அனைத்துலகத் திறன் போட்டியில் மேத்யூ

தொழில்நுட்பக் கல்வி கழகத்திலிருந்து பலதுறைத் தொழிற்கல்லூரிக்கு அடியெடுத்து வைத்த மேத்யூ ஃபிரான்சிஸ் தனராஜு, 23, இவ்வாண்டு செப்டம்பரில் பிரான்சின் லியோன் நகரில் நடைபெறவிருக்கும் அனைத்துலகத் திறன் போட்டியில் பங்கேற்கவுள்ளார்.

இயக்கவியல் பிரிவில் போட்டியிடவிருக்கும் அவர், தன்னுடன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் பயிலும் மற்றொரு மாணவருடன் கைகோத்து குழுவாக போட்டியில் கலந்துகொள்ளவுள்ளார்.

ஐந்து நாள் போட்டியில், 65 நாடுகளைச் சேர்ந்த இளையர்களை எதிர்த்துப் போட்டியிடும் விறுவிறுப்பான சூழலில் ஒரு கை பார்த்திட ஆயத்தமாக உள்ளார் மேத்யூ,

“இந்தப் பிரத்தியேகமான அனைத்துலகப் போட்டியில் பங்குகொள்ள வாய்ப்பு கிட்டியதில் நான் மிகவும் பெருமையாக உள்ளேன். போட்டியில் கலந்துகொள்வதன் மூலம் எனக்கு வருங்காலத்தில் பல கதவுகள் திறக்கப்படும்,” என்று அவர் நம்பிக்கையுடன் கூறினார்.

தற்போது தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு இயந்திரவியல் பொறியியல் மாணவரான மேத்யூ, இதுவரை கல்வியில் சிறப்புத் தேர்ச்சி கண்டு மும்முறை பொறியியல் பிரிவில் தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரி உபகாரச் சம்பளத்தையும் பெற்றுள்ளார்.

தொழில்நுட்பக் கல்வி கழகத்தில் படிக்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் பலதுறைத் தொழிற்கல்லூரியில் சேர கல்வியில் சிறப்பாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

குடும்பப் பொறுப்புகளைக் கையாள்வதோடு வீட்டில் வேலைக்குச் செல்பவரும் தம் தந்தை என்ற மேத்யூ, “வாழ்க்கையில் முன்னேறுவதற்கு உந்துசக்தியாக இருப்பது எனது தந்தையே. அவரை முன்னுதாரணமாகக் கொண்டு நான் உச்சம் தொட வேண்டும்,” என்றார்.

தொழில்நுட்பக் கல்வி கழகத்தில் இயந்திரவியல் பொறியியல் பயின்றபோது மேத்யூவுக்கு சிறிதளவு மட்டுமே பாடத்தில் நாட்டம் இருந்தது.

நாளடைவில் அப்பாடம் சார்ந்த திட்டங்களில் ஈடுபடத் தொடங்கிய பின்னர், உயர் கல்வி பயின்றால் அது இயந்திரவியல் பொறியியலில் மட்டும்தான் இருக்க வேண்டும் என்ற திண்ணமான முடிவுக்கு வந்தார் மேத்யூ.

பொறியியல் பாடத்தில் பல உட்கணங்கள் உள்ளன. அதில் மின்னணுவியலில் தனக்கு மிகுந்த நாட்டம் இருப்பதாக பகிர்ந்த மேத்யூ, போட்டி தொடங்குவதற்கு முன்பு, மார்ச் மாதத்திலிருந்து பல பயிற்சி அமர்வுகளுக்குச் செல்ல வேண்டும்.

பாடங்களில் கற்பிக்கப்படும் திறன்களை வைத்து போட்டிக்குத் தயாராகும் மேத்யூ, “நாங்கள் பிரான்சில் நடக்கவிருக்கும் போட்டியில் இயந்திரப் பாகங்களை சரியான முறையில் இணைக்க வேண்டும்.

ஆனால், போட்டி அவ்வளவு எளிதாக இருக்காது. எங்களுக்கு மூன்று மணி நேரம் வழங்கப்படும். இயந்திரவியல் பிரச்சினையை நன்கு ஆராய்ந்து அதற்கான தீர்வை கண்டுபிடித்து பாகங்களை இணைக்க வேண்டும்,” என்று சொன்னார்.

போட்டி பற்றி கேள்விப்பட்டபோது இதன் மூலம் பயன் காண விரும்பிய மேத்யூ, தகுதிச் சுற்றுகளில் சிறப்பாக செய்த பின்னர் பிரான்சில் நடைபெறவிருக்கும் அனைத்துலப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

பள்ளிப் பாடங்களுக்கு அப்பாற்பட்டு நேரத்தை நன்கு வகுத்து போட்டிக்குத் தயாராகுவதில் கவனம் செலுத்திவரும் மேத்யூ, இதற்காக பல நிறுவனங்களுடன் சேர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

பலதுறைத் தொழிற்கல்லூரியில் பயிலும் மாணவர்கள் வழக்கமாக இறுதியாண்டுகளில் வேலை பயிற்சிகளை மேற்கொள்வார்கள்.

போட்டியில் பங்கேற்பதால் அந்த வாய்ப்பு மேத்யூவுக்கு கைசேராமல் போனாலும், பலதுறைத் தொழிற்கல்லூரி முடித்த பின் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் பயிலும் இலக்குடன் இருக்கிறார் மேத்யூ.

“நான் பல்கலைக்கழக படிப்பு முடித்த பின்னர் மதிப்புமிக்க சில பொறியியல் நிறுவனங்களில் பணிபுரிய முனைப்புடன் இருக்கிறேன். தொழில்நுட்பக் கல்வி கழக மாணவர்கள் துவண்டுபோக வேண்டாம். உங்களுக்கு எந்தப் பாடத்தில் ஆர்வம் இருக்கிறதோ அதில் மட்டும் கவனம் செலுத்தி கல்வியில் முழுமையான தேர்ச்சியடைய விழையுங்கள்,” என்று அவர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!