fontsize: 60% 70% 80% 90%

ஐரோப்பாவில் கால் பதிக்கவேண்டும் காற்பந்து நட்சத்திரம் ஹரிஸ் ஹருன்

சிங்கப்பூர் காற்பந்துக் குழுவின் இளம் வீரர் ஹரிஸ் ஹருன்(19) அண்மையில் சீனாவின் முன்னணி காற்பந்துக் குழுவான ஷங்காய் ஷென்ஹுவாவுடன் பத்து நாள் பயிற்சி மேற்கொண்டு திரும்பினார்.

ஷங்காய் ஷெங்ஹுவாவின் அழைப்புக்காகக் காத்திருக்கும் ஹரிஸ், காற்பந்தில் சாதிக்க விரும்பினால் அவர் இவ்வட்டாரத்தை விட்டு வெளியில் கால் பதிக்கவேண்டும்.

சீனாவின் காற்பந்தாட்டப் பயிற்சி முறைகளிலோ அதன் ஆட்டத்திலோ குறைகள் இல்லை, ஆனால் அவ்வளவு பெரிய மக்கள் தொகையைக் கொண்ட சீனா இதுவரை ஒரு முறைதான் உலகக் கிண்ண இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது (2002ல்). இதுவரை ஆசிய கிண்ணத்தையும் சீனா வென்றதில்லை.

எனவே ஐரோப்பிய நாடுகளின் லீக் போட்டிகளில் விளையாடுவது ஹரிஸிற்கு அதிக அனுபவத்தைத் தரும்.

இங்கிலாந்து, இத்தாலி, ஸ்பெயின், ஹாலந்து, ஜெர்மன¬, பிரான்ஸ், போர்ச்சுகல் போன்ற நாடுகளின் காற்பந்து லீக் தொடர்கள் பிரபலமானவை.

இந்நாடுகளின் முதல் நிலை லீக்கில் இடம்பெறவில்லை என்றாலும் அந்நாடுகளின் இரண்டாம் நிலை லீக் குழுக்களில் பெறும் அனுபவமே இன்றியமையாதது. இத்தகைய குழுக்களில் விளையாடினால் முதல் நிலை குழுக்களின் பார்வையில் படும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.

ஐரோப்பிய லீக் போட்டிகளில் முஸ்லிம்கள் உட்பட பல நாட்டு விளையாட்டாளர்கள் விளையாடுகின்றனர்.

சீனாவில் பயிற்சி மேற்கொண்ட போது ‘ஹலால்’ உணவு கிடைப்பது, மொழியும் பெரும் பிரச்சினையாக இருந்தது என ஹரிஸ் கூறியிருந்தார்.

ஐரோப்பாவில், குறிப்பாக பிரான்ஸ், இங்கிலாந்து, துருக்கி போன்ற நாடுகளில் உணவுப் பிரச்சினை இருக்காது.

சிங்கப்பூரின் முன்னாள் காற்பந்து நட்சத்திரங்களான ஃபாண்டி அகமது, வி. சுந்தரமூர்த்தி போன்றோரும் தங்கள் இளமைப் பருவங்களில் ஐரோப்பியக் குழுக்களில் சில காலம் விளையாடியது நினைவிருக்கலாம்.

மொழி, பருவநிலை மாற்றங்கள் போன்றவை பிரச்சினையாக இருக்கலாம். ஆனால் இந்தச் சிரமங்களை எதிர்நோக்கி வெற்றி பெற்றால் ஹரிஸின் காற்பந்துத் திறன்களும் உடல், மன உறுதியும் புதிய பரிமாணத்தைப் பெறும் என்பது திண்ணம்.
முன்னணி ஐரோப்பியக் குழுக்களில் விளையாடினால் அது சிறுபான்மையினரான ஹரிஸின் சமூகத்திற்கும் பெருமை சேர்க்கும். அத்துடன் ஹரிஸின் வாழ்க்கைத் தரமும் உயரும். அவரது காற்பந்துத் திறன்களும் மேலும் கூர்மை அடையும்.

சிங்கப்பூரின் 21 வயதுக்கு உட்பட்ட காற்பந்துக் குழுவின் தலைவரான ஹரிஸ், பள்ளிப் பருவத்திலிருந்தே சிங்கப்பூரின் எதிர்கால நட்சத்திரம் என வர்ணிக்கப்பட்டவர்.

ஐரோப்பாவில் சிங்கப்பூரர் ஒருவர் கால் பதித்து சிங்கப்பூருக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்ற விருப்பத்தை, ஏக்கத்தை, கனவை நிறைவேற்ற வேண்டிய திறன் ஹரிஸŸக்கு உண்டு. இதற்கு சம்பந்தப்பட்ட அமைப்புகள் உதவிக் கரம் நீட்டவேண்டும்.

ஹரிஸ் ஐரோப்பாவில்தான் விளையாட வேண்டும் என்பது கட்டாயம் இல்லை.

ஐரோப்பாவில் அவர் விளையாடினால் அவருக்கும் சிங்கப்பூருக்கும் பன்மடங்கு நன்மை கிட்டும் என்பது தெளிவு.

Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838