fontsize: 60% 70% 80% 90%

மண் - தமிழ்மதி

அக்கரைவயலை உழுது
ஆற்றைக் கடந்து நடந்து
அசைபோடும் மாடு.

மோழிப்பிடித்தவனின்
முழங்கால்மட்டும் இறங்கும் உழை
அய்யனாட்டி வயலுழவில்.

கீழவெளிவயலில்தான்
நாற்றுக்கும் விரலுக்கும் வலிக்காத
நல்லசேறு.

கடலைவிளையும் கொல்லையில்
உழுதுபோட்ட புழுதிமண்
கத்திரிமுளைத்து காய்த்தமண்
மரவள்ளிகிழங்காய் மாறியமண்
சர்க்கரைவள்ளியாய் இனித்த மண்

செம்புலம் கலந்த நீராக
உயிருடல் கலந்த ஊரின்
சிவந்தமண்.

வெயிலை காய வைத்தாய்
விளைந்து வெடித்த பருத்தி கரிசல்மண்
பட்டை நெய்து விரித்த ஆற்றுமண்

குயவனின் வாசலில் குவிந்த களிமண்
சிவப்பு ரோசாவாய் பூத்த கருப்புமண்

சனவரியில் பறித்த டிசம்பர்பூவாய்
மறக்காத ஞாபகங்கள் என் மண்ணோடு.

ஆனாலும்
இன்னொரு மண்ணிருந்து
என் மண் எண்ணும் அகதியாய்த
மனம்.

************

Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838