மழலைச் சத்தம் அதிகம் ஒலிக்கட்டும்; தீர்வு பிறக்கட்டும்

சிங்கப்பூரின் மிக முக்கியமான ஒரே வளம் அதன் மக்கள்தான். சிங்கப்பூர் மக்கள் உலகில் ஆக அதிக ஆயுளைக் கொண்டவர்கள். அவர்களின் வாழ்க்கைத் தரம் உலக அளவில் முதல் தரமானது.

நல்ல சத்துணவு, சிறப்பான கழிவுநீர் அகற்று வசதிகள், மிக மேம்பட்டு அதி நவீன நிலையை எட்டி இருக்கும் சுகாதாரப் பராமரிப்பு வசதிகள் எல்லாம் இந்தச் சாதனைகளுக்குக் காரணம்.

சிங்கப்பூர் குறுகிய காலகட்டத்திலேயே தனது ஒரே வளமான அதன் மக்களின் நலன் காத்து மிகப்பெரும் முன்னேற்றத்தைக் கண்டு இருக்கிறது. மக்களின் ஆயுளை நீட்டிக்கும் அளவுக்கு சிங்கப்பூரின் வாழ்க்கைத் தரம் மிகச் சிறப்பாக இருந்துவருகிறது.

இது நாம் மிகவும் பெருமைப்பட வேண்டிய ஒன்று என்பதில் ஐயமில்லை. ஆனால் மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி என்பதைப் போல் அந்த மனித வளம் எதிர்நோக்கும் சவால்களை நினைத்தால்தான் கவலையாக இருக்கிறது. மக்கள்தொகை மூப்படைவது ஒரு பக்கம், பிறப்பு விகிதம் குறைந்து வருவது மறுபக்கம் என்று இரண்டு அடிகளையும் நாடு எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது.

எச்சரிக்கை விடுக்கப்பட வேண்டிய அளவுக்கு இருக்கக்கூடிய இந்த நிலை ஒன்றும் புதிதல்ல என்றாலும், அதிகாரபூர்வ புள்ளிவிவரங்களைப் பார்க்ககையில், நிலவரம் மேலும் மேலும் மோசமடைவதாகவே தெரிகிறது.

சிங்கப்பூர் மக்கள்தொகையைப் பொறுத்தவரை சென்ற ஆண்டு, அதாவது 2022ஆம் ஆண்டு குறிப்பிடத்தக்க இருக்கிறது.

சிங்கப்பூரின் பிறப்பு விகிதம் சென்ற ஆண்டில் சாதனை அளவுக்குக் குறைந்துவிட்டது. அது மட்டுமல்ல, 1960ஆம் ஆண்டில் இருந்து பார்க்கையில் சென்ற ஆண்டில்தான் வருடாந்திர மரண எண்ணிக்கை ஆக அதிகமாக இருந்தது.

கடந்த 2021ஆம் ஆண்டில் 38,672 குழந்தைகள் பிறந்தன. இந்த எண்ணிக்கை சென்ற ஆண்டில் 35,605 ஆக அதாவது 7.9% குறைந்துவிட்டது.

அதேபோல், 2021ஆம் ஆண்டில் 24,292 பேர் மரணம் அடைந்தார்கள். சென்ற ஆண்டில் இந்த எண்ணிக்கை 10.7% அதிகமாகி 26,891 ஆகக் கூடியது. கடந்த 63 ஆண்டுகளில் எந்த ஓர் ஆண்டிலும் இந்த அளவுக்கு மரணங்கள் இல்லை. இது ஒருபுறம் இருக்கட்டும்.

தேசிய மக்கள்தொகை, மனித ஆற்றல் பிரிவு தெரிவிக்கும் நிலவரங்களைப் பார்க்கையில் மேலும் சங்கடமான நிலவரம் தெரிகிறது.

சாதனை அளவுக்கு மரணங்கள் இருந்ததைப் பற்றிய கவலை ஒருபுறம் இருக்கையில், மக்கள்தொகை வேகமாக மூப்படையும் சூழ்நிலை மறுபுறம் கவலை தருகிறது. கருவள விகிதம் குறைந்துவிட்டது. ஆயுள் கூடிவிட்டது. இவற்றின் விளைவாக மக்கள்தொகை மூப்படையும் வேகம் கூடிவிட்டது. 65 வயதும் அதற்கு அதிக வயதும் உள்ள மக்களின் விகிதாச்சாரம் 2012ஆம் ஆண்டில் 11.1% ஆக இருந்தது. இது சென்ற ஆண்டில் 18.4% ஆக அதிகரித்தது. வரும் 2030ஆம் ஆண்டு வாக்கில் குடிமக்களில் நால்வரில் ஒருவருக்கு வயது 65ஆக, அதற்கும் அதிகமாக ஆகிவிடும் என்பதுதான் நிலவரம்.

சிங்கப்பூரர்களின் ஆயுள் உலக அளவில் அதிகம். அவர்கள் அதிக காலம் உயர்ந்த வாழ்க்கைத் தரத்துடன் வாழ்கிறார்கள் என்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. என்றாலும் குழந்தை பிறப்பு குறைவாக இருப்பது, அதிக ஆயுள் மகிழ்ச்சியை அனுபவித்து மகிழ இயலாத அளவுக்கு உள்ளது.

போதிய அளவுக்குக் குழந்தைகள் பிறக்கவில்லை என்பது கைக்குழந்தைகள், பள்ளிப்பிள்ளைகள், பல்கலைக்கழக பட்டதாரிகள், முதியவர்கள் என பல நிலைகளிலும் பிரதிபலிக்கிறது. எல்லா நிலைகளிலும் எண்ணிக்கை குறைந்துவிட்டது.

நாட்டின் மக்கள்தொகை குறையும் பிரச்சினைக்கு எப்படித் தீர்வு காண்பது?

இதில் குடிநுழைவு ஏற்பாடு மூலம் வெளிநாட்டினரை வரவேற்கலாம் என்பது ஓரளவுக்குத்தான் உதவுவதாக இருக்கும்.

சிங்கப்பூர் சமூகத்தில் வெளிநாட்டிரை ஒருங்கிணைப்பதில் பல பிரச்சினைகள் இருக்கின்றன என்பதே இதற்கான காரணம்.

ஆகையால் அதிக பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளும்படி சிங்கப்பூரர்களுக்கு ஊக்கமூட்டும் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதே இதில் சாலச் சிறந்தது என்பதால் அத்தகைய கொள்கைகள் அமல்படுத்தப்பட்டு வந்துள்ளன.

வாழ்க்கைச் செலவு, லெளகீக வாழ்க்கைக்கான இதர காரணங்களால் குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு குடும்பம் நடத்துவதை ஒத்திவைப்பவர்கள், குழந்தை வேண்டாம் என்று முடிவு செய்பவர்கள் இருக்கிறார்கள். இத்தகைய சிங்கப்பூரர்களுக்கு உதவும் நோக்கத்தில்தான் அத்தகைய கொள்கைகள் நடப்புக்கு வந்துள்ளன.

சிங்கப்பூரைப் பொறுத்தவரை பொருளியல் பிரச்சினைகள் என்றால் உலக நிலவரங்களை உணர்ந்துகொண்டு உடனுக்குடன் நடவடிக்கைகளை எடுத்து சமாளித்துவிடலாம். ஆனால் மக்கள்தொகை பிரச்சினை என்று வரும்போது அதற்கு எளிதான தீர்வு இருக்கும் என்று தோன்றவில்லை.

மக்கள்தொகை குறையும் பிரச்சினையைப் பல நாடுகளும் எதிர்நோக்குகின்றன.

ஆனால் சிங்கப்பூரைப் பொறுத்தவரை அதன் ஒரே வளம் அதன் மக்கள்தான் என்பதை மனதில் நிறுத்திப் பார்க்கையில் இந்தப் பிரச்சினை எந்த அளவுக்கு மிக முக்கியமானது என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

மக்கள்தொகை குறைகிறது. அதேவேளையில் மக்கள்தொகை வேகமாக மூப்படைகிறது. இந்த இரண்டு நிலவரங்களையும் சிங்கப்பூர் சமாளித்தாக வேண்டும்.

இதற்குச் சிங்கப்பூரர்கள்தான் வழிகாண வேண்டும். சிங்கப்பூரர்களைக் கொண்ட சிங்கப்பூரை, பலதலைமுறைகளைச் சேர்ந்த மூலாதாரக் குடிமக்களைக் கொண்ட சிங்கப்பூரைப் பலப்படுத்த சிங்கப்பூரர்கள் விரும்பும்பட்சத்தில் அவர்கள் அதிகமாக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும், மழலைச் சத்தம் அதிகம் ஒலிக்க வேண்டும். இதுதான் விரும்பிய பலனைத் தருவதாக இருக்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!