பணம், வாழ்க்கை வசதிகளுக்கே சிங்கப்பூரர்கள் முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்பது பொதுவாக நிலவும் கருத்து.
ஆனால் குடும்பத்தில் முதலீடு செய்வதே சிறந்தது என அதிகமான சிங்கப்பூரர்கள் கருதுகின்றனர் என்பதை தேசிய குடும்ப மன்றம் அண்மையில் நடத்திய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.
கடந்த சனிக்கிழமை இந்த ஆய்வை வெளியிட்டுப் பேசிய பிரதமர் லீ, வலுவான குடும்பங்களே சிங்கப்பூர் சமூகத்தின் அடித்தளம் என்று குறிப்பிட்டார்.
அன்பு, அக்கறை, பரிவு, பரஸ்பர மரியாதை, பெற்றோர் பாசம், கடப்பாடு, கலந்து உறவாடுதல் ஆகிய குடும்ப நியதிகள் மிகவும் முக்கியம் என்று 87 விழுக்காட்டினர் கருதுகின்றனர்.
பெற்றோரிடையே பாசத்தைக் காட்டுவது, குடும்ப உறுப்பினருடன் அதிக நேரம் செலவழிப்பது, கலந்துறவாடுவது ஆகியவையும் சிங்கப்பூரர்களிடையே முக்கியத் தன்மைகளாகத் திகழ்கின்றன.
வயதான பெற்றோரை முதியோர் இல்லத்தில் விடுவது சரியல்ல என 87 விழுக்காட்டினர் கருதுகின்றனர்.
மூப்படைந்து வரும் சிங்கப்பூர் சமூகத்தில் இத்தகைய மனப்போக்கை அதிகமான சிங்கப்பூரர்கள் கொண்டிருப்பது நிம்மதியையும் மகிழ்ச்சியையும் தருகிறது.
அதேநேரத்தில் முதியவர்களும் புரிந்துணர்வு மிக்கவர்களாக உள்ளனர். 60 வயதைக் கடந்தவர்களில் ஐந்தில் ஒரு பகுதியினர் தன¬யாக சொந்த வ~ட்டில் வாழ்வதையே விரும்புகிறார்கள். பிள்ளைகளுக்குப் பாரமாக இருக்கக்கூடாது என நினைக்கிறார்கள்.
இந்தியர்கள் பொதுவாகவே குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். பிள்ளைகள் பெற்றோரைப் பராமரிக்க விரும்புவதும், பிள்ளைகளுக்கு சுமையாக இருக்கக்கூடாது எனக் கருதுபவர்களும் அதிகம்.
எண்ணமும் மனப்போக்கும் வலுவாக இருந்தாலும் அவ்வப்போது பிரச்சினைகளும் நெருக்கடிகளும் நிலவும். குடும்ப உறவுகளில் எப்போதுமே சிரிப்பும் மகிழ்ச்சியும் சூழ்ந்திருக்க முடியாது.
பல தலைமுறையினர் ஒன்றாக வாழ்வது அவ்வளவு எளிதானதல்ல என்பதையும் பிரதமர் லீ சுட்டியுள்ளார்.
பிரச்சினைகள் ஏற்படும்போது, குடும்ப உறுப்பினர்கள், குறிப்பாக பெற்றோர்- பிள்ளைகள், ஒருவர் மீது மற்றொருவர் வைத்திருக்கும் பாசப் பிணைப்பை வேரறுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.
பிரச்சினைகளின் ஆணிவேரை அடையாளம் கண்டு, குடும்ப உறுப்பினர்களுடன் ஒன்று சேர்ந்து அவற்றைத் தீர்க்க வேண்டும். ஒருவரை ஒருவர் சகித்துக்கொண்டு, ஒன்று சேர்ந்து வாழ்ந்து ஒருவரை ஒருவர் பராமரிக்க வேண்டும் என்பது அவரது ஆலொசனை.
சிங்கப்பூரின் ஒரே வளம், பலம் மக்கள். மக்களுக்கு வலுவைத் தருவது குடும்ப அமைப்பு.
சிங்கப்பூர் சமூகத்தின் இந்த அடித்தளம் என்றென்றும் உறுதியாக நிலைத்திருக்கும் என நம்புவோம்.
இந்தப் பண்பாடு வரும் காலத்திலும் தொடரும் வகையில் அடுத்த தலைமுறையினரை வளர்ப்போம்.