கைது செய்யப்பட்ட ஆறு மாதங்களில் ஈஸ்வரன் மீது குற்றச்சாட்டுகள்

முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் மீது ஜனவரி 18ஆம் தேதியன்று 27 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. ‘ஹேரி போட்டர் அண்ட் தி கர்ஸ்ட் சைல்ட்’ போன்ற நிகழ்ச்சிகளுக்கான நுழைவுச்சீட்டுகளை செல்வந்தர் ஓங் பெங் செங்கிடமிருந்து பெற்றுக்கொண்டதும் அதில் அடங்கும்.

2023ஆம் ஆண்டு ஈஸ்வரன் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டு ஆறு மாதங்களில் அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

2023 மே 29ஆம் தேதி: அப்போது போக்குவரத்து அமைச்சராகப் பதவி வகித்த ஈஸ்வரன் தொடர்பாகக் கிடைத்த சில தகவல்கள் குறித்து பிரதமர் லீ சியன் லூங்கிடம் லஞ்ச, ஊழல் புலனாய்வுப் பிரிவு தெரிவித்தது. இன்னொரு விவகாரம் குறித்து விசாரணை நடத்திக்கொண்டிருந்தபோது லஞ்ச, ஊழல் புலனாய்வுப் பிரிவுக்கு ஈஸ்வரன் தொடர்பான தகவல் கிடைத்தது.

ஜூலை 5ஆம் தேதி: விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டவை குறித்து பிரதமர் லீயிடம் லஞ்ச, ஊழல் புலனாய்வுப் பிரிவின் இயக்குநர் தெரிவித்தார். ஈஸ்வரனிடம் அதிகாரபூர்வமாக விசாரணை நடத்த அவர் அனுமதி கோரினார்.

ஜூலை 6ஆம் தேதி: ஈஸ்வரனிடம் விசாரணை நடத்த பிரதமர் லீ அனுமதி வழங்கினார்.

ஜூலை 11ஆம் தேதி: ஈஸ்வரன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக ஹோட்டல் பிராபர்ட்டிஸ் லிமிடெட்டின் நிறுவனரும் நிர்வாக இயக்குநருமான ஓங் பெங் செங்கும் கைது செய்யப்பட்டார். இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

ஜூலை 12ஆம் தேதி: ஈஸ்வரன் விசாரணையில் உதவி வருவதாக லஞ்ச, ஊழல் புலனாய்வுப் பிரிவு அறிக்கை வெளியிட்டது. இந்த விவகாரம் குறித்து பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

விசாரணை நிறைவுபெறும்வரை ஈஸ்வரனை விடுப்பில் போகச் சொன்னதாகப் பிரதமர் லீ அறிக்கை வெளியிட்டார். தற்காலிக போக்குவரத்து அமைச்சராக மூத்த துணை அமைச்சர் சீ ஹொங் டாட் பொறுப்பேற்பதாகப் பிரதமர் லீ அறிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து அரசாங்கம் வெளிப்படையாக நடந்துகொள்ளும் என்றும் மக்கள் செயல் கட்சிக்கு அது அவமானத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருந்தாலும் அல்லது பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருந்தாலும் பொதுமக்களிடமிருந்து எதுவும் மறைக்கப்படாது என்றும் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியபோது துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறினார்.

ஜூலை 13ஆம் தேதி: விசாரணையின்போது ஈஸ்வரன் சிங்கப்பூரில் இருப்பார் என்றும் அதிகாரபூர்வ வளங்களை அவர் பயன்படுத்த முடியாது என்றும் அரசாங்கக் கட்டடங்களுக்குள் நுழைய முடியாது என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.

ஜூலை 14ஆம் தேதி: ஓங் பெங் செங் கைது செய்யப்பட்டதாக ஹோட்டல் பிராபர்ட்டிஸ் லிமிடெட் தெரிவித்தது. ஈஸ்வரனுடன் அவருக்கு இருக்கும் தொடர்பு பற்றி லஞ்ச, ஊழல் புலனாய்வுப் பிரிவிடம் ஓங் ஒத்துழைப்பதாக அது கூறியது.

ஈஸ்வரன் கைது செய்யப்பட்டதை லஞ்ச, ஊழல் புலனாய்வுப் பிரிவு உறுதி செய்தது.

ஜூலை 18ஆம் தேதி: ஜாலான் புக்கிட் மேராவில் இருக்கும் லஞ்ச, ஊழல் புலனாய்வுப் பிரிவின் தலைமையகத்திற்குச் சென்ற ஈஸ்வரன் கிட்டத்தட்ட பத்து மணி நேரம் கழித்து அன்று மாலை அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

ஜூலை 20ஆம் தேதி: ஈஸ்வரன் கைது செய்யப்பட்டது குறித்து ஜூலை 12ஆம் தேதியன்று பொதுமக்களுக்குப் பிரதமர் லீயும் துணைப் பிரதமர் வோங்கும் தகவல் தெரிவிக்காததற்கான காரணத்தை பிரதமர் அலுவலகம் கூறியது. அத்தகைய தகவலை வெளியிடும் முடிவை லஞ்ச, ஊழல் புலனாய்வுப் பிரிவு மட்டுமே எடுக்க முடியும் என்று அது தெரிவித்தது.

அதே நாளன்று பொஃப்மா எனப்படும் இணையம் மூலம் பொய்த் தகவல் பரப்புவதற்கு எதிரான சட்டத்தின்கீழ் திருத்தம் போட ‘பொலிட்டிக்கல் சொஃபிஸ்ட்ரி’ வலைப்பதிவுக்கு உத்தரவிடப்பட்டது.

அரசியல் ரீதியாக அவமானத்தை ஏற்படுத்தும் என்பதற்காக ஈஸ்வரன் கைது செய்யப்பட்டது வேண்டுமென்றே மறைக்கப்பட்டதாக அந்த வலைப்பதிவில் பதிவிடப்பட்டிருந்தது.

ஆகஸ்ட் 2ஆம் தேதி: ஈஸ்வரன் தொடர்பான லஞ்ச, ஊழல் புலனாய்வுப் பிரிவு நடத்தும் விசாரணை குறித்து நாடாளுமன்றத்தில் கலந்துரையாடப்பட்டது.

அப்போது பேசிய பிரதமர் லீ, ஈஸ்வரனின் சம்பளம் $8,500ஆகக் குறைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

ஈஸ்வரன் தொடர்பான விவகாரம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பொதுச் சேவைக்குத் தலைமை தாங்கும் அமைச்சரான சான் சுன் சிங் பதிலளித்தார்.

ஈஸ்வரன் கைது செய்யப்பட்டதும் அதுதொடர்பாகத் தகவல் வெளியிடாததற்கான காரணத்தை அவர் கூறினார்.

அந்த வழக்கு தொடர்பாக கூடுதல் தகவல் சேகரித்து, ஈஸ்வரன் தரப்பு நியாயத்தை கேட்ட பிறகு, கைது பற்றிய தகவல் வெளியிட லஞ்ச, ஊழல் புலனாய்வுப் பிரிவு முடிவெடுத்ததாக அவர் தெரிவித்தார்.

செப்டம்பர் 19ஆம் தேதி: ஈஸ்வரனை இடைக்கால நீக்கம் செய்ய சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியைச் சேர்ந்த ஹேசல் புவா முன்வைத்த தீர்மானம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. அந்தத் தீர்மானத்தை நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிராகரித்தனர்.

இந்த ஊழல் தொடர்பான புலனாய்வு விசாரணை முடிவு வெளிவந்ததும் இதுகுறித்து பரிசீலனை செய்யலாம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

2024ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி: ஈஸ்வரன் தொடர்பான ஊழல் விசாரணை மிகவும் கவலைக்குரியது என்றும் வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதிக்கு அது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் மற்றும் சாவ்பாவ் நாளிதழிடம் தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்தார்.

“ஈஸ்வரன் தொடர்பான ஊழல் விசாரணை வெளியானதிலிருந்து வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒன்றிணைத்து, முழு அர்ப்பணிப்புடன் குடியிருப்பாளர்களுக்குச் சேவையாற்ற அவர்களுக்குப் புத்துயிரூட்ட முடிந்தது,” என்று அந்த குழுத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவருமான திரு லீ கூறினார்.

ஜனவரி 9ஆம் தேதி: ஈஸ்வரன் தொடர்பான விசாரணை நிறைவடைந்துவிட்டதாக அமைச்சர் சான் சுன் சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அந்த விவகாரம் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதாக அவர் கூறினார்.

“இந்த விவகாரம் குறித்து பொதுமக்களிடையே அதிக ஆர்வம் இருக்கிறது என்பது புரிகிறது. இந்த வழக்கு சட்டப்படி முறையாக நடத்தப்படும் என்று உறுதி அளிக்கிறேன்,” என்று நாடாளுமன்றத்தில் அவர் எழுத்துபூர்வமாகப் பதிலளித்தார்.

ஜனவரி 15ஆம் தேதி: ஈஸ்வரன் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் என்று லஞ்ச, ஊழல் புலனாய்வுப் பிரிவு அவரிடம் தெரிவித்தது. அவரது வாக்குமூலத்தைப் பெற்றுக்கொண்டது.

ஜனவரி 16ஆம் தேதி: தம்மீது சுமத்தப்பட இருக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து பிரதமர் லீயிடம் எழுத்துபூர்வமாக ஈஸ்வரன் தெரிவித்தார். குற்றச்சாட்டுகளை மறுப்பதாகவும் தாம் குற்றமற்றவர் என்பதை நிரூபிப்பதில் கவனம் செலுத்தப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.

அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளிலிருந்து அவர் விலகினார். அத்துடன் மக்கள் செயல் கட்சியிலிருந்தும் அவர் விலகினார்.

ஜனவரி 17ஆம் தேதி: விசாரணை தொடங்கியதிலிருந்து அமைச்சர் என்ற முறையில் தமக்குக் கிடைத்த சம்பளம், நாடாளுமன்ற உறுப்பினர் படித்தொகை அனைத்தையும் திருப்பிக் கொடுக்க இருப்பதாகப் பிரதமர் லீக்கு ஈஸ்வரன் கடிதம் எழுதினார். தாம் குற்றமற்றவர் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும் அவற்றைத் திருப்பிக் கேட்கப்போவதில்லை என்று தமது கடிதத்தில் ஈஸ்வரன் குறிப்பிட்டிருந்தார்.

இந்த முடிவை அவராகவே எடுத்தார். சம்பளத்தையும் படித்தொகையையும் திருப்பிக் கொடுக்க அவருக்கு உத்தரவிடப்படவில்லை.

ஈஸ்வரனின் பதவி விலகலைப் பிரதமர் லீ ஏற்றுக்கொண்டார். சம்பளம், படித்தொகையைத் திருப்பிக் கொடுக்க ஈஸ்வரன் எடுத்த முடிவையும் அவர் ஏற்றுக்கொண்டார்.

“இத்தகைய விவகாரம் குறித்து சட்டத்துக்கு உட்பட்டு நான் கடுமையான நடவடிக்கை எடுப்பது மிகவும் அவசியம். அதுவே முறையான, சரியான செயலாகும். கட்சி மற்றும் அரசாங்கத்தின் நாணயத்தைக் கட்டிக்காக்க வேண்டும். அவ்வாறு செய்வதற்கான முக்கியத்துவம் உங்களுக்குப் புரியும் என்று நம்புகிறேன். இதையே சிங்கப்பூரர்கள் எதிர்பார்க்கின்றனர்,” என்று ஈஸ்வரனுக்கு அனுப்பிய கடிதத்தில் பிரதமர் லீ தெரிவித்தார்.

ஜனவரி 18ஆம் தேதி: அரசு நீதிமன்றத்தில் ஈஸ்வரன் மீது 27 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

போக்குவரத்து அமைச்சர் பதவியிலிருந்தும் வெஸ்ட் கோஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் விலக அவர் எடுத்த முடிவு அறிவிக்கப்பட்டது.

பிரதமர் லீக்கு முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன் எழுதிய கடிதங்களையும் ஈஸ்வரனுக்கு பிரதமர் லீ எழுதிய கடிதங்களையும் பிரதமர் அலுவலகம் வெளியிட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!