சிங்கப்பூரின் மதிப்புமிகு மொழிபெயர்ப்பாளர் ஆ.பழனியப்பன் காலமானார்

சிங்கப்பூரின் மதிப்புமிகு நாடாளுமன்ற மொழிபெயர்ப்பாளரும் மூத்த சமூக சேவையாளருமான ஆ.பழனியப்பன் இன்று மாலை அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 73.

நாடாளுமன்றக் கூட்டங்கள் தொடங்கி, வரவுசெலவுத் திட்டம், பிரதமரின் தேசிய தினப் பேரணி உரை என முக்கிய அரசாங்க நிகழ்வுகளில் நேரடி மொழிபெயர்ப்பு, உரைகள், பேச்சுகளின் எழுத்துபூர்வ மொழிபெயர்ப்பு, அமைச்சுகளின் புதுசொல்லாக்கம் என அரசாங்க மொழிபெயர்ப்புத் துறையில் கடந்த 30 ஆண்டுகளாக பல்வேறு பணிகளை ஆற்றியிருக்கும் திரு பழனியப்பன் நாடாளுமன்றத்தின் மொழிச் சேவைகள் பிரிவு தலைமை வல்லுநராக 2020 ஜூலை மாதம் ஓய்வுபெற்றார். 

ஓய்வு பெற்ற பின்னர் சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழக விரிவுரையாளர், தேசிய கல்விக்கழக விரிவுரையாளர் என கல்வியாளராகப் பணிபுரிந்த பழனியப்பன், தனிப்பட்ட மொழி பெயர்ப்பு சேவையையும் நடத்திவந்தார்.

தேசிய மொழிபெயர்ப்புக் குழுவின் தமிழ்மொழிவளக் குழுவின் தலைவர், வளர் தமிழ் இயக்க செயற்குழு உறுப்பினர்,  என்று தமிழ் மொழி சார்ந்த பல்வேறு பணிகளை ஆற்றியிருக்கும் அவர் சமய, சமூகத் துறைகளிலும் அளப்பரிய பங்காற்றியுள்ளார்.

1957ல் தொடங்கப்பட்ட சிங்கப்பூர் தமிழ் இளையர் மன்றத்தில் 1967 இருந்து 1982 வரை உறுப்பினராக இருந்த அவர், தன்னை முன்னிலைப்படுத்தாத தன்னலமற்ற சமூகப் பணியாளர் என்று அவரது பள்ளிக்கால நண்பரான முனைவர் அ.வீரமணி கூறினார்.

எல்லாரையும் அரவணைத்துச் செல்லும் பன்முகத் திறனாளரான திரு பழனியப்பனின் இழப்பு சிங்கப்பூர் தமிழ்ச் சமூகத்திற்குப் பேரிழப்பு என பல சமூகத்தலைவர்களும் வருத்தம் தெரிவித்தனர்.

“சிங்கப்பூர் தமிழ்ச் சமூகம் அதன் முக்கிய அங்கத்தின் ஒருவரை இழந்துவிட்டது என வருந்தினார்,” மூத்த தமிழறிஞரான டாக்டர் சுப. திண்ணப்பன்.

“1982ஆம் ஆண்டு நான் சிங்கப்பூர் வந்தது முதல் பழனியப்பனுடன் அணுக்கமான நட்பு எனக்கு இருந்தது. யாருக்கும் இல்லை என்று சொல்லாமல் உதவும் நல்லுள்ளம் படைத்தவர் அவர். சிங்கப்பூரில் தமிழ்க் கலைச் சொற்களை உருவாக்கி தமிழ் அகராதியை உருவாக்கியதில் முதன்மைப் பணியாற்றியவர் அவர்,” என்றார் அவர்.

அக்கால கட்டத்தில் இவர் தலைமை தாங்கிய  குழு தயாரித்த சொல்வளக் கையேடு என்ற அரிய பொக்கிஷம் இன்றும் வளர் தமிழ் இயக்க வலை தளத்தில் காணலாம். அதன் இரண்டாம் பாகத்தையும் வெளியிட வேண்டும் என்று அடிக்கடி கூறுவார். 

" என்னைப் போன்றவர்கள் அவரின் தேசிய நாள் மற்றும் நாடாளுமன்ற நேரடி தமிழ் மொழிபெயர்ப்புகளைக் கேட்டுதான் வளர்ந்தோம்,” என்று வளர்தமிழ் இயக்கத்தில் அவரோடு பணிபுரிந்த காலங்களை நினைவுகூர்ந்தார் இயக்கத்தின் முன்னாள் தலைவரான திரு ஆர்.ராஜாராம்

செய்தி மொழிபெயர்ப்புடன் இலக்கிய மொழிபெயர்ப்பிலும் ஈடுபாடு கொண்டிருந்த இவர், முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதனின் ஆங்கில நூலைத் தமிழில் ‘உழைப்பின் உயர்வு’ என்ற தலைப்பில் மொழியாக்கம் செய்துள்ளார். அதேபோல் தொடக்ககாலம் முதல் தமிழ்க் கவிதைகள், சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். 

சமூக மன்றம், வசிப்போர் குழு என சமூகப் பணிகளிலும் நீண்ட காலம் சேவை புரிந்துள்ள திரு பழனியப்பன் திருமணப் பதிவாளராகவும் ஆயிரக்கணக்கான திருமணங்களை தமிழில் உறுதிமொழி எடுக்க வைத்து நடத்திவைத்துள்ளார்.

சமயப் பணிகளில் தீவிர ஈடுபாடு கொண்ட திரு பழனியப்பன் இந்து அறக்கட்டளை வாரியத்தின் செயலாளராக 1980களில் பணியாற்றினார். கிருஷ்ணன் கோவில் உறுப்பினராகவும் சமயப் பணி ஆற்றியுள்ள திரு பழனியப்பன், சிங்கப்பூரின் குடமுழுக்கு விழாக்களில் பலவற்றிலும் முக்கிய அறிவிப்பாளராகப் பணிபுரிந்தவர். பழனியப்பன் ஈடுபடாத, அவரது கட்டுரை இடம்பெறாத குடமுழுக்கு மலர்களே இல்லை எனலாம்.

“திருமுறை மாநாட்டின் தூணாக விளங்கியவர் பழனியப்பன்,” என்று புகழாரம் சூட்டினார் டாக்டர் சுப. திண்ணப்பன்.

தமிழ் மொழி வளர்ச்சியிலும் தொடர்ச்சியிலும் அக்கறையுடன் நீண்ட காலப் பங்கை ஆற்றியிருக்கும் திரு பழனியப்பன், இணையத்தில் தமிழை முன்னெடுத்த முன்னோடிகளில் ஒருவர். தமிழ் இணைய மாநாடு உள்ள பல்வேறு மாநாடுகள், கருத்தரங்களில் தொழில்நுட்பத் தமிழ் குறித்த கட்டுரைகள் படித்துள்ளார். தொடக்ககால இணைய உரையாடல்களை முன்னெடுத்தவர்களில் ஒருவரான இவர், வலைப்பூ, வலைப்பக்கங்களிலும் ஏராளமான எழுதியுள்ளார். 

பழனியப்பன் இல்லாத குழுவே இல்லை என்று சொல்லுமளவுக்கு ஒரு காலகட்டத்தில் சிங்கப்பூரின் முக்கிய தமிழ் மொழி சார்ந்த பெரும்பாலான குழுக்களில் அவர் இடம்பெற்றிருந்தார்.

"சிறு வயதிலிருந்து எனக்குத் தமிழ் சொல்லிக்கொடுத்தது அவர்தான். எனக்கு தந்தையாக, ஆசானாக, நல்லதே நினைப்பவராக அவர் விளங்கினார். இப்போது நான் செய்துவரும் பல பணிகளுக்கு அவர் தான் அடித்தளம் அமைத்தார்,” என்று கண்ணீர் மல்க நினைவுகளைப் பகிர்ந்தார் திரு பழனியப்பனுடன் நாடாளுமன்றத்தில் பணியாற்றிய அரசாங்க ஊழியர் திரு எஸ்.என்.வி நாராயணன், 39. 

மனைவி இரு மகன்கள், மகள், ஒரு பேரக்குழந்தையை அவர் விட்டுச் சென்றுள்ளார்.

அவரது நல்லுடல் புளோக் 117 பீஷான் ஸ்திரீட் 12 #23-29 முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அவரின் இறுதிச் சடங்குகள் நாளை வெள்ளிக்கிழமை நடைபெறும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!