காரில் அதிக நேரம் இருந்து சாதனை படைத்த டோனி

ஒரு செயலில் வெற்றி பெற மன உறுதியும் அர்ப்பணிப்பும் முக்கியம் எனச் சொல்கிறார், தொடர்ந்து ஐந்து நாள்கள் காரில் தங்கி சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள டோனி செபாஸ்டியன், 39.

தனியார் வர்த்தக நிறுவனத்தில் தயாரிப்பு மேலாளர் பணியிலிருக்கும் இவர், சாப்பிடுவது, தூங்குவது, பயணிப்பது என காரிலேயே இருந்து, ‘காரில் அதிக நேரம் தங்கிய நபர்’ எனும் சாதனையைப் படைத்துள்ளார்.

பிப்ரவரி 27 முதல் 3 மார்ச் வரை 112 மணிநேரம் சிங்கப்பூரில் உள்ள 28 மாவட்டங்களிலும் 574 கிலோமீட்டர் காரில் பயணித்துள்ளார்.

‘ஃபுட் ஃப்ரம் த ஹார்ட்’ எனும் உள்ளூர் உணவுத் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து இந்த சவாலுக்குத் தயாரான இவர், ‘ஹார்ட் ஆன் வீல்ஸ்’ எனும் 25,000 பேருக்கு சமூக உணவுத் தொகுப்பு வழங்கும் முன்னெடுப்புக்கு நிதி திரட்ட உதவியுள்ளார்.

இந்தப் பயணத்தின்போது, ‘பிரட் ரன்’ எனும் அடுமனைகளில் மீதமாகும் உணவுப் பொருள்களை தேவையுள்ளோரிடம் கொண்டுசேர்க்கும் பணியையும் செய்துள்ளார்.

இந்த சவாலுக்காக, ‘வெர்ன்ஸ் ஆட்டோமோட்டிவ்’ சார்பில் அளிக்கப்பட்ட‘லேண்ட் ரோவர் டிஃபெண்டெர் 110’ ரக காரைப் பயன்படுத்தியுள்ளார். அதில் இருந்த தூங்குவதற்கேற்ற இடமும் சூரிய ஒளிக்காக மேற்கூரையில் வடிவமைக்கப்பட்ட சன்னல் போன்ற அமைப்பும் தங்குவதற்கு உதவியதாகவும் சொல்கிறார்.

சவால்கள் கடந்து சாதனை 

சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றதற்கான சான்றிதழுடன் டோனி. படம்: டோனி செபாஸ்டியன்

உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்காக நாளொன்றுக்கு இரண்டு மணி நேரம் மட்டும் காரிலிருந்து இறங்கியதாக இவர் சொன்னார்.

நான்கு மாதங்கள் செலவழித்து, செல்ல வேண்டிய பாதை, இரவில் வாகனம் நிறுத்த வேண்டிய இடங்கள், உணவு விநியோகிக்க உணவுக்கடை தேர்வு என அனைத்தையும் நண்பர்கள் உதவியுடன் விரிவாகத் திட்டமிட்டார்.

எனினும், சவாலைத் தொடங்கியபின் எதிர்பாராத சிரமங்கள் ஏற்பட்டதை திரு டோனி பகிர்ந்தார். சுற்றுச்சூழல் காரணமாக, நிறுத்தப்பட்ட வாகனத்தில் இரவு முழுதும் குளிர்சாதன வசதியைப் பயன்படுத்த அனுமதி இல்லை. எனவே, சன்னல்களில் கொசு வலை பொருத்தி, அவற்றைத் திறந்து வைத்தபடி இவர் உறங்கினார்.

பொங்கோல், ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா, செம்பவாங் பூங்கா, செந்தோசா கோவ், வெஸ்ட் கோஸ்ட் பூங்கா ஆகிய இடங்களில் இரவில் வாகனத்தை நிறுத்தி வைக்க திரு டோனி திட்டமிட்டிருந்தார்.

ஆனால், செம்பவாங் பூங்காவில் இரவில் வாகனம் நிறுத்த அனுமதியில்லை என்பது பின்னிரவு 1 மணிக்கே தமக்குத் தெரிய வந்ததாகச் சொன்னார். பின்னர், அங்கிருந்து புறப்பட்டு அருகிலுள்ள வாகன நிறுத்தத்தில் கட்டணம் செலுத்தி வாகனத்தை நிறுத்தினார்.

தான் 6 அடி உயரம் என்பதால், காலை நீட்டி படுப்பது சிரமமாக இருந்ததாகச் சொன்னார். சில பொது கழிப்பறைகளில் குளியல் வசதி இல்லாதது, உறக்கமின்மை, சில பகுதிகளில் திட்டமிட்டதை விட கூடுதல் நேரம் செலவிட வேண்டிய நிலை, திறன்பேசி மின்னேற்றக் கருவி பழுதாகுதல் என அவ்வப்போது சிரமங்கள் ஏற்பட்டதை திரு டோனி நினைவுகூர்ந்தார்.

நாள் முழுதும் காரில் செல்வதால், அதிக நீர் அருந்த வேண்டும். ஆனால் அப்படி அருந்தினால் பலமுறை இடைவெளி எடுத்துக்கொள்ள வேண்டிய தேவை ஏற்படும். உகந்த அளவு தண்ணீர் உட்கொண்டு, உடலைப் பராமரித்து சவாலை முடிக்க வேண்டியிருந்தது என்றார் இவர்.

“மிக எளிதாக ஐந்து நாள்களைக் கடந்து விடலாம் என எண்ணினேன். ஆனால், 24 மணி நேரத்தில் அது கடினம் என்பதை உணர்ந்தேன். உடலையும் மனதையும் தயார்ப்படுத்திக் கொண்டேன்,” என்றார் திரு டோனி.

இதுவரை சென்று பார்க்காத இடங்களுக்குச் சென்றது, பல்வேறு மக்களைச் சந்தித்தது என ஏராளமான அனுபவங்கள் தமக்குக் கிட்டியதாக இவர் கூறினார்.

“புதுமையாக ஏதேனும் செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தையும் செய்யும் எந்தச் செயலுக்கும் அர்த்தம் இருக்க வேண்டும் எனும் கருத்தையும் இளையருக்குக் கொண்டுசேர்க்கும் நோக்கில், முழு அனுபவத்தையும் காணொளியாகப் பகிர நினைக்கிறேன்,” என்றார் இவர்.

“என் வாழ்வில் ஒரு தொண்டுக்காக அர்த்தமுள்ள ஒன்றைச் செய்த மனநிறைவு எனக்கும், ஒரு சாகசத்தில் ஈடுபட்டதால் என் மனைவி, குழந்தைகளுக்கு உற்சாகமும் பெருமையும் ஏற்பட்டுள்ளன,” என திரு டோனி கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!