முதலில் சிங்கப்பூரர், பின்பே அயலகத் தமிழர்: அமைச்சர் சண்முகம்

சிங்கப்பூர்த் தமிழர்கள், தமிழ்நாட்டின் அயலகத் தமிழர் தினத்திற்கு மட்டுமல்லாமல், பொதுவாக தமிழகத்துக்கு வரும்போதும் தம் அடையாளம் சார்ந்த குழப்பம் மனத்தில் எழுவதற்கு வாய்ப்பு உண்டு.

“நாம் அனைவரும் இரண்டாம், மூன்றாம் தலைமுறை சிங்கப்பூரர்களாக இருந்து வருகிறோம். அவ்வாறு இருக்கையில் நாம் எதைக் கட்டிக்காக்க வேண்டும் - நம் அயலகத் தமிழர் அடையாளத்தையா அல்லது சிங்கப்பூர்த் தமிழர் அடையாளத்தையா? அதனால் எந்த அளவிற்கு சிங்கப்பூரர்கள் தமிழகத்துடன் உறவு கொண்டிருக்கவேண்டும்?” என அயலகத் தமிழர் தினம் 2024ல் உள்துறை, சட்ட அமைச்சர் கா.சண்முகத்திடம் கேட்டார், சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையின் துணைத் தலைவர் யுகேஷ் கண்ணன், 23.

தமிழர் பேரவை இளையர் பிரிவு வாயிலாக மாநாட்டில் கலந்துகொண்ட இளையர்களில் அவரும் ஒருவர்.

“நாம் சிங்கப்பூரர்கள், சிங்கப்பூர்த் தமிழர்கள். அதை எப்போதும் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும். அதை மனத்தில்கொண்டு எவ்வகையில் மற்ற நாடுகளைப் பார்க்கவேண்டும் என்பது முக்கியம்.”

“தமிழகம், இந்தியா நம் அயல்நாடு. அதே சமயத்தில், நம் பெற்றோர்கள் பிறந்த இடம், நம் கலாசாரம் பிறந்த இடம். இதைப் புரிந்துகொள்ள நாம் தமிழ்நாட்டு கலாசாரத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால், நாம் சிங்கப்பூரர்கள் என்பதை என்றுமே மறக்கக்கூடாது,” என்றார் அமைச்சர் சண்முகம்.

“இந்தியா வெகுவாக முன்னேறி வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் தமிழகத்தின் பொருளியல் 13-14% அதிகரித்து வருகிறது. அங்கு பல வாய்ப்புகள் உலகளாவிய வகையில் இருக்கின்றன. அதை சிங்கப்பூர் நிறுவனங்களும் கூர்மையாகக் கவனித்து வருகின்றன,” என்ற அமைச்சர் சண்முகம், பொருளியல் ரீதியாகவும் சிங்கப்பூரர் என்ற கண்ணோட்டத்தில் தமிழ்நாட்டைப் பார்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தமிழர் பண்பாட்டை அறிந்துகொள்வதன்மூலம், தமிழர் என்ற பொதுவான அடையாளத்தை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அவர் அறிவுறுத்தினார்.

“ஆங்கிலம் பொருளியல் மொழி. அதனால் அதில் புழங்குவது முக்கியம். அதே சமயத்தில் ஒவ்வொருவருக்கும் மனத்தளவில் வலிமை தருவது தம் தாய்மொழியே.”

“அதனால், தமிழகத்தில் வேரூன்றிய இலக்கியத்தின் தொன்மையைப் பாராட்டி, தமிழின் வரலாற்றை அறிந்துகொள்வது நம்மை மேலும் சிறந்த மனிதர்களாக உருப்பெறச் செய்யும்,” என்றார் அமைச்சர் சண்முகம்.

“கலாசாரம், மொழியைப் பொறுத்தவரையில், தாய்மொழி தமிழாக இருப்பவர்களுக்கு, தமிழகத்தில் தமிழ்மொழி பேசப்படும் விதம் தம் பண்பாட்டிலும் வெளிப்படும். அவ்வகையில் நாம் தமிழ்நாட்டு நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கற்றுக்கொள்ளவேண்டும்,” என்று அவர் சொன்னார்.

“தமிழ்த் திரைப்படங்களின் தாக்கம் சிங்கப்பூரர்களிடத்தில் அதிகமாக இருக்கிறது. சிங்கப்பூரர்களாகிய நாம், எவ்வாறு தமிழகத் திரைப்பட உலகில் நுழைந்து நம் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்?” என்று சிங்கப்பூர்ப் புகழ் ஷபீரை உதாரணமாகச் சுட்டி வினா எழுப்பினார், சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையின் தலைவர் சஞ்சய் முத்துகுமரன், 22.

சிங்கப்பூர்த் தமிழ் இளையர்கள் தம் தமிழ்த் திறன்களை வளர்த்து, சிங்கப்பூர்த் தமிழர்களிடையே தமிழ்ப் புழக்கத்தை அதிகரிக்கவேண்டும் என்றும் அவ்வாறு வளர வளர, அவர்களது திறன்கள் வெளிப்பட்டு, தமிழகத்தின் கவனத்தை ஈர்க்க வாய்ப்பு இருக்கும் என்றும் திரு சண்முகம் கூறினார்.

“சிங்கப்பூரில் பலரும் கலையுலகில் நுழையத் தயங்குகிறார்கள். அவர்களுக்கு வாய்ப்பளிக்க அரசாங்கத்தால் என்ன செய்யமுடியும்?” என்று கேட்டார் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவி செல்வகுமார் சத்தியா ஸ்ரீ, 20

“அரசாங்கம் எவ்வளவு முயன்றாலும் நாம் சிறு நாடு என்பதால் சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன. பொருளியலின் அடித்தளத்தை அறிவியல், தொழில்நுட்பம் போன்றவை அமைக்கின்றன. கலையிலோ சிலரால் மட்டுமே சாதிக்க முடிகின்றது.”

“சிங்கப்பூரில் எளிமையான வாழ்வையும் வாழ முடியும். அதற்குத் தயாராக இருப்பவர்களும், தம் திறன், ஆர்வம் மீது நம்பிக்கை கொண்டுள்ளவர்களும் கலையுலகில் வெற்றியைத் தேடலாம்,” என்று அமைச்சர் ஆர்வமூட்டினார்.

அயலகத் தமிழர் தினம் 2024ல் இளையர்கள் உட்பட கிட்டத்தட்ட 130 சிங்கப்பூரர்களுடன் அமைச்சர் சண்முகம். படம்: ரவி சிங்காரம்
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!