வேலையிடப் பாதுகாப்பை உறுதி செய்யும் கண்காணிப்பாளர்களுக்கு கூடுதல் பொறுப்புகளும் அதிகாரங்களும் வழங்க வகை செய்யும் புதிய விதிமுறைகளை மனிதவள அமைச்சு வரைந்துள்ளது.
அவை மார்ச் மாதம் முதல் தேதியிலிருந்து அமலுக்கு வரும் என்றும் அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த விதிமுறைகளில் முக்கியமானது வேலையிடங்களில் பாதுகாப்பற்ற சூழல் நிலவினாலோ, பாதுகாப்பற்ற வேலையிடப் பழக்க வழக்கங்கள் இருந்தாலோ அவற்றை சரிசெய்ய சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேலையிடப் பாதுகாப்பு கண்காணிப்பாளர்கள் ஆலோசனை வழங்கலாம்.
அத்துடன், இந்த நிலவரத்தை வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார ஆணையரிடம் தெரிவிக்க வேண்டும்.
மேலும், வேலையிடத்தில் நிகழும் விபத்து அல்லது அங்கு நிலவும் ஆபத்தான சூழல், வேலையிடம் தொடர்பான நோய் ஆகியவற்றை ஆய்வு செய்யவும் இந்தக் கண்காணிப்பாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்படும்.
சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய மனிதவள, சுகாதார அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலர் ஹவாசி டய்பி இவற்றைத் தெரிவித்தார்.
“இயந்திரங்கள் உதவியானாலும் தானியங்கி கருவிகளானாலும் அவை மனிதர்களாலேயே இயக்கப்படுகின்றன.
“இதனால் மனிதர்கள் எப்படி யோசித்து முடிவெடுக்கிறார்கள் என்பதை நாம் புரிந்துகொண்டால் நாம் பயனடையலாம்.
“மக்களின் நடத்தையை இதன் வழி புரிந்துகொண்டால் பெரிய தவறுகள் எவ்வாறு நடக்கின்றன என்றும் தவறான முடிவுகள் எப்படி பெரிய விபத்துகளுக்கு இட்டுச் செல்கின்றன என்றும் நாம் புரிந்து கொள்ளலாம்,” என்று திரு டய்பி கூறினார்.