மரினா பே சேண்ட்சின் (எம்பிஎஸ்) வருமானம், 2023ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் 55.6 விழுக்காடு அதிகரித்துள்ளது.
சிங்கப்பூரின் ஒருங்கிணைந்த உல்லாசத் தலமான அதன் நிகர வருமானம் 1.1 பில்லியன் யுஎஸ் டாலர் (S$1.5 பில்லியன்). இது, முந்தைய இதே காலகட்டத்துடன் பதிவான 682 மில்லியன் யுஎஸ் டாலருடன் ஒப்பிடுகையில் 55.6 விழுக்காடு அதிகம் என்று தாய் நிறுவனமான லாஸ் வேகாஸ் சேண்ட்ஸ் (எல்விஎஸ்) ஜனவரி 24ஆம் தேதியன்று தெரிவித்தது.
“சிங்கப்பூரில் மரினா பே சேண்ட்ஸ், மீண்டும் நிதி மற்றும் செயல்பாட்டில் தனிச்சிறப்புடன் செயல்பட்டுள்ளது,” என்று எல்விஎஸ் குறிப்பிட்டது.
“எங்களுடைய புதிய முழு வசதிகளுடன்கூடிய ஹோட்டல் அறை, உயர்தரமான சேவையும் எங்களை இந்த சிறப்பான இடத்தில் நிறுத்தியிருக்கிறது. அது மட்டுமல்லாமல் சீனா, பரந்த வட்டாரத்திலிருந்து பயணம் மற்றும் சுற்றுலாவுக்கு செலவிடும் போக்கு தொடர்ந்து அதிகரித்து முன்னேறி வருகிறது,” என்று எல்விஎஸ் கூறியது.
மரினா பே சேண்ட்ஸின் சூதாட்டக் கூடத்தின் வருமானம் மட்டும், முந்தைய ஆண்டின் 402 மில்லியன் யுஎஸ் டாலரிலிருந்து (S$539) 84.3 விழுக்காடு கூடி 741 மில்லியன் யுஎஸ் டாலருக்கு (S$992) அதிகரித்தது. இந்தத் துறை, நான்காவது காலாண்டின் வருமானத்தில் அதிக பங்களித்துள்ளது. மரினா பே சேண்ட்சின் ஹோட்டல், கடைத் தொகுதி உள்ளிட்ட இதர துறைகளும் நன்கு செயல்பட்டுள்ளன.