சக வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவி வருபவருக்கு விருது

பொங்கோலில் இருக்கும் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதி ஒன்றில் திரு லெட்சுமணன் முரளிதரன், 49, மிக பரிச்சயமான முகம். சக வெளிநாட்டு ஊழியர்களுக்கு எந்தப் பிரச்சினை எழுந்தாலும் அதைத் தீர்க்க கூடியவர் இவர்.

தன்னுடன் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள், ஒரே விடுதியில் தங்கும் ஊழியர்கள் ஆகியோருக்கு அப்பாற்பட்டு திரு முரளிதரன் முன்பின் அறிமுகம் இல்லாத வெளிநாட்டு ஊழியர்களுக்கும் உதவிக்கரம் நீட்டி வருகிறார்.

புதன்கிழமை மே தினம். பணம் ஈட்ட தங்கள் குடும்பங்களை விட்டுப் பிரிந்து சிங்கப்பூரின் நிர்மாணத்திற்காக அயராமல் உழைக்கும் கரங்களில் பெரிய விகிதம் வெளிநாட்டு ஊழியர்களே.

கொவிட்-19 நோய்ப்பரவல் காலத்தில் சவால்கள் தலைதூக்கியபோதும் தன்னலம் கருதாமல் வெவ்வேறு வழிகளில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு தன்னால் இயன்றவரை உதவி செய்ததற்காக திரு முரளிதரனுக்கு தொழிலாளர் இயக்கத்தின் பங்குதாரர் எனும் பெயரில் தேசிய தொழிற்சங்க காங்கிரசின் மே தின விருது கிடைக்கவுள்ளது.

சிங்கப்பூரில் கடந்த 28 ஆண்டுகளாக கட்டுமானத் துறையில் பணியாற்றி வரும் திரு முரளிதரன், தனது தங்குவிடுதியில் வசிக்கும் ஊழியர்களுக்கு மூத்த சகோதரர்போல உள்ளார்.

கொள்ளைநோய் காலத்தில் ஊழியர்கள் விடுதியில் முடங்கியபோது திரு முரளிதரன் அவர்களுக்கு மூன்று வேளை உணவுப் பொட்டலங்களை விநியோகிக்கும் பொறுப்பை ஏற்றார். தன்னுடன் சேர்ந்துகொள்ளுமாறு பிற ஊழியர்களுக்கு ஊக்கமளித்தார்.

“இது ஒரு தொண்டூழிய சேவை போன்றது. சம்பளத்தை எதிர்பார்த்து உதவி செய்ய வராதீர்கள். பிறருக்கு உதவி செய்ய தோன்றினால் மட்டும் என்னுடன் வாருங்கள்,” என்று ஊழியர்களிடம் கூறியதை திரு முரளிதரன் பகிர்ந்தார்.

அன்றிலிருந்து இவரை நாடாத ஊழியர்களே இல்லை. சம்பளப் பிரச்சனை, விபத்து, உயிரை மாய்த்துக்கொண்ட ஊழியர்களின் குடும்பங்களுக்கு ஆதரவு, மோசடிகளில் சிக்கிக்கொண்டவர்கள் போன்றவர்களுக்கு திரு முரளிதரன் உதவி வந்துள்ளார்.

ஒருமுறை இணைய மோசடியில் சிக்கிக்கொண்ட வெளிநாட்டு ஊழியர் ஒருவரை மனவுளைச்சலிலிருந்து காப்பாற்ற உதவியதை திரு முரளிதரன் நினைவுகூர்ந்தார்.

“அந்த ஊழியர் $3,000க்குமேல் மோசடியில் இழந்துவிட்டார். அவர் செய்வதறியாமல் தவித்தபோது நான் எனக்குத் தெரிந்த காவல்துறை அதிகாரியை தொடர்புகொண்டு அவருக்கு உதவினேன். பின்னர் அந்த ஊழியரின் சம்பளத்தைச் சரியான நேரத்தில் வழங்க உதவினேன்,” என்றார் திரு முரளிதரன்.

அதோடு, மோசடி குறித்து ஊழியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சிகளிலும் இவர் இறங்கியுள்ளார்.

கொவிட்-19 காலகட்டத்தில் இந்தியாவில் இருக்கும் மனைவியைப் புற்றுநோய்க்குப் பறிகொடுத்த வெளிநாட்டு ஊழியர் ஒருவர் தாயகம் திரும்ப முடியாமல் தவித்தபோது, திரு முரளிதரன் உடனடியாக மனிதவள அமைச்சைத் தொடர்புகொண்டு அந்த ஊழியர் இந்தியா செல்வதற்கான ஏற்பாடுகளைத் செய்தார்.

மற்றொரு நிறுவனத்தில் பணிபுரியும் 17 பங்ளாதேஷ் ஊழியர்களுக்கு கொவிட்-19 காலத்தில் சம்பளம் சரியாக வழங்கப்படவில்லை. அவர்களைச் சந்தித்து பேசிய திரு முரளிதரன், பிரச்சினையை மனிதவள அமைச்சிடம் எடுத்துச் சென்றார்.

வேலை அனுமதிச்சீட்டு வைத்துள்ள திரு முரளிதரன், குடும்பச் சூழல் காரணமாக தனது 21வது வயதில் சிங்கப்பூருக்கு வந்தார். மற்ற வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவுவது தனது கடமை என்று கூறும் இவர், பதிலுக்கு ஊழியர்கள் தன் மீது நம்பிக்கை வைத்திருந்தாலே போதும் என்றார்.

விருது கிடைக்கவிருக்கும் மகிழ்ச்சியில் திளைத்த இவர், “நான் உதவியதற்காக சில ஊழியர்கள் எனக்குப் பதிலுக்கு ஏதாவது செய்ய பார்ப்பார்கள். ஆனால், நான் எதையும் எதிர்பார்ப்பதில்லை. அவர்கள் என் மீது நம்பிக்கை வைத்தால் மட்டும் போதும். அதுவே எனக்கு ஒரு வெகுமதி,” என்று இவர் சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!