புத்தாண்டுத் தீர்மானங்களும் புதிய தொடக்கமும்

புத்தாண்டு பிறந்துள்ளது. புத்தாண்டு - புதிய தொடக்கம், புதிய அத்தியாயம் என்று உலக அளவில் கருதப்படுகிறது.

ஒவ்வோராண்டும் வாழ்க்கை மாற்றத்தை ஏற்படுத்தும் பழக்க வழக்கங்களை ஏற்படுத்திக்கொள்ளும் ‘புத்தாண்டுத் தீர்மானம்’ எடுக்கும் வழக்கம் பரவலாக இருக்கிறது.

உலக அளவில் முப்பது விழுக்காட்டினர் இவ்வகைத் தீர்மானங்களை எடுத்தாலும், வெறும் ஒன்பது விழுக்காட்டினர் மட்டுமே அதன்படி நடக்கின்றனர் என்கின்றன ஆய்வுகள்.

அதிலும், தீர்மானம் எடுக்க வேண்டிய சமூக அழுத்தம் பெண்களைவிட ஆண்களுக்கு அதிகம் இருப்பதாகத் தெரிகின்றது.

‘சத்தியம் பண்றதே அதை உடைக்குறதுக்குத்தான்’ எனும் திரைப்பட வசனம் போல ஜனவரி ஒன்றாம் நாள் தீர்மானம் எடுப்பவர்களில் 80 விழுக்காட்டினர், பிப்ரவரி மாதத்திலேயே அதனைக் கைவிட்டுவிடுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உடல்நலத்தில் கவனம் செலுத்தும் உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகியவற்றை மேற்கொள்வதை பெரும்பாலோர் தீர்மானமாக எடுக்கின்றனர்.

அடுத்தபடியாக, மனநலம் பேணும் தியானப் பயிற்சி, யோகா, சமூக ஊடகங்களிலிருந்து விலகியிருப்பது அதிகமாக எடுக்கப்படும் தீர்மானங்களாக இருக்கின்றன.

இளையர்கள், புதிதாகப் பணிக்குச் செல்பவர்கள் வரவுசெலவைக் கண்காணிப்பது, உரிய பொருளியல் திட்டம் உள்ளிட்டவற்றை மேற்கொள்கின்றனர்.

பரபரப்பான சூழலில் ஓடிக்கொண்டிருக்கும் சிலர் சமூக வாழ்வை மேம்படுத்தும் வகையில், குடும்பத்தினர், நண்பர்களுடன் நேரம் செலவிடுவது உள்ளிட்டவற்றை தீர்மானமாக ஏற்கின்றனர்.

ஆசிரியரும், கதை சொல்லியுமான அஷ்வாணி அஷ்வத், 32 கூறுகையில், “நான் ஒவ்வோர் ஆண்டும் உடல் எடையைச் குறைப்பது உள்ளிட்ட தீர்மானங்களை மேற்கொள்வேன். ஆனால், இவ்வாண்டு என்னுடைய இலக்குகளை அடைய உதவும் வகையில் ‘விஷன் போர்டு’ எனப்படும் கனவுப் பலகை அமைப்பதை வழக்கமாக்க வேண்டும் என எண்ணியுள்ளேன். இவை என் இலக்குகளை எனக்கே நினைவூட்டும் என நம்புகிறேன்,” என்கிறார்.

எவ்வளவு நாள் கடைப்பிடிக்கிறேன் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்கிறார் அவர்.

“தன்முன்னேற்றத்திற்கான அர்ப்பணிப்பின் மூலம், நேர்மறையான பழக்கவழக்கங்களை வளர்ப்பதையும், என் முன்னால் இருக்கும் வாய்ப்புகளைத் தழுவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளேன்,” என்கிறார் கல்வியாளர் ஹேமா சி கிரிபாலானி, 45.

மீள்திறனை வளர்த்து, தடைகளை படிக்கற்களாகக் கருதி முன்னேற, நேர்மறை எண்ணங்களை விதைத்துக்கொள்ள விரும்புவதாகவும் குடும்பம், நண்பர்கள், சக ஊழியர்களுடன் நேரம் செலவிட்டு பிணைப்புகளை வலுப்படுத்த விரும்புவதாகவும் அவர் சொல்கிறார்.

புத்தாண்டுத் தீர்மானங்கள் குறித்து பகிர்ந்துகொண்ட கௌஷிக் கார்த்திகேயன், “ஒவ்வோர் ஆண்டும் அனைவரையும் போல உடல்எடையைக் குறைப்பது, குறிப்பிட்ட உணவுமுறையைக் கடைப்பிடிப்பது உள்ளிட்டவற்றைத் தீர்மானமாக ஏற்பேன்.

“கடந்த ஆண்டு தினமும் உடற்பயிற்சிக்கூடத்திற்குச் செல்ல வேண்டும் எனத் தீர்மானம் எடுத்தேன். ஐந்து மாதங்கள் கடைப்பிடிக்க முடிந்தது. இவ்வாண்டும் அதே தீர்மானம்தான். ஆண்டு முழுதும் கடைப்பிடிக்க வேண்டும் என எண்ணுகிறேன்,” என்றார் அவர்.

வரைகலைஞரான மிதுலா பழனிவேல் 24, “ சில ஆண்டுகளுக்கு முன்புவரை தீர்மானங்களை மேற்கொண்டு வந்தேன். ஆனால், கடைப்பிடிக்காததால் நிறுத்திவிட்டேன். ஆனால் இவ்வாண்டு கடைப்பிடிக்கக் கூடிய தீர்மானத்தை மேற்கொள்ள எண்ணியுள்ளேன். உடல்நலத்தைப் பேணும் வகையில் நல்ல உணவுமுறை, அன்றாடப் பழக்கங்களையும் மேற்கொள்ள வேண்டும் என எண்ணியுள்ளேன்,” என்கிறார்.

மேலும், “பலரும் கடைப்பிடிக்க இயலாத கடினமான தீர்மானங்களை அவசரமாக மேற்கொண்டு விடுகின்றனர். நடைமுறைக்கேற்ற, செய்ய எளிதானவற்றை மேற்கொண்டு, அதனை நீண்ட காலம் கடைப்பிடித்தால் நல்ல நேர்மறை எண்ணங்களும், செய்து முடித்த மனநிறைவும் கிட்டும். அது மனநலத்தை மேம்படுத்தலாம்,” என்கிறார் மிதுலா.

தொண்டூழியரான மணிகண்டன், ஒரு நாளைக்கு 30 பக்கங்கள் என்ற கணக்கில் ஆண்டுக்கு பத்தாயிரம் பக்கங்கள் படிக்க வேண்டும் என்பது தன் தீர்மானம் என்கிறார். கடந்த ஆண்டும் இதே தீர்மானம் மேற்கொண்டு ஐயாயிரம் பக்கங்களுக்குமேல் படித்ததாகவும், வரும் ஆண்டு பத்தாயிரத்தை எட்ட வேண்டும் என்றும் அவர் எண்ணம் கொண்டுள்ளார்.

மேலும், படிப்பதோடு நிறுத்தி விடாமல் கதை, சிறுகதை எழுத தீர்மானித்துள்ளதாகவும் கூறுகிறார் மணிகண்டன்.

தீர்மானங்கள் எடுத்து அதனைக் கடைப்பிடிக்காமல் விடுவது பகடிப் பொருளாக மாறியிருந்தாலும், அவை புதிய தொடக்கத்தை நோக்கி அடியெடுத்து வைக்க நேர்மறை எண்ணங்களை விதைக்கிறது என்பதில் ஐயமில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!