தொண்டனின் தியாகம், தலைவனின் யோகம்

ஒட்டுமொத்த இந்தியாவும் தேர்தல் பிரசார அனலில் மூழ்கி இருக்கிறது.

இந்தியத் தேர்தல் களத்தில் எப்போதுமே அரசியல் தலைவர்களின் பேச்சு மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவது வழக்கம்.

ஆனால் தலைவர்களால் மட்டுமே களத்தில் வெற்றியை வசப்படுத்திவிட இயலாது. அவர்களின் உழைப்பை மிஞ்சக்கூடிய வகையில் தொண்டர்களின் பங்களிப்பும் தேவைப்படும்.

ஒவ்வொரு கட்சியிலும் உள்ள உண்மையான தொண்டர்கள் இரவு, பகல் பாராமல் உழைப்பார்கள். பதாகைகள் வைப்பது, சுவரொட்டி ஒட்டுவது, வீடுவீடாகச் சென்று ஆதரவு கோருவது, கொட்டும் மழை, சுட்டெரிக்கும் வெயில் என்று பாராமல் உழைப்பைக் கொட்டுவர்.

அத்தகைய தொண்டர்கள், பிரசாரக் களத்தில் எவ்வாறு செயல்படுகிறார்கள், எந்த அளவுக்கு உழைக்கிறார்கள் என்பது பலருக்குத் தெரிவதில்லை.

இத்தொண்டர்கள் பெரும்பாலும் தொழிலாளர்களாகவும் உடல் உழைப்பை நம்பியும் உள்ளவர்கள். கிடைக்கும் சொற்ப ஊதியத்தை விட்டுவிட்டு தேர்தல் களப்பணியாற்றும் இவர்களுக்கு அப்படி என்ன கிடைத்துவிடப் போகிறது?

‘தலைவனைத் தாங்கிப்பிடிக்கும் தொண்டன்’:

அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை தேர்தல் களப்பணியாளர்கள், வாக்குப்பதிவுக்கான தேதி அறிவிக்கப்படுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே மாநிலம் முழுவதும் அடையாளம் காணப்படுகிறார்கள்.

மாவட்டந்தோறும் இவ்வாறு சில நூறு தொண்டர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, தேர்தல் சமயத்தில் களமிறக்கப்படுவார்கள்.

சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிரசாரக்களத் தொண்டர்கள் கட்சியைத் தவிர குடும்பம், குழந்தைகள் என வேறு எதுகுறித்தும் கவலைப்படுவதில்லை.

வேட்பாளரின் வெற்றிக்காக உழைப்பது மட்டுமே தனது வேலை என்ற முடிவுடன் களமிறங்குவதே இந்தத் தொண்டர்களின் வேலை. இதற்குத் தேவைப்படும் உழைப்பைக் கொட்ட அவன் தயங்கியதில்லை, தவறியதும் இல்லை.

‘தலைவரைத் தாங்கிப்பிடிக்கும் இந்தத் தொண்டன்’ தேர்தல் களத்தில் பம்பரமாகச் சுழன்று உழைக்கிறான்.

காலை 6 முதல் நள்ளிரவு 12 வரை:

பிரசாரத்துக்காகத் தேர்வாகும் தொண்டர்கள், காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை ஓயாமல் உழைப்பார்கள் என்பது தற்போது 40 வயதைக் கடந்தவர்களுக்கு நன்கு தெரியும்.

தலைவர்கள் முடிந்தவரை குக்கிராமங்களுக்கும் சென்று பிரசாரம் மேற்கொள்வதுண்டு. இல்லையெனில் தலைவர்களின் பிரசார உரைகளாவது அப்பகுதிகளைச் சென்றடையும். கூடவே, கட்சித் தொண்டர்களும் வாக்காளர்களை முற்றுகையிடுவர்.

இந்தத் தொண்டர்களுக்கு கிராமத்தில் வசிக்கும் அனைத்து குடும்பங்கள் குறித்தும் தெரிந்திருக்கும்.

தேர்தல் சமயத்தில் ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியிலும் ஏராளமான தேர்தல் பணிமனைகள் தொடங்கப்பட்டு அங்கும் தொண்டர்கள் பல வேலைகளைக் கவனிப்பர்.

வட்டார அளவில் பொதுமக்கள் முன்வைக்கும் பிரச்சினைகள் குறித்து கட்சித் தலைமையின் கவனத்துக்குக் கொண்டு செல்வது, களப்பணியாளர்களுக்கு உணவு, தங்கும் இடம் ஆகியவற்றை ஏற்பாடு செய்வது இந்தத் தேர்தல் பணிமனைதான்.

வீடுதோறும் சென்று வாக்காளர்களின் பெயர், வயது உள்ளிட்ட விவரங்களை சரி பார்ப்பது, தங்கள் கட்சிக்கு வாக்களிக்கக் கோருவது மட்டுமல்ல, தெருமுனைப் பிரசாரங்களுக்கும் ஏற்பாடுகள் செய்யும் பொறுப்பும் பணிமனையில் உள்ள தொண்டர்களுடையதுதான்.

திருமண மண்டபங்கள், குறைந்த கட்டண தங்குவிடுதிகளில் தொண்டர்கள் தங்க வைக்கப்படுவர். பலர் தேர்தல் பணிமனையில் தலையணைகூட இல்லாமல் படுத்துறங்குவர்.

இவர்களுக்கு நாள்தோறும் அதிகபட்சமாக ஐநூறு ரூபாய் மட்டுமே வழங்கப்படும்.

காலையில் சிற்றுண்டி, மதியம் பிரியாணி, இரவு மீண்டும் சிற்றுண்டி என்று உணவுக்கு குறைவிருக்காது. எனினும் வசதியுள்ள கட்சிகளில் மட்டுமே இந்தக் கவனிப்பு கிட்டும்.

தேர்தல் வேளையில் பிரசாரத்துக்காகச் செல்லும் வழியில் விபத்தில் சிக்கி கை, கால்களை, சில தருணங்களில் உயிரையும் இழந்த தொண்டர்கள் தேர்தலுக்குப் பின்னர் நினைவுகூரப்படுகிறார்களா என்பது அரசியல் நடப்புகளைக் கவனிப்பவர்களுக்குத் தெரிந்திருக்கும்.

‘பிரியாணியும் குவார்டர் மதுவும்’:

“இந்தியாவில் தேர்தல் என்பது ஒரு திருவிழாவாகவே பார்க்கப்படுகிறது. திருவிழாவைப் போல் தேர்தல் களத்திலும் பல சுவாரசியங்கள் இருக்கும்.

“வேட்பாளர் செய்யும் காமெடிக்கு அளவே இல்லை. மக்களைக் கவர்ந்து வாக்குகளைப் பெற அவர்கள் அடிக்கும் லூட்டிகளுக்கும் அளவே இருக்காது.

“வேட்பாளரிடம் கைக்குழந்தைகளைக் கொடுத்து பெயர் சூட்ட வைப்பது ஒரு கூத்து. குழந்தைகளைக் குளிப்பாட்டி வாக்கு சேகரிப்பது, தோசை சுட்டு ஓட்டு கேட்பது, குட்டி கரணம் அடிப்பது, சட்டென்று காலைப் பிடிப்பது எனத் தேர்தல் களத்தில் வேட்பாளர்களைப் பலவிதமாகப் பார்க்க முடியும்.

“ஆனால் இது தொடர்பாக எழும் கடும் விமர்சனங்களைக் கடந்து, தன் கட்சிக் கொடியை உயர்த்திப்பிடித்து வாக்கு சேகரிக்கும் தொண்டனை, வேட்பாளரைவிட பொதுமக்கள் அதிகம் மதிக்கிறார்கள்,” என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

‘பிரியாணியும் குவார்டர் மதுவும்’ கொடுத்தால் தொண்டர்களைத் திரட்டிவிடலாம் என்பதை உண்மையான கட்சிக்காரர்கள் ஏற்றுக்கொள்வதில்லை என்றும் இது உண்மையான தொண்டர்களை இழிவுபடுத்தும் செயல் என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

தாகத்துக்கு தண்ணீர், மர நிழலில் மதிய உணவு:

காலையில் ஐந்து மணிக்கெல்லாம் தூங்கி எழும் தொண்டர்கள் அதன் பிறகு ஓய்வெடுப்பதில்லை.

முதற்கட்டமாக, அன்றைய தினம் தெருமுனைப் பிரசாரத்துக்கான ஏற்பாடுகளை உறுதி செய்யும் அவர்கள், காலை எட்டு மணிக்கெல்லாம் துண்டுப் பிரசுரங்களுடன் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பர்.

பின்னர் கடும் வெயிலில் பிரசார வாகனங்களில் உள்ள ஒலிப்பெருக்கியின் உதவியுடன் தங்கள் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக்கூறுவர். ஆட்டோ, மிதிவண்டிகளில் சென்றும், நீண்ட தூரம் நடந்து சென்றும் வாக்குகள் சேகரிக்கப்படும்.

இடையில், தாகத்துக்குத் தண்ணீர், மோர் அருந்தி, செல்லும் வழியில் மர நிழல் அல்லது இளைப்பாறும் வகையில் உள்ள விளையாட்டுத்திடல், பூங்காக்களில் சில நிமிடங்கள் நின்று மதிய உணவு சாப்பிடும் வாய்ப்புண்டு.

வெயிலில் நடந்தபடியே சிலர் ‘உணவை உள்ளே தள்ளும்’ காட்சியைக் காண முடியும். அதன் பிறகு வெயிலின் கடுமை குறையத் தொடங்கும் நிலையில், பிரசாரம் வேகமெடுக்கவும்.

பல்வேறு கட்சிகளின் பெரும்பாலான நட்சத்திரப் பேச்சாளர்கள் மாலையில்தான் பிரசாரக்களத்துக்கு வருவர்.

இரவு பத்து மணிக்கு மேல் பிரசார உரையாற்ற அனுமதி கிடையாது. எனினும் பல தொண்டர்கள் சைகை மொழியில் பிரசாரம் செய்தபடியே தேர்தல் பணிமனைக்குத் திரும்புவர்.

பத்தாண்டுகளில் நிலைமை நன்கு மாறிவிட்டது:

“காலையில் நான்கு இட்லிகளை விழுங்கிவிட்டு, பின்னர் சுட்டெரிக்கும் வெயிலில் ஒரு பட்டை சோற்றை விழுங்கிவிட்டு, வாக்கு சேகரிக்கும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் இல்லாமல் எந்த வேட்பாளரும் வெற்றி பெற முடியாது.

“ஆனால் கடந்த பத்தாண்டுகளில் நிலைமை நன்கு மாறிவிட்டது. மின்னிலக்க பிரசார முறை அரசியல் கட்சிகளுக்கு வசதியாக உள்ளது. அதனால் வியர்வை சிந்தாமல் வாக்கு சேகரிக்கும் அரசியல்வாதிகள், பிரசார களத்தில் தொண்டர்கள் குறைவாகக் கூடினாலும் கவலைப்படுவதில்லை.

“பல நூறு தொண்டர்கள் மேற்கொள்ளும் பிரசாரத்தை ஒரேயொரு கணினி செய்துவிடுகிறது. வாக்கு சேகரிக்க வாக்காளர்களின் வீட்டுக்கு வெளியே நின்று துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பது குறைந்து, இணையம், சமூக ஊடகங்கள், கைப்பேசிகள் மூலம் ஒரு வீட்டின் வரவேற்பறைக்குள் அரசியல் பிரசாரம் எளிதில் நுழைந்துவிடுகிறது.

“எனினும் தான் நேசிக்கும் தலைவனுக்காக, உணவில்லாவிட்டாலும்கூட, ‘போடுங்கம்மா ஓட்டு.. எங்க சின்னத்தைப் பார்த்து’ என்பதே, இன்றளவும் உண்மைத் தொண்டனின் நிலைப்பாடாக உள்ளது.

“தேர்தலில் தனது கட்சி பெற்ற வெற்றியைக் கொண்டாடும் இந்தத் தொண்டன், பிரசாரத்துக்காக கிடைத்த சொற்ப பணத்தையும் இனிப்பு விநியோகித்து, பட்டாசு வெடித்து செலவிடுகிறான்.

“அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு கட்சியும் வெற்றிபெற்ற வேட்பாளரும் அவனைக் கண்டுகொள்ளப் போவதில்லை. அதைப் பற்றி அவனும் கவலைப்படப் போவதில்லை.

ஏனெனில், தன் வீட்டு அடுப்பு எரிய அவன் தவிப்புடன் ஓடிக் கொண்டிருப்பான்..!

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!