மலேசிய அரசாங்கம், எரிபொருள் மற்றும் சீனி விலையை உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவிலிருந்து நடப்புக்கு வந்துள்ளது.பெட்ரோல், டீசல், பெட்ரோலியம் எரிவாயு மற்றும் சீனி ஆகியவற்றுக்கு வழங்கி வந்த மானியத் தொகையை அரசாங்கம் குறைக்கத் தொடங்கியதைத் தொடர்ந்து இந்த விலை உயர்வு நடப்புக்கு வந்துள்ளது.நிதிப் பற்றாக்குறையைக் குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக எரிபொருள் மற்றும் சீனிக்கு வழங்கப்படும் மானியத் தொகை குறைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.இருப்பினும் இவற்றுக்கு இந்த ஆண்டு மானியத் தொகை 750 மில்லியன் ரிங்கிட்(321 மில்லியன் சிங்கப்பூர் வெள்ளி) வழங்க வேண்டியிருப்பதாக அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது.மானியத் தொகை குறைப்பின் முதல் கட்டமாக ரோன் 95 ரக பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கு அரசாங்கம் வழங்கி வந்த மானியத் தொகை லிட்டருக்கு 5 காசு வீதம் குறைக்கப்பட்டுள்ளது. எல்பிஜி எரிவாயுக்கு வழங்கப்பட்டு வந்த மானியத் தொகை ஒரு கிலோவுக்கு 10 காசு வீதம் குறைக்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து ரோன் 95, ரோன் 97 ரக பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலைகள் ஒரு லிட்டருக்கு 5 காசு ஏறியுள்ளது. முன்பு ஒரு லிட்டர் ரோன் 95 ரக பெட்ரோல் 1 ரிங்கிட் 80 காசுக்கு விற்கப்பட்டது. இனி இந்த ரக பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 85 காசுக்கு விற்கப்படும். அதே வேளையில் திரவ பெட்ரோலிய எரிவாயு விலை ஒரு கிலோகிராமுக்கு 10 காசு அதிகரிக்கப்படுகிறது.ரோன் 97 ரக பெட்ரோலுக்கு இனிமேல் உதவித் தொகை கிடையாது. அது சந்தை விலைக்குத் தக்கவாறு நிர்ணயிக்கப்படும்.உலக எண்ணெய் விலைக்கேற்ப மாதந்தோறும் சரிசெய்யப்படும். விலை அதிகரிப்பு எவ்வளவாக இருக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் கணிசமானதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.சீனி விலை ஒரு கிலோவுக்கு 25 காசு கூடுகிறது. இந்த விலை ஏற்றம் பயனீட்டாளர்களுக்கு அதிருப்தியைக் கொடுத்திருப்பதாக அரசியல் ஆய்வாளர் ஒருவர் கூறியுள்ளார்.பெட்ரோல் விலை அதிகரிக்கப்படலாம் என்ற பேச்சு சமீபகாலமாக அடிபட்டு வந்த வேளையில் இந்த விலையேற்றம் நடப்புக்கு வந்துள்ளது.கடந்த முறை பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்பட்டபோது அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏறி நடுத்தர வர்க்கத்தினர் சிரமப்பட நேர்ந்ததாக பயனீட்டாளர்கள் கூறுகின்றனர். இந்த விலை ஏற்றத்தைத் தொடர்ந்து காய்கறிகள், மீன் போன்ற உணவுப் பொருட்களின் விலைகளை வியாபாரிகள் ஏற்றக்கூடிய அபாயம் உள்ளது என்று மக்கள் கருதுகின்றனர்.இந்நிலையில் இந்த மானியத் தொகை குறைப்பு குடும்பங்களுக்கு மிகக் குறைந்த அளவு பாதிப்பையே ஏற்படுத்தும் என்று அரசாங்கம் கூறியுள்ளது.