fontsize: 60% 70% 80% 90%

அன்வர் வழக்கு விசாரணை ஆகஸ்ட் 2-க்கு தள்ளிவைப்பு

மலேசியாவில் எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராகிம் மீதான ஓரினப் புணர்ச்சி வழக்கு விசாரணையை கோலாலம்பூர் நீதிமன்றம் ஆகஸ்ட் 2-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.

அன்வரின் மூத்த வழக்கறிஞர் கர்பால் சிங் 15 நாள் மருத்துவ விடுப்பில் இருப்பதால் வழக்கு விசாரணையை தள்ளிவைக்குமாறு அன்வரின் வழக்கறிஞர் பரம் குமாரசாமி மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவை ஏற்றுக்கொள்வதாக நீதிபதி முகம்மது ஜபிடின் முகம்மது டியா கூறினார்.

“ஆகஸ்ட் 2-ம் தேதி கர்பால் சிங் வந்தாலும் வராவிட்டாலும் வழக்கைத் தொடரலாம் என்று பரம் குமாரசாமி உறுதி கூறியிருப்பதால் அவருடைய மனு ஏற்கப்படுகிறது”, என்று நீதிபதி தெரிவித்தார்.

கர்பால் சிங் கடுமையான நுரையீரல் பாதிப்புக்கு ஆளாகியிருப்பது ஜூலை 9 ஆம் நாள் அவர், மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோது தெரியவந்தது.

அவர் ஜூலை 15-ம் தேதி மருத்துமனையிலிருந்து வீடு திரும்பியதாகவும் இப்போது அவர் தனது வீட்டில் ஓய்வெடுத்து வருவதாகவும் அன்வரின் மற்றொரு வழக்கறிஞரான நாயர் கூறினார்.

அன்வர், 2008-ம் ஆண்டு ஜூன் 26-ம் தேதி தன் முன்னாள் உதவியாளர் முகம்மது சைபுல் புகாரியைக் ஓரினப் புணர்ச்சியில் ஈடுபடுத்தினார் என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838