நல்லாசிரியர் விருது நிகழ்ச்சி 2023

இந்திராணி: ஆலமரம் போன்றவர்கள் ஆசிரியர்கள்

ஆலமரங்கள் பெரும் நிலப்பரப்புகளில் எப்படி வலுவாக வேரூன்றி வெளிவேர்கள் கொண்ட மேற்கிளைகளை விரிக்கின்றதோ, அப்படியே கல்வியாளர்கள் பல்வேறு நிச்சயமற்ற சவால்களுக்கு இடையில் மூலப் பண்புகளுக்குள் உறுதியுடன் வேரூன்றி அடுத்தடுத்த தலைமுறையினரை இயன்றவரை தொடர்ந்து வளர்க்கின்றனர்.

இவ்வாறு பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா, கல்வியாளர்களின் அரும்பணியைப் புகழ்ந்துரைத்தார்.

உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையத்தில் சனிக்கிழமையன்று (செப்டம்பர் 16) நடைபெற்ற நல்லாசிரியர் விருது நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக உரையாற்றினார் நிதி மற்றும் தேசிய வளர்ச்சிக்கான இரண்டாம் அமைச்சருமான குமாரி இந்திராணி.

தமிழ் முரசு நாளி­தழ், சிங்கப்பூர்த் தமி­ழாசி­ரி­யர் சங்­கம், தமிழ்மொழி கற்­றல் வளர்ச்­சிக் குழு ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்ச்சியில் ஒன்பது தமிழ் ஆசிரியர்களுக்கு விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

நல்லாசிரியர் விருதை திருவாட்டி ஹருன்னிஷா முகம்மது ஜமாலுதீன் (கோ சுவான் பிரெஸ்பெட்டேரியன் தொடக்கப்பள்ளி), திருவாட்டி பு. கயல்விழி (ஜங்ட தொடக்கப்பள்ளி), திருவாட்டி உஷா கிருஷ்ணசாமி (நார்த் வியூ தொடக்கப்பள்ளி), திருவாட்டி அ. அஸ்மது பீவி (சிராங்கூன் கார்டன் உயர்நிலைப் பள்ளி) , திருவாட்டி மகேஸ்வரி (ஈசூன் டவுன் உயர்நிலைப்பள்ளி), திருவாட்டி ஷாமினி ராஜகுமார் (தெம்பனிஸ் மெரிடியன் தொடக்கக் கல்லூரி) ஆகியோர் பெற்றனர்.

குமாரி த. பிரியதரிசினி, தேசிய கல்விக் கழகத்தின் சிறந்த பயிற்சி ஆசிரியர் விருதைப் பெற்றார். வாழ்நாள் சாதனையாளர் விருது, மூத்த தமிழ் ஆசிரியர்களான திரு ஆறு.அஞ்சப்பனுக்கும் திருவாட்டி அ. மல்லிகாவுக்கும் வழங்கப்பட்டன.

கடந்த 22 ஆண்டுகளாக இந்த விருது, 200க்கும் மேலான தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, தொடக்கக் கல்லூரி மற்றும் புகுமுக கல்வி நிலைய ஆசிரியர்களை அங்கீகரித்துள்ளது.

இருமொழிக் கொள்கையின் முக்கியத்துவம் குறித்து பேசிய குமாரி இந்திராணி, “நம் பிள்ளைகளுக்கு இருமொழிகளில் நல்ல அடித்தளம் இருந்தால் உலகமே அவர்கள் கைவசம்,” என்றார்.

நிகழ்ச்சியின்போது ஒளியேறிய சிங்கப்பூரின் முதல் பிரதமர் திரு லீ குவான் இயூ பற்றிய தமிழ் முரசின் காணொளித் தயாரிப்பை மேற்கோள் காட்டிய அமைச்சர், சிங்கப்பூரர்கள் தொடர்ந்து இருமொழித் திறனாளர்களாகத் திகழவேண்டும் என்பதைத் திரு லீ வலியுறுத்தியதைச் சுட்டினார்.

“உலகத்துடன் நம்மை இணைக்கும் ஆங்கிலம், வர்த்தகத்திற்குத் தேவைப்பட்டாலும் செழுமைமிகு மரபுக்கான பண்பாட்டைக் கட்டிக்காக்க நம் தாய்மொழிகள் உதவுகின்றன. தாய்மொழிகள், நம் குணத்தைச் செதுக்கும் பண்புகளை வைத்து, நாம் யார், எங்கிருந்து வந்தோம் என்பது பற்றிய அடையாள உணர்வை மேம்படுத்தும் எனத் திரு லீ கூறியிருந்தார்,” என்றார் குமாரி இந்திராணி. 

பல மொழிகளைக் கொண்ட, பன்முகத்தன்மைமிக்க இன்றைய சமுதாயத்தில் தாய்மொழிக் கற்றலை அர்த்தமுள்ளதாக, காலத்திற்கு ஒத்துப்போகக்கூடியதாக, ஈடுபடுத்தும் விதமாக உருவாக்குவது சவாலானது எனக் கூறிய அமைச்சர், இதனை வெற்றிகரமாக நிறைவேற்றி வரும் திருவாட்டி பு.கயல்விழியையும் திருவாட்டி ஷாமினி ராஜகுமாரையும் உதாரணங்களாகச் சுட்டினார்.

தாய்மொழிக் கற்றலுக்கு அடித்தளம் அமைத்த முன்னோடிகளை மறக்கலாகாது என்றுரைத்த அமைச்சர் இந்திராணி, வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்ற மூத்த ஆசிரியர்கள் திருவாட்டி அ. மல்லிகாவையும் திரு ஆறு. அஞ்சப்பனையும் குறிப்பிட்டார்.

தமிழ்மொழியையும் இந்தியப் பண்பாட்டையும் மேம்படுத்துவதில் பல்வேறு அமைப்புகளும் சமூகப் பங்காளிகளும் தொடர்ந்து பங்காற்றி வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

உதாரணத்திற்கு தமிழ் முரசு, மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் விதமான படைப்புகளைப் படைத்து தனது நாளிதழை மேம்படுத்தி செயலி ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் அவர் சுட்டினார்.

நிகழ்ச்சியில் தொடக்க உரையாற்றிய தமிழ் முர­சு நாளிதழின் இணை ஆசி­ரி­ய­ரும் தமிழ்­மொழி கற்­றல் வளர்ச்சிக் குழு­வின் உறுப்­பி­ன­ரு­மான வீ.பழ­னிச்­சாமி, விருதிற்குக் குவிந்த 591 நியமனங்களிலிருந்து நிர்ணயிக்கப்பட்ட தேர்வு விதிமுறைகளைப் பின்பற்றி தகுதியான ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்க ஏற்பாட்டுக் குழுவினர் பெரும் சவாலைச் சந்தித்ததாகக்
குறிப்­பிட்டார்.

வருடாந்திர போட்டியைப் பற்றி விருது பெற்றவர்கள், பள்ளித் தலைவர்கள், சமூகப் பங்காளிகள், கல்வி அமைச்சின் அதிகாரிகள் என பலரிடமிருந்து கருத்துகளை சேகரித்த ஏற்பாட்டுக் குழு, அவற்றை கவனமாக ஆராய்ந்து மேம்பாடுகளைக் கொண்டு வந்ததாக திரு பழனிச்சாமி கூறினார்.

(மேலும் விரிவாக பக்கம் 4ல்)

தமிழ் முரசு, மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் விதமான படைப்புகளைப் படைத்து நாளிதழை மேம்படுத்தி செயலி ஒன்றை அறிமுகப்படுத்துகிறது.
அமைச்சர் இந்திராணி ராஜா
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!