மலேசிய எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராகிம் மீது சாட்டப்பட்டுள்ள ஓரினப் புணர்ச்சி குற்றச்சாட்டு குறித்த வழக்கு விசாரணை மலேசிய உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
உயர் நீதிமன்ற நீதிபதி முகம்மது ஜபிடீன் முகம்மது டியா முன்னிலையில் விசாரணை நடந்து வருகிறது.
நான்காவது நாளாக நேற்று விசாரணை மீண்டும் தொடங்கிய போது திரு கர்பால் சிங் தலைமையிலான அன்வரின் வழக்கறிஞர் குழு ஒரு விண்ணப்பம் தாக்கல் செய்ததாக நீதிமன்றத் தகவல்கள் கூறின.
இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி பாகுபாடு காட்டுவதால் அவருக்குப் பதிலாக வேறு ஒரு நீதிபதி விசாரிக்க வேண்டும் என்று கோரி பிரதிவாதியின் வழக்கறிஞர் குழு விண்ணப்பம் செய்துள்ளது.
அதனைத் தொடர்ந்து விசாரணை இன்றைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
63 வயதாகும் அன்வர் மீது இரண்டாவது முறையாக ஓரினப் புணர்ச்சி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இத்தகைய குற்றச்சாட்டு அவர் மீது சாட்டப்பட்டுள்ளது.
அவரிடம் உதவியாளராக வேலை செய்த 23 வயது முகம்மது சைபுல் புகாரி அஸ்லான் என்ற இளைஞரை ஓரினப் புணர்ச்சியில் ஈடுபடுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
2008ம் ஆண்டு ஜுன் மாதம் 26ம் தேதி தேசா டமன்சாரா ஆடம்பர அடுக்கு மாடி கட்டடத் தொகுதியில் உள்ள ஒரு வீட்டில் அந்த குற்றச் செயல் நடந்ததாகக் கூறப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டை அன்வர் மறுத்துள்ளார். ஆதாரமற்ற இந்த குற்றச்சாட்டு தனக்கு எதிராக கொண்டுவரப்பட்ட அரசியல் சதி என்று அன்வர் கூறியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டு குறித்த வழக்கு விசாரணை சென்ற வாரம் மலேசிய உயர் நீதிமன்றத்தில் தொடங்கியது.
முதல் நாள் விசாரணை பற்றிய செய்திகளை உத்துசான் மலேசியா பத்திரிகை பிப்ரவரி 4-ம் தேதி வெளியிட்டிருந்தது. மறுநாளும் அதுபற்றிய செய்திகளை அப்பத்திரிகை வெளியிட்டிருந்தது.
அதன் முதல் பக்கச் செய்தியின் தலைப்பு மற்றும் அதன் முதல் பக்கத்தில் வெளியான பட விளக்கம், மூன்றாம் பக்கத்தில் வெளிவந்த செய்திகள் ஆகியவை நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் இருந்ததாக அன்வரின் வழக்கறிஞர் குழு தெரிவித்துள்ளது.
அந்த மலாய் மொழி பத்திரிகைக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடருவதற்கு அல்லது அந்த பத்திரிகையை எச்சரிப்பதற்குக் கூடத் நீதிபதி தவறி விட்டதாக பிரதிவாதித் தரப்பின் தலைமை வழக்கறிஞர் கர்பால் சிங் கூறினார்.
இருப்பினும் திரு கர்பால் சிங் தாக்கல் செய்த விண்ணப்பத்தை நீதிபதி ஜபிடீன் நிராகரித்து விட்டதாக நீதிமன்றத் தகவல்கள் கூறின. அந்த வழக்கு விசாரணை பற்றி அந்தப் பத்திரிகையில் வெளிவந்த செய்திகள், நீதிமன்ற விசாரணைக்கு இடையூறு விளைவிக்கும் நோக்கத்தை கொண்டிருக்கவில்லை என்பது தெரிய வந்திருப்பதாகவும் நீதிபதி கூறினார்.