வாழ்நாள் சாதனையாளர் விருது: சிறப்பிக்கப்படும் மூத்த தமிழாசிரியர்கள்

மூத்த ஆசிரியர் ஆறு. அஞ்சப்பன். படம்: ஆறு. அஞ்சப்பன்

மாணவர்களின் மொழித்திறன் மட்டுமின்றி, உடல்நலத்தையும் மனநலத்தையும் உள்ளடக்கிய முழுமையான பராமரிப்பில் பல்லாண்டுகளாகப் பாடுபட்டு அவர்களை மேம்படுத்திய மூத்த ஆசிரியர்கள் இருவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளது.

கற்பித்தலில் பழுத்த அனுபவமுள்ள இவ்விருவரும், உமறுப்புலவர் தமிழ்­மொழி நிலை­யத்­தில் சனிக்கிழமை (செப்டம்பர் 16) நடை­பெ­றும் ‘நல்­லா­சி­ரி­யர் விருது 2023’ விழாவில் ஏழு ஆசிரியர்களுடன் கெளரவிக்கப்படுவர்.

தமிழ் முரசு நாளி­தழ், சிங்கப்பூர்த் தமி­ழாசி­ரி­யர் சங்­கம், தமிழ்மொழி கற்­றல் வளர்ச்­சிக் குழு ஆகியவை இணைந்து நல்லாசிரியர் விருது விழாவை 2002ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டுதோறும் வழங்கி வரு­கின்றன.

சிறுமியாக இருந்தபோது தமிழ்மணம் கமழ்ந்த சூழலில் வளர்க்கப்பட்டார் திருவாட்டி மல்லிகா. மனப்பாடம் செய்யப்பட்ட திருக்குறள்களைச் சரியாகச் சொல்லிய பின்னரே வீட்டில் தமக்குக் காலை உணவு கொடுக்கப்படும் என்று அந்த மூத்த ஆசிரியர் கூறினார். உணவுடன் புகட்டப்பட்ட தமிழ் ஆர்வம், 36 ஆண்டுகளாக நீடித்த தமிழ் ஆசிரியர் பணிக்குப் பிறகும் தொடர்கிறது.

காலனித்துவ சிங்கப்பூரின் ஆகாயப்படையில் பணிபுரிந்த தம் தந்தை திரு அருள்செல்வன் புகட்டிய இலக்கியப் பற்றும் வள்ளலாரின் சமூக நீதிக் கொள்கைகளும் நன்னெறி பற்றிய அடிப்படைத் தெளிவை சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த திருவாட்டி மல்லிகாவுக்கு ஏற்படுத்தித் தந்திருந்ததாகப் பகிர்ந்தார்.

வாழ்க்கையில் தாம் சந்தித்திருந்த பல்வேறு இடர்களைக் கடந்துசெல்ல இந்தத் தமிழ்க்கல்வியே கைகொடுத்திருந்தது. திருவாட்டி மல்லிகாவைப் பொறுத்தவரை மாணவர்களை முழுமையான, முதிர்ச்சியானவர்களாக உருவாக்குவதே ஆசிரியர் பணி.

குழு நடவடிக்கைகள், கலந்துரையாடல்கள், காணொளி போன்ற தொழில்நுட்பப் பயன்பாடு ஆகியவற்றைப் பயன்படுத்தும் தற்கால தமிழ்க்கற்றலில் முன்னோடியாகவும் இவர் திகழ்கிறார். சொந்த வகுப்பு மாணவர்களுக்கு அப்பாற்பட்டு பல மாணவர்களுக்கு பயனளிக்கும் விதமாக புகுமுக வகுப்பு மாணவர்களுக்கான தமிழ்மொழி இலக்கியக் கருத்தரங்குகளை நடத்தி வந்தார்.

இந்தியாவில் தமிழ் இளநிலைக்கல்வி பயின்று மறுபடியும் 1983ல் சிங்கப்பூருக்குத் திரும்பிய திருவாட்டி மல்லிகா, 1984ல் ஆசிரியர் பயிற்சியில் சேர்வதற்கு விண்ணப்பித்தார். கல்வி நிலையத்தில் சேருவதற்கான அப்போதைய அதிகபட்ச வயது 25 ஆக இருந்ததால் அப்போது 27 வயதான இவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டபின், மனஉறுதியுடன் மேல்முறையீடு செய்து மறுஆண்டு பயிற்சியில் சேர்ந்தார்.

கல்வி நிலையத்தில் ஆங்கிலத்திலும் தமிழிலும் கற்ற பின் திருவாட்டி மல்லிகா, 1987 முதல் 1990 வரை தெமாசெக் உயர்நிலைப் பள்ளியில் கற்பித்தார். தமிழ்ப் பட்டப்படிப்பு மேற்கொண்டிருந்த அவருக்கு முதலில் உயர்நிலைப் பள்ளி ஒன்றில் கற்றுத்தரும் வாய்ப்பு தரப்பட்டது. பின்னர் 1991 முதல் 2000 வரை திருவாட்டி மல்லிகா உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் கற்பித்தார். 2000 முதல் 2007 வரை, ஓ நிலை தேர்ச்சியுள்ள மாணவர்கள் தாய்மொழி ஆசிரியர்களாகத் தகுதிப்படுத்தும் சிறப்புப் பயிற்சித் திட்டத்தில் ஆசிரியப் பயிற்றுவிப்பாளராக இருந்து ஏறக்குறைய 40 ஆசிரியர்களை உருவாக்கினார்.

பின் 2007ல் ஈசூன் தொடக்கக் கல்லூரியில் சேர்ந்தார். தற்போது ஈசூன்-இன்னோவா என்ற பெயருடன் விளங்கும் அந்தத் தொடக்கக் கல்லூரியிலிருந்து 2018ல் ஓய்வு பெற்றபோதும் விருப்பத்தின்பேரில் ஒப்பந்த ஆசிரியராக தொடர்ந்து அங்கு மாணவர்களை அரவணைத்து வருகிறார்.

வகுப்பறையையும் மாணவர்களையும் மிகவும் நேசிக்கும் திருவாட்டி மல்லிகாவுக்கு உயர்பதவிகளை வகிப்பதற்கான அழைப்பு வந்தபோதும் அவற்றை ஏற்காமல் வகுப்பில் மாணவர்களுடனேயே இருந்தார். இருந்தபோதும் கற்றலில் புதுமைகளைத் தொடர்ந்து புகுத்தி அவர்களிடையே கற்றல் ஆர்வத்தைத் தொடர்ந்து தட்டியெழுப்பினார்.

மாணவர்களை நல்ல மனிதர்களாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்களைத் தாயன்புடன் காண்பார் திருவாட்டி மல்லிகா. இவர், மாணவர்களின் சுமைகளைத் தோளோடு தோள் சுமந்து அவர்களது கண்ணீரையும் துடைத்திருக்கிறார். உளவியலில் பட்டம் பயின்று அதன் மூலம் கற்ற உத்திகளையும் இதற்காகவே பயன்படுத்திக்கொள்கிறார்.

“மாணவர்களின் மனங்களை நொகடிக்கும் விதத்தில் நான் திட்டுவதில்லை. அவ்வாறு திட்டுவதால் அவர்களது ஏற்படும் பாதிப்பு என்ன என்பதை உளவியல் கல்வி மூலம் தெரிந்துகொண்டேன்,” என்று அவர் கூறினார்.

மாணவர்களின் சுயசிந்தனையை ஊக்குவிப்பதில் நம்பிக்கை கொண்டுள்ள திருவாட்டி மல்லிகா, அவர்களது உணர்வுகளை மதிக்கும் விதமாக தவறுகளைத் திருத்துவதாகக் கூறினார்.
“மாறாக, மனம் திறந்து அவர்கள் உண்மை பேசி எங்கு தவறு நடந்திருக்கக்கூடும் என்பதை அவர்களை சிந்திப்பதில் வழிநடத்துவேன்,” என்று அவர் கூறினார்.

மாணவர்களுக்குத் தமிழ் ஆசிரியராகவும் உடற்கல்வி ஆசிரியராகவும் திகழ்ந்த திரு ஆறு. அஞ்சப்பன், 75, மாணவர்களின் உடற்பயிற்சியை வழிநடத்தி அவர்களுக்கு ஊக்கமளித்தார். தமிழகத்தில் பிறந்த திரு அஞ்சப்பன், ஒன்பது வயதில் பெற்றோருடன் சிங்கப்பூர் வந்த அவர், இயோ சூ காங் வட்டாரத்தில் தமிழகத்தைச் சேர்ந்த புதிய சிங்கப்பூர்க் குடியேறிகளுடன் வளர்ந்ததாகக் குறிப்பிட்டார்.

இளம் வயதில் அறிஞர் அண்ணாவின் காஞ்சி, திராவிடர் கழகம், பாவாணர் போன்ற தமிழகச் செய்தி இதழ்கள் நூல்களை வாசித்த திரு அஞ்சப்பன், அக்கால சிங்கப்பூரில் உரையாற்றிய நாஞ்சில் மனோகரன், அண்ணாதுரை, நெடுஞ்செழியன் போன்ற தமிழ் மேதைகளின் உரைகளைக் கேட்டிருந்தார்.

இவற்றின்மூலம் தமிழ் ஆர்வம் பெருகி வந்ததை உணர்ந்த திரு அஞ்சப்பன் தம் 19 வயதில் 1967ஆம் ஆண்டில் தமிழாசிரியர் பணியில் சேர்ந்தார்.

மாணவர்களின் நிலை காலந்தோறும் மாறுபட்டு வருவதால் ஆசிரியர்கள் கற்பித்தலில் தொடர்ந்து சவால்கள் ஏற்படுவதாகக் கூறிய திரு அஞ்சப்பன், இதனைக் கையாள தொடர்ந்து கற்கவேண்டியுள்ளதாகக் குறிப்பிட்டார். ஆசிரியராகப் பணியாற்றிய தம் அனுபவத்தில் இணையம் ஆகப் புரட்சிகரமான மாற்றங்களில் ஒன்றாக அமைந்திருந்ததைக் குறிப்பிட்டார்.

விளையாட்டு ஆர்வலராக இருக்கும் திரு அஞ்சப்பனுக்கு காற்பந்தே மிக விருப்பமான விளையாட்டு. ஆசிரியர் பயிற்சி பல்வேறு வித விளையாட்டுகளைக் கற்ற திரு அஞ்சப்பன், பள்ளிகளில் காற்பந்துக் குழுவை வழிநடத்தினார்.

“அந்தக் காலத்தில் காற்பந்துக்கான புறப்பாட நடவடிக்கைகளுக்கு தனிப் பயிற்றுவிப்பாளர்கள் இல்லை. ஆசிரியர்களே பயிற்றுவிப்பாளராக இருக்கவேண்டிய நிலையில் நான் மாணவர்களுக்குக் காற்பந்து விளையாட்டை மகிழ்ச்சியுடன் பயிற்றுவித்தேன், “ என்றார் திரு அஞ்சப்பன்.

பேரி அவென்யூ ஆண்கள் பள்ளியில் 13 ஆண்டு கற்பித்தபின், முன்னைய செயின்ட் ஜார்ஜஸ் பள்ளி, அதன் பின்னர் புதிய பெயருடன் விளங்கிய உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையத்தில் கற்பித்தார். பின்னர் பீட்டி உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்து அங்கு தொடர்ந்து கற்பித்து வருகிறார்.

இந்தப் பணியின்மூலம் மனநிறைவு அடைவதாகக் கூறிய திரு அஞ்சப்பன், எந்த மாணவரும் திறன் குறைந்தவரில்லை என்றும் வாய்ப்பு கொடுக்கப்பட்டால் சிறந்த நிலையை எய்துவர் என்றும் கூறினார்.

“மாணவர்கள் வகுப்பறையில் உள்ள நிலையைப் பார்த்து அவர்களை உடனடியாக எடைபோட்டுவிடக்கூடாது. அவர்களைச் சிறந்தவர்களாகச் செதுக்கவேண்டும். முதலில் மந்தமாக இருந்து, பிற்காலத்தில் பெரிய வேலைகளில் அவர்கள் பணியாற்றி வருவதைக் கண்கூடாகப் பார்க்கிறேன்,” என்றார் அவர்.

மாணவர்களைத் தட்டிக்கொடுத்து அவர்களை வெற்றியடையச் செய்வதில்தான் ஆசிரியரின் வெற்றி இருப்பதாக திரு அஞ்சப்பன் குறிப்பிட்டார்.

தம் உழைப்பை அங்கீகரிக்கும் இந்த விருது, மற்ற ஆசிரியர்கள் சிறப்பாகப் பணியாற்றுவதற்கு உந்துதலாக இருக்கும் என நம்புவதாகவும் அவர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!