கோலாலம்பூர் துப்பாக்கிச்சூடு: தப்பிச் செல்லும் முயற்சி முறியடிப்பு

பெட்டாலிங் ஜெயா: கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் ஏப்ரல் 14ஆம் தேதி அதிகாலை தமது மனைவியைத் துப்பாக்கியால் சுட முயன்ற 38 வயது ஹஃபிசுல் ஹராவி கிட்டத்தட்ட 38 மணி நேரம் கழித்து கைது செய்யப்பட்டார்.

ஹஃபிசுல் சுட்டதில் அவரது மனைவியான திருவாட்டி ஃபாரா முகம்மது இஸாவின் மெய்க்காப்பாளர் படுகாயம் அடைந்தார்.

தாக்குதலுக்குப் பிறகு விமான நிலையத்தில் பதற்றநிலை ஏற்பட்டது.

அதைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு கார் மூலம் ஹஃபிசுல் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

அங்கிருந்து அவர் வடக்கு திசை நோக்கிப் பயணம் செய்தார்.

அதே நாள் பிற்பகல் அவர் கிளந்தான் மாநிலத் தலைநகர் கோத்தா பாருவை அடைந்தார்.

அங்கு தாம் வைத்திருந்த நான்கு அடையாள அட்டைகளில் ஒன்றைப் பயன்படுத்தி ஹோட்டலில் தங்கினார். அந்த அடையாள அட்டைகள் மற்றவர்களுக்குச் சொந்தமானவை.

தமது காரின் எண் பலகையையும் அவர் மாற்றினார்.

துப்பாக்கிசசூடு சம்பவத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்பு கோத்தா பாருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டிருந்தார்.

அதன் முடிவைப் பெற்றுக்கொள்ள அவர் மருத்துவமனைக்குத் திரும்பினார்.

அப்போது அவரது இருப்பிடம் காவல்துறைக்குத் தெரியவந்தது.

அவரை அதிகாரிகள் ஏப்ரல் 15ஆம் தேதி பிற்பகல் 3 மணி அளவில் மருத்துவமனை வாசலில் கைது செய்தனர்.

மலேசியாவிலிருந்து தப்பிச் செல்ல ஹஃபிசுல் திட்டமிட்டிருந்ததாக நம்பப்படுகிறது.

அதற்கான ஏற்பாடுகளை அவர் செய்துகொண்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக மலேசியக் கூட்டரசு குற்றப் புலனாய்வுத்துறை இயக்குநர் முகம்மது ஷுஹாய்லி முகம்மது ஸேன் தெரிவித்தார்.

துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு முன்பு அவர் பலமுறை வெளிநாடுகளுக்குச் சென்றிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

அவர் கடந்த வாரம் சவூதி அரேபியாவுக்குப் பயணம் மேற்கொண்டு பிறகு தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கிற்குச் சென்றதாக திரு முகம்மது ஷுஹாய்லி கூறினார். அங்கிருந்து அவர் கோத்தா பாருவுக்குச் சென்று மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்லும் நோக்கில் விசா விண்ணப்பத்துக்காக அவர் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டிருக்கக்கூடும் என்றார் அவர்.

இது தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது.

இந்நிலையில், அவரிடமிருந்த துப்பாக்கியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அவரது காரில் 24 தோட்டாக்கள் இருந்ததைக் கண்ட அதிகாரிகள் அவற்றையும் பறிமுதல் செய்தனர்.

ஹஃபிசுல் சிலாங்கூர் மாநிலத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு அவரிடம் கொலை முயற்சி தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது.

இதற்கிடையே, ஹஃபிசுல் குற்றம் புரிந்திருந்தால் அவரைப் பாதுகாக்கவோ காப்பாற்றவோ முயற்சி எடுக்கப்போவதில்லை என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

உண்மை கண்டறியும் பணியைக் காவல்துறையிடம் விட்டுவிடுவதாக ஹஃபிசுலின் இளைய சகோதரரான ஹனிஃப் ஹராவி கூறினார்.

செய்த தவறுகளுக்குப் பொறுப்பேற்குமாறு ஹஃபிசுலிடம் தமது பெற்றோர் மன்றாடியதாக சமயக் கல்வி ஆசிரியரான திரு ஹனிஃப் தெரிவித்தார்.

“ஹஃபிசுலுக்கு ஆறு பிள்ளைகள் இருக்கின்றனர். அவரது மனைவியுடன் அவருக்குப் பிரச்சினை இருப்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் சில சமயங்களில் அவர்களது உறவு சுமுகமானதாக இருந்ததாலும் இருவரும் மகிழ்ச்சியாக இருந்ததாலும் நாங்கள் தலையிடவில்லை.

“ஹஃபிசுல் குற்றம் புரிந்திருந்தால் அவருக்கு உதவமாட்டோம். செய்த குற்றத்துக்கு அவர் பதில் சொல்லியாக வேண்டும்,” என்றார் திரு ஹனிஃப்.

ஆனால் தமது மனைவியைத் துப்பாக்கியால் சுட ஹஃபிசுல் முடிவெடுத்ததற்கான காரணம் தெரியவில்லை என்றும் அது தங்களுக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது என்றும் திரு ஹனிஃப் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!