பசுமை சிங்கப்பூரை நோக்கிச் செல்ல இரு சிங்கப்பூர் நிறுவனங்கள் ஒப்பந்தம்

சிங்கப்பூரில் இயங்கிவரும் நிறுவனங்கள் நீடித்த நிலைத்தன்மையை நோக்கிச் செல்ல ஊக்குவிக்கும் விதமாக சிங்கப்பூரில் சுற்றுப்புறத் தீர்வுகள் வழங்கும் முதல் உற்பத்தி ஆலையான கிரீன் லேப் நிறுவனமும் நிஞ்சா வேன் தளவாட நிறுவனமும் கைகோத்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

இந்த ஒப்பந்தம், உள்ளூர்த் தொழில்கள் சுற்றுப்புறத் தீர்வுகளை எளிதாக அணுகவும் அவற்றுக்குக் கட்டுப்படியாக இருக்கும் வண்ணமும் அமையும். இரு நிறுவனங்களும் எடுத்துள்ள இந்தக் கூட்டு முயற்சி சிங்கப்பூரில் இயங்கிவரும் பல நிறுவனங்கள் சந்திக்கும் சவால்களை எதிர்கொள்ளவும் கைகொடுக்கும்.

எடுத்துக்காட்டாக, நீடித்த நிலைத்தன்மையுடைய பொருள்களின் விலை அநேகமாக அதிமாக இருக்கும் என்று நிறுவனங்கள் பெரும்பாலும் கருதலாம். இதனால் தொழில்கள் நீடித்த நிலைத்தன்மையை நோக்கிச் செல்லும்போது தளவாட, சேமிப்புத் தேவைகளுக்கு அதிகம் செலவிட வேண்டும்.

கிரீன் லேப், நிஞ்சா வேன் நிறுவனங்கள் அவர்களின் சேவையை நாடி வரும் தொழில்களுக்கு இலவச விநியோக, சேமிப்புச் சேவையை வழங்கவுள்ளன.

இரு நிறுவனங்களுக்கும் இடையிலான இந்தத் தடையற்ற ஒருங்கிணைப்பு, உள்ளூரில் உள்ள சிறிய, நடுத்தர நிறுவனங்கள் எளிதில் சுற்றுப்புற நட்பார்ந்த நடைமுறைகளைப் பின்பற்ற ஏதுவாக அமையும்.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சி, திங்கட்கிழமை (மே 6) காலை, கிரீன் லேப் நிறுவன வளாகத்தில் இடம்பெற்றது. கிரீன் லேப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் இணை நிறுவனருமான முரளிகிருஷ்ணன் ரங்கன், நிஞ்சா வேன் நிறுவனக் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் இணை நிறுவனருமான லாய் சேங் வென் இருவரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்நிகழ்ச்சியில், நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மற்றும் போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

“பருவநிலை மாற்றத்தை நாம் தீவிரமாகக் கருதவேண்டும். இப்போதே செயல்பட்டால்தான் நம்மால் அதிலிருந்து தற்காத்துக்கொள்ள முடியும். சிங்கப்பூர்ப் பசுமைத் திட்டம் 2030ஐ அறிமுகப்படுத்தினோம். இதில் தொழில்கள், குடிமக்கள் என அனைவரும் ஒன்றுசேர்ந்து செயல்பட வேண்டும். 2050க்குள் கரிம வெளியேற்றத்தில் ‘நெட் ஸீரோ எமிஷன்’ எனப்படும் நிலையை அடையவேண்டும். பசுமைப் பொருளியலை நோக்கிச் செல்ல அரசாங்கத்திற்கு அப்பாற்பட்டு சிறிய, நடுத்தர நிறுவனங்களும் முயற்சி எடுத்தால்தான் நம்மால் குறைந்த கரிம வெளியேற்ற அளவை எட்ட முடியும். நிறுவனங்கள் சிறிய அளவில் முயற்சியைத் தொடங்கலாம். அரசாங்கம் வழங்கியுள்ள எரிசக்திச் சிக்கனத் திறன் மானியத்தை நிறுவனங்கள் பயன்படுத்தலாம். புதுப்பிக்கத்தக்க எரிசக்திப் பயன்பாட்டில் அதிகக் கவனம் செலுத்தப்பட வேண்டும். சூரியசக்தித் தகடுகளைப் பயன்படுத்துவது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு,” என்று டாக்டர் ஏமி கோர் தெரிவித்தார்.

கிரீன் லேப் நிறுவனத்தில், முழுமையாக மக்கும் தன்மை கொண்ட தீர்வுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆலையின் கூரையில் அதிக அளவில் சூரியசக்தித் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. கிரீன் லேப் நிறுவனத்திலிருந்து தொழில்கள் பொருள்களை வாங்கும்போது நிஞ்சா வேன் நிறுவனம் மின்சார வாகனம் மூலம் அப்பொருள்களை விநியோகம் செய்யவுள்ளது.

“இந்த முயற்சி சிங்கப்பூர் நிறுவனங்கள், குறிப்பாக உணவு, பானத் துறை நிறுவனங்கள், விரைவு உணவகங்கள், வீட்டிலேயே செயல்படும் நிறுவனங்கள் ஆகியவற்றுக்குப் பேரளவில் மாற்றத்தை அளிக்கும். தொழில்கள் நீடித்த நிலைத்தன்மையை நோக்கிச் செல்ல இந்த ஒப்பந்தம் தன்னம்பிக்கை வழங்கும். அதேநேரத்தில் மின்சார வாகனங்கள் மூலம் விநியோகம் செய்யப்படுவதால் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியும் பயன்படுத்தப்படுகிறது,” என்று திரு முரளிகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!