அரவணைக்கும் கரங்கள்; ஆதரிக்கும் திட்டங்கள்

உடைந்த குடும்பங்கள், குறைந்த வருமானம் என பாதிக்கப்பட்ட பின்னணிகளைக் கொண்ட குழந்தைகள் அவர்களுக்கு உதவ வருவோரை பொதுவாக சந்தேகத்தோடும் தயக்கத்தோடும் அணுகுவதுண்டு. அவர்களின்மீது நம்பிக்கை ஏற்பட்டு நல்லுறவு கொள்வதற்கு ஒரு சில மாதங்கள் ஆகலாம். அந்நிலையில், தங்களின் ஓரறை வீட்டில் அடியெடுத்து வைத்த குழந்தைநல பாதுகாப்பு சேவையாளர் சுபாஷினி விஜயமோகனை பார்த்த உடனேயே ஆற கட்டித் தழுவிக் கொண்டனர் அண்ணன் தங்கையான தாமஸும் லில்லியும் (உண்மை பெயர்களல்ல). 

ஒற்றை பெற்றோரான தந்தையால் வளர்க்கப்பட்ட இருவரும் பல சிக்கலான குடும்ப விவகாரங்களை எதிர்கொண்டு இருந்தனர். விவாகரத்து நடைமுறைகளுக்காக குடும்ப நீதிமன்றத்துக்கு சென்று வருவதும், அவ்வப்போது குழந்தை இல்லத்தில் இருவரும் பிரிக்கப்பட்டு விடப்படுவதுமாக அவர்கள் அலைக்கழிக்கப்பட்டிருந்தனர். அடிப்படை தேவைகளைத் தவிர அவர்களின் வீடு வெறுமனே காட்சியளித்தது. அப்பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வண்ணம் நியமிக்கப்பட்டிருந்தார், சமூக, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் தொண்டூழியரான 31 வயது சுபாஷினி. 

தாமஸ், லில்லி போன்ற பல குழந்தைகளுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் கைகொடுத்துள்ளார் சுபாஷினி. கடந்த நான்காண்டுகளாக குழந்தைநல பாதுகாப்பு சேவையில் நீடித்து வரும் அவரின் பயணத்தில் 10க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடைந்துள்ளன. 2015ஆம் ஆண்டில் தேசிய பல்கலைக்கழகத்தில் அரசறிவியல் பட்டம் பெற்ற கையோடு, சமூக, குடும்ப மேம்பாட்டு அமைச்சில் முழுநேர குடும்ப கொள்கை அதிகாரியாக ஈராண்டுகள் சுபாஷினி பணியாற்றி வந்தார். அதன் பின்னர் அரசாங்க சேவை, தனியார் நிறுவனத்தில் சமூக தொடர்பு பணி என அவரின் பயணம் மாறிவிட்டிருந்தாலும், தம் மனதுக்கு நெருக்கமான சமூக சேவையை கைவிட அவருக்கு மனமில்லை. 

சமூக, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் பல்வேறு தொண்டூழிய திட்டங்களை நாடினார் சுபாஷினி. அங்கு முறையான தொண்டூழியப் பயிற்சி மேற்கொண்டு, பாதிக்கப்பட்டோரை எவ்வாறு அணுகுவது, அவர்களின் கவலைகளை எப்படி சமாளிப்பது முதலியன குறித்து அவர் அறிந்துகொண்டார். 2017ஆம் ஆண்டில் தொண்டூழிய நன்னடத்தைக்காலக் கண்காணிப்பு அதிகாரியாக அவர் பொறுப்பேற்றார். பல சவால்களும் மன நெருக்கடிகளும் அவருக்கு அழுத்தம் தரவே செய்தன. 

மிக இணக்கமான குடும்ப சூழலை கொண்ட சுபாஷினிக்கு சிங்கப்பூரில் வசிக்கும் சிக்கல்கள் நிறைந்த குடும்பங்களை நேரில் காணும்போது ஆச்சரியமாக இருந்தது. சில பெற்றோர்களின் நடவடிக்கைகள் அதிர்ச்சி அளிப்பவையாகவும் இருந்தன.  சிலர் மிகவும் கவலைக்குரிய வகையில் நடந்துள்ளனர். சிலர் பிள்ளைகளின் நலனில் அக்கறையே இல்லாமல் நடந்துகொள்வர். 

மேலும், உதவிபுரிய வரும் தொண்டூழியர்களிடம் சில பெற்றோர் பொய் கூறுவர். வேலைக்குச் செல்லாமல் நேரத்தை நண்பர்களோடு விரயமாக்கி கொண்டிருந்த ஒரு தந்தை தனக்கு உடல்நலம் சரியில்லை, காலில் அடிப்பட்டுள்ளது என்றெல்லாம் தன்னிடம் கூறியதை நினைவுகூர்ந்தார் சுபாஷினி. 

இத்தகைய சவால்களை எதிர்கொள்வதற்கு அதிக மன உறுதி தேவைப்படுகிறது. அதே சமயம், இவை எல்லையிலா மனநிறைவு தருவதாக உணர்கிறார் சுபாஷினி. சிறுவயதிலிருந்தே சுபாஷினியின் மனதில் நீங்கா இடம்பிடித்துவிட்ட பிள்ளைநல பராமரிப்பின்மீது அவர் கொண்டிருந்த ஆர்வமே அவருக்கு உந்துதல் அளித்தது. 

“தங்களின் முழு வாழ்க்கையும் இப்பிள்ளைகளின், இளையர்களின் முன் இருக்கின்றன. இருந்தும், அதனை முழுமையாக பயன்படுத்திக்கொள்வதற்கான நம்பிக்கையும் வளங்களும் அவர்களிடத்தில் இல்லாதது மனவேதனை தரும். அவர்களின் வாழ்க்கையில் சிறு வழியில் மாற்றம் ஏற்படுத்துவதுகூட பெரிய அலைகளை உருவாக்க வல்லது என்பதே எனது தொண்டூழிய பயணத்தை மெருகூட்டி அர்த்தமுள்ளதாக்கியது,” என்று நெகிழ்ந்தார் சுபாஷினி. 

உயர்நிலை பள்ளி முதல் தொடர்ந்து சுபாஷினியின் வாழ்வில் ஒலித்துக்கொண்டிருப்பது இத்தொண்டூழிய ஆர்வம். இளமையிலேயே வேறுபட்ட பின்னணிகளைக் கொண்ட மாணவர்களை சந்தித்திருந்தார் சுபாஷினி. நல்ல நிலையில் இருக்கும் தம்மை போலன்றி அவர்களின் வாழ்க்கை அதிக மேடுபள்ளங்கள் கொண்டிருந்ததை கண்டு நெகிழ்ந்த அவருள் இச்சந்திப்புகள் தொண்டூழிய எண்ணத்தை விதைத்தன.  

பள்ளிக்காலத்திலிருந்தே குறைந்த வருமான மாணவர்களுக்கு வழிகாட்டுவது, இலவச துணைப்பாட வகுப்புகள் எடுப்பது, நாட்பட்ட நோய்களால் அவதிபடும் பிள்ளைகளை மகிழ்விப்பது என அவரின் தொண்டூழிய சேவை நீண்டது. பொது கொள்கை அமைப்பின்மூலம் மக்களின் வாழ்க்கைகளை நல்லவிதத்தில் மாற்றலாம் என்ற நம்பிக்கையும் அந்த அனுபவங்களின்மூலம் பிறந்தது. 

சமூக, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் தொண்டூழிய திட்டங்களிலும் புது வாய்ப்புகளிலும் இணைய தமது நண்பர்களையும் ஊக்குவித்துள்ளார் சுபாஷினி. தமது சமூக ஊடக பக்கத்தின்மூலம் இத்தகைய வாய்ப்புகளைப் பற்றி அவர் தெரியப்படுத்துகிறார். 

கடந்த ஆண்டு சிறுமியர் இல்லத்தில் தொண்டூழியர்கள் தேவைப்பட்டபோது அதுகுறித்து தகவல் தெரிவித்தார் சுபாஷினி. தமது நண்பர்களில் கிட்டத்தட்ட 10 பேர் உடனே முன்வந்ததாக அவர் பகிர்ந்துகொண்டார். இது பற்றி கூறுகையில், “தேவைக்கும் அதிகமான தொண்டூழியர்கள் எனும் நிலைமை என்றைக்கும் ஏற்படாது. எப்போதுமே தொண்டூழியர்களுக்கான தேவை இருந்துகொண்டே தான் இருக்கும். தொண்டூழியத்தில் ஆர்வமுள்ள இளையர்கள் பலர். அவர்களின் திறன்களுக்கேற்ற வாய்ப்புகளை அறிவதுதான் அவர்களுக்கு கடினமாக உள்ளது,” என்றார் அவர். 

தொண்டூழிய வாய்ப்புகளைக் கைவசப்படுத்தும் 2024

உதவி தேவைப்படுவோருக்கு பல முனைகளிலிருந்தும் ஓர் ஒட்டுமொத்த சமூகத்தின் ஆதரவும் ஊக்கமும் தேவைப்படுகிறது. இதுவரை சமூத்துக்கு சிறு வழிகளிலும் உன்னத பங்களித்துள்ள தொண்டூழியர்களைக் கொண்டாடும் ஆண்டாக 2024 விளங்க இருக்கிறது என சமூக, குடும்ப மேம்பாட்டு அமைச்சு அறிவித்துள்ளது. தொடர்ந்து சேவையாற்றுவோரை அங்கீகரிப்பதோடு, புது தொண்டூழியர்கள் உருவாக ஊக்குவிக்கும் நோக்கில் இந்த திட்டம் அமைந்துள்ளது. இதன்கீழ் மேலும் புதிய திட்டங்களும் தளங்களும் அமைச்சால் அறிவிக்கப்பட உள்ளன. 

கடந்த ஆண்டு சமூக சேவை பங்காளிகளை கொண்டாடும் ஆண்டாக அமைந்தது. மென்மேலும் சிங்கப்பூரின் சமூக சேவை துறையை பெருக்கி விரிவாக்கும் செயல்பாடுகளை சமூக, குடும்ப மேம்பாட்டு அமைச்சு அமல்படுத்தி வருகிறது. 

தனிப்பட்ட நபர்களின் திறன், ஆர்வம், நேர ஒதுக்கீடு ஆகியவற்றுக்கு ஏற்ப சமூக, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் தொண்டூழிய திட்ட வாய்ப்புகள் அமைகின்றன. ஒவ்வொரு நபரும் தம்மால் முடிந்த வழிகளில் சுமுகமாகவும் ஆக்கத்தோடும் பங்காற்ற வகைசெய்துள்ளது அமைச்சு. 

தொண்டூழியம் செய்ய விரும்புவோர் 2022ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட எம்எஸ்எஃப்கேர் நெட்வொர்க் திட்டம் பற்றி மேலும் அறியலாம்.

ஐந்து வழிகளில் மக்கள் சிங்கப்பூர் சமூகத்துக்கு பங்காற்றலாம். ஒவ்வொரு குழந்தைக்கும் நல்ல தொடக்கத்தை வழங்குவது, எளிதில் பாதிக்கப்படக்கூடியோரின் வாழ்வை மாற்றியமைப்பது, தேவைப்படுவோருக்கு கைகொடுப்பது, குடும்பங்களை வலுப்படுத்துவது, அனைவரையும் உள்ளடக்கிய, நியாயமான சமூகத்தை உருவாக்குவது, என்பன இவ்வழிகள். பலதரப்பட்ட சமூக பிரச்சினைகளை இவ்வழிகள் உள்ளடக்கியுள்ளன. 

அமைச்சின் சேவை பங்காளித்துவ அமைப்புகளோடு இணைக்கப்பட்டு, ஆக்கப்பூர்வமான வாய்ப்புகளை மக்கள் இனி மேலும் எளிய முறையில் கண்டறியலாம். இளையர், முதியோர், பாதிக்கப்பட்ட குடும்பங்கள், குறைந்த வருமான வீடுகள், துன்புறுத்தப்பட்டோர், மாற்றுத் திறனாளிகள் என பல்வேறு சமூக பிரிவினரைக் கருத்தில் கொண்டு அரவணைத்து வரும் சமூக, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் முயற்சியில் நாமும் ஈடுபடலாம். மேல் விவரங்களுக்கு: go.gov.sg/YCVolunteers

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!