உறவைத் தேடி

கடலை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் ஆயிஷா. அவளது மனப்புழுக்கத்தைப் போலவே கடற்கரையும் ஒரே வெக்கையாக இருந்தது. மனிதர்களுக்கு பல அனுபவங்களைக் கற்றுக் கொடுக்கும் வாழ்க்கை என்னும் ஆசான், அண்மைக் காலமாக அவளுக்குத் தனிமைப் பாடத்தை நன்றாக உணர்த்தி வருகிறது. போதாததற்கு முதுமை வேறு அவளைப் பார்த்து புன்னகையை உதிர்த்து ‘ஹலோ’ என்றது. இத்தனை ஆண்டுகளாக என்னைத் தவிக்கவிட்ட என் ராஜகுமாரன் இன்றைக்காவது வந்து என்னைத் தழுவிக்கொள்வானா? என அவளின் மனம் கடலில் எழும் அலைகளைப் போலவே ஆர்ப்பரித்தது.

இளவயது ஈர்ப்பால் ஆன அணைப்பு கொடுக்கிற சுகத்தைவிட அலாதியானது, முதுமையில் ஒருவருக்கொருவர் ஆதரவாய்க் கைகோத்து ஒன்றாக நடப்பது, ஆனால், அந்த நல்வாய்ப்பு தனக்குக் கிட்டாததை எண்ணி வருந்தினாள் ஆயிஷா.

அப்போது அவளின் பார்வை கண்ணுக்கெட்டிய தூரத்தில் நங்கூரம் போட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் பதிந்து உடல் சிலிர்த்தது.

சிறிது நேரத்தில் அந்தக் கப்பலில் இருந்து ஒரு சிறிய தீப்பொறி பறந்தது. நேரம் செல்ல செல்ல தீ சுவாலைகள் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கின. தொடர்ந்து ‘டமால்’ என்ற வெடிச்சத்தம்.....

அந்தத் திசையிலிருந்து ‘ஆயிஷா’ என்ற ஆணின் அலறல் சத்தம் அவளின் செவியை எட்ட, அவள் கண்களையும் காதுகளையும் இறுக மூடிக்கொண்டாள். உடல் நடுநடுங்க, இதயத்துடிப்பு தாறுமாறாய் எகிறியது.

கண்கள் இருட்டிக்கொண்டுவர, எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்து இருந்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை. மெல்ல கண்களைத் திறந்தவளின் கண்களிலிருந்து வந்த கண்ணீர் அவள் கன்னத்தில் கோடிட்டு வழிந்தோடியது.

அவளது மனக்கண்ணில் வெடித்துச் சிதறிய அந்தக் கப்பலை பிறகு மிரட்சியுடன் நோக்கினாள் ஆயிஷா. அது அதன் நிலையிலேயே இருந்தபடி லேசாக அசைந்து கொண்டிருக்க, ஆயிஷாவும் தன் பழைய நினைவுகளை அசைபோட ஆரம்பித்தாள்.

அப்துல் - ஆயிஷா தம்பதிகள் நிக்காஹ் முடித்து, கம்பத்தில் அத்தாப்புக்கூரை வேய்ந்த வீட்டில் குடியேறினர். அவர்கள் குடியிருந்த வீட்டோடு சேர்த்து அங்குள்ள மொத்தம் பத்து வீடுகளுக்கும் வீட்டு உரிமையாளரான தவ்கே மிகவும் நல்ல மனிதர். அவர் வீட்டிலிருந்த ஒரே தரைவழித் தொலைபேசிதான் அந்தக் குடியிருப்பாளர்கள் அனைவருக்கும் தகவல் தொடர்புச் சாதனமாக விளங்கியது.

அவர்கள் வசித்த கம்பத்தில் நல்ல சில்லென்ற காற்றைக் கொடுக்கும் நிறைய தென்னை மரங்கள், ஆங்காங்கே அலைந்து திரியும் கோழிகள், ஆடுகள் என இயற்கையோடு இயைந்து வாழ்ந்த அந்த மக்கள் ஒற்றுமையைத் தழுவி, வலுவான சமூக உணர்வு கொண்டவர்களாக விளங்கினர்.

மேலும், பல இன மக்கள் வாழ்ந்த அந்தப் பகுதியில் உணவுகளும் பலகாரங்களும் பண்டிகைகளின் போது ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர். மொத்தத்தில் ஒரு பணியின் கூட்டுச்சுமை மக்களால் பகிர்ந்துகொள்ளப்பட்டு அனைவரும் அந்தக் கம்பத்துக்கு உரிய உற்சாகத்தோடு வாழ்ந்தனர் எனலாம்.

ஆயிஷாவிடம் இருந்த நாலைந்து புடவைகளுள் ஒன்றைத் தவிர மற்றவையெல்லாம் வெளுத்துப் போய்க் கிடக்க, பச்சை நிறத்தாலான புடவை மட்டும் சுமாராக இருக்கும். அதில், அவளது மனத்தின் பூரிப்பைப் போலவே வெண்மை நிறத்தில் ஆங்காங்கே சிறிய பூக்கள் பூத்திருக்கும். அதேபோல் அப்துல்லாவிடம் இருப்பது இரண்டு காற்சட்டையும் மூன்று சட்டைகளுமே. இந்தத் தம்பதியரோடு கூடவே வறுமை குடியிருந்தாலும் அவர்களின் இல்லற வாழ்வில் மகிழ்ச்சிக்குப் பஞ்சமில்லை என்பதற்கு அடையாளமாகப் பிறந்தாள் பர்வீன் என்னும் ரோஜாப்பூ நிற குட்டித் தேவதை.

அப்துல்லா கப்பல் பட்டறையில் ஃபிட்டராக பழுதுபார்க்கும் வேலை செய்து வந்தான். அவனிடம் உள்ள புகைபிடிக்கும் பழக்கத்தால், அவன் சம்பாதிக்கும் அந்த சொற்ப வருமானத்தில் சிறிதளவு அவன் புகைக்கும் சிகரெட் போலவே கரைந்துபோனது. ஆயிஷா அந்தப் பழக்கத்தை நிறுத்துமாறு அப்துல்லாவிடம் பலமுறை கேட்டுக்கொண்டும் அவன் கேட்காததால் அதைப் பற்றி பேசுவதை வேறு வழியின்றி நிறுத்திக்கொண்டாள்.

இந்தப் பழக்கத்தைத் தவிர, அவன் தன் மனைவி மற்றும் மகளிடத்தில் மிகுந்த பாசத்தோடும், அக்கறையுடனும் இருந்தான்.

ஆண்டுகள் சில உருண்டோட, பர்வீனுக்கு 3 வயது முழுமையடைந்தது. ஆயிஷா எப்போதாவது இறைச்சி ஆணமும் நெய்ச் சோறும் ஆக்குவாள். அங்கு தேங்காய்ப் பாலும் முட்டையும் கிடைப்பது சின்னாங்கு என்பதால், அடிக்கடி சுவையான வட்டலப்பம் செய்து அசத்துவாள்.

மற்ற நேரங்களில் அவள் தயாரிக்கும் ஜாலர், இடியாப்பம், புட்டு போன்றவற்றிற்கு சுடச்சுட கோழி ஆணம் இருக்கும். அவர்கள் வீட்டிலேயே கோழி வளர்த்ததால், அப்துல்லாவே தேவையானபோது துவா சொல்லி வெட்டிக் கொடுப்பான்.

ஒரு நாள் வேலையிலிருந்து திரும்பிய அப்துல்லா குளத்திலிருந்து கெளுத்தி மீன் பிடித்துக்கொண்டு வர, வெகுநாள்களுக்குப் பிறகு அன்று ஆயிஷா தயாரித்த ரொட்டியும், மீன் ஆணமும் அப்துல்லாவின் நாவைச் சுண்டியிழுத்தது. அன்று இரவு அப்துல்லாவிற்கு ஆயிஷா பாசத்துடன் பரிமாறிவிட்டு, மகள் பர்வீனுக்கு ஊட்ட ஆரம்பித்தாள்.

“ஆயிஷா, அப்படியே எனக்கும் இரண்டு வாய் ஊட்டினா என்னவாம்?” என அப்துல்லா அவளை செல்லமாகச் சீண்ட, அவன் மனத்தையறிந்த ஆயிஷா பர்வீனோடு சேர்த்து அப்துல்லாவுக்கும் ஊட்டத் தொடங்கினாள். அப்போது இருவருடைய பார்வையும் ஒன்றோடொன்று கலந்து காதலை பரிமாறிக் கொண்டன. ஆயிஷாவின் பளபளத்த கன்னங்கள் அவள் ஆக்கிய மீன் ஆணத்திற்கு இணையாகச் சிவந்தன.

அடுத்த நாள், வேலை முடிந்து தாமதமாக வீட்டை அடைந்த அப்துல்லா நீண்ட பெருமூச்சுடன் அமர்ந்தான்.

“என்ன வேலை அதிகமாங்க?” என்றாள் ஆயிஷா.

“ஆமாம், களைப்பா இருக்கு ஆயிஷா, ஏதாவது சூடா குடிக்கக் கொடும்மா” என்றான்.

அதற்குள் அவன் குரல் கேட்டு ஓடிவந்த பர்வீன், “வாப்பா” என்று அவனுடைய தோளை இறுகக் கட்டிக் கொண்டாள். மகளின் பஞ்சு மிட்டாய் போன்ற மிருதுவான பிஞ்சுக்கை அவனுடைய உடல் அசதிக்கு ஒத்தடம் கொடுப்பதுபோல் தோன்றியது. அவளை அணைத்தவனின் கண்கள் கலங்கின. இவளை நன்றாகப் படிக்க வைத்து எப்படியாவது ஒரு அதிகாரியாக்கிப் பார்க்கணும், ஆனால் அதற்கு மூலாதாரமாக உள்ள பணம் என்னும் ஆயுதம் அவன் கண் முன் வந்து அவனை அச்சுறுத்தியது.

வாழ்க்கையின் மீது லேசான பயம் தலைதூக்க, ‘ச்சே.. இத்தனை நாளா நான் மகளுக்குன்னு எதையுமே சேர்க்கலையே? இதுல வேற வர்ற வருமானத்துல பாதியை ஊதியே கரியாக்கிட்டேனே....இனிமேலாவது இவளுடைய எதிர்காலத்துக்கு சேர்க்கணும்’ என மனத்தில் நினைத்துக்கொண்டான்.

அப்போது தே-ஓ கொண்டு வந்த ஆயிஷா, “வாப்பாவும் மகளும் என்ன பேசிக்கிட்டீங்க?” என்றாள். அப்போது ஆயிஷாவை நிமிர்ந்து பார்த்த அப்துல்லாவின் கண்கள் கலங்கியிருந்தன.

“என்ன ஆச்சுன்னு இப்படிக் கலங்குறீங்க?”

“இல்லம்மா, நீயும் எத்தனையோ தடவை புகைப்பழக்கத்தை விட்ருங்கன்னு சொல்லியிருக்க. நான் கேட்கலை. ஆனால் இனிமேல் மாத்திக்க முயற்சி பண்றேம்மா. இவளை நல்லபடியா வளர்த்து ஆளாக்கணும், அதுக்கு நானும் ஆரோக்கியமா இருக்கணும், பணமும் சேர்க்கணும்,” என்றான் தழுதழுத்த குரலில்.

அப்துல்லாவின் இந்த மனமாற்றம் அவளுக்கு எல்லையில்லா மகிழ்ச்சியைக் கொடுத்தது. எப்படியோ, மகளின் மீதுள்ள பாசம் அவனை மாற்றியதை எண்ணி களிப்புற்ற ஆயிஷா, அதற்கு காரணமாயிருந்த தன் மகளின் கன்னத்தில் தன் உதட்டை ஆழமாகப் பதித்தாள்.

“அப்புறம் ஆயிஷா, இன்னக்கி ஒரு டேங்கர் கப்பல் பழுதுபார்ப்பதற்காக துறைமுகத்துக்கு வந்திருக்கு. எப்படியும் தொடர்ச்சியா ஓராண்டு வேலை ஓடும். வர்ற பணத்தை சிக்கனமா செலவழிச்சி மத்ததைச் சேமிக்க ஆரம்பிச்சிடு,” என்றான் அப்துல்லா.

“கப்பல் எங்கேயிருந்து வந்திருக்கு?”

“ஜப்பானுக்குச் சொந்தமான கப்பலாம், பாக்கவே பிரமிப்பா இருக்கு”

“ஓ...அப்படியா?” என்ற ஆயிஷாவிடம், “ஆமாம்மா, நீராவி விசையாழி மூலம் இயங்கும் கப்பலாம், எடையே சுமார் 64,081 டன் இருக்கும்னு பேசிக்கிறாங்க..” என அப்துல்லா கூறிக் கொண்டிருக்கும் போதே, பர்வீன் “உம்மா, பசிக்கிது” என்று ஆயிஷாவிடம் செல்லமாய்ச் சிணுங்க ஆரம்பித்தாள்.

“சரி ஆயிஷா, நானும் குளிச்சிட்டு வந்துடுறேன். எல்லாரும் இஷா தொழுகையை முடிச்சிட்டு சாப்பிடலாம்,” என்றவாறே அப்துல்லாவும் எழுந்தான். அதேநேரம் ஆயிஷாவிற்கு வயிற்றைக் குமட்டும் உணர்வுடன் லேசாக தலையையும் சுற்றவே எழுந்து நடக்க முடியாமல் தடுமாறினாள். அதைக் கண்ட அப்துல்லா, “என்னாச்சு ஆயிஷா?” என்றவனிடம்...“

“நாள் தள்ளிப் போயிருக்கு.. ஆனா உறுதியா தெரியலைங்க....சோதிச்சிப் பாக்கணும்,” என அவள் கூறியதும் அப்துல்லா இருப்புக் கொள்ளாமல் ஓடிச்சென்று அருகில் உள்ள மருத்துவச்சியை கையோடு அழைத்து வந்தான். ஆயிஷாவின் நாடியை சோதித்த மருத்துவச்சி, “பர்வீனுக்கு தம்பிப் பாப்பா வரப்போகுது,” என மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவித்தார்.

அடுத்தடுத்த நாள்களில் கப்பலில் அதிக வேலை காரணமாக அப்துல்லாவால் நேரத்திற்கு வீட்டிற்கு வர முடியவில்லை. இருந்தாலும், அவள் மசக்கையின் காரணமாக அவள் விரும்பிய மற்றும் உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் பண்டங்களை மறக்காமல் தினமும் வாங்கி வரத் தொடங்கினான்.

ஒரு வார காலம் நகர, அன்று காலை 6 மணியளவில் வேலைக்குத் தயாராகிவிட்ட அப்துல்லா ஏதோ ஒருவித குறுகுறுப்புடன் அங்குமிங்கும் உலாவிக் கொண்டிருந்தான்.

ஆயிஷாவிற்கு அதிக மயக்கம் வாந்தி காரணமாக எழக்கூட முடியவில்லை. தலையை மெல்ல தூக்கியபடியே, “என்னங்க வேலைக்குப் புறப்படலையா?” என்றாள். அவள் கேட்டதும் அவளருகே அமர்ந்து தன் கைக்குள் அவள் கையை அடக்கினான்.

“என்னவோ தெரியலை ஆயிஷா, இன்னக்கி உன்கூடவே இருந்திடலாம்னு தோணுது. என்ன செய்ய வேலைக்கு போயாகணுமே?” என்றபடி ஆயிஷாவின் வயிற்றில் முத்தமிட்டு நகர்ந்தான்.

ஆயிஷா மெல்ல எழுந்து வெளியில் வந்தாள். நடந்து சென்று கொண்டிருந்த அப்துல்லாவை அவன் தலை மறையும் வரை நின்று பார்த்துக் கொண்டிருந்தாள்.

*

அன்று மதியம், கப்பல் பட்டறையில், மதிய உணவு முடித்து அப்துல்லாவோடு சேர்த்து ஏறக்குறைய 150 ஊழியர்கள் கப்பலுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்துல்லாவுக்கு வேலையிடத்தில் இருப்புக் கொள்ளாமல் அவனுடைய நினைவு முழுவதும் ஆயிஷாவையே சுற்றி வந்தது. ‘காலையில முடியாம படுத்துக் கிடந்தாளே....

சமைச்சு சாப்பிட்டாளான்னு கூடத் தெரியலையே... எப்படியும் அக்கம் பக்கம் உள்ளவங்க ஏதாவது உதவிருப்பாங்க... நாணயத் தொலைபேசி வாயிலாக தவ்கே வீட்டுக்கு அழைச்சு பேசிப் பாப்போமா?’ என்று யோசித்தவன், அடுத்த கணமே, வேண்டாம் நடந்து வரச் சிரமப்படுவாள் என்று எண்ணி முடிவை மாற்றிக் கொண்டான்.

அவன் வேலை செய்த அந்த பெட்ரோலியம் ஏற்றி வந்த டாங்குக்குள் அவனோடு சேர்த்து லிம் மற்றும் குவாங் இருவரும் ஃபிட்டராக வேலை செய்தனர்.

அந்த மூவரும் வெகுநாள்களாக ஒன்றாக பணியில் இருந்ததால் கொடுக்கல் வாங்கல் முதற்கொண்டு, நாளடைவில் அனைத்துச் செய்திகளையும் மனம் விட்டுப் பேசிக்கொள்ளும் அளவிற்கு நெருக்கமானார்கள். அப்போது அப்துல்லாவின் வாட்டமான முகத்தைக் கண்ணுற்ற லிம் அவனிடம்,

“என்ன ஒரு மாதிரியா இருக்கே?” எனக் கேட்டான்.

“ஆயிஷாவுக்கு முடியலை லிம்... அதான்”

“என்னாச்சு?” என்ற லிம்மிடம் தான் இரண்டாவதாக தந்தையாகப் போகும் அந்த மகிழ்ச்சியான செய்தியைக் கூறினான். உடனே லிம் அவனிடம் கைகொடுத்து, வாழ்த்து தெரிவித்தான். சற்று நேரத்தில் உணவு முடித்து வந்த குவாங்கும் அதைக் கேட்டு,“ஏதாவது உதவின்னா தயங்காம கேளு அப்துல்லா,” என்றான். பிறகு மூவரும் வேலையைத் தொடங்கினர்.

அந்த டேங்குக்குள் வாயுவை வைத்து இரும்பை வெட்டும் வேலையை மூவரும் மும்முரமாக செய்து கொண்டிருந்தனர். சகாக்கள் மூவரும் பேசிச் சிரித்தப்படி பணியைச் செய்ய, மின்னல் வேகத்தில் எமனாய் வந்த ஒரு தீப்பொறி அப்போது தவறி விழுந்தது. உடனே பக்கத்தில் எண்ணெய்க் காற்று அடர்ந்திருந்த அந்த டாங்கு தீப்பற்றி எறியத் தொடங்கியது.

தீயின் வெப்பம் தாங்காமல் அப்துல்லா, லிம் மற்றும் குவாங் அங்கிருந்து வெளியேற முயற்சி செய்தனர்.. சற்று நேரத்தில் தீ எங்கும் பரவத் தொடங்க, பட்டறை முழுவதும் ஆங்காங்கே அலறல் சத்தங்கள்... உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஊழியர்கள் அனைவரும் நாலாபுறமும் சிதறியடித்து ஓடினர்.

சற்று நேரத்தில் கப்பல் துறைமுகமே ஒரே புகைமூட்டமாய் காட்சியளித்தது. அந்த நேரத்தில் அப்துல்லாவின் மனத்தில் ஆயிஷா மற்றும் பர்வீனின் முகங்கள் நிழலுருவாய்த் தோன்றின. என்னைவிட்டா சொந்தம்னு சொல்ல ஆயிஷாவுக்கு யாருமே இல்லையே, நான் இல்லேன்னா என்ன செய்வா? என மனத்திற்குள் புலம்பியவாறு அப்துல்லா அங்குமிங்கும் தலைதெறித்து ஓட, ‘டமால்’ என்ற சத்தத்தோடு அந்த டாங்கு 100 மீட்டர் தூரத்திற்குச் சிதறி விழுந்து துகள்கள் வெப்பமும் தீயுமாக வெளியேறின.

“ஆயிஷா” என்ற அலறல் சத்தத்தோடு அப்துல்லாவின் இறுதிமூச்சு காற்றில் கலந்தது. இந்த துயரச் செய்தியை அறிந்த ஆயிஷா மயங்கி விழுந்தாள். அந்த அதிர்ச்சியில் அவள் வயிற்றில் பூத்த சிறிய பூ உதிரமாக கால்களுக்கிடையே ஓடத் தொடங்கியது.

சிங்கப்பூரின் ஜூரோங் துறைமுகத்தில் நடந்த இந்த ‘ஸ்பைரோஸ்’ கப்பல் விபத்து (1978ஆம் ஆண்டு அக்டோபர் 12), கப்பல் பட்டறையின் வரலாற்றில் ஒரு கறுப்பு தினமாகவே மாறியது. அப்துல்லாவோடு சேர்த்து மொத்தம் 76 பேரின் கனவுகளைப் பலிவாங்கிய அந்தக் கோர விபத்தில் மேலும் 69 பேர் படுகாயமடைந்தனர்..

தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் வேலையிடத்தில் இல்லாததால் ஏற்பட்ட இந்த மோசமான விபத்திற்குப் பின்னரே பாதுகாப்புக் கூட்டங்கள் கப்பல் பட்டறையில் முக்கியத்துவம் பெற்றன.

ஆயிஷாவுக்கு அந்தப் பகுதி மக்கள் ஆரம்பத்தில் துயரத்திலிருந்து வெளிவர நிறைய உதவிகளைச் செய்தனர். அப்துல்லா மவுத் ஆகி 40 நாள்கள் கடந்த பிறகு அங்கிருந்த மருத்துவச்சி தலைமையில் அனைவரும் ஒன்று கூடிப் பேசினர்.

அதன்படி கணவனை இழந்த இளம்பெண் ஆயிஷாவின் இடைக்கால காத்திருப்புக் காலம் அதாவது இத்தா முடிந்தவுடன், அவளுக்கு மறுமணம் செய்ய அவர்கள் முன்னெடுப்பு எடுத்து ஆயிஷாவிடம் பேசினார்கள். ஆனால், ஆயிஷா அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

ஆயிஷாவிற்குத் தொழிற்சாலையில் இருந்து கிடைத்த இழப்பீட்டுத் தொகையையும், அங்கிருந்த மண்டோரின் உதவியால் கிடைத்த கூலி வேலைகளைச் செய்தும் பர்வீனை ஆளாக்கினாள்.

அப்போது கடற்கரையில் அவளுக்கு சற்று தள்ளி விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களின் பந்து ஆயிஷாவின் பாதத்தைத் தொட்டு உருண்டோட, அவள் சுயநினைவை அடைந்தாள்.

ஆயிற்று! இந்த விபத்து நடந்து கிட்டத்தட்ட 45 ஆண்டுகள் முடிந்தபோதும் ஆயிஷாவுக்கு நரை தட்டியபோதும் அவளால் ஒவ்வோர் ஆண்டும் கடற்கரைக்கு வராமல் இருக்க முடியவில்லை; அப்துல்லாவின் நினைவுகளை மறக்கவும் முடியவில்லை. அவளது கண்ணீர் இப்போது வற்றிப் போய் மனம் லேசாகியிருந்தது. கடற்கரையிலும் வெக்கை தணிந்து இப்போது இதமான காற்று வீசத் துவங்கியிருந்தது.

அப்போது ஆயிஷாவின் திறன்பேசிக்கு, “நான் இன்னும் பணியிலிருந்து திரும்பாததால் அழைக்க முடியவில்லை. நானும் உங்கள் பேரனும் உங்களைப் பார்க்க இரவு வருகிறோம். அதுகுறித்து உங்கள் பேரன் சற்று நேரத்தில் உங்களை அழைத்துப் பேசுவான்,” என தலைமைப் பாதுகாப்பு அதிகாரியாக வேலை செய்யும் மகள் பர்வீனிடமிருந்து குறுஞ்செய்தி வந்தது.

அடுத்த சில நிமிடங்களில் திறன்பேசி கிணுகிணுக்க, முகத்திரையை உற்று நோக்கினாள் ஆயிஷா. அதில், ‘அப்துல்லா காலிங்..’ எனத் தெரிந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!