தலையங்கம்

tm logo
Sunday, February 19th, 2012
“He who does not economize will have to agonize - சிக்கனத்தைக் கடைபிடிக்காதோருக்கு வேதனை உறுதி”.
சீனத் தத்துவ மேதை கன்ஃபூசியஸ் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உதிர்த்த பொன்மொழி இது.
வரவுக்கு மேல் செலவு செய்வதும் வேதனைக்குத்தான் வழி விடும் என்றும் நாம் பொருள் கொள்ளலாம். அந்தக் கசப்பான பாடத்தைத்தான் ஐரோப்பிய நாடுகள் ஒவ்வொன்றாக உணர்ந்து வருகின்றன.
தொடர்ந்து தாக்குப்பிடிக்க முடியுமா என்ற எதிர்காலச் சிந்தனையின்றி, சமூக நலன் என்ற பெயரில் அந்த நாடுகள் தங்கள் குடிமக்களுக்காக பணத்தை வாரி இறைத்தன. இப்போது கிரீஸ் போன்ற நாடுகள் கிட்டத்தட்ட நொடித்துப் போகும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன.
ஆனால் சிவப்புப் புள்ளி என்று வர்ணிக்கப்படும் சிங்கப்பூர்  எதிர்காலத் தேவைகளுக்குத் திட்டமிடுவதில் இன்று உலகுக்கே முன்னுதாரணமாகத் திகழ்கிறது.
வெள்ளிக்கிழமையன்று நிதியமைச்சர் தர்மன் சண்முகரத்னம் தாக்கல் செய்த இவ்வாண்டின் வரவு-செலவுத் திட்டம் நாட்டின் எதிர்காலத்தைச் செழிப்பாக்கும் ஒரு செம்மையான திட்டம்.
எந்த ஒரு நாட்டுக்கும் மிகப் பெரிய சொத்து அதன் மூத்த குடிமக்கள். தங்கள் முக்கியமான காலகட்டத்தை நாட்டு நிர்மாணத்தில் செலவிட்ட அவர்களின் முதுமை காலத்தில் நாடு அவர்களைப் பார்த்துக் கொள்ள வேண்டாமா?
அதை உறுதி செய்யும் பல திட்டங்களை திரு தர்மன் அறிவித்தது அவர்களின் உள்ளங்களை குளிர்வித்திருக்கும்.  
பல நாடுகளில் இளையர்களே வேலையில்லாமல் திண்டாடுகின்றனர். ஆனால் இங்கு 50 வயதுக்கு மேற்பட்ட  குடிமக்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களுக்கு சிறப்பு வேலை நியமன வரவு (Special Employment Credit)  என்ற திட்டத்தை அறிவித்து அசத்தியிருக்கிறார் நிதியமைச்சர். அவர்களின் சம்பளத்தில் 8 விழுக்காடு வரை அரசாங்கமே நிறுவனங்களுக்கு வழங்கும்.
அது மட்டுமா? 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மத்திய சேமநிதி சந்தா உயர்த்தப்பட வேண்டும் என்று பல ஆண்டுகளாக நிலவி வந்த கோரிக்கைக்கும் செவிசாய்த்திருக்கிறார் திரு தர்மன். இது முதிய ஊழியர்களுக்கு இரட்டை அனுகூலம்.
இரட்டிப்பு வருவாய் நிவாரணம், முதியோர் வீடு மாறும் போனஸ், முதியவர்களைப் பார்த்துக் கொள்ளும் பணிப்பெண்களுக்கு 120 வெள்ளி மாத மானியம், வீட்டைப் பாதுகாப்பானதாக மாற்றிக் கொள்ள உதவித் தொகை, மருத்துவக் காப்பீடு நீட்டிப்பு என முதுமைக்கு முதல் மரியாதை தந்திருக்கிறது இந்த வரவு செலவுத் திட்டம்.
உடற்குறையுடையோரும் மறக்கப்படவில்லை. சிறப்புப் பள்ளியிலிருந்து தேர்ச்சி பெற்றோரை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களுக்கு அவர்களின் சம்பளத்தில் 16 விழுக்காடு வரை அரசாங்கம் வழங்கும் என்ற அறிவிப்பு, வரவு செலவு திட்டத்தில் கருணைக்கும் இடமுண்டு என்பதற்கு சான்று.
சென்ற ஆண்டு பொதுத்தேர்தலின் போது மக்களின் அதிருப்திக்குக் காரணமாக இருந்த அம்சங்களிலும் கவனம் செலுத்தியிருக்கிறார் நிதியமைச்சர். அதனால்தான் பேருந்துச் சேவையை மேம்படுத்த முன்னெப்போதும் இல்லாத அளவு 1.1 பில்லியன் வெள்ளியை அவர் ஒதுக்கியிருக்கிறார்.
பொருள் சேவை வரி பற்றுச்சீட்டுத் திட்டத்தை நமது வரவு செலவுத் திட்டத்தின் நிரந்தரக் கூறாக்கியிருப்பதை அனைத்து சிங்கப்பூரர்களும் வரவேற்பர்.
வசதி குறைந்த குடும்பங்களுக்கு பல உதவித் திட்டங்களை அறிவித்து, அவர்களைக் கைதூக்கி விடுவதிலும் கவனம் செலுத்தியிருக்கிறார் திரு தர்மன். வருவாய் குறைந்த சிங்கப்பூரர்களின் வருமானத்தைத் தொடர்ந்து உயர்த்தும்  தொலைநோக்கு இந்த வரவு செலவுத் திட்டத்திலும் தென்படுகிறது.
கட்டுக்கோப்பான ஆட்சி, கவனமாகத் திட்டமிடல், மக்கள் வளத்திலும் உள்ளமைப்பு வசதிகளிலும் கவனம் செலுத்துதல் ஆகியவை ஒருங்கே அமைந்திருப்பதால்தான் சிரமமான ஓரிரு ஆண்டுகள் தவிர்த்து மற்ற ஆண்டுகளில் எப்போதுமே உபரியைக் காட்டி வந்திருக்கிறது இந்த அரசாங்கம். அதனால்தான் நாம் வேதனை நோக்கி வீழாமல் சாதனை நோக்கி தொடர்ந்து பயணிக்கிறோம்.
tm logo
Sunday, February 12th, 2012

“உங்களுக்கு நாளை முதல் புதிய வேலை, புதிய பயிற்சி, புதிய பொறுப்புகள்” என்று இளம் ஐரோப்பிய ஊழியர் ஒருவரிடம் சொல்லுங்கள்.

“அப்படியா, என்ன வகை பயிற்சி? அதில் நான் வெற்றிபெற எனக்கு எப்படி உதவுவீர்கள்? நான் என்ன, எப்படிச் செய்வேன்?” இப்படி எல்லாம்தான் அந்த ஊழியர் கேட்பார்.

அதே கேள்வியை இளம் சிங்கப்பூர் ஊழியர் ஒருவரிடம் கேட்டுப் பாருங்கள்.
அவர் என்ன சொல்வார் தெரியுமா? “பயிற்சியில் தோற்று விட்டால் என் கதி என்ன? பயிற்சி முடிந்ததும் எனக்கு வேலை கிடைத்துவிடும், இல்லையா? வேலை போனால் கையில் காசு வருமா?” என்றெல்லாம் சிங்கப்பூர் இளையர் கேட்பார்.

ஏன் இந்த வேறுபாடு?
சிங்கப்பூர் இளையரிடம், மாணவர்களிடம் சிங்கப்பூர் தவிர்த்து வேறு இடங்களில் வெற்றி பெறும் நம்பிக்கை இல்லை; ஊக்க முயற்சியும் கிடையாது.  அவர்கள் பொத்திப் பொத்தி வளர்த்த பிள்ளைகளாக இருக்கிறார்கள்.

இதுதான் மிகவும் கவலையாக இருக்கிறது என்று கல்வி அமைச்சர் ஹெங் சுவீ கியட், அண்மையில் கருத்தரங்கு ஒன்றில் பல்கலைக் கழக மாணவர்களிடம் பேசியபோது தெரி வித்து இருக்கிறார்.
இந்த நிலவரம் அமைச்சரின் கவலை மட்டும் அல்ல; நாடும் வீடும் பகிர்ந்துகொள்கின்ற ஒரு கவலையாக இருக்கிறது.

இயற்கை வளம் இல்லாத நிலையில், தனது மனித வளத்தை மட்டுமே மலைபோல் நம்பி இருக்கவேண்டிய சிங்கப்பூரில், மாணவர்கள் தொடக்கம் முதலே சுகமான, பாதுகாப்புமிக்க சூழலில் வளர்ந்து வருகிறார்கள். தன்னை அரசாங்கம் தத்தெடுத்துக் கொண்டு இருக்கும் ஒரு பிள்ளை என்றே கருதும் மனப்போக்கு இளையரிடம் இருக்கிறது.

பள்ளிக்கூடத்தில் படிக்க இடம், கல்லூரியில் இடம், பிறகு  வேலை, அப்புறம் வீடு, மருத்துவம், ஓய்வு பெற்ற பிறகும் பணம்  என்று எல்லாவற்றுக்கும் பொறுப்பு அரசாங்கம் என்ற எண்ணம் சிறு வயது முதலே பிள்ளைகளிடம் ஏற்பட்டு, போகப்போக அது வலுப்பெறுகிறது.

உலகச் சூழல் வேகமாக மாறிவருகிறது. அந்த மாற்றத்தின் விளைவாக, சிங்கப்பூர் இளையர்கள் மூன்றாம் உலக நாடு களில் வேலை பார்த்து வாழ்ந்து பிழைக்க வேண்டிய நிலை ஏற்பட்டால்?
இதனால்தான், வேகமாக மாறும் சூழ்நிலைக்குத் தக்கவாறு தாங்களும் மாறிக் கொள்ளும் திறன், கலாசாரங்களைக் கடந்து கலந்துறவாடும் திறன் ஆகியவை சிங்கப்பூர் இளையருக்கு அவசியம் என்கிறார் கல்வி அமைச்சர்.
உலகில் போட்டித் திறன் அதிகரித்துவருகிறது. மற்ற பல நாடுகளில் உருவாகி வரும் மாணவர்கள், பழக்கப்பட்ட சூழல்தான் நமக்கு ஒத்துவரும் என்றோ,  நமது நாடுதான் நமக்குக் கதி என்றோ கருதி, வாய்ப்புகளுக்குச் சொந்த நாட்டையே எப்போதும் சார்ந்து இராமல், அங்கேயே ஒடுங்கி விடாமல் பார்வையை உலக மயப்படுத்துகிறார்கள். நிலைக்கு ஏற்ப மாறிக்கொண்டு விடுகிறார்கள்.
இடர்களைத் துணிந்து எதிர்கொண்டு சமாளிக்க தேவை யான தெம்பை, துணிவை அவர்கள் வளர்த்துக் கொள்கிறார்
கள். இவை, அவர்களின் போட்டித்திறன் இன்னும் அதிகரிக்க உதவுகின்றன.
மற்ற நாடுகளின் இளையர்களுடன் போட்டிபோட வேண்டிய நிலையில் இருக்கும் சிங்கப்பூர் மாணவர்களுக்கு இதர உலக நாடுகளைச் சேர்ந்த இளையரின் மனப்போக்கு மிகமிக அவசியம்.
சிங்கப்பூர் மாணவர்கள் குண்டுச் சட்டியிலேயே குதிரையை  ஓட்டாமல் வெளிக் கண்னோட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும். பொத்திப் பொத்தி வளர்க்கப்படும் பிள்ளைகளாக இல்லாமல் உலக அனுபவத்துக்காக அவர்கள் திரைகடல் ஓட வேண்டும்.

பள்ளிக்கூடத்தில் படிக்கும் படிப்பு மட்டுமே போதும் என்ற நிலை இனி இல்லை என்பதை அவர்கள் உணர வேண்டும்.
ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது, கட்டிக்கொடுத்த சோறும் சொல்லிக் கொடுத்த பாடமும் கடைசி வரை வராது  என்பதை இன்றைய இளையர்கள் உணர வேண்டும்.
இளையர்களிடம் ஊக்கமும் இடர்களை எதிர்த்து வெற்றி பெறும் முயற்சியும் குறைவாக இருப்பதற்கு அவர்கள் மட்டும் தான் பொறுப்பா?

இதில் முதலாளிகளுக்கும் பொறுப்பு இருக்கிறது என்கிறார் வல்லுநர் ஒருவர். காலத்துக்கு ஒத்துவராத வேலை இடங்களும் நிர்வாக நடைமுறைகளும் மாற வேண்டும் என்று முன்னாள் முதலீட்டு வங்கியாளரான மைக்கல் டீ சொல்கிறார்.

இத்தகைய பத்தாம்பசலி நிலவரங்கள் இளையர்களுக்கு ஊக்கத்தைக் கொடுக்காமல் கெடுக்கின்றன என்பது அவர் வாதம். இளையர்களை கிணற்றுத் தவளையாக ஆக்கக் கூடாது. அதேவேளையில் அவர்கள் தேசப் பற்றுடன் திகழ வேண்டும்.

சிங்கப்பூரர்களின் ஆற்றலை மேம்படுத்தும் திட்ட விவரங்களை கல்வி அமைச்சர் விரைவில் அறிவிக்க இருக்கிறார். அவை மாணவர்களுக்கு இன்னும் ஊக்கமூட்டும் ஊக்குவிப்பாகத் திகழும் என்று நம்பலாம்.

tm logo
Sunday, January 29th, 2012

1996ஆம் ஆண்டு மே 26ஆம் தேதி வாம்போ டிரைவில் நடந்த நால்வர் சம்பந்தப்பட்ட கைகலப்பில் இப்போது ஒருவர் மட்டுமே உயிருடன் இருக்கிறார். மைக்கல் சரவணன் என்ற 25 வாலிபரை மூவர் கொன்றுவிட்டனர். அதன் காரணமாக அசோகன் ரமேஷ், 23, செல்வகுமார், 25, ஆகிய இருவரையும் 1998ல் சட்டம் தூக்கிலிட்டது. மாதவகண்ணனின் தூக்கு தண்டனை அதிபர் கருணையால் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. குற்றம் நடந்தபோது மாதவகண்ணனின் வயது 18. அவர் மட்டும் உயிர் பிழைத்து அண்மையில் விடுதலையாகி உள்ளார்.

வாலிப வயதில் மூன்று உயிர்கள் வீணாகப் பிரிந்துள்ளன. இந்த சம்பவம் தனிப்பட்ட ஒரு சம்பவம் அன்று. இளையர்கள் சிலர் கொலை, குண்டர் கும்பல் சண்டை போன்ற குற்றச் செயல்களுக்காக சிறைக்குப் போவதையும் உயிர் இழப்பதையும் செய்திகளில் அவ்வப்போது தெரிந்துகொள்கிறோம்.

1980களிலும் 90களிலும் அதிகமாகச் செயல்பட்ட குண்டர் கும்பல்களையும் அதன் தலைவர்களையும் சட்டம் வேட்டையாடி ஒடுக்கிவிட்டது. எனினும் அண்மைய காலங்களில் அந்தப் பிரச்சினை மீண்டும் தலைதூக்கி உள்ளதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. ‘வீராசாமி’, ‘சாராஜம்போ’, போன்ற இந்திய குண்டர் கும்பல்கள் இன்றும் இயங்கிக் கொண்டிருப்பதாகவும் அறியப்படுகிறது.  
குண்டர் கும்பல்களின் செயல்பாடுகள், அதில்  நம் இந்திய இளையர்கள் சேர்வதற்கான காரணங்கள் போன்ற அடிப்படைகளை நாம் ஆராய வேண்டும்.

ஒன்றாகச் சேர்ந்து குடிப்பது, சண்டைகளில் ஈடுபடுவது போன்றவை பெரும்பாலும் குண்டர் கும்பல்களின் நடவடிக்கை களாக உள்ளன. சில கும்பல்கள் போதைப் பொருள் கடத்தல், விபசாரம், கடன் முதலை நடவடிக்கைகள் ஆகியவற்றில் ஈடுபடுகின்றன.
பிளவுபட்ட குடும்பங்களைச் சேர்ந்த இளையர்களையும் கல்வித் திட்டத்தின் விரிசல்களில் விழுந்தவர்களையுமே பெரும்பாலும் இந்த கும்பல்கள் ஈர்க்கின்றன. அங்கீகாரமும் அரவணைப்பும் ஆதரவும் கிடைக்கிறது என்று தவறாக எண்ணி இக்கும்பல்களின் பிடியில் சிக்குபவர்கள் பலர்.
இந்தப் பிரச்சினைகளைக் களைய தேசிய அமைப்புகளும் இந்திய அமைப்புகளும் உள்ளன. ஆனால் எல்லாப் பிரச்சினைகளையும் சிண்டாவாலும் மற்ற அமைப்புகளாலும் தீர்த்து விட முடியாது. சமூக அமைப்புகள் பலவும் சமூகத்துடன் ஒன்று சேர்ந்து இப்பிரச்சினைக்குத் தீர்வு காண முன்வர வேண்டும்.

சமூக அமைப்புகள், துணைப்பாட வகுப்புகளும் மொழி வளர்க்கும் பன்கலைப் போட்டிகளும் நடத்தும் அதே சமயத்தில் சிறார்களைத் தீய பாதைக்குச் செல்லாமல் நல்வழியில் திருப்புவதற்கான நடவடிக்கைகளைச் செயல்படுத்தலாம்.

எல்லோரும் தலைசிறந்த கல்விமான்கள் ஆக முடியாது.  அதேநேரத்தில் ஒவ்வொருவருக்கும் தனித்திறமைகள் இருக்கும். அவர்கள் வெவ்வேறு திறன்களைப் பெற்றிருப்பார்கள். படிப்பில் பின்தங்கியிருக்கும் இளையர்கள் தங்களது திறன் களை அடையாளம் காணவும், அதில் சிறக்கவும் வாய்ப்பையும் வசதியையும் ஏற்படுத்தித் தருவது பெற்றோர் மற்றும் சமூகத் தின் கடமையாகும்.

இன்று சிங்கப்பூரில் கலைகள், விளையாட்டு என பல துறைகளில் வாய்ப்புகள் உள்ளன. அவற்றிலும் பட்டயக் கல்வியையும் பட்டக் கல்வியையும் பல கல்வி நிறுவனங்கள் வழங்குகின்றன. சரியான பாதையைத் தேர்ந்தெடுக்க பல மாணவர்களுக்கு முறையான வழிகாட்டுதல் தேவைப்படுகிறது.  முக்கியமாக, பிரச்சினையுள்ள குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள், கல்வியில் பின் தங்கிய மாணவர்களுக்கு இந்த வழிகாட்டுதல் அத்தியாவசியமாகிறது.

பிரச்சினையை முளையிலேயே கிள்ளி எறிவதே சாலச் சிறந்தது. ஒவ்வொரு சமூகத்தினரின் பிரச்சினைகள் தனித்தன்மை வாய்ந்தவை.

இன்றைய இந்திய இளையர்களிடம் குண்டர் கும்பல் பிரச்சினை எவ்வளவு தூரம் வேரோடியிருக்கிறது என்பதை நாம் ஆராய வேண்டும்.

நாட்டின் சிறுபான்மை இனமான  இந்தியர்களில் சிறு விழுக்காட்டினர் பாதை மாறிச் சென்றால்கூட, அது நமக்கு பேரிழப்பாகவே அமையும். நமது அடுத்த தலைமுறையினரை நல்வழிப்படுத்தும் பெரும் பொறுப்பும் கடமையும் நம் ஒவ்வொருவருக்கும் உண்டு.

tm logo
Sunday, January 22nd, 2012

சிங்கப்பூர் அமைச்சர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் தனியார் துறையில் வழங்கப்படும் சன்மானத்துக்கு ஓரளவிற்காவது ஒத்திருக்க வேண்டுமா, அல்லது அரசியல் பணியில் ஈடுபடுவர்கள் அதை நாட்டுக்கு ஆற்றும் சேவையாகக் கருதி தியாக உணர்வுடன் செயல்பட வேண்டுமா? 

இத்தகைய கேள்விகளும் அதைத் தொடர்ந்த விவாதங்களும் நெடுங்காலமாக இருந்து வந்துள்ளன.

இந்த உணர்ச்சிபூர்வமான பிரச்சினை சென்ற ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சைக்குள்ளானது. அரசியல்வாதிகளுக்கு சம்பளம் அளவுக்கு அதிகம் என்று குறைகூறப்பட்டது.

இதைத் தொடர்ந்து சென்ற ஆண்டின் பொதுத்தேர்தலுக்கு பின் பிரதமர் லீ சியன் லூங், அமைச்சர்களின் சம்பளங்கள் மறுபரிசீலனை செய்யப்படும் எனவும் புதிய சம்பளங்கள் கடந்த ஆண்டு மே 21ம் தேதி அரசு பதவியேற்ற நாளிலிருந்து அமலுக்கு வரும் என்றும் தெரிவித்தார்.

பிரச்சினை பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்திய பின் அதைச் சரியான முறையில் எதிர்கொள்ள வேண்டும் என்ற பிரதமரின் உறுதியை அது வெளிப்படுத்தியது. தொடர்ந்து திரு ஜெரார்ட் ஈ தலைமையிலான சம்பள மறுபரிசீலனைக் குழு அமைக்கப்பட்டது. குழுவின் பரிந்துரைகள் இம்மாதம் 4ம் தேதி வெளியிடப்பட்டன.

அதிபர், பிரதமர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சபாநாயகர் என அனைத்து அரசியல் பதவிகள் வகிப்போரின் சம்பளங்களை 36 விழுக்காடு முதல் 53 விழுக்காடு வரை குறைக்கவும், ஓய்வூதியத்தை முற்றாக ஒழிக்கவும் அந்தக் குழு விரிவான பரிந்துரைகளைச் செய்தது.

சம்பள வெட்டுகள் கணிசம் என்பது பரிந்துரைகளை மேலோட்டமாகப் பார்த்தாலே புலப்படும். அத்துடன் ஓர் அமைச்சரின் நிலையான சம்பளம் என்பது அவருடைய மாதச் சம்பளமும் கூடுதலாக 13ம் மாதச் சம்பளமாக வழங்கப்படுவதும் மட்டுமே. அமைச்சர்களுக்கு கிடைக்கக்கூடிய சேவைத் திறன் போனஸும், தேசிய போனஸும் நிச்சயமில்லாதவை. அதிலும் குறிப்பாக தேசிய போனஸை பெறுவதற்கு சிங்கப்பூரர்களின் நடுத்தர வருமான வளர்ச்சி விகிதம், கடைநிலை சம்பளம் பெறும் 20 விழுக்காட்டினரின் வருமான வளர்ச்சி, வேலையில்லாதோர் விகிதம், ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி ஆகியவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அமைச்சர்களின் சம்பளங்களை மறுபரிசீலனை செய்ய சுயேச்சையான குழு அமைம்ம வேண்டும் என்று குழு பரிந்துரைத்தது.

குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்ட பிரதமர் லீ, மிகச் சிறந்த திறனாளர்களை அமைச்சரவையில் தக்க வைத்துக் கொள்ளவும், நேர்மையான அரசாட்சியைத் தொடரவும் தகுந்த ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பதற்கான காரணத்தைவிளக்கினார்.

அமைச்சர்களின் சம்பளங்களை மற்ற நாட்டுத் தலைவர்களின் வருமானத்துடன் ஒப்பிடுவதை விட்டு விட்டு நம் நாட்டுச் சூழலுக்கு ஏற்ப சிந்தித்து முடிவெடுப்பதே சிறந்தது.

சரியான சம்பளம் வழங்காவிட்டால் நாட்டை ஆளக்கூடிய தகுதி வாய்ந்த திறனாளர்களை ஈர்க்க முடியாது என்பதே இன்றைய உலகமயமாக்கலின் யதார்த்த நிலை. தவிர, பிற நாடுகளில் உள்ள மற்ற கணிசமான சலுகைகள் சிங்கப்பூர் அமைச்சர்களுக்கு வழங்கப்படுவதில்லை.

அமைச்சர்களின் சம்பளங்களில் தேவைக்கு அதிகமான கெடுபிடி இருந்தால் முன்னாள் மதியுரை அமைச்சர் கூறியதுபோல் உலக அரங்கில் சிவப்புப் புள்ளியாக ஒளிவீசும் சிங்கப்பூர் கரும்புள்ளியாக மாறும் அபாயம் உள்ளது என்பதை நினைவில் வைத்துக்கொள்வது நல்லது.

உலகின் மிகப் பழமையான அரசியல் சாசனங்களில் ஒன்றான, கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட அர்த்தசாஸ்திரத்தில், “ஊழலை ஒழிக்க பொதுத் துறை அதிகாரிகளுக்கு அதிக சம்பளம் தரப்பட வேண்டும்,” என்று கௌடில்யர் எழுதியுள்ளார்.

இக்கருத்தைதான் சிங்கப்பூர் அரசாங்கம் இதுவரை வலியுறுத்தி வந்துள்ளது.

Sunday, January 15th, 2012

சாதாரண மக்களின் வங்கி என்று போற்றப்படும் டிபிஎஸ் மற்றும் பிஓஎஸ்பி வங்கிகளின் கணக்குகளிலிருந்து முதற் கட்டமாக சுமார் $200,000 பணம் அத்துமீறி எடுக்கப்பட்டு இருக்கிறது என்று இம்மாதம் 6ஆம் தேதி தெரியவந்ததும் 

அந்த வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் பதற்றம் அடைந்தனர்.
இவ்வளவு பாதுகாப்பு அம்சங்கள் உள்ள வங்கியில் எப்படி இத்தகைய மோசடி நடந்திருக்கமுடியும்? ஏடிஎம் அட்டைகளின் எண்களும் ரகசிய குறிப்பும் எப்படி மோசடிக்காரர்களுக்குத் தெரிய வந்தது? அதுவும் அத்துமீறி பணம் எடுத்தல் செயல் மலேசியாவில் நடந்துள்ளதே, எப்படி? என்று பலவிதமான கேள்விகளால் வாடிக்கையாளர்கள் குழம்பித் தவித்தனர்.
இருப்பினும், தங்கள் கணக்குகளில் அத்துமீறி பணம் எடுக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட தனது வாடிக்கையாளர்கள் அனைவரின் பணமும் திரும்ப அவரவர் வங்கிக் கணக்கில் உடனடியாகச் சேர்ப்பிக்கப்படும் என்று டிபிஎஸ் வங்கி அறிவித்தது வாடிக்கையாளர்கள் அதன் மீது வைத்திருக்கும் நம்பிக்கை பாதிக்கப்படாமல் தடுத்தது.
தங்கள் வங்கிக் கணக்குகளில் பணம் பத்திரமாக இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ள 7ஆம் தேதி காலையிலேயே டிபிஎஸ்/பிஓஎஸ்பி வங்கி வாடிக்கையாளர்கள் அவ்வங்கிக் கிளைகளில் தானியக்க வங்கி இயந்திரங்களின் முன்னால் வரிசை பிடித்து நின்றனர். அதே நாள் பிற்பகலில் டிபிஎஸ் வங்கி, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 400 பேர் என்றும் மோசடியால் களவாடப்பட்ட தொகை சுமார் $500,000 என்றும் அறிவித்ததும் வியப்பும் குழப்பமும் பன்மடங்கு அதிகரித்தது.
சிங்கப்பூரில் செயல்படும் சில பிரதான வங்கிகள் அதிகமான கணினிக் கட்டமைப்பையும் தகவல் தொழில்நுட்ப உத்திகளையும் பயன்படுத்தி வருகின்றன.
உதாரணத்துக்கு, வங்கி வாடிக்கையாளர் ஒருவர் உள்ளூரிலோ, வெளிநாட்டிலோ தமது வங்கிக் கணக்கில்
இருந்து பணம் எடுத்த சில நிமிடங்களிலேயே அவரது கைத்தொலைபேசிக்கு அது குறித்த குறுஞ்செய்தி
அனுப்பப்படும்.
அப்படி இருக்கையில் பெரிய வங்கியான டிபிஎஸ்/பிஓஎஸ்பி வங்கிகள் மட்டும் ஏன் இப்படிப்பட்ட உத்தியைப் பயன்படுத்த வில்லை என்றும் வாடிக்கையாளர்கள் கேள்வி கேட்கத் தொடங்கிவிட்டனர்.
டிபிஎஸ் வங்கிக்கு சிங்கப்பூரிலும் ஹாங்காங்கிலும் சுமார் நான்கு மில்லியனுக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கள் வாடிக்கையாளர்களின் நம்பகத்தன்மையைக் கட்டிக்காக்கும் பொருட்டு டிபிஎஸ் வங்கிக் குழுமத்தின்
தலைமை நிர்வாகி திரு பியுஷ் குப்தா, முன்வந்து
தானியக்க வங்கிச் சாதன மோசடிகளுக்காக வாடிக்கை யாளர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டது ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.
இந்த ஏடிஎம் மோசடியில் ஏறக்குறைய $1மி. இழந்த 696 பேர்களின் வங்கிக் கணக்குகளில் பணம் திரும்பப் போடப்பட்டதாக திரு பியுஸ் குப்தா தெரிவித்தார்.
இந்த மோசடியில் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களான லோக் சியு ஃபேய், ஹங் கிக் சின் ஆகிய மலேசியர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது
“உண்மையைச் சொல்லப்போனால், இது நமது வங்கி, இவர்கள் எல்லாம் நமது வாடிக்கையாளர்கள். எனது சக அதிகாரிகள் சார்பில் நான் சொல்வது என்னவென்றால், மக்கள் சந்தித்த அத்தனை அசௌகரியங்களுக்காக நாங்கள் வருந்துகிறோம். அவர்களின் சிரமங்களுக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்,” என்று குறிப்பிட்ட திரு குப்தா, “இணைய ஊடுருவிகள் நாளுக்கு நாள் அதிக புத்திசாலி ஆகிறார்கள். அவர்களை முறியடிக்க நாமும் புதிய வழிகளைப் பயன்படுத்தவேண்டும்,” என்றார்.
இனி, பெரும் தொகையை வங்கிக் கணக்கிலிருந்து எடுக்குமுன் வாடிக்கையாளருக்கு குறுந்தகவல் அனுப்புவது, வெளிநாடுகளில் பணம் எடுக்க வாடிக்கையாளர்கள் முன்அனுமதி பெறவேண்டும் போன்ற யோசனைகள் பரிசீலனையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தது ஆறுதலளிக்கிறது. வாடிக்கையாளர்களும் தங்கள் பரிவர்த்தனைகள் வங்கிக் கணக்குப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்வதும் நன்மை பயக்கும்.

tm logo
Sunday, January 8th, 2012

அரசியல் என்பதை வாழ்க்கைத் தொழிலாகப் பார்க்க வேண்டுமா அல்லது சமுதாய சேவையாகப் பார்க்க வேண்டுமா? 

இந்தக் கேள்வியின் அடிநாதமாக ஒலிப்பது சிங்கப்பூர் அரசியல் தலைவர்களின் ஊதியம் பற்றி பொதுமக்களிடையே நிலவும் நெருடல்.

ஓர் அமைச்சரின் பண்புகள் எப்படி இருக்கவேண்டும் என்பதை
“தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
சொல்லலும் வல்லது அமைச்சு,”

 என்கிறார் வள்ளுவர்.

ஒரு செயலைத் தேர்ந்தெடுப்பதும், அதனை நிறைவேற்றும் வழிவகைகளை ஆராய்வதும், முடிவு எதுவாயினும் அதனை உறுதிபடச் சொல்லும் ஆற்றல் படைத்திருப்பதும் அமைச்சருக்குரிய சிறப்பாகும் என்பது அதன் பொருள்.
ஓர் அமைச்சரிடம் இவ்வளவு பண்புகள் எதிர்பார்க்கப்படும் போது அதற்கு நிகராக அவருக்கு ஊதியம் வழங்கப்படுவதில் என்ன தவறு இருக்க முடியும் என்று ஒரு சாரார் கருதுகின்றனர்.
ஆனால் அரசியலுக்கு வருவதற்கு ஊதியம் தடையாக இருக்கக்கூடாதே ஒழிய அதுவே ஒரு காரணமாக இருக்கக் கூடாது என்று இன்னொரு பிரிவினர் நம்புகின்றனர்.
நாட்டிற்குச் சேவை புரிய வருபவர்களுக்கு வசதியாக வாழும் அளவிற்கு சம்பளம் கிடைத்தால் போதாதா என்று கேட்போரும் உண்டு.
இந்தக் கருத்துக்களின் அழுத்தமான வெளிப்பாடுதான் சென்ற ஆண்டு மே மாதப் பொதுத் தேர்தல் முடிவுகள்.
உலகின் எந்த அரசாங்கத்தின் செயல்பாட்டுக்கும் சற்றும் சளைத்ததல்ல சிங்கப்பூர் அரசாங்கத்தின் செயல்பாடுகள் என்பதைப் பொதுவாக ஏற்றுக்கொள்ளும் சிங்கப்பூரர்கள், அப்படிப்பட்ட சீரிய செயல்பாட்டை வழங்கிவரும் அமைச்சர்களின் சம்பள விஷயத்தில் பல்வேறு கருத்துகளைக் கொண்டிருக்கின்றனர்.
அவற்றுக்கு ஒரு தீர்வு காணும் முயற்சிதான் திரு ëஜரார்ட் ஈ தலைமையில் கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்ட அமைச்சர்களின் சம்பள மறுபரிசீலனை அறிக்கை.

பண விஷயத்தில் எல்லோரையும் திருப்திப்படுத்துவது முடியாத காரியம் என்ற பின்னணியில் பார்த்தால், புதிய சம்பளப் பரிந்துரைகள் சரியான திசையை நோக்கிச் செல்கின்றன என்றே சொல்லலாம்.

அதற்கு முக்கிய காரணம், புதிய சம்பளங்களை அடையாளம் காண குழு பயன்படுத்திய மூன்று அம்சங்கள் - திறனாளர்களை ஈர்க்கும் அளவுக்கு போட்டித்தன்மை மிக்க சம்பளம், தியாகத்தைக் குறிக்க 40 விழுக்காடு கழிவு, எந்த ஒளிவு மறைவும் இல்லாத “தூய்மையான சம்பளம்”.

தூய்மையான சம்பளம் என்பதன் வெளிப்பாடுதான் ஓய்வூதியத்தை முற்றாக அகற்றும் பரிந்துரை.
சிங்கப்பூரில் ஓய்வூதியம் என்பது கிட்டத்தட்ட ஒரு
வரலாற்றுச் சொல்லாகிவிட்ட நிலையில் அரசியல் தலைவர்களுக்கும் இனி அது பொருந்தாது என்பது நிச்சயமாக வரவேற்கத்தக்க ஒரு பரிந்துரை.
இன்னொரு கவரும் அம்சம் புதிய ‘தேசிய போனஸ்’. அதனைத் தீர்மானிக்கும் நான்கு அம்சங்களுமே சராசரி சிங்கப்பூரர்களின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டவை.
குறிப்பாக, ஆக அடிமட்ட சம்பளம் பெறும் 20
விழுக்காட்டினரின் சம்பளங்கள் உயர வேண்டும்; வேலை இல்லாதோர் விகிதம் குறைய வேண்டும். அதன் அடிப்படையில்தான் போனஸ் தொகை அமையும். அமைச்சர்களின் வருமானத்தில் இதுவரை நேரடியாக சம்மந்தப்படாத விஷயங்கள் அவை.
சராசரி சிங்கப்பூரரின் நலன் முதன்முறையாக அமைச்சர்களின் ஊதியத்தோடு தொடர்புபடுத்தப்பட்டு இருப்பது மிகச் சரியான அணுகுமுறை.

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை சம்பளங்கள் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்ற பரிந்துரை எதிர்காலத்திலும் மக்களின் உணர்வுகள் மதிக்கப்படும் என்பதற்கான சான்று.

குழு அதன் வேலையைச் செய்து விட்டது; பரிந்துரைகளை ஏற்கப் போவதாகப் பிரதமரும் அறிவித்திருக்கிறார்.

நன்மதிப்பு, நன்னம்பிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் சிங்கப்பூரர்களும் அதனை ஏற்றுக்கொள்வதே சிறந்தது.

Sunday, January 1st, 2012

இப்படிக்கூட நடக்குமோ என்று வியப்புடன் வாய் மூடும் விரல்களை ஆச்சரியக் குறிகளாக நட்டுவைத்து விடை பெற்றிருக்கிறது 2011.

யானை பலமும் புலியின் வீரமும்கூட சோதனைக்குள்ளாகும் என்பதைச் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறது அந்தப் பொல்லாத ஆண்டு. நமது குடியரசில் 2011 விதைத்த மாற்றங்கள், வரலாற்று ஆச்சரியங்கள்.

1959ல் மக்கள் செயல் கட்சி ஆட்சி பீடத்தில் அமர்ந்த பின்னர் பெரிய அரசியல் மாற்றம் நிகழ்ந்து மக்களின் விழிக் கதவுகளை மேல்நோக்கி உயரச் செய்தது அந்த ஆண்டுதான்.

மே மாத பொதுத் தேர்தலில் ஐவர் கொண்ட அல்ஜுனிட் குழுத் தொகுதியை 9.42% வாக்குகள் வித்தியாசத்தில் மக்கள் செயல் கட்சி இழந்தது அரசியல் அரங்கில் இதுவரை நடந்திராத ஒன்று.

முன்னணி அமைச்சர்களில் ஒருவரான ஜார்ஜ் இயோ அரசியலிலிருந்து விடைபெற இத்தேர்தல் காரணமாக அமைந்தது.

அல்ஜுனிட் போன்ற தொகுதிகளில் சில வாக்காளர்கள் ஆடி வெள்ளம் போல் பொங்கியதற்கு இரு முக்கிய பிரச்சினை கள் காரணமாகச் சொல்லப்பட்டன. வீடமைப்பு, பொதுப் போக்குவரத்து ஆகியன அவை. விளைவு, பாட்டாளிக் கட்சிக்கு முதல் தடவையாக ஒரு குழுத் தொகுதி கிடைத்தது.

வட்ட நிலவைக் கட்டி இழுத்து வந்ததைப் போன்ற களிப்பில் திளைத்தது அக்கட்சி. முன்னைய மதியுரை அமைச்சர் திரு லீ குவான் இயூ, சுமார் 52 ஆண்டுகளுக்குப் பின்னர் அமைச்சரவையில் இல்லாமல் கலந்துகொண்ட முதல் தேசிய தின நிகழ்வுகள் இடம்பெற்றதும் 2011ல்தான்.

முன்னணித் தலைவர்களான கோ சோக் டோங், வோங் கான் செங், எஸ் ஜயகுமார் ஆகியோர் அமைச்சரவையில் தங்கள் பொறுப்புகளை கைவிட்டனர். பின்னர் வந்த அதிபர் தேர்தலில் நான்கு முனைப் போட்டி ஏற்பட்டதும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்டதும் வியப்பின் வரிசையில் வந்தமர்ந்த அம்சங்கள். நியமன நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு இதுவரை இல்லாத அளவுக்கு 50 பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள்.

தொலைக்காட்சி நடிகை உள்பட பல்வேறு துறைகளைச் சார்ந்த தனிப்பட்டவர்கள் நாடாளுமன்றத்தில் மாற்றுக்குரல் எழுப்ப முன்வந்துள்ளது அதிக விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதைக் காட்டுகிறது. தேர்தல் வெற்றி இனி சுலபமாகக் கிட்டாது என்பது உணர்த்தப்பட்டிருக்கிறது.

பிரதமரும் மசெக தலைமைச் செய லாளருமான திரு லீ சியன் லூங்கும் இதைத்தான் அண்மை யில் சொல்லியிருக்கிறார். அரசியல் விழிப்புணர்வு வளர்ந்ததன் விளைவாக, இனி, வலியின்றி வெற்றி பிறக்காது. கிழக்குகூட வலியால் சிவந்துதான் சூரியனைப் பிரசவிக்கிறது.

எனவே கட்சியின் எல்லா வேட்பாளர்களும் இனி இன்னும் கடினமாக உழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அரசாங்கமும் இப்போது விழித்துக்கொண்டுள்ளது.

மக்களின் குரலுக்கு அதிகம் செவிமடுக்கத் தொடங்கியிருக் கிறது. மக்கள் நலப் பணிகள் புதிய கோணத்திலும் புதுவேகத்திலும் நடைபெறத் தொடங்கியிருக்கின்றன.

பொது வீடமைப்புக் கொள்கையில் ஆகஸ்ட் மாதம் பெரும் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன. வீடு வாங்க விரும்பும் சிங்கப்பூரர்களின் மாத வருமான உச்சவரம்பு 17 ஆண்டு களுக்குப் பின் உயர்த்தப்பட்டது.

கட்டட வரைவுப் படங்கள் தயாரானதுமே ஏலக்குத்தகை விண்ணப்பம் கோரப்படுவது இன்னொரு மாற்றம். 2011 ஆண்டில் மட்டும் 25,200 வீடுகள் கட்டுவதற்கான திட்டங்கள் விரைந்து தொடங்கப்பட்டன. இந்தப் புதிய ஆண்டிலும் 25,000 வீடுகள் கட்டப்படவுள்ளன.

பொதுப் போக்குவரத்திலும் பல மாற்றங்கள் அவ்வப்போது அறிவிக்கப்படுகின்றன. பேருந்து, ரயில்களுக்கான காத்திருப்பு நேரத்தைக் குறைக்கப் பலவாறான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

செப்டம்பரில், கல்விக் கொள்கையில் முக்கிய மாற்றம் அறிவிக்கப்பட்டது. புதிதாக, நற்குடிமகன் மற்றும் குடியுரிமைக் கல்வித் திட்டத்தை புதிய கல்வி அமைச்சர் ஹெங் சுவீ கியட் அறிவித்தார்.

சக மாணவர்களோடு போட்டியிட்டு நல்ல மதிப்பெண்களை எடுப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல்-உலக நடப்பிற்கேற்ப நன்னெறி கொண்டு பிறர்நலனில் அக்கறை கொள்ளும் சுய விழிப்புணர்வை கடைபிடிக்க இப்புதிய கல்விப் பாடத்திட்டம் வழிசெய்கிறது.

பூவை தழுவிச் செல்லும் தென்றலில் மணம் இருக்கும். பொதுமக்களோடு கலந்துருவாகும் அரசாங்கத் திட்டங்களில் புதுப்பொலிவு இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் வரவேற்போம் 2012 புதிய ஆண்டை. “இன்சொலால் ஈத்தளிக்க வல்லாற்குத் தன்சொலால் தான்கண் டனைத்திவ் வுலகு.”

Sunday, December 25th, 2011

கடந்த வாரம் வியாழக்கிழமை பெருவிரைவு ரயில்களில் ஏற்பட்ட தடங்கல்களால் பொதுமக்களுக்கு ஒரு புதிய அனுபவம். பல ரயில்கள் திடுதிப்பென நின்றது, அதன் விளைவாக பல்லாயிரக்கணக்கான பயணிகள் செய்வதறியாது தவித்தது, நேரம் ஆக ஆக நிலைமையை கையாள தெளிவான வழிமுறை இல்லாத எஸ்எம்ஆர்டி நிறுவனம் என பலரும் கருத எதிர்பாராத காட்சிகள் அரங்கேறின.

இதில் பாதாள ரயில் பெட்டிகளில், இருட்டில், மூச்சுக் காற்று சுவாசிக்கவும் சிரமப்படும் நிலையில் பயணிகள் இருந்தனர். நல்ல வேளையாக சமயோசிதமாக செயல்பட்ட ஓர் ஆடவர் ரயில் பெட்டி சன்னல்களை உடைத்து பலருக்கு ஆறுதல் அளித்தார்.

ரயில் பயணிகளில் பலர் அன்று மிகவும் சிரமப்பட்டனர் என்றபோதிலும் பின்னர் ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டதும் இது இத்துடன் முடிந்தது என நிம்மதிப் பெருமூச்சு விட்ட சமயத்தில் சனிக்கிழமையன்று மற்றுமொரு தடங்கல்.
இம்முறை ரயில் தடங்கல் பற்றிய அறிவிப்பு முறை, பொதுமக்களை ஏற்றிச் செல்ல துணைப் பேருந்து சேவை என எஸ்எம்ஆர்டி நிறுவனம் நிலைமையை சற்று முனைப்புடன் கையாண்டாலும் பொதுமக்களின் சிரமங்கள் குறையவில்லை என்றே சொல்ல வேண்டும்.
தடங்கல் பற்றிக் கூறிய நிலப்போக்குவரத்து ஆணையம் நகரப் பகுதிகளில் உள்ள சுரங்க வழிகளில் ரயில் வண்டிகளுக்கு மின்சாரம் பாய்ச்சும் பல மின் கொக்கிகள் கழன்றிருப்பது தெரிய வந்ததாக விளக்கியது.
இதைத் தொடர்ந்து எஸ்எம்ஆர்டி நிறுவனத் தலைவர் திருவாட்டி சோ பைக் ஹுவா உடனடியாக பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழ ஆரம்பித்துள்ளது எதிர்பார்க்கக்கூடியதே.

தற்பொழுது மின் கொக்கிகள் பழுதடைந்த 13 ரயில் வண்டிகளில் 11ல் அவை சரி செய்யப்பட்டு விட்டன என்றும் இன்னும் சிறிது காலத்துக்கு வடக்கு தெற்கு வழித்தடங்களில் ரயில்கள் சற்று மெதுவாகச் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறிப்பிட்ட சில தடங்களில் ரயில்கள் மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்துக்கு மேல் செல்ல இயலாது என்றும் கூறப்பட்டுள்ளது.

இதையெல்லாம் சற்று அமைதியாக யோசித்தால் அனைவருக்கும் ஒன்று புலப்படும். அது என்னவெனில் கடந்த 24 ஆண்டுகளாக பெரிய தடங்கல் ஏதுமில்லாமல் எம்ஆர்டி ரயில் போக்குவரத்து செயல்பட்டு வந்துள்ளபோது ஒரு கட்டத்தில் சேவையில் தடங்கல் ஏற்படும் என்பது அனைவரும் எதிர்பார்த்திருக்க வேண்டிய ஒன்று. அந்தத் தடங்கலை எஸ்எம்ஆர்டி நிறுவனம் முறையாக கையாளவில்லை என்பதுதான் கவலைக்குரிய அம்சம்.

ரயில் தடங்கல் ஏற்பட்டவுடன் ரயில் பயணிகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன, பயணிகளுக்கான மாற்று ஏற்பாடுகள், கவலைப்படும் உற்றார் நண்பர்களுக்கு உரிய நேரத்தில் சரியான தகவல்கள் ஆகியவற்றை எஸ்எம்ஆர்டி நிறுவனம் சரிவர கவனித்திருந்தால் பொதுமக்களின் குறைகூறல்கள் வெகுவாகக் குறைந்திருக்கும்.

இது ஒருபுறமிருக்க, அவலை நினைத்துகொண்டு உரலை இடிக்கும் கதையாக இதைப் பயன்படுத்திக்கொண்டு ஆத்திரத்தை கொட்டித் தீர்ப்பது சரியல்ல.
பெருவிரைவு ரயில் சேவையுள்ள மற்ற நாடுகளில் தடங்கல்கள் அவ்வப்பொழுது நேர்ந்த வண்ணம் உள்ளன. அங்கெல்லாம் இவ்வளவு குறைகூறல்கள் இருப்பதாகத் தெரியவில்லை. இவை யாவும் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதி என்ற அளவிலேயே இவற்றை அங்குள்ள மக்கள் பார்க்கின்றனர்.

ஒரு வகையில் இது சிங்கப்பூரில் எல்லாமே ஓரளவு நேரத்துடனும் திட்டமிடப்பட்டும் செம்மையாகவும் நடைபெறுவதால் வந்த விளைவு. அதற்கு பழகிவிட்ட நாம் இவை என்றென்றும் நீடித்திருக்கும் என்ற மனநிலைக்கு ஆளாகிவிட்டதனால் ஏற்பட்ட கோளாறு. உலகில் வேறெங்கும் மழைத்துளி நம்மீது படாத வகையில் புளோக்குகளுக்கு நடுவே நடந்து செல்லக்கூடிய வசதி இருப்பதாகக் கூறமுடியாது. அதுபோல் இவ்வளவு குறைந்த கட்டணத்தில் நீண்ட தூர ரயில் பயணங்களையும் எங்கும் காண முடியாது.

இருப்பினும், ரயில் தடங்கல் ஏற்பட்டதும் மக்கள் நலனில் கூடுதல் அக்கறை செலுத்தியிருக்க வேண்டும் எஸ்எம்ஆர்டி.

Sunday, December 18th, 2011

தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே! தவித்த வாய்க்கு தண்ணீர் தராதவன் என்ற பழமொழிகள் எல்லாம் தமிழருக்கே சொந்தமானவை.

Sunday, December 11th, 2011

பணிப்பெண்கள் ஆங்கில அறிவைப் பெற்றிருப்பதைவிட, சிங்கப்பூரின் வேலைச் சூழலுக்குத் தங்களைப் பழக்கிக் கொள்வதே முக்கியம் என்று மனிதவள அமைச்சு முடிவெடுத்திருப்பது பலராலும் வரவேற்கப்பட்டுள்ளது.

Syndicate content