fontsize: 60% 70% 80% 90%

இந்தியர்களின் முன்னேற்றத்திற்கு மஇகாவின் பரிந்துரைகள்

மலேசியாவில் வசிக்கும் இந்திய சமூகத்தினரின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் 12 பரிந்துரைகளை அரசாங்கத்திடம் மஇகா தாக்கல் செய்யவிருக்கிறது.
இம்மாத இறுதிக்குள் அந்தப் பரிந்துரைகளை அரசாங்கத்திடம் தாக்கல் செய்யவிருப்பதாக மஇகா தலைவர் எஸ் சாமிவேலு கூறியுள்ளார்.
10-வது மலேசியத் திட்டத்தில் அந்தப் பரிந்துரைகளை சேர்த்துக்கொள்வது குறித்து பரிசீலிக்குமாறு அரசாங்கத்தை மஇகா கேட்டுக்கொள்ளும் என்றும் திரு சாமிவேலு கூறினார்.
மஇகா மத்திய பணிக்குழுவின் சிறப்புக் கூட்டத்தில் அந்த பரிந்துரைகள் பற்றி விவாதிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியர்களின் ஆதரவு பெற்ற அரசாங்கம் சாராத அமைப்புகள் மற்றும் மலாயா பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் அந்த பரிந்துரைகள் வகுக்கப்பட்டதாகவும் சாமிவேலு கூறியதாக மலேசிய இணையப்பக்கத் தகவல்கள் கூறின. “இத்தகைய பரிந்துரைகள் அடங்கிய விரிவான அறிக்கையை தயாரிக்க எங்களுக்கு மூன்று மாதங்கள் பிடித்தன,” என்று சாமிவேலு கூறினார். சென்ற ஆண்டு தேர்வில் சிறந்த மதிப்பெண் வாங்கிய தமிழ்ப் பள்ளி மாணவர்கள் சுமார் 800 பேருக்கு காசோலை வழங்குவதற்கு முன்பு செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.
கல்வி, பொருளாதாரம், பயிற்சி, வீடமைப்பு, வேலை நியமனம் ஆகியவற்றில் இந்தியர்கள் சிறந்து விளங்குவதற்கான ஊக்குவிப்பு திட்டங்களும் அந்த பரிந்துரைகளில் இடம்பெற்றுள்ளதாகவும் சாமிவேலு கூறினார்.
முதல் தடவையாக மஇகா, அரசாங்கம் சாராத அமைப்புகளின் கருத்துகளையும் பல்கலைக்கழகத்தின் கருத்தினையும் கேட்டறிந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மஇகாவுக்கு தற்போது இந்தியர்களின் ஆதரவு பற்றிக் கூறிய அவர், ஒவ்வொரு நாளும் 100 பேர் முதல் 200 பேர் வரை பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண மஇகாவின் உதவி நாடி தங்கள் அலுவலகத்திற்கு வருவதாகக் கூறினார்.
இந்த நிலை தொடர்ந்தால் முன்பு இழந்த இந்தியர்களின் ஆதரவை மஇகா திரும்பப் பெற முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838