தெலுங்கானாவில் ஆளும் கட்சி, காங்கிரஸ் இடையே கடும் போட்டி

தேர்தல் வாக்குறுதிகளாக பணம், நகை: அள்ளிவீசும் அரசியல் கட்சிகள்

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் நவம்பர் 30ஆம் தேதி 119 சட்டமன்ற தொகுதிகளிலும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

வசதிகுறைந்தோர், ஆதரவற்றோர், பெண்கள், முதியோர், மாணவர்கள் என கிட்டத்தட்ட எல்லா மக்களுக்கும் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு இலவசங்களையும் சலுகைகளையும் அறிவிக்கத் தொடங்கியுள்ளன.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை சந்திரசேகர ராவ் காப்பி அடித்துள்ளார் என தெலுங்கானா மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரேவந்த் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார்.

அதேபோல், காங்கிரஸ் கொடுக்கும் வாக்குறுதிகள் ‘டிஷ்யூ பேப்பர்கள்’ என்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா விமர்சித்துள்ளார்.

“எங்கள் தேர்தல் வாக்குறுதி வெளியானதும், பாஜ.,வும், காங்கிரசும் பயந்து விரக்தியடைந்தன. தெலுங்கானாவில் பா.ஜ., வைப்புத் தொகையை இழக்கும். காங்கிரஸ் கொடுக்கும் வாக்குறுதிகள் டிஸ்யூ பேப்பர்கள். எங்கள் மாநிலத்தின் நிதி நிலைமையை நாங்கள் புரிந்துகொள்கிறோம். எங்கள் தேர்தல் அறிக்கை ஒரு லட்சிய அறிக்கை அல்ல. ஆனால் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் செய்யக்கூடியது ஆகும்,” என்று செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ள பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சி, மற்ற கட்சிகளைவிட தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

தேர்தலில் பிஆர் எஸ் கட்சி வெற்றி பெற்றால் முதியோர், விதவைகளுக்கான மாத உதவி தொகை ரூ.5,016ஆக உயர்த்தப்படும் என்றும் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளஏழைகளுக்கு கேஸ் சிலிண்டர் ரூ.400க்கு விநியோகம் செய்யப்படும் என்றும் பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவரும், தெலுங்கானா மாநில முதல்வருமான கே. சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.

ஹைதராபாத்தில் உள்ள கட்சித் தலைமை அலுவலகமான தெலங்கானா பவனில் ஞாயிற்றுக்கிழமை கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் அவர் பேசினார்.

ஆசரா திட்டத்தின் கீழ் முதியோர், விதவைகள், யானைக்கால், எய்ட்ஸ் நோயாளிகள், கவுடு பிரிவினர், பீடி தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.2,016 மாத உதவித் தொகை முதல் ஆண்டு ரூ. 3,016 ஆகவும், அதன்பின்னர் ஒவ்வோர் ஆண்டும் ரூ. 500 வீதம் உயர்த்தி, இறுதியாக 5 ஆண்டுகளில் மாதம் ரூ.5,016 வீதம் நிதி உதவி வழங்கப்படும் என்று அவர் கூறினார்.

வறுமை கோட்டிற்கு கீழே உள்ள, ஏறக்குறைய 93 லட்சம் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.5 லட்சம் எல்.ஐ. சி. காப்பீட்டுத் திட்டம், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தற்போது ‘ரைத்து பந்து’ திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரூ.10,000 தொகையானது ரூ.16,000 ஆயிரமாக உயர்வு. வசதி குறைந்த குடும்பத்திற்கும், ஊடகத்தினருக்கும் ரூ. 400 சமையல் கேஸ் சிலிண்டர், இலவச மருத்துவ திட்டத்தின் கீழ் ஒவ்வொருவருக்கும் தனியார் மருத்துவமனைகளில் ரூ.15 லட்சம் வரை இலவச சிகிச்சை, சவுபாக்கியா லட்சுமி திட்டத்தின் கீழ் ஏழைப் பெண்களுக்கு ரூ.3,000 மாத உதவி தொகை, அன்னபூர்ணா திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு மாதா மாதம் ரேஷன் கடைகள் மூலம் உயர் தர அரிசி விநியோகம், மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் ரூ. 4,016 மாத உதவித் தொகை ரூ.6,016 வரை படிப்படியாக உயர்வு என்று பல்வேறு திட்டங்களை அவர் அறிவித்தார்.

அத்துடன், மேலும் ஒரு லட்சம் பேருக்கு 2 படுக்கை அறை கொண்ட இலவச வீடு, வீட்டு மனை உள்ளவர்களுக்கு வீடுகட்ட ரூ. 5 லட்சம், அனாதை குழந்தைகளை அரசே தத்து எடுத்து உயர் கல்வி வரை இலவச கல்வி உதவி போன்ற திட்டங்களையும் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.

அனைத்து வாக்குறுதிகளையும் ஆட்சிக்கு வந்த ஆறு முதல் ஏழு மாதங்களில் நிறைவேற்றுவதாக உறுதியளித்துள்ள அவர்,கடந்த தேர்தல் அறிக்கைகள் குறிப்பிடப்பட்ட 90% சமூக நல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார்.

தெலுங்கானா காங்கிரஸ் கட்சித் தலைவரும் எம்பியுமான ரேவந்த் ரெட்டி, ஹைதராபாத் காந்தி பவனில் திங்கட்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். படம்: இந்திய ஊடகம்

இதற்கிடையே, காங்கிரஸ் கட்சி மகளிர்களுக்கு மாதம் ரூபாய் 2,500 உள்பட பல்வேறு சலுகைகளை வாரி வழங்கி உள்ளது.

தெலங்கானா காங்கிரஸ் கட்சியின் மகாலட்சுமி உறுதி திட்டத்தில் வழங்கப்படும் ரூ.1 லட்சம் ரொக்கத் தொகயையுடன், கூடுதலாக திருமணத்தின்போது தகுதிவாய்ந்த மணமகள்களுக்கு 10 கிராம் தங்கம் வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி குழுவின் தலைவர் ஸ்ரீதர் பாபு கூறியுள்ளார்.

தற்போது தெலுங்கானாவில் பெற்றோரின் வருமானம், மணமகளின் வயது உள்ளிட்ட தகுதிகளின் அடிப்படையில் திருமணத்துக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கும் திட்டம் உள்ளது.

மேலும், மாணவர்களுக்கு இலவச இணைய வசதி உள்ளிட்ட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளையும் அக்கட்சி அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அக்கட்சி முதல் கட்டமாக 55 வேட்பாளர்களை அறிவித்தது. இதில் 11 பேர் புது முகங்களும் ஆறு பெண்களும் இடம்பெற்றுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!