நம் உலகம், நம் வகுப்பறை

இன்றைய நவீனயுகத்தில் இளையர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு தங்கள் திறன்களை வளர்த்துக்கொள்ள முடிகிறது. மேலும், அவர்கள் சமூகத்திலும் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு  வாழ்க்கையை மேலும் அர்த்தமுள்ளதாக்கிக்கொள்ளலாம். அவ்வகையில் இவ்வார இளையர் முரசுக்காக, நால்வர் தங்கள் லட்சியப் பயணத்தைப் பற்றிப் பகிர்ந்துகொள்கின்றனர்.

எங்கும் வாய்ப்புகள், எதிலும் வாய்ப்புகள்

சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தில் தகவல் கட்டமைப்புப் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் இரண்டாம் ஆண்டு மாணவி ஆன் சாஃப்ரின் அலெக்ஸ் சத்யன், 20. படம்: ஆன் சாஃப்ரின்

என் வாழ்க்கைப் பாதையைத் தீர்மானிக்கும் முக்கியமான ஒரு கட்டம் வந்தபோது எனக்கு ஒரே குழப்பம். உயிரியல் சார்ந்த பட்டப்படிப்பை மேற்கொள்ள வேண்டும் என்று பலகாலமாகத் திட்டமிட்டிருந்த நான், இறுதியில் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம் வழங்கும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பட்டப்படிப்பைத் தேர்ந்தெடுத்தேன். 

பல்கலைக்கழகத்தினுள் கால்வைத்த எனக்கு பிரம்மிப்பு ஒருபுறம், பயம் மறுபுறம். ஆனால், எனக்குக் கிடைத்த நண்பர்களால் அந்த அச்சம் நீங்கியது.

இந்தப் பல்கலைக்கழக நாள்களில் நான் கற்றுக்கொண்ட பாடங்கள் பல. முதலில், நம்மைச் சுற்றி வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன என்று புரிந்துகொண்டேன். சிறு வயதிலிருந்தே நான் முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்று எண்ணிய கலை வடிவங்களைச் செய்து பார்க்க வாய்ப்பு கிடைத்தது.

இது எனக்குள் அடங்கியிருந்த புது திறன்களைக் கண்டறிய உதவியது.

அது மட்டுமல்லாமல், சமுதாயத்திற்குத் தொண்டூழியம் செய்யவும் எனக்கு வாய்ப்பு கிட்டியது. பல்கலைக்கழகத்தில் சேர்ந்த முதல் ஆண்டு, நான் ‘புரோஜெக்ட் தூண்’ என்ற சமூகச் சேவை நடவடிக்கையில் சேர்ந்தேன். 

அதன்வழி என்னால் சிறுவர்களுக்கு இலவசமாக பல கலைவடிவங்களைக் கற்பிக்க முடிந்தது. 

எனக்கு அமைந்த அதே அனுபவம்போல், கலைகளின்மூலம் தங்கள் திறன்களைச் சிறார்கள் கண்டறியும் வாய்ப்பை உருவாக்க நானும் ஒரு காரணமாக இருந்ததில் பெருமிதம் கொள்கிறேன். 

இந்தப் புதிய ஆண்டு நான் ‘புரோஜெக்ட் தூண்’ திட்டத்தை வழிநடத்த முன்வந்துள்ளேன்.
எனக்குத் தமிழ்மொழி மீது உள்ள பற்று, பல்கலைக்கழகத்தில் சேர்ந்தபின் வெகுவாக அதிகரித்துள்ளது. முதல் ஆண்டிலேயே ‘தமிழா’ என்ற இளையர்க் குழுவில் நான் சேர்ந்தேன். 

இந்த ஆண்டு நான் இக்குழுவின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளேன். எனது குழுவுடன் மொழி வளர்ச்சி பற்றிய விழிப்புணர்வை பரப்புவதையும் தமிழ் சமூகத்திற்குச் சிறந்த சேவை புரிவதையும் குறிக்கோளாகக் கொண்டுள்ளேன்.

புதிய தொடக்கம் என்று எண்ணி அஞ்சிய நான், இத்தனை வாய்ப்புகள் வாய்த்துள்ளனவே என்று எண்ணி இன்று மகிழ்கிறேன்.

இணையமும் ஓர் ஆசான்

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் முதலாம் ஆண்டு மாணவர் சு.கார்த்திகேயன், 22. படம்: சு. கார்த்திகேயன்

கல்வியின் முக்கியத்துவம் மாறவில்லை என்றாலும், கல்வி கற்கும் முறைகள் காலத்திற்கேற்ப மாறிக்கொண்டே வருகின்றன. பள்ளிக்கூடங்களில் ஆசிரியரின் மூலம் பாடங்கள் நமக்கு புகட்டப்பட்ட காலம் சென்று, இப்பொழுது இணையத்தின் வழி உலகப் பாடங்களை நாம் அறிகிறோம்.  

இன்றைய காலகட்டத்தில் பள்ளியில் கற்றுத்தரப்படும் பாடங்களுடன், இளையர்கள் பள்ளிக்கு அப்பாற்பட்ட வேறு பல திறன்களை வளர்த்துக்கொள்ள முயல்வதைக் காண முடிகிறது.   

நானும் சில மாதங்களுக்கு முன் தேசிய சேவையில் இருந்தபோது இதைப் புரிந்துகொண்டேன். என்னுடன் சேவையாற்றிக்கொண்டிருந்த மற்ற நண்பர்கள், வாரயிறுதியில் கணினிக் குறீயிட்டுப் பாடங்கள், வணிகம் அல்லது நிதி நிர்வாகம் சார்ந்த பாடங்கள் ஆகியவற்றைப் பயின்றுகொண்டிருந்தனர். 

தேசிய சேவை முடிந்த பிறகு அவர்கள் தாங்கள் கற்றுக்கொண்ட இந்தப் பாடங்களின் மூலம் வேலைவாய்ப்புகளைத் தேடிக்கொள்வர் என்று என்னிடம் விளக்கினர். இதில் அடங்கியுள்ள பலன்களால் நானும் ஈர்க்கப்பட்டேன். 

அத்துடன் தங்களுடைய வரவுசெலவு கணக்குகளை நுட்பமாகவும் கவனித்துக்கொள்ளும் திறனைப் பெற்றனர். பள்ளியில் இதுபோன்ற திறன்கள் கற்றுத்தரப்படவில்லை என்றாலும் இணையத்தில் சுயமாக இப்பாடங்களைப் பயிலும் சூழல் இப்போது உண்டு. 

அவர்களைப் போல நானும் கணினிக் குறியீட்டுப் பாடம் ஒன்றைப் பயிலத் தொடங்கினேன். இத்திறனை இன்று பல வேலையிடங்கள் எதிர்பார்ப்பதால் நான் இப்பாடத்தை என்னுடைய வாரயிறுதிகளில் மேற்கொள்ள முடிவெடுத்திருந்தேன். இந்த பாடத்தின் மூலம் எவ்வாறு இணைய அம்சங்களை நானே சுயமாக உருவாக்கிப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதைக் கற்றுக்கொண்டேன்.

இதுபோன்ற குறுகியகால பாடங்கள் பல இணையத்தில் உள்ளன. கணினி, நிதி சார்ந்தவை ஆகியவற்றுடன் பல துறைகளையொட்டிய பாடங்கள் இருக்கின்றன. சமூக வலைத்தள விளம்பரம், காணொளித் தொகுத்தல் போன்ற திறன்களையும் ஒருவர் பெறலாம்.

பள்ளியில் படித்த பாடங்களை மட்டுமே சார்ந்திராமல் விருப்பமான ஒன்றைப் படித்து, அதற்கேற்ப வேலையையும் எதிர்காலத் திட்டத்தையும் ஒருவர் அமைத்துக்கொள்ளக்கூடிய ஆற்றல் இன்று நமக்குக் கிடைத்துள்ளது ஒரு வரம் என்று கருதுகிறேன்.

சமூகத்திற்கு ஆதரவுக்கரம் நீட்டுவது நம் கடமை

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் தொழிலியல் கட்டமைப்புப் பொறியியல் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் முதலாம் ஆண்டு மாணவர் ராகவேந்திர பிரசாத் சரவணன், 21.  படம்: ராகவேந்திர பிரசாத் சரவணன்

பல இன மக்கள் வாழும் சிங்கப்பூரில் ஒன்றுபட்ட உணர்வோடு வாழ்வது அவசியமானது. சிங்கை வரலாற்றில் ஏற்பட்ட இனக் கலவரங்களின் அடிப்படை காரணமே வேற்றுமைகளைப் புரிந்து நடந்துகொள்ளத் தவறியதுதான். 

அதனால், பள்ளிப் பருவத்திலிருந்தே இன நல்லிணக்கத்தின் அவசியம் பற்றி ஆசிரியர்கள் கற்பிக்கிறார்கள். ஆனால் மாணவர்களின் வாழ்வில் இன்றைய சமூக ஊடகங்கள் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. 

ஆசிரியர் கூறுவதைவிட சமூக ஊடகங்கள் பரப்பும் கருத்துகளை வேதவாக்காகச் சிலர் கருதுகின்றனர். பல கருத்துப் பரிமாற்றங்கள் இத்தளங்களில் நடைபெறுகின்றன. 

நல்லதுகெட்டதைப் பகுத்தறிந்து செயல்படும் பக்குவம் எல்லா மாணவர்களிடத்திலும் இருந்துவிடுவதில்லை. 

அதனால், இதைத் தவிர்ப்பதற்குச் சமூக ஊடகங்களில் நல்ல கருத்துகளைப் பரிமாறும் பொறுப்பு என்னைப் போன்ற இளையர்களுக்கு இருக்கிறது. இனவெறியைத் தூண்டும் கருத்துகள் பகிரப்படுவதை முறியடிக்கும் முயற்சியாக, பல இனங்களுக்கிடையே நிலவும் ஒற்றுமைவேற்றுமைகளை விளக்கலாம். இதனை ‘டிக்டாக்’ அல்லது ‘யூடியூப்’ தளங்களைப் பயன்படுத்திச் சிறுசிறு காணொளிப் பதிவுகள் மூலம் எளியமுறையில் கொண்டுசெல்லலாம். 

கல்வியில் தேர்ச்சி அடைய வேண்டும் என்ற வேட்கையில் மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுவதும் ஒரு கவலைக்குரிய பிரச்சினையாக மாறியுள்ளது. பெற்றோர், ஆசிரியர்களுடைய எதிர்பார்ப்புகளும் இதில் சேர்ந்துகொள்ளும்போது மாணவர்களுக்கு அழுத்தம் ஏற்படுகிறது. 

பிரச்சினை என்று சொன்னால் பிறர் நம்மை ஏளனம் செய்வார்கள், நாம் பலவீனமானவர்கள் என்று நினைப்பார்கள் என எண்ணிச் சில மாணவர்கள் தங்களின் மன உளைச்சலை வெளிப்படுத்துவதில்லை. 

இன்று பல பள்ளிகள் தங்கள் முன்னாள் மாணவர்களோடு இணைந்து ஒரு சங்கத்தை உருவாக்கி வருகின்றன. அவை பள்ளிப் பாடங்களிலிருந்து இணைப்பாட நடவடிக்கை வரை மாணவர்களுக்கு ஆதரவு வழங்குகின்றன. ஏனெனில், முன்னாள் மாணவர்களால் இன்றைய மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுடன் எளிதில்  தொடர்புபடுத்திக்கொண்டு  சிறந்த தீர்வுகளை வழங்க முடியும். 

இந்த முயற்சியில் நானும் இறங்கியுள்ளேன். என் உயர்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தில் சேர்ந்து என்னால் ஆன உதவியைச் செய்து வருகிறேன். சமூகத்திற்கு உதவுகிறோம் என்ற மனநிறைவும் இதன்வழி எனக்குக் கிடைக்கிறது.

உறுதியற்ற வாழ்க்கைச் சூழலில் மன உறுதி முக்கியம்

சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம் - லண்டன் பல்கலைக்கழகத்தில் அனைத்துலக உறவுகள் தொடர்பான பட்டப்படிப்பை மேற்கொள்ளும் முதலாம் ஆண்டு மாணவி கிருஸ்மிதா ஷிவ் ராம், 19. படம்: கிருஸ்மிதா ஷிவ் ராம்

சிறுவயதில் இருந்து நான் தமிழாசிரியர் ஆவேன் என்றுதான் திட்டமிட்டிருந்தேன். என்னுடைய பெற்றோரும் அதே கனவுடன் இருந்தனர். 

ஆனால், நான் வேறு துறையில் என் பல்கலைக்கழகப் படிப்பைத் துவங்கினேன். அனைத்துலக உறவுகள் என்ற அரசியல் சார்ந்த படிப்பை மேற்கொள்ளும் சூழல் ஏற்பட்டது. 

படிக்கப் படிக்க ஆர்வத்தைத் தூண்டும் ஒரு பாடமாக இது அமைந்தது. மேலும், என்னுடைய தாய்நாடான சிங்கப்பூருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எனக்குள் எப்பொழுதுமே ஒரு வேட்கை. 

நான் வளர்ந்து சிங்கைக்கு எந்த வகையிலாவது தொண்டு செய்ய வேண்டும் என்றிருந்தபோது சிங்கப்பூரின் தூதுவராகப் பணியாற்றுவது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் என்று தோன்றியது. அதற்கு இந்தப் பட்டப்படிப்பு பெரிதும் கைகொடுக்கும் என்று நம்புகிறேன். 

ஆனால், எந்தத் துறையில் இருந்தாலும் நாம் நம் தாய்நாட்டையும் சரி, தாய்மொழியையும் சரி, மறந்துவிடக்கூடாது. 

அவ்வகையில் தமிழை விட்டுவிடுவேனோ என்ற ஒரு பயமும் என்னுள் உதயமானது. 

சிங்கப்பூரில் உள்ள பல தமிழ்மொழி அமைப்புகள் நடத்தும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அங்குள்ள மற்ற தமிழர்களுடன் உரையாடுவதில் நான் ஆர்வம் கொண்டேன். 

வரும் தலைமுறையினர் நான் அனுபவித்த அதே சிறந்த அனுபவங்களைப் பெற்று சிங்கப்பூரை நேசிக்க வேண்டும் என விரும்புகிறேன். 

அதற்கு என் கல்வியும் என் தமிழார்வமும் உதவும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளேன்.

வாழ்க்கை நமக்கு இதைத்தான் அளிக்கும் என்று உறுதியாக நம்மால் சொல்லிவிட முடியாது. எதை அளித்தாலும் அதனை ஏற்றுக்கொண்டு அந்த நிலையிலிருந்து அதற்கடுத்த நிலைக்கு செல்வதில் முனைப்புடன் செயல்பட வேண்டும்.

கடல் அலை போன்றது வாழ்க்கை. அது நம்மை இங்கும் அங்கும் இழுத்துச் செல்லும். சுமுகமாக நீந்தவும் எதிர்நீச்சல் போடவும் நாம் அறிந்திருத்தல் அவசியம்.

தொகுப்பு: ச.ஐஸ்வரியா

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!