அமெரிக்காவின் கனக்டிகட் மாநிலத்தில் மின் நிலையம் ஒன்றில் ஏற்பட்ட மிகப்பெரிய வெடிப்பில் குறைந்தது 5 பேர் கொல்லப் பட்டதாகவும் 12 பேர் காயமடைந்ததாகவும் உள்ளூர் மேயர் கூறினார்.
எரிவாயு வெடிப்பால் ஏற்பட்ட விபத்து என்று மிடில்டவுன் மேயர் செபஸ்டியன் கிலியானோ கூறினார்.
கனக்டிகட் பகுதியில் மிடில்டவுன் என்ற இடத்தில் எரிவாயு மூலம் மின் உற்பத்தி செய்யும் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.
அதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் வேளையில் ஞாயிற்றுக்கிழமை திடீரென எரிவாயு வெடித்ததாகவும் அதனைத் தொடர்ந்து மின் நிலையம் தீப்பற்றி எரிந்ததாகவும் போலிசார் கூறினர்.
அந்த மின்நிலையத்திலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் வசிக்கும் போலிசார் அந்த பயங்கர வெடிப்பின்போது தங்கள் வீடுகள் ஆட்டம் கண்டதாகக் கூறினர்.
அந்த மின் நிலைய கட்டடத்தின் இடிபாடுகளுக்கிடையில் இன்னும் பலர் சிக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்களைக் காப்பாற்ற மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அந்த மேயர் கூறினார். நிபுணர்கள் குழுவுடனும் மோப்ப நாய்கள் உதவியுடனும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.
அந்த மின் நிலையம் 95 விழுக்காடு கட்டி முடிக்கப்பட்ட நிலையில் இருந்ததாகவும் வரும் கோடை காலத்தில் மின் நிலையத்தை திறக்க திட்டமிட்டிருந்ததாகவும் கிலியானோ கூறினார்.
தொடர்ந்து எரிவாயு சோதனை செய்யப்பட்டபோது அந்த வெடிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
விபத்தைத் தொடர்ந்து அந்த இடத்திற்கு விரைவாக தீயணைப்பாளர்கள் சுமார் 100 பேர் நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்தனர்.
அந்த இடத்தை போலிசார் சுற்றி வளைத்திருப்பதால் இனி பொதுமக்களுக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்று அதிகாரிகள் கூறினர். ஆகவே அப்பகுதியில் வசிக்கும் மக்கள் யாரும் வெளியேற்றப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மின் உற்பத்தி நிலையம் 620 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் ஆற்றல் கொண்டது.