fontsize: 60% 70% 80% 90%

வியப்பும் நம்பிக்கையும் நிறைந்த மாபெரும் வளர்ச்சித் திட்டம்

பத்து ஆண்டுகளில் சிங்கப்பூர் எதிர்கொள்ளவிருக்கும் சவால்களைச் சமாளிக்கவும் போட்டித்தன்மையை அதிகரிக்கவும் எட்டு மாதங்களுக்கு முன் பொருளியல் உத்திகள் குழுவை அரசு நியமித்தது.
புதிய யுகம், புதிய சூழல், புதிய உலக நிலவரங்களுக்கு ஏற்ப சிங்கப்பூர் புதுத் தெம்பை ஏற்றிக் கொண்டு அடுத்த கட்ட முன்னேற்றத்துக்கு ஆயத்தமாவதற்காக இந்தக் குழு நியமிக்கப்பட்டது.
நிதி அமைச்சர் தர்மன் சண்முகரத்னத்தின் தலைமையில் பொருளியல் உத்திகள் குழு முனைப்புடன் செயலாற்றி பரிந்துரைகளை ஒரு மாபெரும் திட்டமாகவே வெளியிட்டுள்ளது.
அடுத்த பத்தாண்டுகளில் வாய்ப்புகளும் சவால்களும் மாறுபட்டவையாக இருக்கும்; அதேவேளையில் பொருளியல் வளர்ச்சிக்கு பெரிய தடங்கல்களும் தோன்றும் என்று திரு தர்மன் குழுவின் அறிக்கையை வெளியிட்டு பேசுகையில் கூறினார்.
வாய்ப்புகளை வரவேற்பதற்கும் தடங்கல்களைச் சமாளிப்பதற்கும் நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் கூடுதல் மதிப்பு இருக்க வேண்டும். அதற்கு ஆற்றல், புத்தாக்கம், உற்பத்தித் திறன் ஆகியவை பிரதான கருவிகளாக இருக்கவேண்டும் என்றும்
திரு தர்மன் வலியுறுத்தினார்.
வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையை மொத்த ஊழியர் எண்ணிக்கையில் அதிகபட்சம் மூன்றில் ஒரு பங்காகக் கட்டுப் படுத்துதல், உற்பத்தித் திறனை ஆண்டுக்கு 2-3 விழுக்காடாக உயர்த்துதல், துறைமுகப் பகுதியை மாற்றி அமைத்து கட்டுமானத்துக்கு அதிக நிலத்தை ஒதுக்குதல், ஏற்றுமதி இறக்குமதி வங்கியை அமைத்தல், மின்சக்தியை இறக்குமதி செய்தல், அணுசக்தி உபயோகத்தைப் பரிசீலித்தல் ஆகியவை பிரதான பரிந்துரைகள்.
வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த அரசு படிப்படியாக அவர்களுக்கான தீர்வையை உயர்த்த வேண்டும் என்பதும் யோசனை.
அனைத்து வேலைகளிலும் சிங்கப்பூரர்களின் திறன்கள் மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் குழு பரிந்துரைத்தது.
“இந்த மாபெரும் திட்டத்தில் அனைவருக்கும் பங்கு உண்டு. திட்டத்தின் முயற்சிகள் தேசிய ரீதியிலும் துறைகள் ரீதியிலும் நிறுவனங்கள் ரீதியிலும் தனிப்பட்ட ஊழியர் ரீதியிலும் செயற்படுத்தப்பட வேண்டும்.
“உற்பத்தித் திறனை நாம் அதிகரித்தால் சம்பளங்களையும் அதிகரிக்கலாம். திறன் மேம்பாடு, வேலை மேம்பாடு, ஊதிய மேம்பாடு இவைதான் நமக்கு பொருத்தமான வழிமுறை,” என்றார் அமைச்சர் தர்மன்.
பொருளியல் உத்திகள் குழு தனது பரிந்துரைகள் கொண்ட 46 பக்க அறிக்கையைப் பிரதமர் லீ சியன் லூங்கிடம் சமர்ப்பித்தது. அந்தப் பரிந்துரைகளின் முக்கிய கூறுகளைப் பிரதமர் லீ ஏற்றுக்கொண்டார்.
அரசாங்கத்தின் எந்த ஒரு பெரிய கொள்கை மாற்ற அறிவிப்பையும் தெளிவாகத் தெரிந்துகொள்ள பொதுமக்கள் சிரமப்படுவார்கள்.
கலந்துரையாடல்கள் கருத்து பரிமாற்றம் போன்றவற்றுக்குப் பிறகு தான் அரசாங்கம் சொல்ல நினைப்பது தெளிவாக மக்களுக்குச் சென்று சேரும்.
இதே நிலைதான் இப்போதும் தென்படுகிறது. உற்பத்தித் திறன் அதிகரிப்பு என்றால் அதிக நேரம் வேலை செய்வதா? வெளிநாட்டு ஊழியர்களைக் குறைத்தல் என்றால் வர்த்தகத்தைப் பெருக்க முடியுமா? போன்ற ஊழியர்கள் மற்றும் வர்த்தகர்களின் கேள்விகளும் இங்கு எழுகின்றன.
வரும் 22ம் தேதி தொடங்கும் அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட அறிக்கை மற்றும் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் ஆகியவற்றின்போது கேள்வி களுக்கான தெளிவான பதில்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838