச்சயம் மாறுபட்டவை. ‘ஹிருதயம்’ படம் திரை அரங்குகளில் வெளியானபோது ‘ஜோ’ படத்தின் இறுதிக்கட்ட காட்சிகளைப் படமாக்கிக் கொண்டு இருந்தோம்.

“எனவே இன்னொரு படத்தை பின்பற்றி நாங்கள் காட்சிகளை அமைக்கவில்லை. ‘ஹிருதயம்’ படம் கூட தமிழில் வெளியான ‘ஆட்டோகிராப்’ படம் போல் இருந்தது என்று சிலர் விமர்சித்தனர்.

“ஒரு சராசரியான, தவறுகளைச் செய்யகூடிய இளைஞனின் கதைதான் ஜோ. அவனிடம் வன்முறையும் குடிகொண்டு இருக்கும். ஆனால் சூழ்நிலையின் தேவையே அந்த வன்முறையை வெளிபடுத்தச் செய்யும். உண்மையில் அனைவரிடமும் இத்தகைய வன்முறை உணர்வுகள் உண்டு,” என்கிறார் ரியோராஜ்.

இந்தப் படத்திற்காக இவர் பாடல் ஆசிரியராகவும் மாறி உள்ளார். இதன் மூலம் தன் நீண்ட நாள் விருப்பம் நிறைவேறியதாகவும் சொல்கிறார். “படத்தின் இசையமைப்பாளர் பாடலுக்கான மெட்டை ஒரு முறை கேட்க செய்தார். அதைக் கேட்டதுமே அந்தப் பாடலை எழுத வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டது.

“அந்தப் பாடலின் தன்மையும் அது படத்தில் இடம் பெறும் அமைப்பும் என்னை எழுதத் தூண்டின. இது என் இதயத்துக்கு நெருக்கமான பாடல்,” என்று சொல்லும் ரியோ ராஜ் வெள்ளித்திரைக்கு வந்து கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டன.

கடந்த 2017 ‘சத்திரியன்’ படத்தில் அறிமுகமானார் ரியோ. அதன் பிறகு விரல் விட்டு எண்ணக்கூடிய படங்களில்தான் நடித்துள்ளார்.

“நான் நினைத்து இருந்தால் பத்துப் படங்களுக்கு மேல் நடித்து இருப்பேன். ஆனால் அதைச் செய்யவில்லை. நான்கு படங்களில் மட்டுமே நாயகனாக நடித்து இருந்தாலும், அதற்குப் பின் பல ஆண்டுகள் ஆகி விட்ட போதிலும் எனது திரைப்பயணம் மெதுவாக இருப்பதாகக் கருதவில்லை’.

“மாறுபட்ட, வில்லன் கதாபாத்திரங்களிலும் நடிக்க நான் தயார். ஆனால் அவை எனக்கு மட்டும் அல்லாமல், ரசிகர்களுக்கும் பிடித்தமானதாக இருக்க வேண்டும். தற்போது சில கதைகள் கேட்டு இருக்கிறேன். ‘ஜோ’ வெளியீடு கண்டதும் நான் இதுவரை கேட்டதில் சுவாரசியமான கதையாக தேர்ந்தெடுத்து நடிப்பேன்.

“எனக்கு மிகப்பெரிய விருப்பம், ஆசை என்று எதுவும் இல்லை. திரை உலகில் நிலைத்து இருக்க வேண்டும். சுவாரசியமான படங்கள் அமைய வேண்டும். அது மட்டுமே எனது விருப்பம்,” என்கிறார் ரியோ ராஜ்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!