கலவரங்களைத் தடுக்கும் பரிவும் பொறுப்பும்

சிங்கப்பூரின் வரலாற்றுப் பக்கங்களில் இடம்பிடித்துவிட்ட விரும்பத்தகாத சம்பவங்களில் ஒன்று லிட்டில் இந்தியா கலவரம். அதை நினைவுகூர்வது என்ன நடந்தது என்பதைப் புரட்டிப்பார்ப்பதற்காக அல்ல. என்ன செய்ய வேண்டும் என்பதை நமக்கு நாமே நினைவுறுத்திக் கொள்வதற்காக.

நாட்டைப் புரட்டிப்போட்ட ஹோக்லி பேருந்து ஊழியர்கள் கலவரம், மரியா ஹெர்டோக் இனக்கலவரம், 1964 இனக் கலவரங்கள் போன்ற கலவரம் அல்ல அது.

என்றாலும், கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக பெரிய சச்சரவுகளை எதிர்கொண்டிராத சிங்கப்பூரைத் திடுக்கிடவைத்த மோசமான சம்பவம்.

லிட்டில் இந்தியாவில் வெளிநாட்டு ஊழியர் கூடலால் களைகட்டிய வழக்கமான ஞாயிறாகத்தான் 2013 டிசம்பர் 8ஆம் தேதி அன்று கழிந்தது.

ஆனால், அன்று இரவு மணி 9.21 அளவில் மதுபோதையில் இருந்த குமாரவேல் சக்திவேலை பேருந்தில் ஏற்ற முடியாது என வாகன நடத்துனர் மறுக்க, அவரும் விடாப்பிடியாக ஓடத்தொடங்கிய பேருந்தில் ஏற முயன்று தவறி விழ, அவர் மேல் அந்தத் தனியார் பேருந்து ஏறி அவர் உயிரிழந்தார்.

அந்த 33 வயது வெளிநாட்டு ஊழியரின் மரணத்தால் ஏற்பட்ட ஆற்றாமை வன்முறையாக வெடித்தது. 62 பேர் காயமடைந்தனர். 30 வாகனங்கள் சேதமடைந்தன. ஆம்புலன்சுக்கு தீ வைக்கப்பட்டது. காவல்துறை வாகனங்கள் கவிழ்க்கப்பட்டு எரிக்கப்பட்டன.

தொடக்கத்தில் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்திராததால் திணறிய காவல்துறையினர் பின்னர் தங்களது பாதிப்புகளையும் பொருட்படுத்தாது விரைந்து செயல்பட்டனர். துப்பாக்கிகளோ, பெரிய உபகரணங்களோ பயன்படுத்தாமல் கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஏறக்குறைய இரண்டு மணி நேரத்துக்குள் நிலவரம் சீரடைந்துவிட்டது.

சிறிது அசந்திருந்தால் அல்லது ஒரு தவறான முடிவை எடுத்திருந்தால் நிலைமை வேறாகி இருந்திருக்கும்.

கலவரம் ஏற்பட வதந்திகளும் தவறான புரிதல்களுமே முக்கிய காரணம் என்பது, கலவரத்தைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் கண்டறிதல்களில் குறிப்பிடத்தக்கது.

இச்சிறிய நாட்டில் பல இன, சமய, மொழி சார்ந்த மக்கள் வாழ்கிறார்கள். இவர்கள் வாழ்வின் பல நிலைகளில் இருப்பவர்கள். சிங்கப்பூரின் 5.92 மில்லியன் மக்கள் தொகையில் 1.77 மில்லியன் பேர் வெளிநாட்டினர்.

பன்முகத்தன்மை கொண்ட இத்தகைய ஒரு சமுதாய அமைப்பின் வெற்றியும் முன்னேற்றமும் மக்களின் புரிந்துணர்விலும் கட்டுக்கோப்பிலும் உள்ளது. சட்ட ஒழுங்கைப் பேணுவதிலும் சமூகங்களுக்கிடையிலான புரிந்துணர்வை வளர்ப்பதிலும் சிங்கப்பூர் திட்டமிட்டுச் திறம்படச் செயலாற்றி வருகிறது.

அதேநேரத்தில், எல்லா நாடுகளைப் போலவே சிங்கப்பூரிலும் பெரும்பாலும் பின்னணியில் வேலைசெய்யும் வெளிநாட்டு ஊழியர்களின் பிரச்சினைகள் பலநேரங்களில் உடனடியாக வெளிச்சத்துக்கு வருவதில்லை.

ஆனால், கோளாறுகள் கண்டறியப்பட்டதுடன் அவற்றைக் களைந்து, உடனடி நடவடிக்கை எடுப்பது சிங்கப்பூரின் சிறப்பு அம்சமாகும்.

இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படாதிருக்க சட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, கலவரத்துக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட்ட அதேவேளையில், வெளிநாட்டு ஊழியரின் தேவைகளிலும் கவனம் செலுத்தப்பட்டது.

லிட்டில் இந்தியாவில் வெளிநாட்டு ஊழியர் பேருந்துப் போக்குவரத்துக்காக தனி பேருந்து நிலையம் கட்டப்பட்டது.

தனித் தீவுகள் என சிலரால் குறைகூறப்படும் ஊழியர் தங்குவிடுதிகளில் ஒருங்கிணைந்த வசதிகளை ஏற்படுத்த அரசாங்க ஆதரவு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மினி-மார்ட், பீர் கார்டன், சினிமா போன்ற வசதிகளுடான பெரிய தங்குவிடுதிகள் உருவாகத் தொடங்கின.

கொவிட்-19 பெருந்தொற்றைத் தொடர்ந்து, ஓரறையில் 20 பேருக்கு மேல் தங்கும் அவர்களது அடைத்து, நெருக்கிய வாழ்க்கையையும் சரிசெய்ய முயற்சிகள் எடுக்கப்பட்டன.

அவர்களின் உடல்நலனையும் மனநலனையும் பேணும் காப்புறுதித் திட்டங்களும் மருத்துவ ஏற்பாடுகளும் மேம்படுத்தப்பட்டன.

வெளிநாட்டு ஊழியர்கள், நாட்டின் ஊழியரணியில் கிட்டத்தட்ட 40 விழுக்காடாக உள்ளனர். மனித வள அமைச்சின் 2023 ஜூன் மாத புள்ளிவிவரங்களின்படி இவர்களில் 1.49 மில்லியன் பேர் வொர்க் பர்மிட்டில் வேலை பார்ப்பவர்கள்.

குறைந்த வருமானம் ஈட்டும் பெருந்தொகையான இப்பிரிவினர் இங்கு மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் வாழ்வதற்கு வழிவகைகளை அரசாங்கம் தொடர்ந்து மேற்கொள்கிறது.

சமூக அமைப்புகளும் தற்போது இத்தகையோருக்கு பலவழிகளிலும் கைகொடுத்து வருகின்றன.

நகர மேம்பாடு, வளர்ச்சி, மக்களின் எதிர்காலம் என அனைத்துத் துறையிலும் ஐந்தாண்டு, பத்தாண்டு என நீண்டகாலத் திட்டங்களை தொலைநோக்குடன் வகுப்பதுடன் வெளிநாட்டு ஊழியர் போன்ற சட்டென்று புலப்படாத விஷயங்களிலும் நீண்டகால நோக்குடன் திட்டுமிடுவது முக்கியம் என்பதை அரசாங்கம் இப்போது உணர்ந்துள்ளது.

அதேநேரத்தில், பொறுப்புணர்வுள்ள நாட்டில் வசிக்கிறோம் என்பதைப் புரிந்து செயல்படுவது வெளிநாட்டு ஊழியர்களின் கடமையாகும்.

எளிதில் கண்ணுக்குத் தெரியாத பிரச்சினைகளை கூர்ந்து கவனித்து, பரிவுடன் நடந்துகொள்வது மக்களின் பொறுப்பாகும்.

பரிவும் பொறுப்பும் புரிந்துணர்வும் எந்தப் பிரச்சினையையும் முளையிலேயே கிள்ளியெறிந்துவிடும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!